இயேசு புகழ்மாலை

இயேசு புகழ்மாலை

பாவகை : அறுசீர் ஆசிரிய விருத்தம்

1. நித்தமும் நம்மைக் காப்பார்

இத்தரை மாந்தர் செய்யும்
  பாவங்கள் ஏற்றுத் தெய்வச்
சித்தமே நெறியாய் வாழ்ந்து,
  சிலுவையில் பட்டு, மீண்டும்
புத்துயிர் பெற்றெ ழுந்து,
  புவிமிசை அருள்பொ ழிந்து,
நித்தமும் நம்மைக் காக்கும்
  நிர்மலர் இயேசு வாழ்க! 

பாடல் பொருள்

இத்தரை = இந்த உலகத்தில்
மாந்தர் = வாழும் மக்கள்
செய்யும் = புரிகின்ற
பாவங்கள் ஏற்று = பாவங்களையெல்லாம் சுமந்து
தெய்வச் சித்தமே = இறைவரின் சித்தமே
நெறியாய் = வாழும் வழிமுறையாகக் கொண்டு
வாழ்ந்து = (இறைவரின் சித்தத்தின் படியே) வாழ்ந்து
சிலுவையில் பட்டு = (தீயவர்களின் கொடுஞ்செயலால்) சிலுவையில் தம் உயிரைத் தந்து
மீண்டும் புத்துயிர் பெற்று எழுந்து = (மூன்றாம் நாளில்) மீண்டும் உயிர்த்தெழுந்து
புவிமிசை = உலகத்தின்மேல்
அருள் பொழிந்து = தமது இன்னருளைப் பொழிந்து
நித்தமும் = எப்பொழுதும்
நம்மைக் காக்கும் = நம்மையெல்லாம் இரட்சிக்கும்
நிர்மலர் = குற்றமற்றவராகிய
இயேசு வாழ்க = இயேசுபிரான் புகழும் அருளும் என்றும் நம்மிடையே நிலைத்திருப்பதாக!

2. மனம் மாறுங்கள்! பிறர்நலம் விரும்புங்கள்!

“அலைதரு மனத்தை மாற்றி
  ஆண்டவர்க் கன்பு செய்தால்
நிலமிசை அருகில் காண்பீர்
  நினைப்பரும் அரசை” என்றும்,
“விலையிலாப் பரலோ கத்தை
  விரும்பினால் பிறருக் கிங்கே
நலமதை விழைவீர்!” என்றும் 
  நவின்றவர் நமக்குக் காப்பே!

பாடல் பொருள்

அலை தரு = அலைந்து திரிகின்ற
மனத்தை மாற்றி = மனத்தை நல்வழிப்படுத்தி ஆண்டவர்பால் திருப்பி
ஆண்டவர்க்கு அன்பு செய்தால் = இறைவரிடம் அன்பு கொண்டால்
நினைப்பு அரும் = நினைத்துக்கூடப் பார்க்க முடியாத
அரசை = பரலோக இராஜ்ஜியத்தை
நிலம் மிசை = இந்த உலகத்திலேயே
அருகில் காண்பீர் = வெகு சமீபத்தில் உங்களால் காணமுடியும்!
என்றும் = என்று அறிவுறுத்தியும்,
விலை இலா = விலைமதிப்பு இல்லாத
பரலோகத்தை = பரலோகத்தில் நுழைய
விரும்பினால் = நீங்கள் ஆசைப்பட்டால்
பிறருக்கு = பிற மனிதர்களுக்கு எல்லாம்
இங்கே = இந்த உலகத்தில்
நலம் அதை = நன்மையும் நலமும் உண்டாகவேண்டும் என்று
விழைவீர் = விரும்பி நற்செயல்கள் புரியுங்கள்!
என்றும் = என்று கூறியும்
நவின்றவர் = பிரசங்கித்தவராகிய இயேசுபிரான்
நமக்குக் காப்பே = நமக்குக் காப்பாக இருந்து அருள்புரிவார்.

