ஆழ்வார்கள் நான்மணிமாலை

ஆழ்வார்கள்

ஆழ்வார்கள் நான்மணிமாலை – பன்னிரு ஆழ்வார்களின் பெருமையைப் பறைசாற்றும் புகழ்மாலை. வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என்ற நான்கு மணிகளைக் கோர்த்துத் தொடுத்த மரபுக் கவிதை மலர்மாலை.

ஆரமுதாம் தமிழுக்கு அருந்தொண்டாற்றியவர்களில் ஆழ்வார்கள் தனிப்பெருமை வாய்ந்தவர்கள். நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் பாடல் திரட்டு ஆழ்வார்களின் நாவன்மையை நமக்கெல்லாம் பறைசாற்றும்.

தேனினும் இனிக்கும் அவர்களுடைய பாடல்கள் ஆழ்ந்த பொருள் பொதிந்த அருமணிகளாகவும் சுடர்விட்டு ஒளிர்கின்றன. சடகோபர் அருளிய திருவாய்மொழி போன்ற முத்துக்கள் பதிந்த பிரபந்தம் ஆழ்துயரைப் போக்கும் அருமருந்து என்று சொன்னால் மிகையாகாது. அத்தகைய சிறப்புடைய பிரபந்தம் என்னும் பேரிலக்கியத்தைப் படைத்த பன்னிரு ஆழ்வார்கள் பெருமையைப் போற்றும் நான்மணிமாலையை தமிழன்னையின் மலரடியில் சமர்ப்பிக்கிறேன்.

இந்த நூல் தமிழ்த்தாய் காப்புச் செய்யுளுடன் தொடங்கி, முறையே வெண்பா, கட்டளைக் கலித்துறை, விருத்தம், அகவல் என்ற வரிசைப்படி நான்மணிமாலையின் இலக்கணத்துடன் அந்தாதித் தொடையில் அமைக்கப்பட்டு ஆழ்வார்களின் பெருமையைப் பறைசாற்றுகின்றது. இலக்கணச் செங்கோலேந்தி யாப்புச் சிங்காதனத்தில் தமிழன்னையை வீற்றிருக்கச் செய்யும் மரபுக் கவிதைகளின் வளர்ச்சிக்கு இந்த நூல் பெரிதும் உதவும் என்று நம்புகிறேன்.

ஆழ்வார்களின் அருந்தொண்டு வாழ்க! ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்!

ஆழ்வார்கள் நான்மணிமாலை – கவிதை நூல் தொடக்கம்

பொருளடக்கம்

காப்பு

தமிழ்த்தாய் காப்புச் செய்யுள் – ஆழ்வார்கள் நான்மணிமாலை என்னும் இந்நூல் இனிதே நிறைவு பெற பழந்தமிழ் அன்னையைத் துணைசெய்ய வேண்டுகின்ற பாடல்.

நேரிசை வெண்பா
சந்தம் மிகுந்த தமிழ்மறைநா லாயிரமும்
தந்தபெரி யோர்பெருமை சாற்றிடவே – சிந்தையினில்
வற்றாத அன்பால் மணிமாலை நான்மொழியத்
தொற்றமிழ்த்தாய் நிற்பாள் துணை.

பொருள்

சந்தம் நிறைந்து இன்னிசை ஒலிக்கும் தமிழ் மறையான திவ்வியப் பிரபந்தத்தின் நாலாயிரம் பாடல்களையும் நமக்கு அளித்த பெரியோர்களான ஆழ்வார்கள் பெருமையை உலகத்திற்கு எடுத்துக் கூறும்பொருட்டு, என் மனத்தில் என்றும் நீங்காத அன்போடு ‘ஆழ்வார்கள் நான்மணிமாலை’ என்னும் இந்நூலை நான் இயற்றுவதற்குப் பழம்பெருமை வாய்ந்த தமிழ்த்தாய் துணையாக நின்று காத்தருள்வாளாக. தொற்றமிழ்த்தாய் = தொல் + தமிழ் +தாய் = தொன்மை (பழமை) சிறப்புடைய தமிழ் அன்னை

The twelve Alwars,
The great Saints who were immersed in God, 
Blessed us with four thousand musical verses of Tamil Veda filled with Melody.
With heart filled with eternal love and devotion,
I attempt to praise the Glory of the Divine Twelve in this work called Nanmanimaalai,
A necklace of songs created with four types of beads namely Venpa, Kalithurai, Viruttam, and Asirayappa.
I bow to Mother Tamil, of Ancient glory,
To seek Her blessings and support for the successful completion of this work.

நம்மாழ்வார் – Nammazhwar

நம்மாழ்வார் வாழ்க்கை வரலாறு

பாண்டிய நாட்டின் தென்கோடியில் உள்ள திருக்குருகூரில் காரியார் உடைய நங்கை என்பவரின் புதல்வராக மாறன் என்னும் பெயரில் நம்மாழ்வார் பிறந்தார். குழந்தை பிறந்ததுமுதல் மூச்சு அசைவு எதுவும் இல்லாதது கண்ட பெற்றோர் குழந்தையைக் கோயில் திருப்புளியமரத்தடியில் கண்வளரச் செய்தார்கள். பதினாறு ஆண்டுகள் சென்றன.

திருக்கோளூரில் பிறந்த மதுரகவிகள் என்ற அந்தணர் வடக்கே திவ்வியதேசங்களுக்குச் சென்று ஆலயதரிசனம் செய்யும் போது, தென்திசையில் ஓர் அபூர்வமான ஒளியைக் கண்டு, அதைநோக்கி வந்தார். அந்த ஒளி திருக்குர்கூர் புளியமரத்தடியில் மறைந்தது. மதுரகவிகள் புளியமரத்தடியில் ஓர் இளைஞர் பேச்சில்லாமல் இருந்தது கண்டு, தம் இரண்டு கைகளையும் ஓசையெழும்படி தட்ட, இளைஞர் கண் விழித்து மதுரகவியாரை நன்கு நோக்கினார். அதனைக் கண்ட மதுரகவியார், இளைஞரை நோக்கி, ‘செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் , எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?’ என்று கேட்டார். அதற்கு இந்த இளைஞர் ‘அத்தைத் தின்று அங்கே கிடக்கும்’ என்று திருவாய் மலர்ந்தருளினார். மதுரகவியார் அதனைக் கண்டு ‘நமக்கு வடக்கில் தோன்றிய ஒளி இவரே! இவரே!’ என்று தெளிந்து, இளைஞராகிய நம்மாழ்வார் திருவடிகளில் வணங்கி நின்று ‘என் அன்புக்குரியீர், அடியேனை ஆட்கொண்டு அருள்வீர்’ என்று வேண்டினார். நம்மாழ்வாரும், ‘அன்புடையீர், நாம் இறைவனை வாழ்த்திப் பாடும் பாசுரங்களால் நீர் பட்டோலையை அலங்கரிப்பீராக” என்று திருவாய் மலர்ந்தருளினார்.

நம்மாழ்வார் தம்முடைய மலர்க்கண்கள் நீர் சொரிய, இறைவனின் அருட்குணங்களை எண்ணி எண்ணி, உள்ளத்தில் அடங்காத அன்பு கொண்டு, அவ்வன்பு மடைதிறந்த வெள்ளம்போல் வெளிப்பட, மதுரகவியாரின் பட்டோலையை அலங்கரிக்க, திருவிருத்தம், திருவாசிரியம்,பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்னும் அரும்பொருள் நிதிகளாகிய நான்கு தமிழ்மறைகளைத் திருவாய்மலர்ந்தருளினார்.

நம்மாழ்வாரின் திருநாமங்கள்

இவருக்குப் பெற்றோர்கள் மாறன் என்று திருப்பெயரிட்டார்கள். இவர் காரியாருடைய அருமைச் செல்வர் ஆதலின், இவரைக் காரிமாறன் என்றும் கூறுவர். குழந்தைகள் பிறந்தவுடன் வந்து சேர்ந்து, முன் ஜன்ம வாசனைகளைப் போக்கிவிடுவதாகிய ‘சடம்’ என்னும் வாயு, இவர் அவதரித்தவுடன் இவரையும் சேர்ந்திட வர, இவர் அதனைக் கோபித்துத் தம்மை அணுகாதபடித் தடுத்தார். அதனால், இவருக்கு சடகோபர் என்பதும் பெயராயிற்று. இவரது திருப்பெயரான ‘நம்மாழ்வார்’ என்னும் நாமம், இறைவனே அருளிய திருப்பெயர் என்பர். இவருக்கு மகிழம்பூ உரிய மாலையாகும். அதனால், இவருக்கு வகுளாபரணர் என்னும் பெயரும் உண்டு. இவரது அருளிச் செயல்களால் பரமனாகிய களிறு தம் வசமாகும்படிச் செய்ததால் இவர் பராங்குசன் என்னும் பெயரையும் பெற்றார்.

