ஆழ்வார்கள் நான்மணிமாலை

ஆழ்வார்கள் நான்மணிமாலை

ஆழ்வார்கள் நான்மணிமாலை – பன்னிரு ஆழ்வார்களின் பெருமையைப் பறைசாற்றும் பாமாலை. வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என்ற நான்கு மணிகளைக் கோர்த்துத் தொடுத்த அருள்மாலை.

ஆரமுதாம் தமிழுக்கு அருந்தொண்டாற்றியவர்களில் ஆழ்வார்கள் தனிப்பெருமை வாய்ந்தவர்கள். நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் பாடல் திரட்டு ஆழ்வார்களின் நாவன்மையை நமக்கெல்லாம் பறைசாற்றும்.

தேனினும் இனிக்கும் அவர்களுடைய பாடல்கள் ஆழ்ந்த பொருள் பொதிந்த அருமணிகளாகவும் சுடர்விட்டு ஒளிர்ந்தன. சடகோபர் அருளிய திருவாய்மொழி போன்ற முத்துக்கள் பதிந்த பிரபந்தம் ஆழ்துயரைப் போக்கும் அருமருந்து என்று சொன்னால் மிகையாகாது. அத்தகைய சிறப்புடைய பிரபந்தம் என்னும் பேரிலக்கியத்தைப் படைத்த பன்னிரு ஆழ்வார்கள் பெருமையைப் போற்றும் நான்மணிமாலையை தமிழன்னையின் மலரடியில் சமர்ப்பிக்கிறேன்.

இந்த நூல் தமிழ்த்தாய் காப்புச் செய்யுளுடன் தொடங்கி, முறையே வெண்பா, கட்டளைக் கலித்துறை, விருத்தம், அகவல் என்ற வரிசைப்படி நான்மணிமாலையின் இலக்கணத்துடன் அந்தாதித் தொடையில் அமைக்கப்பட்டு ஆழ்வார்கள் ஒவ்வொருவரின் பெருமையைப் பறைசாற்றுகின்றது.

ஆழ்வார்களின் அருந்தொண்டு வாழ்க! ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்!

ஆழ்வார்கள் நான்மணிமாலை – கவிதை நூல் தொடக்கம்

பொருளடக்கம்

காப்பு

தமிழ்த்தாய் காப்புச் செய்யுள் – ஆழ்வார்கள் நான்மணிமாலை என்னும் இந்நூல் இனிதே நிறைவு பெற பழந்தமிழ் அன்னையைத் துணைசெய்ய வேண்டுகின்ற பாடல்.

நேரிசை வெண்பா
சந்தம் மிகுந்த தமிழ்மறைநா லாயிரமும்
தந்தபெரி யோர்பெருமை சாற்றிடவே – சிந்தையினில்
வற்றாத அன்பால் மணிமாலை நான்மொழியத்
தொற்றமிழ்த்தாய் நிற்பாள் துணை.

பொருள்

சந்தம் நிறைந்து இன்னிசை ஒலிக்கும் தமிழ் மறையான திவ்வியப் பிரபந்தத்தின் நாலாயிரம் பாடல்களையும் நமக்கு அளித்த பெரியோர்களான ஆழ்வார்கள் பெருமையை உலகத்திற்கு எடுத்துக் கூறும்பொருட்டு, என் மனத்தில் என்றும் நீங்காத அன்போடு ‘ஆழ்வார்கள் நான்மணிமாலை’ என்னும் இந்நூலை நான் இயற்றுவதற்குப் பழம்பெருமை வாய்ந்த தமிழ்த்தாய் துணையாக நின்று காத்தருள்வாளாக. தொற்றமிழ்த்தாய் = தொல் + தமிழ் +தாய் = தொன்மை (பழமை) சிறப்புடைய தமிழ் அன்னை

நம்மாழ்வார்

சடகோபர்

பொதுவாக எந்த நூல் ஆரம்பிக்கும் போதும் சடகோபர் புகழைப் பாடிப் பின் மற்ற பாடல்களை அளிப்பது வைணவ மரபு. புகழேந்திப் புலவரும் கம்பரும் கூட தத்தம் நூல்களாகிய நளவெண்பாவிலும் கம்பராமாயணத்திலும் தொடக்கத்தில் சடகோபரைத் துதிக்கின்றனர். அம்மரபுப் படியே, நம் நான்மணிமாலையும் முதலில் ‘வேதம் தமிழ்செய்த மாறன்’ என்றும் சடகோபர் என்றும் அழைக்கப்படும் நம்மாழ்வார் பெரும்புகழைப் பாடிப் பின் மற்றுமுள்ள ஆழ்வார்களைப் பாடுவோம்.