3. மனம் திருந்தியவர்களுக்கு அருள்பவர்

திருந்திவந் திறைஞ்சி நிற்கும்
  செல்வனைச் சேர்த்த ணைத்துப்
பொருந்திய நெஞ்சத் தன்பால்
  போற்றிடும் தந்தை யைப்போல்
வருந்தித்தம் செயற்கு நாணி
  மனம்திரும் பிடும்தீ யோர்மேல்
பரிந்திடும் கருணை வள்ளல்
  பாதமா மலர்நம் பற்றே!

பாடல் பொருள்

திருந்தி வந்து = மனம் திருந்தி வீட்டிற்குத் திரும்பி வந்து
இறைஞ்சி நிற்கும் = வெட்கிப் பணிந்து நிற்கும்
செல்வனை = தனது செல்வ மகனை
சேர்த்து அணைத்து = தன்னுடன் சேர்த்துக்கொண்டு அரவணைத்து
நெஞ்சத்து = மனத்தில்
பொருந்திய = என்றும் நிலைத்திருக்கும்
அன்பால் = அன்பு மிகுதியாகக் பொங்க
போற்றிடும் தந்தையைப் போல் = தன் மகனை மீண்டும் தன்னுடன் வாழவைக்கும் தந்தையைப் போல்,
தம் செயற்கு = தாம் செய்த தீய செயல்களுக்காக
வருந்தி = மனம் வருத்தப்பட்டு
நாணி = வெட்கப்பட்டு
மனம் திரும்பிடும் = தீயவழியிலிருந்து மாறி நல்வழியில் மனம் திரும்பும்
தீயோர் மேல் = தீயவர்கள் மீது
பரிந்திடும் = கருணை கொள்ளும்
கருணை வள்ளல் = அருள் வள்ளலாகிய இயேசுபிரானின்
பாத மா மலர் = திருப்பாதங்களாகிய மலர்கள்
நம் பற்றே = நம் வாழ்வுக்குப் பற்றுக்கோடாக இருந்து நம்மைக் காக்கும்.

4. பிறர்நலம் பேணுங்கள்!

“குழந்தைபோல் விளங்கும் நெஞ்சம்
  கொண்டவர் விண்ணின் வாசல்
நுழைந்திடல் உறுதி, மற்றோர்
  நுவலரும் பரம்காண் பாரோ?
இழிந்தபா தகர்க்கும் பண்பில்
  ஈனர்க்கும் அருளை இங்கே
பொழிந்தவர் உயர்ந்தோர்” –  என்ற
  புனிதரைப் போற்று வோமே.

பாடல் பொருள்

குழந்தை போல் = குழந்தைகளைப் போல
விளங்கும் = யாருக்கும் தீங்கு நினைக்காமல் அன்புடன் விளங்கும்
நெஞ்சம் கொண்டவர் = மனத்தை உடையவர்களால்
விண்ணின் வாசல் = பரலோக வாசலில்
நுழைந்திடல் உறுதி = நிச்சயமாக நுழையமுடியும்!
மற்றோர் = ஆனால் (குழந்தையுள்ளம் அற்ற) மற்றவர்கள்
நுவலரும் = எடுத்துச் சொல்வதற்கு முடியாத பெருமைகளை உடைய
பரம் காண்பாரோ? = பரலோகத்தைக் காணமுடியுமோ? முடியாது
இழிந்த = மக்களால் வெறுத்து ஒதுக்கத்தக்க
பாதகர்க்கும் = கொடுஞ்செயல்கள் புரிபவர்களுக்கும்
பண்பில் = பண்பு இல்லாத
ஈனர்க்கும் = கீழோர்க்கும்
இங்கே = இந்த உலகத்தில்
அருளை = கருணையை
பொழிந்தவர் = பொழிபவர்கள்
உயர்ந்தோர் = மனத்தால் உயர்ந்தவர்கள் ஆவார்கள்
என்ற = என்று சொன்ன
புனிதரை = புனிதமான இயல்புடைய இயேசுபிரானை
போற்றுவோமே = போற்றிப் புகழ்வோமாக!

Leave a Reply