விலை மதிப்பிலா விண்ணக ராச்சியம்
   வேண்டி னால்பிறர் நன்னலம் நாடுவீர்!
 அலையும் நெஞ்சை நல்வழியில் திருப்பினால்
   அருகில் தோன்றிடும் நற்பர லோகமே!
 கொலைசெய் பாதக ராயினும் அன்புடன்
   குற்றம் யாவும் பொறுத்திடு வீர்! - எனச்
 சிலுவை ஏற்றுத் திருமொழி சொன்னவர்
   செப்பும் வார்த்தைகள் தெய்வ மறைகளே!
 

 திருந்தி வந்திடும் தன்மகன் இன்புறச்
   சேர்த்துக் கொண்டநல் தந்தைபோல் அன்பினார்,
 விருந்தளிக்க விரும்பிய கீழ்மகன்
   வீட்டில் தங்கி உயர்த்திய பண்பினார்,
 வருந்தித் தம்செயல் நாணிடும் தீயவர்
   வாழ்வு மேம்படக் காத்திடும் தேவனார்,
 புரிந்த அற்புதத் தால்இங்கு வெம்பிணி
   போக்கி நல்லருள் காட்டும் புனிதரே. 

இனிது.காம் இணைய இதழில் வெளியிடப்பட்ட பாடல் இது. நன்றி: inidhu.com

Leave a Reply