நம்மாழ்வார் பாடல் சிறப்பு

தம் கவியீர்ப்புச் சக்தியால் இறைவனையே பின்தொடர வைக்கும் ஆற்றல் மிக்கவர் நம்மாழ்வார் என்பதைக் கவிச்சக்கரவர்த்தி கம்பர் தாம் படைத்த ‘சடகோபர் அந்தாதி’ என்னும் நூலில் கீழ்வருமாறு மொழிகிறார்:

வேதத்தின் முன்செல்க மெய்யுணர்ந் தோர்விரிஞ் சன்முதலோர்
கோதற்ற ஞானக் கொழுந்தின்முன் செல்க குணங்கடந்த
போதக் கடலெங்கள் தென்குரு கூர்ப்புனி தன்கவியோர்
பாதத்தின் முன்செல்லு மோதொல்லை மூலப் பரஞ்சுடரே?

பொருள் : திருமாலின் திருப்பாதங்கள் வேத சாஸ்திரங்களைக் கடந்து சென்றாலும் செல்லட்டும்; அன்றி உண்மை நிலை கண்ட பிரமன் முதலானவர்களின் குற்றமற்ற ஞானத்தின் முடிவைக் கடந்து சென்றாலும் செல்லட்டும்; ஆனால் அந்த ஆதிமூலச் சுடரான இறைவன், குணங்களுக்கெல்லாம் அப்பால் திகழும் ஞானக் கடலான திருக்குருகூர் சடகோபர் அருளிச்செய்த கவிதைகளில் ஒரு பாதத்தையேனும் கடந்து செல்வானோ? (செல்லமாட்டான், சடகோபரின் தமிழால் ஈர்க்கப்பட்டு அவர் கவிதைகளைப் பின்தொடர்ந்தே வருவான்)

இன்றும், கோவில்களில் உத்சவங்களின் போது, எம்பெருமான் நடுவே எழுந்தருள, வடமொழி வேதம் எம்பெருமானுக்குப் பின்னால் பாராயணம் செய்யப்பட்டு வருவதும், தமிழ் வேதமாகிய திவ்வியப் பிரபந்தம் எம்பெருமானுக்கு முன்னே ஓதப்பட்டு வருவதும் திவ்விய தேசங்கள் முழுவதும் காணப்படுவது நம்மாழ்வார் வளர்த்த தமிழின் பெருமையைப் பறைசாற்றுகிறது.

நான்மணிமாலைப் பாடல்கள்

பொதுவாக எந்த நூல் ஆரம்பிக்கும் போதும் சடகோபர் புகழைப் பாடிப் பின் மற்ற பாடல்களை அளிப்பது வைணவ மரபு. புகழேந்திப் புலவரும் கம்பரும் கூடத் தத்தம் நூல்களாகிய நளவெண்பாவிலும் கம்பராமாயணத்திலும் தொடக்கத்தில் சடகோபரைத் துதிக்கின்றனர்.

நேசரிதங் கூர நிலவலயம் தாங்குநளன்
மாசரிதங் கூற வருந்துணையா – பேசரிய
மாமகிழ்மா றன்புகழாம் வண்தமிழ்வே தம்விரித்த
மாமகிழ்மா றன்தாள் மலர்.
– நளவெண்பா

பொருள்: புகழ்பொருந்திய திருமகள் நாதனாகிய திருமாலின் பெருமை பாடும் திருவாய்மொழியென்னும் வளமிக்க தமிழ் மறையைப் பாடி அருளிய மகிழ மலர்மாலை அணிந்த நம்மாழ்வாரின் திருவடித் தாமரை மலர்கள், நளன் கதையை நான் கூறத் துணையாகும்.

தருகை நீண்ட தயரதன் தான்தரும்
இருகை வேழத் திராகவன் தன்கதை
திருகை வேலைத் தரைமிசைச் செப்பிட
குருகை நாதன் குறைகழல் காப்பதே.
– கம்பராமாயணம்

பொருள்: எளியவர்களுக்கு வாரி வழங்கும் நீண்ட கரங்களை உடைய தசரதனின் மைந்தனாகத் தோன்றிய, இரண்டு துதிக்கைகளைக் கொண்ட யானை போன்ற வலிமை வாய்ந்த மேனியனான இராம பிரானின் திருக்கதையை இந்த உலகம் போற்ற நான் மொழிவதற்கு, திருக்குருகூர் தோன்றிய திருவருட் செல்வரான நம்மாழ்வாரின் வேத நாதம் ஒலித்திடும் திருவடிகள் துணையாக நின்று காக்கும்.

நாம் இந்த நான்மணிமாலையிலும் முதலில் ‘வேதம் தமிழ்செய்த மாறன்’ என்றும் சடகோபர் என்றும் அழைக்கப்படும் நம்மாழ்வார் பெரும்புகழைப் பாடிப் பின் மற்றுமுள்ள ஆழ்வார்களைப் பாடுவோம்.

1.  நேரிசை வெண்பா
ஆசிரியம் அந்தாதி அன்பார் திருவிருத்தம்
மாசறியா நற்றிரு வாய்மொழியும் – பாசுரமாய்
ஞானத் தமிழ்ப்பாட்டில் நல்கினான் மாறனெனும்
மோனத் தவஞ்செய் முனி.

பொருள்

ஆசிரியம் = ஆசிரியப்பாவில் எழுதப்பட்ட திருவாசிரியம் என்னும் நூல்
அந்தாதி = நேரிசை வெண்பாவில் அந்தாதியாக அருளிச்செய்த பெரியத் திருவந்தாதி என்னும் 100 பாடல்களைக் கொண்ட நூல். இந்நூல் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள இயற்பா என்னும் தொகுப்பில் ஒரு பகுதியாக விளங்குகிறது
அன்பார் = அன்பு + ஆர்ந்த = அன்பு நிறைந்த
திருவிருத்தம் = நாயிகா பாவத்தில் கட்டளைக் கலித்துறை என்னும் பாவகையில் இயற்றப்பட்ட திருவிருத்தம் என்னும் நூல்
மாசறியா = மாசு + அறியா = குற்றம் அறியாத = குற்றமற்ற நன்மை விளைவிக்கக்கூடிய
நற்றிரு = நல் + திரு
வாய்மொழி = ஆயிரம் விருத்தப் பாடல்களை அந்தாதியாகக் கொண்டு அமைந்த திருவாய்மொழி என்னும் நூல்
பாசுரமாய் = பாமாலையாக
ஞானத் தமிழ்ப்பாட்டில் நல்கினான் = அஞ்ஞானம் போக்கி அறிவூட்டும் தமிழ்ப்பாடல்களை அருளினான்
மாறனெனும் = மாறன் என்ற பெயர் கொண்ட. மாறன் என்றால் மாற்றம் இல்லாதவன் அல்லது என்றும் தன் தவ நிலையிலிருந்து மாறாதவன் என்று பொருள் சொல்வர்.
மோனத் தவம்செய் முனி = எப்போதும் மெளன நிலையில் தவயோகம் புரியும் முனிவரான நம்மாழ்வார்.

விளக்கம்

என்றும் யோக நிஷ்டையில் ஆழ்ந்து மோனத்தில் இருக்கும் நம்மாழ்வார், திருவாசிரியம், திருவந்தாதி, திருவிருத்தம், திருவாய்மொழி – ஆகிய உயர்நலம் உடைய நூல்களை நாம் படித்துப் பாடி மகிழ ஞானம் நிறைந்த தமிழ்ப் பாசுரங்களாக அருளியிருக்கிறார். (அத்தகைய மகானின் திருவருளைப் போற்றி உய்வோமாக. )

The songs of Thiru Āsiriyam, Periya Thiruvantãdi,
The lovely verses of ThiruVirutham,
And the impeccable words of ThiruVãymozhi –
These divine works were rendered in Tamil songs beset with great wisdom,
By Maran, the enlightened Seer in penance.
2.  கட்டளைக் கலித்துறை
முனிவரன் ஓங்கும் உயர்நலம் கொண்டவன் ஓதுமொழி
கனியினில் தீந்தேன் கலந்ததை ஒத்தே கவர்ந்தினிக்கும்
அனைவரும் கற்க அருமறை சொன்ன அறிஞர்களில்
தனியிடம் பெற்ற சடகோபன் பொங்கும் தமிழ்க்கடலே!

