இயேசு பாமாலை

Yesu Padalgal

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வார் செய்யும் தீச்செயலைப் பொறுத்தருளி, நீசரையும் நேசிக்கும் இயேசுபிரான் நற்புகழை ஓசை இனிக்கும் உயர்தமிழில் இயேசு பாமாலையாக இங்கு அளிக்கின்றேன்.

குறிப்பு: இயேசு பாமாலையில் முதல் இரண்டு பாடல்கள் கட்டளைக் கலிப்பா என்னும் யாப்பு வகையிலும், மற்ற இரண்டு பாடல்களும் எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்ற பாவகையிலும் இயற்றப்பட்டவை.

அருளுள்ளம் கொண்ட இறைவர் திருமகன்
விலை மதிப்பிலா விண்ணக ராச்சியம்
    வேண்டி னால்பிறர் நன்னலம் நாடுவீர்!
அலையும் நெஞ்சை நல்வழியில் திருப்பினால்
    அருகில் தோன்றிடும் நற்பர லோகமே!
கொலைசெய் பாதக ராயினும் அன்புடன்
    குற்றம் யாவும் பொறுத்திடு வீர்! – எனச்
சிலுவை ஏற்றுத் திருமொழி சொன்னவர்
    செப்பும் வார்த்தைகள் தெய்வ மறைகளே!

பொருள் : “விலை மதிப்பில்லாத பரலோக ராச்சியத்தை அடைய விரும்பினால் முதலில் தன்னலம் துறந்து பிறர்நலத்தையே கருத்தாகக் கொண்டு வாழுங்கள்! அலைந்து திரியும் மனத்தை ஒருநிலைப்படுத்தி அறவழியில் திருப்பினால், உங்கள் அருகிலேயே பரலோகம் தென்படும்! கொலைத்தொழில் புரியும் பாதகர்களாயினும், அவர்கள் மீது கருணை கொண்டு அவர் செய்யும் குற்றங்களைப் பொறுத்து மன்னித்துவிடுங்கள்! ” – இவ்வாறு சிலுவையைத் தம் மேனியில் தாங்கிக்கொண்டே திருவாய் மலர்ந்து போதித்த இயேசுபிரான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் வேத வார்த்தையே என்பதை நாம் உணர்ந்து போற்றுவோம்!

திருந்தி வந்திடும் தன்மகன் இன்புறச்
    சேர்த்துக் கொண்டநல் தந்தைபோல் அன்பினார்,
விருந்தளிக்க விரும்பிய கீழ்மகன்
    வீட்டில் தங்கி உயர்த்திய பண்பினார்,
வருந்தித் தம்செயல் நாணிடும் தீயவர்
    வாழ்வு மேம்படக் காத்திடும் தேவனார்,
புரிந்த அற்புதத் தால்இங்கு வெம்பிணி
    போக்கி நல்லருள் காட்டும் புனிதரே.

பொருள் : மனம் திருந்தி வந்த மகனை அகமகிழ்வுடன் வரவேற்றுத் தன்னுடன் சேர்த்து அரவணைக்கும் அன்புத் தந்தையைப் போலப் பாவிகளின் பிழை பொறுக்கும் பரிவினை உடையவர் இயேசுபிரான். வட்டி வசூல் செய்யும் பாவியான சகேயு என்பவனுடைய இல்லத்தில் தங்கி, அவனைக் கீழ்மகன் என்று கூடப் பார்க்காமல், அவன் மனம் மாறும்படி அருள்செய்து பாவங்களிலிருந்து விடுவித்து உயர்த்திய நற்பண்பைக் கொண்டவர் நம் கர்த்தர். செய்த தீச்செயல்களால் வெட்கித் தலைகுனிந்து வாடும் தீயவர்களையும் மன்னித்து அவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்துத் தீமையிலிருந்து காத்திடும் செந்தண்மையாளர் நம் தேவனாகிய இயேசு. தம் அற்புதச் செயல்களால் கொடிய நோய்களையெல்லாம் போக்கி நல்லருள் காட்டும் புனிதர் நம் இயேசுபிரான்.

சிலுவையில் ஜீவனை அளித்த திருமகன் கருணை
உலகினைக் காக்கும் ஒருதனிக் கருணை
    ஒளிதிகழ் உருவெடுத் ததுபோல்
நிலமிசை பிறந்து நெடுந்தவம் புரிந்து
    நேசத்தின் நிறைவெனத் திகழ்ந்தார்
மலரடி நோக வருத்திடும் கொடியோர்
    மனம்திருந் திடவும் மன்னித்தே
சிலுவையில் தமது ஜீவனை அளித்த
    திருமகன் அருளினைப் புகழ்வோம்.

பொருள் : உலகத்தைக் காக்கும் உயர்ந்த கருணை மிகுந்த பரம்பொருளான இறைவனே ஒளிநிறைந்த மனித உருவத்தில் தோன்றினான் என்று போற்றும்படியாக, இந்த மண் மேல் பிறவி எடுத்துப் பல தவங்கள் புரிந்து, நிறைந்த அன்பின் ஓர் உருவமாகவே இயேசு வாழ்ந்தார். தம் மலர் போன்ற திருவடிகளை வருத்திடும் கொடியவர்களையும் அவர்கள் மனம் திருந்தவேண்டும் என்ற நோக்கத்துடன் மன்னிக்க வேண்டி இறைவனிடம் பிரார்த்தித்து, நாம் செய்த பாவங்களையெல்லாம் ஏற்றுச் சிலுவையில் தம் இன்னுயிரைத் தியாகம் செய்த திருமகனான இயேசுபிரானின் பேரருளின் திறத்தைப் போற்றுவோம்.

எளிமையே தெய்வீகம்
எழுந்துயர்ந் தோங்கும் எழிற்பர லோகம்
    இதமுற அடைந்திட நினைத்தால்
குழந்தைகள் போல எளிமையும் களிப்பும்
    கொண்டிடு வீர்என மனத்தில்
அழுந்திட ஞானக் கதைகளின் மூலம்
    அறிவுறுத் தும்அருள் குமரர்
மொழிந்திடும் வார்த்தை அருமருந் தெனவே
    உலகினை வாழவைத் திடுமே.

பொருள் : விண்ணில் நமக்கெல்லாம் எட்டாத தூரத்தில் எழிலுற அமைந்துள்ள பரலோகத்தை நாம் அடைந்திட விரும்பினால், நாம் சிறு குழந்தைகளாக மாறி எளிமையும் மகிழ்ச்சியும் நிறைந்த மனத்தைக் கொள்ளவேண்டும். இந்த உண்மை நம் மனத்தில் அழுந்திப் பதிவதற்காக ஞானக் கதைகளைச் சொல்லி அறிவில் தெளிவேற்றும் அருட்செல்வரான இயேசுபிரான் சொல்லும் வார்த்தைகள் யாவும் துயர்போக்கும் அருமருந்தாக அமைந்து இந்த உலகத்தை என்றும் வாழவைத்துக் கொண்டிருக்கும்.

Overview : The ‘Yesu Padalgal’ presented here as ‘paamaalai’ (Garland of Songs) praise the Lord Jesus for his kindness, forgiveness, simplicity, selfless sacrifice and healing power.

Leave a Reply