சமயமெனச் சாதியெனச் சடங்கர்சொலும் பிரிவுகளைச்
சுமைகளென மனத்தகற்றிச் சுடர்ஞானம் தேடுபவன்,
இமயம்தொடும் நினைவலைகள் வரம்பில்லா(து) எழுச்சியுறத்
தமிழென்னும் அமிழ்தருந்திப் பிதற்றுகின்ற தமிழன்பன்!

புவிசிறக்கக் கவிபடைப்போர் பொன்போன்ற வார்த்தைகளைச்
செவிசிறக்கக் கேட்டறிவுத் தெளிந்துதமிழ்க் கவிபயின்றேன்!
நவிலரிய நன்னூல்கள் நமக்களித்த முன்னோர்கள்
சுவையுடைய சொல்கேட்டுத் துணிந்துதமிழ்ப் பாட்டிசைத்தேன்!

சாத்திரங்கள் பழமறைகள் சாற்றுகின்ற விதிமுறைகள்
தனிமனிதத் தேடலுக்குத் தடைகளென தெளிந்துணர்ந்தேன்.
பூத்திலங்கும் அன்புமலர்ப புதுவனமாய் உலகமுற
புகழ்விளங்கும் பழமையிலே புதுமையிட முயல்கின்றேன்

இமயவரம்பன்