பொருள்

முனிவரன் = முனிவர்களில் சிறந்தவரும்
உயர்நலம் கொண்டவன் hi= உயர்ந்த நலம் உடையவருமான நம்மாழ்வார்
ஓதுமொழி = அருளிச்செய்த பாடல்கள்
கனியினில் = பழச்சாற்றில்
தீந்தேன் = தீம் + தேன் = இனிய தேன்
கலந்ததை ஒத்தே = கலந்ததைப் போன்று
கவர்ந்தினிக்கும் = உள்ளம் கவர்ந்து மகிழ்விக்கும்
அனைவரும் கற்க = உலக மக்கள் அனைவரும் கற்றுணர
அருமறை = கற்பதற்கரிய தமிழ் வேதங்களின்
சொன்ன அறிஞர்களில் = பொருளை விரித்துரைக்கும் பேரறிவாற்றல் கொண்டர்களில்
தனியிடம் பெற்ற = தனிச்சிறப்பு வாய்ந்த
சடகோபன் = நம்மாழ்வார்
பொங்கும் தமிழ்க்கடலே = கடலலை போன்று பொங்கியெழும் கவியலைகளை உண்டாக்குவதால் தமிழென்னும் பெருங்கடல் என்று போற்றத்தக்கவர்.
The Divine words spoken by the Great Seer, 
Who was blessed with the greatest good, 
Delight the devoted ears with the sweetness of fruits mixed with honey.
He stands out
from the Erudite scholars who explicated the essence of the Vedas in Tamil
in that His songs are understood and revered by scholars and laymen alike.
Sadagopan, who is such a venerable saint, is indeed an ocean of Tamil wisdom. 
3.  அறுசீர் ஆசிரிய விருத்தம்
கடலே போன்ற கவித்திரளில்
    கண்ணி ஒன்றே போதுமவன்
தொடைசேர் பாட்டின் புகழ்சொல்ல
    துலங்கு ஞானத் திறம்சொல்ல
அடலே றனைய கவியாற்றல்
    அழகைச் சேர்க்கும் தமிழ்மொழிக்கே
உடலும் உயிரும் உருகிடவே
    உயர்வாம் நலம்செய் வாய்மொழியே!

பொருள்

அவன் தொடைசேர் பாட்டின் புகழ்சொல்ல = தொடை நலம் சேரச் சடகோபர் அருளிய ஆயிரம் பாடல்களின் புகழை உலகுக்குப் பறைசாற்றவும்
துலங்கு = பிரகாசிக்கும் ஞானத்தின் தவவலிமையை அறியச்செய்யவும்
கடலே போன்ற = கடல் போன்று திரண்டு எழுகின்ற
கவித்திரளில் = கவிதைத் திரளில்
கண்ணி ஒன்றே போதும் = இரண்டடிகள் கொண்ட ‘கண்ணன் கழலிணை’ என்று தொடங்கும் பாட்டு ஒன்று மட்டுமே போதும்
அடலே றனைய = அடல் + ஏறு + அனைய = வலிமை வாய்ந்த காளை போன்ற (திறமை வாய்ந்த)
கவியாற்றல் = கவிதைத் திறன்
அழகைச் சேர்க்கும் தமிழ்மொழிக்கே = ஞானச்செறிவோடு கவிதை வளமும் நிறைந்த பாடல்கள் அழகிய தமிழ்மொழிக்கே மேலும் அழகைச் சேர்க்கும்
உடலும் உயிரும் உருகிடவே = பாடும் அன்பர்களுக்கு உடலும் உயிரும் உருகுமாறு
உயர்வாம் நலம்செய் = நலம் மிகுந்து உள்ளம் உயர்ந்து செம்மைப்பட வைக்கும்
வாய்மொழியே = திருவாய்மொழியே.

விளக்கம்

சடகோபர் அருளிய கடல் போன்ற கவிதைத் திரட்டில், அவரது கவி வல்லமையையும் ஞானத்தையும் அறிந்துகொள்ள ஒரே ஒரு கண்ணி (இரண்டடிகள் கொண்ட பாடல்) மட்டுமே போதும். அவரது காளை போன்ற கவியாற்றல் தமிழ்மொழியின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பதாக அமையும். சடகோபர் பாடிய திருவாய்மொழியும் நம் உடலும் உயிரும் உருகுமாறு உணர்வினில் கலந்து உயர்ந்த நலம் அளிக்கும்.

In the oceanic expanse of His hundreds of songs, 
A small couplet alone can proclaim the greatness of this genius composer and declare his unwavering wisdom.
The verses composed with the poetic prowess equal to the valiance of the bull, add elegance to the already beautiful Tamil language. Thiyuvaymoli has the power to bestow the greatest wellness to the devotee whose body and soul melts on the recitation of Sadagopan’s grand poetry.   
4.  நேரிசை ஆசிரியப்பா
மொழியும் சொற்களால் தூரியம் முழக்கி
அழிவிலாப் புகழ்கொள் அருந்தமிழ் மொழியில்
ஆயிரம் இன்கவி அருளிச் செய்தவன்
மாயப் பிறப்பை மாய்த்திட வல்லவன்
கலிகெட உலகில் கலகங்கள் நீங்க
மெலிவுசெய் சாபங்கள் வீழ்ந்து நலிய
மதிநலம் வாய்த்து மனம்தெளி வடைய
புதிராம் வாழ்வின் உண்மைகள் புரிய
பயனுறும் வாய்மொழி படிமின்
மயர்வினை அழிப்பான் மாறனென் தேவே.

அருஞ்சொற் பொருள்

தூரியம் முழக்கி = முரசு கொட்டி
பயனுறும் = பயன்தரும்
படிமின் = படியுங்கள்
மயர்வு = மயக்கம் ( அறியாமை, தெளிவின்மை முதலிய மன மாசுகள்)
தேவே = தேவனே

விளக்கம்

காரிமாறன் என்று அழைக்கப்படும் நம்மாழ்வார், சொல்லும் வாய்மொழியால் முரசு அறைந்து, அழியாப் புகழ்மொண்ட தமிழில் ஆயிரம் கவிதைகளை அருளியவர். வீடு பேறு தந்து பிறப்பென்னும் பிணியைப் போக்க வல்லவர். அவர் அருளிய திருவாய்மொழியானது, கலி என்று சொல்லப்படும் தீமையை ஒழித்து உலகத்தில் கலகங்களையும் நம்மை வருத்தும் சாபங்களையும் நீக்கவல்லது. எனவே, அறிவிலே தெளிவு உண்டாகி வாழ்வின் புதிர்களுக்கு விளங்கி உண்மை நிலை உணர வேண்டுமானால், திருவாழ்மொழியைப் படியுங்கள்; (அவ்வாறு படித்தால்) அறியாமை என்னும் மயக்கத்தை அழிக்கும் ஞானம் அளித்துச் சடகோபர் நம்மைக் காப்பார்.

With his words that resound like drum-rolls,
Thousand songs he rendered in Tamil of eternal fame,
Reading which we get liberated from the cycle of birth and death.
To remove the vicious hold of evil,
To resolve the conflicts in our daily lives,
To remove the effects of curses that weaken our souls,
For the well-being and clarity of the mind,
To unravel the mysteries of life and understand the Truth,
We should all read Thiruvaymoli,
which dispels all our ignorance with Maran’s grace.

ஆழ்வார்கள் நான்மணிமாலையில் நம்மாழ்வாரின் நற்புகழ் பாடும் பாடல்கள் நிறைவுறுகின்றன.

மதுரகவி ஆழ்வார் – Madhurakavi Aazhwar

இனித்திடும் எளிய கவிதைகளால் மாறன் புகழ்பாடி ‘நாவினால் நவிற்றின்பம் எய்திய’ மதுரகவி ஆழ்வாரைப் போற்ற ஆயிரம் கவிதை வேண்டும். ‘கண்ணி நுண்சிறுத்தாம்பு’ பாடி மதுரமான கவிதைகளால் நம் மனத்தை ஆட்கொண்ட மதுரகவி ஆழ்வாரை மனதாறப் போற்றி அவர் புகழ் பாடுவோம்.,

5.  நேரிசை வெண்பா
தேவன் எனக்கென்றும் செல்வச் சடகோபன்
ஆவியினை அன்புருக ஆட்கொண்டான் – ஓவாமல்
மாறன் புகழ்சொல்வேன் என்னும் மதுரகவி
மாறும் பிறவி மருந்து.