1.  நேரிசை வெண்பா
ஆசிரியம் அந்தாதி அன்பார் திருவிருத்தம்
மாசறியா நற்றிரு வாய்மொழியும் – பாசுரமாய்
ஞானத் தமிழ்ப்பாட்டில் நல்கினான் மாறனெனும்
மோனத் தவஞ்செய் முனி.

அருஞ்சொற் பொருள்

அன்பார் = அன்பு + ஆர்ந்த = அன்பு நிறைந்த
மாசறியா = மாசு + அறியா = குற்றம் அறியாத
நற்றிரு = நல் + திரு
நல்கினான் = அருளினான்

விளக்கம்

எப்போதும் யோக நிஷ்டையில் ஆழ்ந்து மோனத்தில் இருக்கும் நம்மாழ்வார், திருவாசிரியம், திருவந்தாதி, திருவிருத்தம், குற்றமற்ற நன்மை விளைவிக்கக்கூடிய திருவாய்மொழி – ஆகிய உயர்வற உயர்நலம் உடைய நூல்களை நாம் படித்துப் பாடி மகிழ ஞானம் நிறைந்த தமிழ்ப் பாசுரங்களாக அருளியிருக்கிறார். (அத்தகைய மகானின் திருவருளைப் போற்றி உய்வோமாக. )

2.  கட்டளைக் கலித்துறை
முனிவரன் ஓங்கும் உயர்நலம் கொண்டவன் ஓதுமொழி
கனியினில் தீந்தேன் கலந்ததை ஒத்தே கவர்ந்தினிக்கும்
அனைவரும் கற்க அருமறை சொன்ன அறிஞர்களில்
தனியிடம் பெற்ற சடகோபன் பொங்கும் தமிழ்க்கடலே!

அருஞ்சொற் பொருள்

முனிவரன் = முனிவர்களில் சிறந்தவன்
ஓதுமொழி = அருளிச்செய்த பாடல்கள்
தீந்தேன் = தீம் + தேன் = இனிய தேன்
அருமறை = கற்பதற்கரிய தமிழ் வேதங்கள்
3.  அறுசீர் ஆசிரிய விருத்தம்
கடலே போன்ற கவித்திரளில்
    கண்ணி ஒன்றே போதுமவன்
தொடைசேர் பாட்டின் புகழ்சொல்ல
    துலங்கு ஞானத் திறம்சொல்ல
அடலே றனைய கவியாற்றல்
    அழகைச் சேர்க்கும் தமிழ்மொழிக்கே
உடலும் உயிரும் உருகிடவே
    உயர்வாம் நலம்செய் வாய்மொழியே!

அருஞ்சொற் பொருள்

கண்ணி = இரண்டடிகள் கொண்ட பாட்டு
துலங்கு = பிரகாசிக்கும்
அடலே றனைய = அடல் + ஏறு + அனைய = வலிமை வாய்ந்த காளை போன்ற (திறமை வாய்ந்த)
உயர்வாம் = உயர்வாகும்
வாய்மொழி = திருவாய்மொழி
4.  நேரிசை ஆசிரியப்பா
மொழியும் சொற்களால் தூரியம் முழக்கி
அழிவிலாப் புகழ்கொள் அருந்தமிழ் மொழியில்
ஆயிரம் இன்கவி அருளிச் செய்தவன்
மாயப் பிறப்பை மாய்த்திட வல்லவன்
கலிகெட உலகில் கலகங்கள் நீங்க
மெலிவுசெய் சாபங்கள் வீழ்ந்து நலிய
மதிநலம் வாய்த்து மனம்தெளி வடைய
புதிராம் வாழ்வின் உண்மைகள் புரிய
பயனுறும் வாய்மொழி படிமின்
மயர்வினை அழிப்பான் மாறனென் தேவே.

