கடலில் விரைந்தோடும் கப்பல்
கண்ணைக் கவரும் கவின்மிகு கப்பல்
   கடலினில் தெரியுதுபார்! - நீல
வண்ண உடையில் கடல்மகள் சூடும்
   மணியென ஒளிருதுபார்!

கடல்நீர் பிளந்தே அலைகளைக் கிழித்துக்
   களிப்புடன் நடக்கிறதே - கப்பல்
தடைகளை நகர்த்திச் செயல்படும் வீரத்
   தமிழ்மகன் போன்றுளதே!

இரவும் பகலும் வீசிடும் காற்றால்
   இயங்கிடும் இக்கப்பல் - இது
கரையைத் தொடும்வரை எங்கும் நிற்காமல்
   கடலினில் விரைந்தோடும்.

கலங்கரை விளக்கத்தின் சிறப்பு
அலைகள் மோதும் உயர்ந்த கரையில்
   அமைந்த துறைமுகத்தைக் - காட்ட
நிலையாய் நிற்கும் கலங்கரை விளக்கம்
   நிறைந்த மணல்மீதே.

விண்தான் சரிந்து கீழே விழாமல்
   தாங்கும் தூண்போலே - நின்று
கண்தான் துறைமுகம் காணாமல் ஏங்கும்
   கப்பலைக் காத்திடுமே.

எரியும் விளக்கைத் தலைமேல் தாங்கி
   எழிலொளி பாய்ச்சிடுமே - வானில்
நெருப்பாய் ஒளிரும் கலங்கர விளக்கால்
   கடல்நீர் ஜொலித்திடுமே. 

கரையைத் தொடும் கப்பல்
கலங்கரை விளக்கம் ஒளியினை வீசிக்
   கப்பலைக் கூப்பிடுமே - கப்பல்
நலந்தரும் தாயினைக் கண்டிடும் சேய்போல்
   நாடிக் கரைதொடுமே!

Leave a Reply