பொருள்

தேவன் எனக்கென்றும் = எனக்கு எப்போதும் வழிபடும் தெய்வமாக விளங்கும்
செல்வச் சடகோபன் = ஞானச் செல்வம் நிறைந்த மகானாகிய சடகோபன்
ஆவியினை = எனது ஆருயிரை
அன்புருக = அன்பு பெருகி மனம் உருகும்படியாக
ஆட்கொண்டான் = தனக்குத் தொண்டு செய்யும்படியாகப் பணித்தான்
ஓவாமல் = இடைவிடாமல்
மாறன் = தன் (யோக) நிலையிலிருந்து மாறாதவர் ஆதலால் நம்மாழ்வார் மாறன் என்றும் பெயர்பெற்றார் என்பர்
புகழ்சொல்வேன் = புகழைப் பாடுவேன்
என்னும் மதுரகவி = என்று சொல்லும் மதுரகவியார்
மாறும் பிறவி மருந்து = மாறி மாறி வரும் பிறவி என்னும் நோயைத் தீர்க்கும் மருந்தாக அமையும் பாடல்களைத் தந்தவர்.
Sadagopan, the grand poet, is always my Lord as he possessed my soul melting with devotion.
I will proclaim Maran’s glory ceaselessly
– Thus spake Madhurakavi Alvar ,
whose verses are the cure for the repeatedly changing cycle of birth and death.
6.  கட்டளைக் கலித்துறை
மருந்தென்று நாளும் மகிழ்மாறன் தூய மலர்ப்பதத்தைச்
சிரந்தன்னில் சூடிச் சிறுத்தாம்பு பாடிச் செழுந்தமிழில்
வருந்தென்றல் காற்றாய் மணம்வீசும் பாக்கள் மலர்ந்தருளி
அருந்தொண்டு செய்த மதுர கவியார் அருட்சுடரே!

அருஞ்சொற் பொருள்

மருந்தென்று = அறியாமை என்னும் நோய்க்கு மருந்தாகக் கருதி
நாளும் = எந்நாளும்
மகிழ்மாறன் = மகிழம்பூ மாலை அணிந்த மாறனின் (நம்மாழ்வாரின்)
மலர்ப்பதத்தை = மலர் போன்ற பாதங்களை
சிரந்தன்னில் = சிரம் + தன்னில் = தலை மீது
சூடி = தாங்கிக்கொண்டு
சிறுத்தாம்பு பாடி = ‘கண்ணி நுண் சிறுத்தாம்பு’ என்று தொடங்கும் முத்துப்போன்ற பத்துப் பாசுரங்கள் பாடி
வருந்தென்றல் காற்றாய் = வீசுகின்ற தென்றல் காற்றுபோல்
மணம்வீசும் பாக்கள் = நறுமணம் அளிக்கும் பாடல்களை
மலர்ந்தருளி = அருளிச்செய்து
அருந்தொண்டு செய்த = தமிழுக்கும் அருமறைக்கும் பெருந்தொண்டு செய்த
மதுர கவியார் = மதுரகவி ஆழ்வார்
அருட்சுடரே = அருள் பொங்கும் சுடராக ஒளிர்கிறார்.

Maran, who wears the garland made of Makizha flowers, is the cure for the ignorance that destroys our souls,
Thus realizing Madhurakavi Alvar places his head under Maran’s flower feet in complete surrender and devotion
And sings the 10 ‘Kanninun Siruthambu’ poems,
Which, like the breeze of Thendral, bring a divine fragrance to Tamil language.
Because of this great service to Maran and Tamil, Madhurakavi Alvar is a beaming light of blessedness.

ஆழ்வார்கள் நான்மணிமாலையில் மதுரகவி ஆழ்வாரைப் போற்றும் பாடல்கள் நிறைவுறுகின்றன.

திருமழிசை ஆழ்வார் – Thirumazhisai Aazhwar

திருமழிசை ஆழ்வார்

‘பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்’ என்று ஆணையிட்டு, இறைவனையே காஞ்சி நகரிலிருந்து இடம் பெயர வைத்த திருமழிசை ஆழ்வாரின் கவியாற்றலையும் யோக வலிமையையும் போற்றிப் பாடுவோம்.

7.  சந்த விருத்தம்
சுடர்விளங்கும் சந்தமேவும் சுந்தரச் சுகந்தியில்
இடர்விலக்கும் இன்பகீதம் இங்கெமக் கருளினார்
படம்விளங்கும் பாம்பின்மேல் பயின்றபள்ளி நீங்கிட
இடம்பெயர்ந் தெழுப்பிடும் இசைஞரூர் மழிசையே.

அருஞ்சொற் பொருள்

சுடர்விளங்கும் = சுடர் வீசும்
சந்தமேவும் = சந்தம் + மேவும் = சந்த இசை நிறைந்த
சுந்தர = அழகிய
சுகந்தியில் = ‘சுகந்தி’ என்னும் ஏழு சீர்களைக் கொண்ட ஒருவகை சந்த விருத்தத்தில் (மழிசையார் பாடிய திருச்சந்த விருத்தம் இந்தப் பாவகையைச் சார்ந்தது)
இடர்விலக்கும் = துன்பங்களைப் போக்கும்
இன்பகீதம் = இன்பம் அளிக்கும் கீதங்கள்
இங்கெமக் கருளினார் = இங்கு + எமக்கு + அருளினார்
படம் விளங்கும் = படம் எடுக்கும்
பாம்பின் மேல் = ஆதிசேஷன் என்று அழைக்கப்படும் ஐந்தலைவாய் நாகத்தின் மீது
பயின்ற பள்ளி நீங்கிட = பள்ளி கொண்ட திருமாலின் அறிதுயில் கலைந்திட
இடம்பெயர்ந்து எழுப்பிடும் = காஞ்சி நகரில் பாம்பணையாகிய தனது இடத்தை விட்டு வெளியேறும்படியாக எழுப்பித் தன் பின் தொடரும்படி ஆணையிட்ட
இசைஞர் ஊர் மழிசையே = இசைவல்லுநரான ஆழ்வாரின் ஊர் திருமழிசையே.

He composed delightful songs, that drive away obstacles,
In the shining melody of the beautiful Sandha form called Sugandhi,
His was the devotional power that made God get up from his divine sleep on the serpent-bed
And vacate the city of Kanchi to follow him, the devotee.
Thirumazhisai is the city in which such a great musically skilled poet was born.
8.  நேரிசை ஆசிரியப்பா
மழிசை வந்த மணிச்சுடர் ஒளியே!
அழிவிலா ஆழ்பொருள் அமைந்த(அ)ந் தாதியும்
நந்தா விளக்காய் நலமுற விளங்கும்
சந்த விருத்தமும் தந்தருள் புரிந்தீர்!
வள்ளல் எனவெறும் மனிதரைப் பாடா
வெள்ளை மனத்தால் விண்தொட உயர்ந்தீர்!
மாண்புறும் உம்கவி வலியால்
வீண்படு பொய்யை வென்றிடும் வையமே!

அருஞ்சொற் பொருள்

மழிசை வந்த = திருமழிசையில் தோன்றி
மணிச்சுடர் ஒளியே = ஒளிவீசும் மணியின் சுடர் போல் மிளிர்பவரே!
அழிவிலா = என்றும் நிலைத்து நிற்கும்
ஆழ்பொருள் அமைந்த = ஆழ்ந்த அர்த்தமுடைய மறைபொருள் நிறைந்த
அந்தாதியும் = மழிசையார் அருளிய ‘நான்முகன் திருவந்தாதி’யும்
நந்தா விளக்காய் = தூண்டாமல் ஒளிரும் விளக்காய்
நலமுற விளங்கும் = சிறப்பாக ஒளிதரும்
சந்த விருத்தமும் = ஆழ்வார் அருளிய ‘திருச்சந்த விருத்த’மும்
தந்தருள் புரிந்தீர் = இயற்றி அருள் புரிந்தீர்
வள்ளல் எனவெறும் மனிதரைப் பாடா = ‘வள்ளலே! ஏறே!’ என்று வெறும் மனிதரைப் புகழ்ந்து பாடாத (இறைவனை மட்டுமே பாடும்)
வெள்ளை மனத்தால் = குற்றமற்ற மனத்தால்
விண்தொட உயர்ந்தீர் = வானம் போல உயர்நிலை பெற்றீர்.
மாண்புறும் = மாண்பு + உறும் = மாண்பு மிக்க
உம்கவி வலியால் = உமது கவிதையின் வலிமையால்
வீண்படு பொய்யை = வாழ்வை வீணாகச் செய்யும் பொய்களை
வென்றிடும் வையமே = வெற்றிகொள்ளும் இந்த உலகம் என்பது உண்மை!

