அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
    அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
    வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

     – மகாகவி பாரதியார்

விளக்கம்

ஆழ்ந்த சிந்தனையையும், அறிவின் களிப்பையும், சிறுமை கண்டு பொங்கும் சீற்றத்தையும் பாரதியின் இந்த ‘சோதிமிக்க சுடர்க்கவிதை’ வெளிக்காட்டுகிறது. ஒவ்வொரு மனிதனும் ஆன்ம ஒளிக்கடலின் ஒரு பகுதியான அக்கினிக் குஞ்சே என்றும், அளவிட முடியாத அவனது ஆற்றலால் இந்த உலகத்தையே மாற்றி விடலாம் என்றும் பறைசாற்றிப் பகரும் பாட்டன்றோ இது!

மனிதனின் பொய் நம்பிக்கைகளின் ஆணிவேர்களை அசைத்தெடுத்துப் புதுமைப் பெண் ஆடும் களி நடனம் தான் இந்தப் பாடல். ‘சாமி நீ; சாமி நீ; கடவுள் நீயே; தத்வமஸி; தத்வமஸி; நீயே அஃதாம்‘ – என்று தனிமனிதனைக் கடவுளுக்கு நிகரான ஆற்றல் படைத்தவனாகக் காட்டும் புரட்சிகரமான பாடல் இது. ‘தத்வமஸி’ என்னும் வேத வாக்கியத்தின் பொருள் ‘அதுவே நீயென்று இரு’ ( தத் + த்வம் + அஸி ) . இந்தக் கருத்தினை மேலும் வலியுறுத்தும் பாரதி ‘ஒன்று பிரமம் உளது உண்மை – அஃது உன் உணர்வு எனும் வேதமெலாம்’ என்றும் உணர்த்துகிறார். மனிதனின் தன்மை இறைவனின் தன்மையினும் வேறானது அல்ல என்னும் இக்கருத்தை வள்ளலாரும் முன்வைப்பதைக் காணலாம் :

தந்தை தன்மையே தனையன்தன் தன்மை
என்று சாற்றுதல் சத்தியம் கண்டீர்
அந்த ணாளன்மெய் அறிவுடை யவன்என்
அப்பன் தன்மைஎன் தன்மைஎன் றறிமின்.

வள்ளலார்

‘அப்பன் தன்மை என் தன்மை’ என்று ஒவ்வொரு மனிதனின் உள்ளே ஒளிரும் தெய்வீக இயல்பை எவ்வளவு அழகாக வள்ளலார் இங்குச் சுட்டிக் காட்டுகிறார் பாருங்கள்!

ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே ஒளிப்பிழம்பின் பகுதிகள்தான் என்பதைப் பறைசாற்றும் இந்தக் கவிதை, திருமூலரின் இந்த மந்திர வார்த்தைகளை நினைவுபடுத்துகிறது.

சீவனெனச் சிவனென வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட் டிருப்பரே

திருமூலர்

‘மனிதனும் தெய்வமும் வெவ்வேறல்ல; தானும் கடவுள் என்று அறியாத வரைக்கும் தான் அவன் மனிதன். தனக்குள் உறையும் கடவுளை அறிந்தபின், மனிதனும் கடவுளாகிறான்’ – என்கிறார் திருமூலர்.

திருமழிசை ஆழ்வார் தம் ‘திருச்சந்த விருத்தம்’ என்னும் நூலில், ‘கடலலைகள் எவ்வாறு கடலில் தோன்றி கடலிலேயே மறைகின்றனவோ, அதே போன்று தான் மனிதர்களும் கடவுளின் ஒரு பகுதியாகத் தோன்றி கடவுள் என்னும் சக்தியில் இறுதியில் அடங்கிவிடுகின்றனர்’ என்று சொல்லி ‘ஜீவாத்மா என்பது பரமாத்மாவின் ஒரு பகுதியே. ஜீவாத்மா பரமாத்மாவினும் முற்றிலும் வேறுபட்டதல்ல’ என்னும் விசிஷ்டாத்வைதத் தத்தவத்தை உணர்த்துகிறார்.

தன்னுளே திரைத்தெழும் தரங்க வெண் தடங்கடல்
தன்னுளே திரைத்தெழுந்து அடங்குகின்ற தன்மைபோல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே.

திருமழிசை ஆழ்வார்

இதையே, ஓஷோவும், கிருஷ்ணரைப் பற்றித் தன் ‘கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும்’ (Krishna – the man and his philosophy’) என்னும் புத்தகத்தில் பின்வருமாறு சொல்கிறார்:

நாம் எல்லோரும் கிருஷ்ணனைப் போன்றவர்கள். ஆனால் நமக்கும் கிருஷ்ணனுக்கும் ஒரு சிறிய வித்தியாசம் உண்டு. அது என்னவென்றால், கிருஷ்ணன் தான் அலையாக இருக்கும்போதே தான் சமுத்திரம் என்று உணர்ந்தவன். ஆனால் நாமோ நம்மை அலைகளாகவே பார்க்கிறோம், ‘நாம் சமுத்திரத்தைச் சேர்ந்தவர்கள், நாமும் சமுத்திரம்’ என்னும் பேருண்மையை மறந்து விடுகிறோம்.

ஓஷோ

‘அக்கினிக் குஞ்சாக இருந்தாலும் ஆற்றல் குறையாது; இந்தப் பிரபஞ்ச சக்தியின் அனைத்து வலிமையும் ஒரு மனிதனுக்குள் உண்டு’ என்னும் தத்துவதைச் சொல்லும் இந்தப் பாடல் மன உறுதியும் தன்னம்பிக்கையும் ஊட்டுவதாக அமைந்த அக்கினிப் பிழம்பென்றே சொல்லலாம்.

Leave a Reply