கோளறு பதிகம் – பாடல் பொருள்

கோளறு பதிகம்

காப்பு

பூவான் மலிமறிநீர்ப் பொய்கைக் கரையினியற்
பாவான் மொழிஞானப் பாலுண்டு – நாவான்
மறித்தெஞ் செவியமுதாய் வார்த்தபிரான் தண்டை
வெறித்தண் கமலமே வீடு.
– நால்வர் நான்மணிமாலை

பொருள்: தாமரைப் பூக்களால் நிறைந்த தூய்மையான நீரை உடைய தடாகக் கரையில் உமையம்மையால் கொடுக்கப்பட்ட ஞானப்பாலை உண்டு, அமுதமாக தேவாரப்பாக்களால் என் செவிகளுக்கு அளித்த பிரானாகிய திருஞான சம்பந்தனது தண்டை அணிந்த மணம் பொருந்திய தாமரை போன்ற திருவடியே அடியேனுக்கு வீடுபேற்றை அளிக்க வல்லது.

ஆளுடைய பிள்ளையென்றும், ஞானப்பாலுண்ட செல்வரென்றும் போற்றப்படும் திருஞானசம்பந்தப் பெருமான் பாடிய ‘கோளறு பதிகம்’, தமிழ் வேதமாகிய தேவாரத்தின் இரண்டாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது.

இப்பதிகத்தை அனுதினமும் பாடும் அடியவர்களுக்கு கோளும், நாளும், வினையும் வருத்தாமல் நன்மையே செய்யும் என்று பலன் கூறுவர்.

கோளறு பதிகம் உருவான வரலாறு

பாண்டிய நாட்டரசன் நெடுமாறப் பாண்டியன் சமண சமயத்தைச் சார்ந்து இருந்தமையை மங்கையர்கரசியார் வாயிலாக அறிந்து கொண்ட சம்பந்தர் மதுரைக்குப் புறப்பட்டார். நாளும் கோளும் நலமாக இல்லை என்று அறிந்தும் சிறிதும் மனம் தளராமல், உமையொரு பாகன் உள்ளத்தில் இருக்கும்போது கிரகங்கள் ‘நல்லதே செய்யும், நல்லதே செய்யும்’ என்று பத்துப் பாடல்களைப் பாடிவிட்டு மதுரை மாநகரை அடைந்தார். பாண்டிய மன்னனின் வெப்பு நோய் அகற்றி சிவபக்தனாக மனமாற்றம் அடையச்செய்தார். அதனால் வெகுண்ட சமணர்களை அனல் வாதத்தாலும் புனல் வாதத்தாலும் வென்றார்.

Kolaru Pathigam

Thirugnana Sambandar was a Poet-Saint of Tamil Nadu who lived around 7th Century A.D. Sambandar’s faith in the all-powerful, all-knowing God who is present everywhere including one’s self is expressed in his devotional hymns called ‘Kolaru Pathigam’.

இசை வளம்

அருளரசாகிய ஞான சம்பந்தப் பெருமான் கோளறு பதிகத்தைப் பாடத் தேர்ந்தெடுத்த பண் ‘பியந்தைக் காந்தாரம்’ எனப்படும். ‘பியந்தை’ என்ற சொல்லை இவ்வாறு பிரிக்கலாம் : பியல் + தந்தை. பியல் என்றால் முதுகின் பின்புறம் அல்லது பிடரி என்று பொருள். ஆதலால், பியந்தை என்ற சொல் ‘தந்தையின் பிடரி’ என்று பொருள்படும்.

ஞான சம்பந்தர் குழந்தையாக இருந்தபோது அவரது தந்தையார் சிவபாத இருதயர் தம் மகனாரின் கால் நோகா வண்ணம் தம் பிடரியில் ஏற்றித் தாங்கிச்சென்றார். அப்போது சம்பந்தர் இறைவனைக் காந்தாரப் பண்ணில் பாடினார். பியந்தையிலிருந்து (தந்தையின் பிடரியிலிருந்து) பாடிய காந்தாரம் பியந்தைக் காந்தாரம் எனப் பெயர் பெற்றதாகக் கருதப்படுகிறது. இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் சம்பந்தர் பாடிய இந்த திருநனிபள்ளி பதிகப் பாடல் வரிகள் அமைந்துள்ளதைக் காண்க:

இடுபறை ஒன்ற(அ)த்தர் பியன்மே லிருந்தின்
இசையால் உரைத்த பனுவல்

இந்த வரிகளில் அத்தரின்(தந்தையின்) பியல் (திருத்தோள்) மேல் இருந்து இன்னிசையால் தாம் பாடியதாக சம்பந்தர் உரைப்பது தந்தை மேல் அவர் கொண்ட பேரன்பையும் நன்றியுணர்ச்சியையும் காட்டுகிறது.