ஆழ்வார்கள் நான்மணிமாலையில் திருமழிசை ஆழ்வார் புகழ்பாடும் பாடல்கள் நிறைவுறுகின்றன.

ஆண்டாள் – Andaal

திருப்பாவை அருளிய திருமகளாம் ஆண்டாளின் தமிழ் தனித்தன்மை வாய்ந்தது. அவரது பாட்டில் எளிமையும், இனிமையும் கலந்து மனத்தில் பக்தி நெறி நிலைக்கச் செய்யும் செஞ்சொற்கள் மருவி இருக்கும். அத்தகைய தமிழ்ப் பாவலராம் ஆண்டாளைப் போற்றிப் புகழ்ந்து ஆழ்வார்கள் நான்மணிமாலையைத் தொடர்ந்து பாடுவோம்.

9.  நேரிசை வெண்பா
வையம் ஒளிர மணிவிளக்காம் நற்பாவை
உய்ய உலகுக் குவந்தளித்தாள் – பொய்யற்ற
காதலால் நெஞ்சம் கனிந்துருக வைத்திடுமே
கோதை கொடுத்தத் தமிழ்.

அருஞ்சொற் பொருள்

வையம் = இந்த உலகம்
ஒளிர = ஒளிபெற
மணிவிளக்காம் = அழகிய திருவிளக்காக
நற்பாவை = நன்மை தரக்கூடிய திருப்பாவை
உய்ய = தீமையிலிருந்து விடுபெற
உலகுக் குவந்தளித்தாள் = உலகுக்கு + உவந்து + அளித்தாள்
பொய்யற்ற காதலால் = மெய்ந்நெறியில் ஆழ்ந்த பக்தியினால்
நெஞ்சம் கனிந்துருக வைத்திடுமே = மனத்தை அன்பில் முதிர்ந்து நெகிழ வைத்திடும் ஆற்றல் மிக்கவை
கோதை கொடுத்தத் தமிழ் = ஆண்டாள் அருளிச்செய்த (நாச்சியார் திருமொழி மற்றும் திருப்பாவை ஆகிய) தமிழ்க் கவிதை தொகுப்புகள்
To lead the world away from the darkness (of ignorance) towards the brilliance of Wisdom,
Thirupãvai is the lamp lit by Āndãl In the form of verses that preserve the universe (from suffering).
The Divine Love that flows in Āndãl’s Tamil songs
Has the power to stir the listening heart with ecstasy.
10.  கட்டளைக் கலித்துறை
தமிழ்மாலை தந்தாள் தரணித் துயரறத் தாளவிசை
அமுதாகப் பெய்தாள் அருட்பாடல் பாடி அருவியென
இமைதோன்றும் கண்ணீர் இதயம் உருக்கி இனித்திடவே
நமையாட்சி செய்தாள்மெய்ஞ் ஞானத்தைப் போற்றுமிந் நானிலமே.

அருஞ்சொற் பொருள்

தரணி = உலகம்
துயரற = துயர் + அற = துன்பம் நீங்க
தாளவிசை = தாள + இசை = தாளத்துடன் இசைக்கக் கூடிய பாடல்களை
இமைதோன்றும் கண்ணீர் = கண் இமைகளில் தோன்றி வழிந்தோடும் கண்ணீர்
இதயம் உருக்கி இனித்திடவே = இதயத்தை உருகச் செய்து பக்திக் களிப்பில் ஆழ்த்தி
நமையாட்சி செய்தாள் = (நமை + ஆட்சி = நம்மை ஆட்சி) = நம்மையெல்லாம் ஆண்டவள்
மெய்ஞ்ஞானத்தைப் போற்றும் இந்நானிலமே = அத்தகைய பெருமை வாய்ந்த கோதையின் மெய்ஞானத்தை இந்த நானிலம் (உலகம்) போற்றும்.

கருத்து

உலகத்தில் துன்பங்கள் நீங்கிடத் தமிழ்க் கவிதைகளால் ஆன பாமாலைகளை அருளினாள்; தாளத்துடன் இசைக்கக்க் கூடிய பாடல்களை செஇவிக்கு இனிய அமுதமாகப் பொழிந்தாள். அருள் வழங்கும் திருப்பாடல்கள் பல பாடி, அருவிபோல், கண் இமைகளில் தோன்றி வழிந்தோடும் கண்ணீர் இதயத்தை உருகச் செய்து பந்திக் களிப்பில் ஆழ்த்த நம்மையெல்லாம் ஆண்டவள். அத்தகைய பெருமை வாய்ந்த கோதையின் மெய்ஞ்ஞானத்தை இந்த உலகம் போற்றும்.

11.  அறுசீர் ஆசிரிய விருத்தம்
நானிலத்தைக் காத்தருளும் பரம்பொருளின் நல்லருளை
   நாளும் வேண்டி
வானுலவு கார்முகிலைக் கான்குயிலைத் தூதனுப்பி
   வரச்சொல் கின்ற
தேனொழுகு வார்த்தைகளால் இசைநிறைந்த பண்ணமைத்துத்
   தித்திக் கின்ற
கானமழை பொழிந்தவனி ஆண்டாள்தன் கவிச்செழிப்பில்
   களிப்பாய் நெஞ்சே.

அருஞ்சொற் பொருள்

நானிலத்தை = உலகத்தை
நல்லருளை நாளும் வேண்டி = அருளை தினந்தோறும் பெறவேண்டி
வானுலவு = வானத்தில் உலவுகின்ற
கார்முகிலை = கரிய மேகத்தை
கான்குயிலை = காட்டில் இன்னிசை பாடும் குயிலை
தூதனுப்பி வரச்சொல்கின்ற = தூதாக அனுப்பி இறைவனைத் தன்னிடம் வரச்சொல்கின்ற
பொழிந்தவனி = பொழிந்து + அவனி. அவனி = உலகம்
கவிச்செழிப்பில் களிப்பாய் = கவிதை சுவையால் களிப்படைவாய்

கருத்து

இந்த உலகத்தைக் காக்கும் இறைவனின் அருள் வேண்டி வானத்தில் உலவுகின்ற கருமேகத்தையும் காட்டில் கூவும் குயிலையும் இறைவன்பால் தூதாக அனுப்பி அவனைத் தன்னிடம் வரச்சொல்லிப் பாடும் தேன்கலந்துத் தித்திக்கும் இன்னிசை நிறைந்த பாடல்களைக் கானமழையாகப் பொழிந்து இந்த உலகத்தை ஆண்டாள் கோதை. அவளது கவிதைகளின் வளத்தை நயந்து திறம்வியந்துப் போற்றிக் களிப்பாய் நெஞ்சே!

12.  நேரிசை ஆசிரியப்பா
நெஞ்சில் நிறைந்து நிர்மலம் ஆக்கும்
செஞ்சொல் கவிதை தந்த திருமகள்
விட்டு சித்தனின் இடத்தில் மேவிய
மட்டுப் படாத வானமு தொத்தவள்
தெய்வ அணங்கின் பைந்தமிழ்ப் பாடுவார்
மனத்தில் இடம்கொண்டு வாழ்ந்தருள் செய்வான்
கோதையின் பாட்டுடைத் தலைவன்
தீதில் புகழ்சேர் திருவுடை மாலே.

அருஞ்சொற் பொருள்

நிர்மலம் ஆக்கும் = மன மாசுகளை நீக்கும்
விட்டு சித்தன் = பெரியாழ்வார்
இடத்தில் மேவிய = அவரது இல்லத்தில் பெரியாழ்வார் கண்டெடுத்த
மட்டுப்படாத = குறையொன்றும் இல்லாத
வானமு தொத்தவள் = வான் + அமுது + ஒத்தவள் = வானுலகில் தோன்றிய அமுதத்தினைப் போன்றவள்
அணங்கு = தேவதை
பைந்தமிழ் பாடுவார் = பைந்தமிழ் பாடல்களைப் பாடுபவர்கள்
பாட்டுடைத் தலைவன் = பாட்டின் முதற்பொருளான ஒருவன்
தீதில் புகழ்சேர் = குற்றமற்ற புகழுடைய
திருவுடை மாலே = திருமகளை வலமார்பில் கொண்ட திருமால்

கருத்து

மனத்தில் நிறைந்து மனமாசுகளை அகற்றும் இனிய சொற்கள் மிகுந்த கவிதைகள் தந்த திருமகளின் அம்சமான ஆண்டாள், பெரியாழ்வாரின் இல்லத்தில் வந்துதித்தவள்; அளவிடமுடியாத வானத்தின் அமுதத்தைப் போன்றவள். அத்தகைய தெய்வத் திருமகள் அருளிச்செய்த பாடல்ளைப் பாடுபவர்கள் நெஞ்சில் புகுந்து கோதையின் பாட்டுடைத் த்லைவனான திருமால் நல்லருள் புரிவான்.