அருஞ்சொற் பொருள்

தூரியம் முழக்கி = முரசு கொட்டி
பயனுறும் = பயன்தரும்
படிமின் = படியுங்கள்
மயர்வு = மயக்கம் ( அறியாமை, தெளிவின்மை முதலிய மன மாசுகள்)
தேவே = தேவனே

மதுரகவி ஆழ்வார்

மதுரகவி ஆழ்வார்

இனித்திடும் எளிய கவிதைகளால் மாறன் புகழ்பாடி ‘நாவினால் நவிற்றின்பம் எய்திய’ மதுரகவி ஆழ்வாரைப் போற்ற ஆயிரம் கவிதை வேண்டும். ‘கண்ணி நுண்சிறுத்தாம்பு’ பாடி மதுரமான கவிதைகளால் நம் மனத்தை ஆட்கொண்ட மதுரகவி ஆழ்வாரை மனதாறப் போற்றி அவர் புகழ் பாடுவோம்.,

5.  நேரிசை வெண்பா
தேவன் எனக்கென்றும் தெய்வச் சடகோபன்
ஆவியினை அன்புருக ஆட்கொண்டான் – ஓவாமல்
மாறன் புகழ்சொல்வேன் என்னும் மதுரகவி
மாறாப் பிறவி மருந்து.

அருஞ்சொற் பொருள்

ஓவாமல் = இடைவிடாது (என்றும்)
மாறாப் பிறவி = மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் தன்மை மாறாத இந்தப் பிறவி நோய்
6.  கட்டளைக் கலித்துறை
மருந்தென்று நாளும் மகிழ்மாறன் தூய மலர்ப்பதத்தைச்
சிரந்தன்னில் சூடிச் சிறுத்தாம்பு பாடிச் செழுந்தமிழில்
வருந்தென்றல் காற்றாய் மணம்வீசும் பாக்கள் மலர்ந்தருளி
அருந்தொண்டு செய்த மதுர கவியார் அருட்சுடரே!

அருஞ்சொற் பொருள்

மலர்ப்பதத்தை = மலர் போன்ற பாதங்களை
சிரந்தன்னில் = சிரம் + தன்னில் = தலை மீது
சிறுத்தாம்பு = ‘கண்ணி நுண் சிறுத்தாம்பு’ என்று தொடங்கும் பாடல்கள்

திருமழிசை ஆழ்வார்

திருமழிசை ஆழ்வார் கோவில் கும்பகோணம்

‘பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்’ என்று ஆணையிட்டு, இறைவனையே காஞ்சி நகரிலிருந்து இடம் பெயர வைத்த திருமழிசை ஆழ்வாரின் கவியாற்றலையும் யோக வலிமையையும் போற்றிப் பாடுவோம்.

7.  சந்த விருத்தம்
சுடர்விளங்கும் சந்தமேவும் சுந்தரச் சுகந்தியில்
இடர்விலக்கும் இன்பகீதம் இங்கெமக் கருளினார்
படம்விளங்கும் பாம்பின்மேல் பயின்றபள்ளி நீங்கிட
இடம்பெயர்ந் தெழுப்பிடும் இசைஞரூர் மழிசையே.

அருஞ்சொற் பொருள்

சந்தமேவும் = சந்தம் + மேவும் = சந்த இசை நிறைந்த
சுகந்தி = ஏழு சீர்களைக் கொண்ட ஒருவகை சந்த விருத்தம் (மழிசையார் பாடிய திருச்சந்த விருத்தம் இந்தப் பாவகையைச் சார்ந்தது)
இங்கெமக் கருளினார் = இங்கு + எமக்கு + அருளினார்
8.  நேரிசை ஆசிரியப்பா
மழிசை வந்த மணிச்சுடர் ஒளியே!
அழிவிலா ஆழ்பொருள் அமைந்த(அ)ந் தாதியும்
நந்தா விளக்காய் நலமுற விளங்கும்
சந்த விருத்தமும் தந்தருள் புரிந்தீர்!
வள்ளல் எனவெறும் மனிதரைப் பாடா
வெள்ளை மனத்தால் விண்தொட உயர்ந்தீர்!
மாண்புறும் உம்கவி வலியால்
வீண்படு பொய்யை வென்றிடும் வையமே!

