அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி
அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி,
  அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின் மீது தனியர சாணை,
  பொழுதெலாம் நினதுபே ரருளின்
நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்
  நிலைத்திடல் என்றிவை யருளாய்,
குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்
  குலவிடு தனிப்பரம் பொருளே!
           - மகாகவி பாரதி

விளக்கம்

அறிவிலே தெளிவு

இந்தக் காலகட்டத்தில் நாம் அறிந்துகொள்ள நம் செவியில் பாயும் செய்திகள் மற்றும் தகவல்கள் ஏராளம். எட்டுத் திசையிலிருந்தும் வருகின்ற இந்த அறிவுப் பெருக்கால் நமக்கு உண்டாகும் குழப்பங்கள் நம் வாழ்வை திசைதிருப்பி, நினைவில் தெளிவைச் சிதைத்து , எது உண்மை எது பொய் என்று கலங்க வைக்கின்றதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

  எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் 
  மெய்ப்பொருள் காண்பது அறிவு. 

என்ற பொய்யாமொழிப் புலவரின் வார்த்தைப்படி, கேட்டறிவனவற்றை மெய்யென்று உடனே நம்பிவிடாமல் ஆய்ந்துணர்ந்து தெளிதல் வேண்டும். இந்த அறிவின் தெளிவையே பாரதியார் இங்கு வேண்டுகிறார்.

நெஞ்சிலே உறுதி

ஞானத்தை புகட்டும் பல நூல்களைக் கற்றறிந்திருந்தாலும், இந்த உலகத்தில் நாம் படும் இன்னல்களும் அநீதிகளும் நம் மன உறுதியைக் குலைக்க நேரிடும். அழிக்கவரும் துன்பத்தை அலைகடலென பொங்கி எதிர்த்து நின்று ஆளும் திறமை பெறாமல் இருந்தால் நாம் கற்ற அறிவால் நமக்கும் பிறர்க்கும் நன்மை ஏற்படாமல் ‘நலங்கெட்டு புழுதியில் விழுந்த வீணை’யைப் போல் நம் வாழ்வு சீர்கெடும் என்பது உண்மை.

இந்த உண்மை தெரிந்த பாரதியார் தம்மிடம் நிறைந்துள்ள மன உறுதி உயர்ந்து, மலையே வந்து விழுந்தாலும் நிலை கலங்காமல் இருக்க வரம் வேண்டுகிறார்.

அகத்திலே அன்பினோர் வெள்ளம்

‘பகைவனுக்கு அருள்வாய் – நன்னெஞ்சே’ என்று நெஞ்சுக்கு நீதி சொல்லும் பாரதி, அன்பையும் கனிவையும் ஒரு சக்தியாகவே பாவித்தார். தெளிவும், நெஞ்சுறுதியும் இருந்துவிட்டால் மட்டும் போதாது. ஆற்றலை நல்ல வழியில் செலுத்த அன்பின் தீபமே வழிகாட்டும்; அந்த அன்பு போதுமான அளவில் மட்டும் இருக்காமல் அளவுகடந்த பெருவெள்ளமாக மிகுந்து மனமெல்லாம் பரவ வேண்டும் என்று விரும்புகிறார். அத்தகைய வெள்ளமெனப் பொழியும் அன்பால் தான் உலகில் உள்ள பிரிவினை மற்றும் காழ்ப்புணர்வுகளால் உண்டான வெம்மை தணிந்து ஒற்றுமை உண்டாகும் என்றும் உணர்த்துகிறார்.

பொறிகளின் மீது தனி அரசாணை

மெய், வாய், கண், மூக்கு, செவி என்று சொல்லப்படும் ஐம்பொறிகளையும் ஐந்து மத யானைகள் என்று பொய்கை ஆழ்வார் குறிப்பிடுகிறார். அந்த மத யானைகளை ‘வாரிச் சுருக்கி(கட்டுப்படுத்தி) சேரித் திரியாமல்’ அடக்கினால் தான் இறையருள் கிட்டும் என்றும் மொழிகின்றார்.

