இந்தப் பதிவு ‘ஆழ்வார்கள் நான்மணிமாலை‘ என்னும் கவித்தொடரின் மூன்றாம் பகுதி. இந்தப் பகுதியில், திருப்பாவை அருளிய திருமகளாம் ஆண்டாளைப் போற்றிப் புகழ்ந்து அந்தாதியாகப் பாடியுள்ளேன்.

நேரிசை வெண்பா

வையம் விழிக்க மணிவிளக்காம் நற்பாவை
உய்ய உலகுக் குவந்தளித்தாள் - பொய்யற்ற
காதலால் நெஞ்சம் கசிந்துருக வைத்திடுமே
கோதை கொடுத்தத் தமிழ்.

கட்டளைக் கலித்துறை

தமிழ்மாலை தந்தாள் தரணித் துயரறத் தாளவிசை
அமுதாகப் பெய்தாள் அருட்பாடல் பாடி அருவியென
இமைதோன்றும் கண்ணீர் இதயம் உருக்கி இனித்திடவே
நமையாட்சி செய்தாள்மெய்ஞ் ஞானத்தைப் போற்றுமிந் நானிலமே.

அறுசீர் ஆசிரிய விருத்தம்

நானிலத்தைக் காத்தருளும் பரம்பொருளின் நல்லருளை 
     நாளும் வேண்டி
வான்குயிலைக் கார்முகிலைத் தூதனுப்பிக் கூப்பிட்டு
     வரச்சொல் கின்ற
தேன்கலந்த வார்த்தைகளால் இசைநிறைந்த பண்ணமைந்துத்
     தித்திக் கின்ற
கானமழை பொழிந்தவனி ஆண்டாள்தன் கவிச்செழிப்பில் 
     களிப்பாய் நெஞ்சே.

நேரிசை ஆசிரியப்பா

நெஞ்சில் நிறைந்து நிர்மலம் ஆக்கும்
செஞ்சொல் கவிதை தந்த திருமகள்
விட்டு சித்தனின் இடத்தில் மேவிய
மட்டுப் படாத வானமு தொத்தவள்
தெய்வ அணங்கின் பைந்தமிழ்ப் பாடுவார்
மனத்தில் இடம்கொண்டு வாழ்ந்தருள் செய்வான்
கோதையின் பாட்டுடைத் தலைவன்
தீதில் புகழ்சேர் திருவுடை மாலே.

Leave a Reply