அருஞ்சொற் பொருள்

மழிசை வந்த = திருமழிசையில் தோன்றிய
ஆழ்பொருள் = ஆழ்ந்த அர்த்தமுடைய மறைபொருள்
அந்தாதியும் = மழிசையார் அருளிய ‘நான்முகன் திருவந்தாதி’யும்
நந்தா விளக்காய் = தூண்டாமல் ஒளிரும் விளக்காய்
சந்த விருத்தமும் = ஆழ்வார் அருளிய ‘திருச்சந்த விருத்த’மும்
மாண்புறும் = மாண்பு + உறும் = மாண்பு மிக்க
வலியால் = வலிமையால்
வீண்படு பொய் = வீணாகிப் போகும் பொய்

ஆண்டாள்

திருப்பாவை அருளிய திருமகளாம் ஆண்டாளின் தமிழ் தனித்தன்மை வாய்ந்தது. அவரது பாட்டில் எளிமையும், இனிமையும் கலந்து மனத்தில் பக்தி நெறி நிலைக்கச் செய்யும் செஞ்சொற்கள் மருவி இருக்கும். அத்தகைய தமிழ்ப் பாவலராம் ஆண்டாளைப் போற்றிப் புகழ்ந்து ஆழ்வார்கள் நான்மணிமாலையைத் தொடர்ந்து பாடுவோம்.

9.  நேரிசை வெண்பா
வையம் விழிக்க மணிவிளக்காம் நற்பாவை
உய்ய உலகுக் குவந்தளித்தாள் – பொய்யற்ற
காதலால் நெஞ்சம் கசிந்துருக வைத்திடுமே
கோதை கொடுத்தத் தமிழ்.

அருஞ்சொற் பொருள்

விழிக்க = விழித்தெழ
நற்பாவை = நன்மை தரக்கூடிய திருப்பாவை
உய்ய = தீமையிலிருந்து விடுபெற
உலகுக் குவந்தளித்தாள் = உலகுக்கு + உவந்து + அளித்தாள்
கொடுத்தத் தமிழ் = அருளிச்செய்த தமிழ்க் கவிதைகள்
10.  கட்டளைக் கலித்துறை
தமிழ்மாலை தந்தாள் தரணித் துயரறத் தாளவிசை
அமுதாகப் பெய்தாள் அருட்பாடல் பாடி அருவியென
இமைதோன்றும் கண்ணீர் இதயம் உருக்கி இனித்திடவே
நமையாட்சி செய்தாள்மெய்ஞ் ஞானத்தைப் போற்றுமிந் நானிலமே.

அருஞ்சொற் பொருள்

தமிழ்மாலை = தமிழ் கவிதைகள் கொண்ட பாமாலை
தரணி = உலகம்
துயரற = துயர் + அற = துன்பம் நீங்க
தாளவிசை = தாள + இசை
இமைதோன்றும் = கண் இமைகளில் தோன்றும்
நமையாட்சி = நமை + ஆட்சி = நம்மை ஆட்சி
நானிலம் = உலகம்
11.  அறுசீர் ஆசிரிய விருத்தம்
நானிலத்தைக் காத்தருளும் பரம்பொருளின் நல்லருளை
   நாளும் வேண்டி
வானுலவு கார்முகிலைக் கான்குயிலைத் தூதனுப்பி
   வரச்சொல் கின்ற
தேனொழுகு வார்த்தைகளால் இசைநிறைந்த பண்ணமைத்துத்
   தித்திக் கின்ற
கானமழை பொழிந்தவனி ஆண்டாள்தன் கவிச்செழிப்பில்
   களிப்பாய் நெஞ்சே.

அருஞ்சொற் பொருள்

நானிலத்தை = உலகத்தை
வானுலவு = வானத்தில் உலவுகின்ற
கார்முகிலை = கரிய மேகத்தை
கான்குயிலை = காட்டில் இன்னிசை பாடும் குயிலை
பொழிந்தவனி = பொழிந்து + அவனி. அவனி = உலகம்
கவிச்செழிப்பில் களிப்பாய் = கவிதை சுவையால் களிப்படைவாய்
12.  நேரிசை ஆசிரியப்பா
நெஞ்சில் நிறைந்து நிர்மலம் ஆக்கும்
செஞ்சொல் கவிதை தந்த திருமகள்
விட்டு சித்தனின் இடத்தில் மேவிய
மட்டுப் படாத வானமு தொத்தவள்
தெய்வ அணங்கின் பைந்தமிழ்ப் பாடுவார்
மனத்தில் இடம்கொண்டு வாழ்ந்தருள் செய்வான்
கோதையின் பாட்டுடைத் தலைவன்
தீதில் புகழ்சேர் திருவுடை மாலே.