‘ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.’

‘ஆமை தன் ஐந்து உறுப்புகளையும் தன் ஓட்டினுள் அடக்குவது போல ஒருவன் ஐம்புலன்களையும் அடக்கினால் அது ஏழேழு பிறவிக்கும் பாதுகாப்பாகும்’ என்று கூறும் இந்தக் குறளும் இங்கு நினைவு கூரத்தக்கது.

பாரதியும் புதிய ஆத்திச்சூடியில் ‘ஐம்பொறி ஆட்சி கொள் ‘ என்று முழங்குகிறார். ஐம்பொறிகளை அடக்கிக் கட்டுக்குள் வைப்பதின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்திருந்த பாரதி, ‘அறிவிலே தெளிவு’ என்னும் இந்தப் பாட்டில் அந்தப் பொறிகளை ஆளும் திறனையே இறைவனிடமே வரமாகப் பெற வேண்டுகிறார்.

கரும யோகத்தில் நிலைத்திடல்

தெளிந்த அறிவே யோகத்துக்கு  முதற்படி.   குழப்பம் சூழ்ந்த மனத்தில் யோகம் நிலைக்க முடியாது. அதனால்தான் பாரதியார் ‘அறிவிலே தெளிவு’ கொண்ட உள்ளத்தை முதலில் வேண்டுகிறார். அந்த கலக்கமில்லாத தெளிந்த அறிவின் துணைகொண்டு ‘இமைப்பொழுதும் சோராமல்’ ஓயாமல் தொழில் செய்தால் வாழ்வு சிறக்கும். எது செய்தாலும் அது நல்லதாகவே முடியும்.  அத்தகைய தெளிந்த அறிவு கொண்டவர்கள் சும்மா இருந்தாலும் மனம் நன்மை செய்து கொண்டே இருக்கும்.   இதுவே கர்ம யோகமாகும். 

கீதை மொழிந்தருளும் இந்தப் பேருண்மையை நமக்கெல்லாம் புரியும்படி இப்பாட்டில் சொல்லும் பாரதியார், தம் வாழ்க்கையில் கர்ம யோகத்தை ஒரு முக்கிய நெறியாகவே கருதி அதைத் தன் சொல்லிலும் செயலிலும் கடைப்பிடித்து வாழ்ந்தார்.  தொழில் என்பது உடம்பினால் மட்டும் செய்யப்படுவதல்ல.  மனத்தால்  செய்யப்படும் கவிதை , தியானம் , படிப்பு முதலான தொழில்களும் தொழிலேயாகும்.   தொழில் செய்யும்போது  இன்பம் துன்பம் எது வந்தாலும் பலன் கருதாமல் களிப்புடன் செய்தால், இறைவன் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்து செயல் சிறக்கச் செய்வான்.  இதையே : 

  நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்,
  இமைப்பொழுதும் சோராது இருத்தல் - உமைக்கினிய 
  மைந்தன் கணநாதன் நம்குடியை வாழ்விப்பான்
  சிந்தையே இம்மூன்றும் செய்.

என்ற பாட்டிலும் சொல்லித் தம் நெஞ்சுக்கு அறிவுறுத்துகிறார்.

இந்த பாடல் பற்றி மேலும் சிலகுறிப்புகள்

‘அறிவிலே தெளிவு’ என்னும் இந்தப் பாடல், பாரதியார் எழுதிய ‘சுயசரிதை’ என்னும் சிந்தனை தூண்டும் கவிதைத் தொகுப்பில் இறுதிப் பாட்டாக அமைந்துள்ளது. இந்தப் பாட்டு ‘எழுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்’ என்னும் பாவகையைச் சார்ந்தது. ஒவ்வோர் அடியும் ‘தானன தான தானன தான தானன தானன தான’ என்னும் மெட்டில் அமைந்துள்ளமை காண்க.

இந்த எழுசீர் ஆசிரிய விருத்தத்தில் வள்ளலாரைப் போற்றி நான் எழுதிய கவிதையையும் இங்கே காணலாம்.

Leave a Reply