ஆழ்வார்கள் நான்மணிமாலையில் ஆண்டாள் அருள்போற்றும் பாடல்கள் நிறைவுறுகின்றன.

பெரியாழ்வார் – Periyaazhwar

பரந்தாமனுக்குப் பல்லாண்டு பாடிய பேருள்ளம் கொண்ட பெரியாழ்வாரைப் போற்றுவோம்.

13.  நேரிசை வெண்பா
மாலிருஞ் சோலை மலைக்காட்டின் பேரழகும்
கோலவாய் ஊதும் குழலழகும் – மாலழகும்
பிள்ளைத் தமிழிசைத்துப் பாடும் பெரியாழ்வார்
தெள்ளமுதாம் பாட்டே சிறப்பு.

அருஞ்சொற் பொருள்

மாலிருஞ்சோலை = திருமாலிருஞ்சோலை என்று அழைக்கப்படும் அழகர் கோவில்
கோலவாய் = அழகிய வாய்
குழலழகும் = புல்லாங்குழல் அழகும்
மாலழகும் = திருமாலின் அழகும்
பிள்ளைத் தமிழிசைத்து = பிள்ளைத் தமிழ் இயற்றி
தெள்ளமுதாம் = தெளிந்த அமுதம் போன்று இனிக்கும்

The beauty of Thirumãl iruncholai with its mountainous landscape,
The beauty of the enchanting flute music flowing from the Divine lips,
The beauty of Thirumãl Himself
– These beautiful renderings written in Pillai Tamil (songs written by imagining Thirumãl as a child)
Elevate Periyãzhwãr as the Divine poet par excellence whose songs are as sweet as clear nectar.
14.  கட்டளைக் கலித்துறை
சிறப்புற்ற செங்கண் கருமுகில் வண்ணன் திருவடியைப்
பிறப்பற்று நீங்கத் தினம்பற்று கின்ற பெருமனத்தார்
அறுப்புற்றுப் பொற்கிழி வீழ அருமறை ஆழ்பொருளை
நெறிப்பட்ட நெஞ்சில் நிலைத்திடச் சாற்றும் நெடுங்கவியே!

அருஞ்சொற் பொருள்

சிறப்புற்ற = சிறப்பு மிக்க
செங்கண் = செம்மை + கண் = அழகிய கண்
கருமுகில் = கருமையான மேகம்
பிறப்பற்று நீங்க = பிறவி என்னும் நோய் நீங்கிட
தினம்பற்றுகின்ற = நாள்தோறும் சரணடைந்துப் பிடித்துக் கொள்ளும்
பெருமனத்தார் = பெருமை வாய்ந்த மனம் கொண்ட பெரியாழ்வார்
அறுப்புற்று = வெட்டப் பட்டதால் அறுந்து
அருமறை ஆழ்பொருளை = கற்பதற்கு அரிய வேதங்களின் ஆழ்ந்த பொருளை
நெறிப்பட்ட நெஞ்சில் = பக்தி நெறியில் செழித்து நிற்கும் நெஞ்சங்களில்
சாற்றும் = பாடிய
நெடுங்கவியே = பெருங்கவிஞரே
15.  அறுசீர் ஆசிரிய விருத்தம்
கவிநயத்துடன் செந்தமிழ் ஓசை
    கலந்தே இனிக்கின்ற
சுவை நிறைந்து மனத்தைக் கவர்ந்திடும்
    சொற்களி னால்புகழ்ந்தே
புவி நலம்பெறப் பல்லாண் டிசைத்தகம்
    பொங்கும் பரிவாலே
செவி நிறைத்திடும் தீங்கவி தைவிட்டு
    சித்தன் திருமொழியே.

அருஞ்சொற் பொருள்

பல்லாண் டிசைத்தகம் பொங்கும் பரிவாலே = பல்லாண்டு + இசைத்து + அகம் = பல்லாண்டு பாடி மனத்தில் பொங்கும் அன்பால்
செவி நிறைத்திடும் = காதுகளில் இனிய ஓசையால் நிறைத்திடும்
தீங்கவி தைவிட்டு சித்தன் திருமொழியே = தீங்கவிதை + விட்டு சித்தன் = இனிமையான கவிதை விஷ்ணு சித்தரின் (பெரியாழ்வாரின்) திருமொழியே.
16.  நேரிசை ஆசிரியப்பா
மொழியும் சொற்களால் அழிவிலா அமுதம்
அன்புடன் ஊட்டி இன்புறும் தாய்போல்
ஆதி பகவனை அணியுறப் பாடிடும்
தீதில் காதல் விட்டு சித்தர்
ஈடில் கவியிலொன் றேனும்
பாடா நாள்மனம் பசித்து வாடுமே.

அருஞ்சொற் பொருள்

ஆதி பகவனை – இறைவனை
அணியுற = கவி அழகுடன்
தீதில் காதல் = தீதற்ற + காதல் = குற்றமற்ற பக்தியை உடைய
விட்டு சித்தர் = விஷ்ணு சித்தர் = பெரியாழ்வார்
ஈடில் கவியிலொன் றேனும் =ஈடில் + கவியில் + ஒன்றேனும் = ஈடு இணையற்ற கவிதைகளில் ஒன்றையாவது
பாடா நாள்மனம் பசித்து வாடுமே = பாடாத நாள் எந்நாளோ அந்த நாள் என் மனம் அருள் என்னும் உணவின்றி பசியால் வருந்தும்.

ஆழ்வார்கள் நான்மணிமாலையில் பெரியாழ்வார் பெருமை பாடும் பாடல்கள் நிறைவுறுகின்றன.

திருமங்கை ஆழ்வார் – Thirumangai Aazhwar

ஆலி நாடன்,  மங்கை வேந்தன், கலியன், பரகாலன் என்று பலவாறு புகழ்ந்துப் போற்றப்படும் திருமங்கை ஆழ்வார் பெருமையைப் பாடுவோம்

17.  நேரிசை வெண்பா
வாடி வருந்தி மனமுருகிச்  செஞ்சொல்லால்
பாடிப் பலகவிகள் பண்ணெடுத்தான் – நாடும்
மெலியோர் இடர்க்கெடுக்க வெற்றிவாள் ஏந்தும்
கலியன் கவியே கவி!

அருஞ்சொற் பொருள்

செஞ்சொல்லால் = சிறப்புமிக்க சொல்லால்
பலகவிகள் = பல கவிதைகள்
பண்ணெடுத்தான் = பண் (இசை) அமைத்தான்
நாடும் மெலியோர் = வறுமையினாலும் பசியினாலும் மெலிந்து வாடித் தன்னை நாடி வரும் தொண்டர்கள்
மெலியோர் இடர்க்கெடுக்க = மெலிந்தவர்களின் துன்பத்தைப் போக்க
வெற்றிவாள் ஏந்தும் = அடியவர்களுக்கு வழங்கப் பொருள் ஈட்ட வாள் வேல் ஏந்தி வெற்றிதரும் போர்த்தொழில் புரியும்
கலியன் = திருமங்கை ஆழ்வார்
கவியே கவி = ஆழ்வார் எழுதும் கவிதைகளையே சிறந்த கவிதைகள் எனலாம்.

Overcoming despair and suffering,
Feeling thankful with devotion,
He sang with graceful words and rhythmic melody.
Kaliyan (Thirumangai Azhwãr), the sword-wielding protector of the poor and needy,
Is the greatest poet of all time.
18.  கட்டளைக் கலித்துறை
கவிந்த கனவிருள் சூழ்கலி நீங்க வருங்கலியா!
குவிந்த மனமாம் குமுதம் விரிக்கும் குளிர்மதிநீ!
உவந்து பெரிய திருமொழி சொல்லி உணர்வுறவே
நவின்ற கவியால் புவிவெல்லும் நீயெங்கள் நாயகனே!