அருஞ்சொற் பொருள்

நிர்மலம் ஆக்கும் = மன மாசுகளை நீக்கும்
வானுலவு = வானத்தில் உலவுகின்ற
விட்டு சித்தன் = பெரியாழ்வார்
இடத்தில் மேவிய = அவரது இல்லத்தில் பெரியாழ்வார் கண்டெடுத்த
மட்டுப்படாத = குறையொன்றும் இல்லாத
வானமு தொத்தவள் = வான் + அமுது + ஒத்தவள் = வானுலகில் தோன்றிய அமுதத்தினைப் போன்றவள்
அணங்கு = தேவதை
பைந்தமிழ் பாடுவார் = பைந்தமிழ் பாடல்களைப் பாடுபவர்கள்
பாட்டுடைத் தலைவன் = பாட்டின் முதற்பொருளான ஒருவன்
தீதில் புகழ்சேர் = குற்றமற்ற புகழுடைய
திருவுடை மாலே = திருமகளை வலமார்பில் கொண்ட திருமால்

பெரியாழ்வார்

பெரியாழ்வார்

பரந்தாமனுக்குப் பல்லாண்டு பாடிய பேருள்ளம் கொண்ட பெரியாழ்வாரைப் போற்றுவோம்.

13.  நேரிசை வெண்பா
மாலிருஞ் சோலை மலைக்காட்டின் பேரழகும்
கோலவாய் ஊதும் குழலழகும் – மாலழகும்
பிள்ளைத் தமிழிசைத்துப் பாடும் பெரியாழ்வார்
தெள்ளமுதாம் பாட்டே சிறப்பு.
14.  கட்டளைக் கலித்துறை
சிறப்புற்ற செங்கண் கருமுகில் வண்ணன் திருவடியைப்
பிறப்பற்று நீங்கத் தினம்பற்று கின்ற பெருமனத்தார்
அறுப்புற்றுப் பொற்கிழி வீழ அருமறை ஆழ்பொருளை
நெறிப்பட்ட நெஞ்சில் நிலைத்திடச் சாற்றும் நெடுங்கவியே!
15.  அறுசீர் ஆசிரிய விருத்தம்
கவி நயத்துடன் செந்தமிழ் ஓசை கலந்தே இனிக்கின்ற
சுவை நிறைந்து மனத்தைக் கவர்ந்திடும் சுந்தரச் சொல்தூவி
புவி நலம்பெறப் பல்லாண் டிசைத்தகம் பொங்கும் பரிவாலே
செவி நிறைந்திடும் தீங்கவி தைவிட்டு சித்தன் திருமொழியே.
16.  நேரிசை ஆசிரியப்பா
மொழியும் சொற்களால் அழிவிலா அமுதம்
அன்புடன் ஊட்டி இன்புறும் தாய்போல்
ஆதி பகவனை அணியுறப் பாடிடும்
தீதில் காதல் விட்டு சித்தர்
ஈடில் கவியிலொன் றேனும்
பாடா நாள்மனம் பசித்து வாடுமே.

திருமங்கை ஆழ்வார்

திருமங்கை ஆழ்வார் குமுதவல்லியார்

ஆலி நாடன்,  மங்கை வேந்தன், கலியன், பரகாலன் என்று பலவாறு புகழ்ந்துப் போற்றப்படும் திருமங்கை ஆழ்வார் பெருமையைப் பாடுவோம்

