கலீல் ஜிப்ரான் கவிதைகள் – அன்பைப் பற்றி

கலீல் ஜிப்ரான்

கலீல் ஜிப்ரான் – லெபனான் தந்த கலைச்செல்வம்;
பாஸ்டன் நகர் வாழ்ந்த பெருங்கவிஞர்;
எழுத்திற் சிறந்த காவியங்களோடு சிந்தை தூண்டும் ஓவியங்களும் படைத்தவர்;
இணையற்ற ஆன்மீக மேதை.

கலீல் ஜிப்ரான் படைத்த ‘தீர்க்கதரிசி’ (The Prophet) என்னும் புகழ் வாய்ந்த நன்னூலிருந்து அன்பின் சக்தியைப் பற்றி அவர் எழுதிய கவிதையை அருந்தமிழில் மொழியாக்கம் செய்து கவிதையாகச் சொல்ல இங்கு முயன்றுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்தருள்க!

 
 அன்பினை அடையும்வழிப் - பாதை
 அல்லல் மிகுந்ததடி
 அன்பின் அழைப்பிருந்தால் - சேர்வாய்
 அணைத்திடும் சிறகுக்குள்ளே!

 புண்தரும் மனத்தினுக்கே - அதேகணம்
 போற்றி அரவணைக்கும் - அன்பு
 கண்ணென உனைக்காக்கும் - அதேகணம்
 கடுந்துயர் கொடுத்துவிடும்.
 
 உச்சி முகர்ந்துன்னைத் - தழுவி
 உணர்வெழ வருடுகையில் 
 அச்சம் தரும்வகையில் - அன்புன்
 அடிவேர் அசைத்தாட்டும்

 இவ்விதத் தொல்லைகளை - அன்பு உன்
 இதயத்திற் களிப்பதும் ஏன்? - உன்
 செவ்விய நெஞ்சினிலே - இருக்கும்
 மருமங்கள் நீயறிய.

 பாசமும் சாந்தமுமே - அன்பிடம்
 பார்க்க நினைத்தாயேல்
 நேசமும் ஊடலும்சேர்  - அன்பின்
 நிறைவினை நீயிழப்பாய்.
 
 அன்பினை வழிநடத்த - உனக்கோர்
 ஆற்றல் கிடையாது
 அன்புன்னை வழிநடத்தும் - அன்பின்
 அகத்தினில் நீயிருந்தால்

 ஓடையைப் போல்மனந்தான் - உருகி
 ஓடவும் விட்டுவிடு
 பாடிடு மெல்லிசையால் - அன்புப்
 பார்வையின் மேன்மைதனை
 
 அன்பை அறிவதனால் - தோன்றிடும்
 அருந்துயர் வலிகளையே
 அன்புடன் பொறுத்துயர்வாய் - அன்புன்னை
 ஆண்டிட நன்றிசொல்வாய்!

Leave a Reply