அருஞ்சொற் பொருள்:

கவிந்த = மூடிய = (தெளிவென்னும்) ஒளியை மறைக்கக்கூடிய
கனவிருள் = கன + இருள் = கனத்துப்(அடர்ந்து) படர்ந்திருக்கும் (அறியாமையென்னும்) இருள்
இருள் சூழ்கலி = இருளைச் சூழவைக்கும் கலி என்னும் துன்ப நிலை
வருங்கலியா = கலியை வெல்ல இந்தப் பூமியில் அவதரித்த கலியனே
குவிந்த மனமாம் = தெளிவின்மையால் (குழப்பத்தால்) ஒடுங்கிய (குவிந்த) மனமென்னும்
குமுதம் = குமுத மலரை
விரிக்கும் குளிர்மதி நீ = விரிய வைக்கும் (ஒடுங்கு நிலை மாறித் தெளிவடைய வைக்கும்) குளிர்ந்த நிலவைப் போன்றவன் நீ
உவந்து = மகிழ்வுடன்
பெரிய திருமொழி = திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரங்களின் தொகுப்பின் பெயர் ‘பெரிய திருமொழி’
உணர்வுறவே = பக்தி உணர்ச்சி பொங்க
நவின்ற = சொன்ன = பாடிய
கவியால் புவிவெல்லும் = கவிதைகளால் உலகத்தை வென்ற
19.  எண்சீர் சந்த விருத்தம்
நாயகன் மங்கை வேந்தன் பரகாலன் நாலு
   கவிதேர்ந்த ஞானக் கவிஞன்
ஆயிரம் பேரைச் சொல்லும் அடியார்கள் நெஞ்சில்
   அமுதூறச் செய்யும் புலவன்
வாயுறு வார்த்தை யாவும் தமிழ்வேத மென்ன
   மனத்தின்னல் தீர்க்க மொழிவான்
ஞாயிறு போல வந்த கலியன்பொற் பாதம்
   அதுநம்மை ஆளும் அரசே.
20.  நேரிசை ஆசிரியப்பா
அரசர்க் கரசன் அருந்தமிழ் அறிஞன்
முரசாய் அறைந்தான் உலகம் உணர
நெஞ்சில் கலந்து நிறைந்த திருமொழி
அஞ்சும் மனத்தை ஆற்றும் தாண்டகம்
காதல் மிகுந்துக் கனியும் திருமடல்
வேதம் விரிக்கும் எழுகூற் றிருக்கை
என்றிவை பாடி இசைச்சுவை ஊட்டி
இன்றமிழ்ப் பாவைக்(கு) இருந்தொண்(டு) ஆற்றிய
ஆலிநாட் டரசன் அருளும்
மாலைகள் பாட மலரு(ம்)மெய்ஞ் ஞானமே.

அருஞ்சொற் பொருள்:

திருமொழி = பெரிய திருமொழி என்னும் நூல்
ஆற்றும் தாண்டகம் = (அச்சத்தைத் தணிய வைத்து) இதம் கொடுக்கும் ‘திருக்குறுந்தாண்டம்’ மற்றும் ‘திருநெடுந்தாண்டகம்’ என்னும் நூல்கள்
திருமடல் = இறைவன் மீது காதல் கொண்ட பெண்ணாகத் தன்னைப் பாவித்து எழுதிய காதல் சுவை மிகுந்த ‘சிறிய திருமடல்’ மற்றும் ‘பெரிய திருமடல்’ என்னும் நூல்கள்
எழுகூற்றிருக்கை = திருவெழுகூற்று இருக்கை என்னும் நூல்
என்றிவை பாடி = என்று இதுபோலப் பல நூல்களை இயற்றி
இன்றமிழ்ப் பாவைக்கு = இனிமையாக ஒலிக்கும் தமிழ்மகளுக்கு
இருந்தொண்டாற்றிய = இருந்தொண்டு + ஆற்றிய = பெரிய தொண்டை ஆற்றிய
ஆலிநாட்டரசன் = ஆலி நாட்டை ஆண்ட மன்னன் (திருமங்கை ஆழ்வார்)
அருளும் = அருளிச் செய்த
மாலைகள் பாட = பாமாலைகளைப் பாடுவதால்
மலரும் மெய்ஞ்ஞானமே = மெய்ஞ்ஞானம் என்னும் தாமரை நம் உள்ளத்தில் மலரும்.

ஆழ்வார்கள் நான்மணிமாலையில் திருமங்கை ஆழ்வார் புகழ் பரப்பும் பாடல்கள் நிறைவுறுகின்றன.

தொண்டரடிப்பொடி ஆழ்வார் – Thodaradipodi Aazhwar

பச்சை மாமலையாகப் பரந்தாமனைப் பார்த்துப் பாசுர மாலை சூட்டிய தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் தூய உள்ளத்தைப் புகழ்வோம்.

21.  நேரிசை வெண்பா
ஞானக் கலைதேர்ந்த நான்குமறை வித்தகரும்
ஈனர்களே அன்பர்க்(கு) இடர்கொடுத்தால்; – ஊனமில்
அன்பே இறையென்னும் தொண்ட ரடிப்பொடியே
உன்பாட்டே பற்றாம் உயிர்க்கு.
The erudite scholars who have mastered the sophisticated arts and are experts in the four Vedas,
Are deemed uncivilized if they demean the devotees,
Because unblemished love is the abode of God, –
Thus spake Thondaradi Podiyãzwãr,
By holding His feet our life gets blessed.
22.  கட்டளைக் கலித்துறை
உயிர்க்(கு)உற வாக உணர்விற் கலந்தே உரமளித்துத்
துயர்க்கெடத் தொண்ட ரடிப்பொடி யாழ்வார் தொடுத்தருளும்
மயக்குறும் இன்னிசை மேவும் இளங்கவி மாலையன்றோ
இயக்கிடும் என்றன் இதயத்தை என்றும் இனித்திடவே.
23.  அறுசீர் ஆசிரிய விருத்தம்
இனித்திடும் இசையால் பள்ளி
    எழுப்பிடும் பாடல் தந்தார்
மனிதரில் பிரிவைப் பார்க்கும்
    மடமையை எதிர்த்து வென்றார்
மனத்தினால் உயர்ந்த தொண்டர்
    மாண்பினை வணங்கி நின்றார்
அனைத்துல கேத்து கின்ற
    அருந்தொண்ட ரடிக ளாரே.
24.  நேரிசை ஆசிரியப்பா
அடிகள் தோறும் நெஞ்சினை அள்ளும்
வடிவமும் சுவையும் மிகுந்திரு மாலை,
ஆதவன் உதிக்க அறிதுயில் எழுப்பிப்
பாதம் பணியும் பள்ளி எழுச்சி
எனப்பலக் கவிதைகள் எழிலுறத் தொடுத்து
நினைப்பரும் அரங்கனை நெகிழ்ந்து பாடும்
தொண்ட ரடிப்பொடி உள்ளம்
தொண்டர்தம் பாதம் சுமந்திடும் படியே.

ஆழ்வார்கள் நான்மணிமாலையில் தொண்டரப்பொடி ஆழ்வார் திருவடி தொழும் பாடல்கள் நிறைவுறுகின்றன.

குலசேகர ஆழ்வார் – Kulasekhara Aazhwar

பெருமாள் திருமொழி‘யை அருளிய சேரகுலத் தோன்றல் குலசேகர ஆழ்வார் புகழைப் பாடுவோம்.

25.  நேரிசை வெண்பா
படியாய்க் கிடக்கும் பணிவுடையான்,
வெற்றி முடியாளும் சேரர் முதல்வன் – வடிவார்ந்த
பொற்கொன்றைச் சூடும் புகழ்க்குல சேகரன்றன்
சொற்கண்டீர் வாழ்வின் துணை.
Humble as the holy step (a stony threshold at the temple’s entrance),
But majestic as the valiant king of the Cheras,
Reigns Kulasekharanãr, who, adorned with beautiful golden garland of konrai flowers,
Blesses us with verses that is support for our life.
26.  கட்டளைக் கலித்துறை
துணையென்று தொண்டர் அடித்துகள் சென்னியில் சூடுகின்றாய்
அணையாத அன்பால் கவிமாலை பாடிநின் றாடுகின்றாய்
கணைவில்லை ஏந்திப் பகைவெல்லும் சேரலர் காவலனே
இணையில்லை உன்றன் இனியத் திருமொழிக் கிந்நிலத்தே.
27.  அறுசீர் ஆசிரிய விருத்தம்
நிலந்தரும் இன்பம் எல்லாம்
    நெஞ்சினில் விரும்ப மாட்டேன்,
நலந்தரும் மீனின் வாழ்க்கை
    நாடுவேன் வேங்க டத்தில்,
கலந்திடும் அன்பால் தொண்டே
    கதியென இருப்பேன், என்று
மலர்ந்திடும் கவிதை சொன்ன
    மன்னவன் கீர்த்தி வாழ்க!
28.  நேரிசை ஆசிரியப்பா
வாழ்கவென் றவனை வாய்மலர்ந் தேத்திப்
பாடும் புலவர் பலரிருந் தாலும்
அரச வாழ்க்கையைப் பெரிதென நினையா
பற்றறு மனத்தால் பரமனைப் பாடினான்
பெருமாள் திருமொழி கேட்டால்
மருணீங்கி உயரும் மனித குலமே.