17.  நேரிசை வெண்பா
வாடி வருந்தி மனமுருகிச்  செஞ்சொல்லால்
பாடிப் பலகவிகள் பண்ணெடுத்தான் – நாடும்
மெலியோர் இடர்க்கெடுக்க வெற்றிவாள் ஏந்தும்
கலியன் கவியே கவி!
18.  கட்டளைக் கலித்துறை
கவிந்த கனவிருள் சூழ்கலி நீங்க வருங்கலியா!
குவிந்த மனமாம் குமுதம் விரிக்கும் குளிர்மதிநீ!
உவந்து பெரிய திருமொழி சொல்லி உணர்வுறவே
நவின்ற கவியால் புவிவெல்லும் நீயெங்கள் நாயகனே!
19.  அறுசீர் ஆசிரிய விருத்தம்
நாயகன் ஞானம் ஓதும் நற்றமிழ்ப் புலவர்க் கெல்லாம்,
தீயவன் கற்போர் நெஞ்சைத் தேய்த்திடும் துன்பத் திற்கே,
மாயவன் மலர டிக்கே வாழ்வினைப் பணித்த செல்வன்,
தூயவன் மங்கை வேந்தன் சொற்களைத் துதிப்பாய் நெஞ்சே!
20.  நேரிசை ஆசிரியப்பா
நெஞ்சில் கலந்து நிறைந்த திருமொழி
அஞ்சும் மனத்தை ஆற்றும் தாண்டகம்
காதல் மிகுந்துக் கனியும் திருமடல்
வேதம் விரிக்கும் எழுகூற் றிருக்கை
என்றிவை பாடி இசைச்சுவை ஊட்டி
இன்றமிழ்ப் பாவைக்(கு) இருந்தொண்(டு) ஆற்றிய
ஆலிநாட் டரசன் அருளும்
மாலைகள் பாட மலரு(ம்)மெய்ஞ் ஞானமே.

தொண்டரடிப்பொடி ஆழ்வார்

பச்சை மாமலையாகப் பரந்தாமனைப் பார்த்துப் பாசுர மாலை சூட்டிய தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் தூய உள்ளத்தைப் புகழ்வோம்.

21.  நேரிசை வெண்பா
ஞானக் கலைதேர்ந்த நான்குமறை வித்தகரும்
ஈனர்களே அன்பர்க்(கு) இடர்கொடுத்தால்; – ஊனமில்
அன்பே இறையென்னும் தொண்ட ரடிப்பொடியே
உன்பாட்டே பற்றாம் உயிர்க்கு.
22.  கட்டளைக் கலித்துறை
உயிர்க்(கு)உற வாக உணர்விற் கலந்துநல் லுரமளித்துத்
துயர்க்கெடத் தொண்ட ரடிப்பொடி யாழ்வார் தொடுத்தருளும்
மயக்குறும் இன்னிசை மேவும் இளங்கவி மாலையன்றோ
இயக்கிடும் என்றன் இதயத்தை என்றும் இனித்திடவே.
23.  அறுசீர் ஆசிரிய விருத்தம்
இனித்திடும் இசையால் பள்ளி
எழுப்பிடும் பாடல் தந்தார்
மனிதரில் பிரிவைப் பார்க்கும்
மடமையை எதிர்த்து வென்றார்
மனத்தினால் உயர்ந்த தொண்டர்
மாண்பினை வணங்கி நின்றார்
அனைத்துல கேத்து கின்ற
அருந்தொண்ட ரடிக ளாரே.
24.  நேரிசை ஆசிரியப்பா
அடிகள் தோறும் நெஞ்சினை அள்ளும்
வடிவமும் சுவையும் மிகுந்திரு மாலை,
ஆதவன் உதிக்க அறிதுயில் எழுப்பிப்
பாதம் பணியும் பள்ளி எழுச்சி
எனப்பலக் கவிதைகள் எழிலுறத் தொடுத்து
நினைப்பரும் அரங்கனை நெகிழ்ந்து பாடும்
தொண்ட ரடிப்பொடி உள்ளம்
தொண்டர்தம் பாதம் சுமந்திடும் படியே.

குலசேகர ஆழ்வார்

குலசேகர ஆழ்வார்

பெருமாள் திருமொழி‘யை அருளிய சேரகுலத் தோன்றல் குலசேகர ஆழ்வார் புகழைப் பாடுவோம்.

25.  நேரிசை வெண்பா
படியாய்க் கிடக்கும் பணிவுடையான்,
வெற்றி முடியாளும் சேரர் முதல்வன் – வடிவார்ந்த
பொற்கொன்றைச் சூடும் புகழ்க்குல சேகரன்றன்
சொற்கண்டீர் வாழ்வின் துணை.
26.  கட்டளைக் கலித்துறை
துணையென்று தொண்டர் அடித்துகள் சென்னியில் சூடுகின்றாய்
அணையாத அன்பால் கவிமாலை பாடிநின் றாடுகின்றாய்
கணைவில்லை ஏந்திப் பகைவெல்லும் சேரலர் காவலனே
இணையில்லை உன்றன் இனியத் திருமொழிக் கிந்நிலத்தே.
27.  அறுசீர் ஆசிரிய விருத்தம்
நிலந்தரும் இன்பம் எல்லாம்
நெஞ்சினில் விரும்ப மாட்டேன்,
நலந்தரும் மீனின் வாழ்க்கை
நாடுவேன் வேங்க டத்தில்,
கலந்திடும் அன்பால் தொண்டே
கதியென இருப்பேன், என்று
மலர்ந்திடும் கவிதை சொன்ன
மன்னவன் கீர்த்தி வாழ்க!
28.  நேரிசை ஆசிரியப்பா
வாழ்கவென் றவனை வாய்மலர்ந் தேத்திப்
பாடும் புலவர் பலரிருந் தாலும்
அரச வாழ்க்கையைப் பெரிதென நினையா
பற்றறு மனத்தால் பரமனைப் பாடினான்
பெருமாள் திருமொழி கேட்டால்
மருணீங்கி உயரும் மனித குலமே.

திருப்பாணாழ்வார்

அமலன் ஆதிபிரான் என்று அரங்கனைப் பாடிய திருப்பாணாழ்வார் பெருமையை பாடி, ஆழ்வார்கள் நான்மணிமாலையைத் தொடர்ந்து மணம்வீசத் தொடுப்போம்.

29.  நேரிசை வெண்பா
குலத்தாழ்ச்சி சொல்லும் கொடியவரும்  மாறித்
தலைதாழ்த்தி ஏத்தும் தலைவர் –  கலைவாய்ந்த யாழொலிக்கப் பாடும் இசைப்பாணர் பாடற்கேட்டு
ஏழுலகும் வாழ்த்தும் இசைந்து.
30.  கட்டளைக் கலித்துறை
இசைந்தோசை செய்யும் எழில்யாழின் பாடல் இமைகளில்நீர்
கசிந்தோடச் செய்யும் கவிதைப் பெருக்கால் கவலையெலாம்
பொசிந்தோடச் செய்யும் புலமையால் மாலவன் பொன்னடியும்
அசைந்தாடச் செய்யும் அருள்பாணர் சொற்கள் அரண்நமக்கே.
31.  எழுசீர் ஆசிரிய விருத்தம்
நமக்குர மளிக்கும் இன்னிசை யாழின்
நரம்பினில் வெளிவரும் கீதம்
தமக்கென வாழா திசைக்கென வாழும்
தவத்தவர் எழுப்பிடும் நாதம்
சுமக்கின்ற முனியின் தோள்களில் இருந்தும்
துலங்கிடும் பரவசம் குறையாது
இமைப்பொழு தேனும் இடைவிடா தேத்தி
இறைதொழும் பாணரைப் புகழ்வோம்.
32.  நேரிசை ஆசிரியப்பா
புகழுரை மொழிந்து புரவலர் தம்மைத்
துதிசெய் தேத்தும் தொழிலினைத் துறந்து
கண்ணன் என்னும் காவலன் தன்னைப்
பாடி அருள்பெறும் பாணர் பெருமான்
தண்டமிழ் புரக்கும் தலைவன் அரங்கனைக்
கண்ட கண்கள்மற் றொன்றினைக் காணா
என்றிசைப் பாடிக் கண்களை மூடி
யோகம் புணர்ந்த இன்னிசைப் பாணர்
கமல வாய்மொழிக் கவிதை
அமலன் ஆதி பிரானெனும் பாட்டே.

முதலாழ்வார்கள்

முதலாழ்வார்கள் – திருக்கோவிலூர்

பாட்டுக்குரிய பழையவர் என்று போற்றப்படும் முதலாழ்வார்கள் மூவர் பெருமையைப் பாடுவோம்.