ஆழ்வார்கள் நான்மணிமாலையில் குலசேகர ஆழ்வாரைக் கொண்டாடும் பாடல்கள் நிறைவுறுகின்றன.

திருப்பாணாழ்வார் – Thiruppaanaazhwar

அமலன் ஆதிபிரான் என்று அரங்கனைப் பாடிய திருப்பாணாழ்வார் பெருமையை பாடி, ஆழ்வார்கள் நான்மணிமாலையைத் தொடர்ந்து மணம்வீசத் தொடுப்போம்.

29.  நேரிசை வெண்பா
குலத்தாழ்ச்சி சொல்லும் கொடியவரும்  மாறித்
தலைதாழ்த்தி ஏத்தும் தலைவர் –  கலைவாய்ந்த யாழொலிக்கப் பாடும் இசைப்பாணர் பாடற்கேட்டு
ஏழுலகும் வாழ்த்தும் இசைந்து.
Even the evil-hearted people who spoke low of him,
Turned good and sought his blessings because of his love.
Such is the greatness of Thirupãnãzhwãr,
The bard who plays Yãzh ( a musical instrument) of exquisite beauty,
With music so sweet that all the Seven worlds praise in unison.
30.  கட்டளைக் கலித்துறை
இசைந்தோசை செய்யும் எழில்யாழின் பாடல் இமைகளில்நீர்
கசிந்தோடச் செய்யும் கவிதைப் பெருக்கால் கவலையெலாம்
பொசிந்தோடச் செய்யும் புலமையால் மாலவன் பொன்னடியும்
அசைந்தாடச் செய்யும் அருள்பாணர் சொற்கள் அரண்நமக்கே.
31.  எழுசீர் ஆசிரிய விருத்தம்
நமக்குர மளிக்கும் இன்னிசை யாழின்
    நரம்பினில் வெளிவரும் கீதம்
தமக்கென வாழா திசைக்கென வாழும்
    தவத்தவர் எழுப்பிடும் நாதம்
சுமக்கின்ற முனியின் தோள்களில் இருந்தும்
    துலங்கிடும் பரவசம் குறையாது
இமைப்பொழு தேனும் இடைவிடா தேத்தி
    இறைதொழும் பாணரைப் புகழ்வோம்.
32.  நேரிசை ஆசிரியப்பா
புகழுரை மொழிந்து புரவலர் தம்மைத்
துதிசெய் தேத்தும் தொழிலினைத் துறந்து
கண்ணன் என்னும் காவலன் தன்னைப்
பாடி அருள்பெறும் பாணர் பெருமான்
தண்டமிழ் புரக்கும் தலைவன் அரங்கனைக்
கண்ட கண்கள்மற் றொன்றினைக் காணா
என்றிசைப் பாடிக் கண்களை மூடி
யோகம் புணர்ந்த இன்னிசைப் பாணர்
கமல வாய்மொழிக் கவிதை
அமலன் ஆதி பிரானெனும் பாட்டே.

ஆழ்வார்கள் நான்மணிமாலையில் திருப்பாணாழ்வாரைத் தொழுதேத்தும் பாடல்கள் நிறைவுறுகின்றன.

முதலாழ்வார்கள் – Mudhalaazhwars

முதலாழ்வார்கள் – திருக்கோவிலூர்

பாட்டுக்குரிய பழையவர் என்று போற்றப்படும் முதலாழ்வார்கள் மூவர் பெருமையைப் பாடுவோம்.

மூவர் புகழ்

33.  நேரிசை வெண்பா
பாட்டுக் குரிய பழையவர் முப்பெரியோர்
வீட்டின் கழியில் விளக்கேற்றி – வாட்டும்
இருள்போகப் பாடிடும் ஈடில் கவிதை
திருக்காட்டும் தெய்வச் சுடர்.
The three great ancient divine poets (Poigaiyãr, Boothathãr, Peyãr),
Distinguished for their exceptional songs,
Lit the light of enlightenment in the standing in the porch of a house.
The three hundred songs sung by them
Are incomparable in destroying the darkness of suffering Illuminating the path to wisdom.

பொய்கை ஆழ்வார் – Poigai Azhwar

34.  கட்டளைக் கலித்துறை
சுடரென்று வைய விளக்கேற்றி நெஞ்சில் துணையெனவே
இடர்வென்று நிற்கும் இருங்கவி தைப்பொழி ஏந்தலென்பேன்
உடற்குடில் தன்னில் ஒளியேற்றிக் கண்ணிமை மூடலற்ற
படர்நிலை தன்னில் பரமனைக் கண்டிடும் பொய்கையரே.
35.  கலி விருத்தம்
பொய்கை பூத்திடும் தாமரை போல்மனம்
பொய்கள் நீங்கியே புத்துயிர் பெற்றிடும்
பொய்கை யார்மொழி பொற்கவி ஒன்றுமே
மெய் கலந்து விரித்துரைப் பாருக்கே.

பூதத்தாழ்வார் – Boodhathaazhwar

36.  நேரிசை ஆசிரியப்பா
உரைப்பார் உணர உயர்தமி ழாலே
திருப்பா அருளிய சிறப்புடை மூவரில்
அன்பெனும் விளக்கை அறிவெனும் சுடருடன்
நன்முறை ஏற்றும் ஞானத் தமிழர்
தொல்லை இடர்தனைத் தொலைத்திட உலகில்
மல்லையில் தோன்றிய மாபெருங் கவிஞர்
புவிபோற் றிடும்பூ தத்தார்
கவிதை கேட்டால் கரைந்திடும் கல்லே.
37.  நேரிசை வெண்பா
கல்லும் கவிசொல்லும் கண்கவரும் காட்சிமிகும்
மல்லைப் பதியுதித்த மாணிக்கம் – நல்லன்பால்
சோதி விளக்கேற்றித் தூயகவி தான்படைக்கும்
பூதத்தார் என்பேன் புகழ்ந்து.

பேயாழ்வார் – Peyaazhwar

38.  கட்டளைக் கலித்துறை
புகழ்சேர் திருவுடை மாலை மனத்தினில் போற்றிநின்றே
பகரும் மொழிகளை அந்தாதி யாகவெண் பாவினிலே
அகமுருக்கிடும் நற்றமிழ் மாலை அருளிச்செய்த
திகழொளிச் சுடர் பேயாழ்வார் நற்புகழ் செப்பரிதே.
39.  அறுசீர் ஆசிரிய விருத்தம்
அரிதினும் அரிய தான
    அருள்வளம் நிறைந்த செல்வர்
திரிதரும் புலன்கள் வென்ற
    தெள்ளிய மெய்ஞா னத்தர்
அரியுடன் சிவனும் ஒன்றே
    அறிமினென் னும்பே யாழ்வார்
இருளிலும் இறையைக் கண்ட
    இயற்றமிழ்ப் புலவர் அம்மா!

ஆழ்வார்கள் நான்மணிமாலையில் முதலாழ்வார்கள் புகழ்மொழியும் பாடல்கள் நிறைவுறுகின்றன.

நூல் இறுதிப் பாடல்

40.  நேரிசை ஆசிரியப்பா
மாதவம் செய்தும் மாமறை ஓதியும்
வாய்த்திடா நலங்கள் மாந்தருக் கருள
தீதில் நன்னெறி காட்டியெங் குந்திரிந்து
ஆதியை வணங்கி அன்பைப் பரப்பிடும்
பெரியோர் புகழை என்வாய் பேசிடப்
பிழைபொறுத் தருளும்பே ரன்பர்க்கு நன்றி!
மாலைப் பாடும் மதிநலத் தாழ்வார்க்கு
மாலை சார்த்தும் நான்மணி மாலையாய்
வாயி னிக்க வருந்தமிழ் வார்த்தைகள்
தூய மனங்களில் துயர்துடைத் தோங்குக!
அடியவர்க் அருளுமாழ் வார்கள்
அடிமலர் தொழுதிடும் இவ்வா சிரியமே.

This Post Has 2 Comments

  1. Kripa

    🙏🏽 Beautiful compilations, this work highlights the authors proficiency in Tamizh and Divya Prabadam.

  2. Dr.V.K.Kanniappan

    மிகச் சிறப்பான பாடல்கள். இனிய வாழ்த்துகள்.

Leave a Reply