மூவர் புகழ்

33.  நேரிசை வெண்பா
பாட்டுக் குரிய பழையவர் முப்பெரியோர்
வீட்டின் கழியில் விளக்கேற்றி – வாட்டும்
இருள்போகப் பாடிடும் ஈடில் கவிதை
திருக்காட்டும் தெய்வச் சுடர்.

பொய்கை ஆழ்வார்

34.  கட்டளைக் கலித்துறை
சுடரென்று வைய விளக்கேற்றி நெஞ்சில் துணையெனவே
இடர்வென்று நிற்கும் இருங்கவி தைப்பொழி ஏந்தலென்பேன்
உடற்குடில் தன்னில் ஒளியேற்றிக் கண்ணிமை மூடலற்ற
படர்நிலை தன்னில் பரமனைக் கண்டிடும் பொய்கையரே.
35.  கலி விருத்தம்
பொய்கை பூத்திடும் தாமரை போல்மனம்
பொய்கள் நீங்கியே புத்துயிர் பெற்றிடும்
பொய்கை யார்மொழி பொற்கவி ஒன்றுமே
மெய் கலந்து விரித்துரைப் பாருக்கே.

பூதத்தாழ்வார்

36.  நேரிசை ஆசிரியப்பா
உரைப்பார் உணர உயர்தமி ழாலே
திருப்பா அருளிய சிறப்புடை மூவரில்
அன்பெனும் விளக்கை அறிவெனும் சுடருடன்
நன்முறை ஏற்றும் ஞானத் தமிழர்
தொல்லை இடர்தனைத் தொலைத்திட உலகில்
மல்லையில் தோன்றிய மாபெருங் கவிஞர்
புவிபோற் றிடும்பூ தத்தார்
கவிதை கேட்டால் கரைந்திடும் கல்லே.
37.  நேரிசை வெண்பா
கல்லும் கவிசொல்லும் கண்கவரும் காட்சிமிகும்
மல்லைப் பதியுதித்த மாணிக்கம் – நல்லன்பால்
சோதி விளக்கேற்றித் தூயகவி தான்படைக்கும்
பூதத்தார் என்பேன் புகழ்ந்து.

பேயாழ்வார்

38.  கட்டளைக் கலித்துறை
புகழ்சேர் திருவுடை மாலை மனத்தினில் போற்றிநின்றே
பகரும் மொழிகளை அந்தாதி யாகவெண் பாவினிலே
அகமுருக்கிடும் நற்றமிழ் மாலை அருளிச்செய்த
திகழொளிச் சுடர் பேயாழ்வார் நற்புகழ் செப்பரிதே.
39.  அறுசீர் ஆசிரிய விருத்தம்
அரிதினும் அரிய தான
அருள்வளம் நிறைந்த செல்வர்
திரிதரும் புலன்கள் வென்ற
தெள்ளிய மெய்ஞா னத்தர்
அரியுடன் சிவனும் ஒன்றே
அறிமினென் னும்பே யாழ்வார்
இருளிலும் இறையைக் கண்ட
இயற்றமிழ்ப் புலவர் அம்மா!

நூல் இறுதிப் பாடல்

40.  நேரிசை ஆசிரியப்பா
மாதவம் செய்தும் மாமறை ஓதியும்
வாய்த்திடா நலங்கள் மாந்தருக் கருள
தீதில் நன்னெறி காட்டியெங் குந்திரிந்து
ஆதியை வணங்கி அன்பைப் பரப்பிடும்
பெரியோர் புகழை என்வாய் பேசிடப்
பிழைபொறுத் தருளும்பே ரன்பர்க்கு நன்றி!
மாலைப் பாடும் மதிநலத் தாழ்வார்க்கு
மாலை சார்த்தும் நான்மணி மாலையாய்
வாயி னிக்க வருந்தமிழ் வார்த்தைகள்
தூய மனங்களில் துயர்துடைத் தோங்குக!
அடியவர்க் அருளுமாழ் வார்கள்
அடிமலர் தொழுதிடும் இவ்வா சிரியமே.

This Post Has 2 Comments

  1. Kripa

    🙏🏽 Beautiful compilations, this work highlights the authors proficiency in Tamizh and Divya Prabadam.

  2. Dr.V.K.Kanniappan

    மிகச் சிறப்பான பாடல்கள். இனிய வாழ்த்துகள்.

Leave a Reply