குறிப்பு: பியந்தை என்று சொல்லப்படுவதும் பியந்தைக் காந்தாரமும் ஒன்றென்றே கருதப்படுகிறது. அதேபோல், காந்தாரமென்பதும் பியந்தைக் காந்தாரமென்பதும் ஒன்றே என்றும் கருதுவர்.

பஞ்சமரபு என்னும் நூல் காலையில் பாடத் தகுந்த எட்டு மங்கலப் பண்களில் ஒன்றாக காந்தாரப் பண்ணைக் குறிப்பிடுகின்றது:

தக்கேசி காந்தாரம் கெளசிகம் சாதாளி
திக்கார் புறநீர்மை செந்துருத்தி – தொக்கவியட்
செங்கயற்கட் பூங்கொடியே சீகாமரம் சிகண்டி
மங்கலப்பண் ணாமென்னும் எட்டு.
– பஞ்சமரபு

இதனால் எங்கெங்கே மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் காந்தாரப் பன்ணில் பாடினால் மங்கலம் பெருகி ஓங்கும் என்று கருதப்படுகிறது. இந்தப் பியந்தைக் காந்தாரமே இறைவனின் இசைவடிவம் என்பதால் தான் மதுரையில் நேரக் கூடிய தீங்குகளிலிருந்து தம்மை இறைவன் காப்பாற்ற வேண்டி கோளறு பதிகத்தைப் பாடிய போது சம்பந்தர் பியந்தைக் காந்தாரப் பண்ணிலேயே அதைப் பாடினார்.

(நன்றி : https://dheivamurasu.org/piyanthai-kaantharam/ )

இந்தப் பண்ணின் இலக்கணத்தைக் கீழ்வரும் நூற்பா தெளிவாக விளக்குகிறது:

கோவை கொள்ள கோத்தும் யாத்தும்
தரவு கொண்டும் தண்பூ நறும்பூ
ஏய்ந்த தாக வாய்ந்த இயற்கை
தருநற் காவும் தாரும் தோன்றலாற்
பூயேந் துள்ள பியந்தை என்றிக்
காந்தா ரப்பெயர் காட்டப் பெற்றது.

பொருள் : சீர்கள் கோவை கொள்ளுமாறு அவற்றைக் கோத்தும், யாப்பாகிய சீரால் யாப்புறுத்தியும், ஆசிரியத் தரவு கொள்ளுமாறு அமைத்தும், தண்பூச்சீரும், நறும்பூச்சீரும் இயையும் வண்ணம் அமைந்த இயல்பில் காவும், தாரும் தோன்றும் படி பூயேய்ந்துள்ள பியந்தை என்று காந்தாரப் பண்ணானது காட்டப் பெற்றது.

பாவகை

இசையில் ஞானம் மிகுந்த சம்பந்தப் பெருமான், கோளறு பதிகத்தை ‘எண்சீர் சந்த விருத்தம்‘ என்னும் ஓசை இன்பம் வழங்கும் சந்தமிகு பாட்டாகவே இயற்றியுள்ளார். இந்தப் பாட்டின் ஒவ்வொரு அடியையும் பின்வரும் தாள நடையுடன் பாடுவது சிறப்பு:

தானன
தான தான – தன
தான தான – தன
தான தான தனனா

வேயுறு
தோளி பங்கன் – விடம்
உண்ட கண்டன் – மிக
நல்ல வீணை தடவி

விருத்தப்பாவியல் என்னும் இலக்கண நூலின்படி, இவ்விருத்தத்தின் ஒவ்வொரு அடியும் முதலில் விளச்சீரில் தொடங்கி, இரண்டு குறிலீற்றுத் தேமா, குறிலீற்றுப் புளிமாங்காய், குறிலீற்றுத் தேமா, குறிலீற்றுப் புளிமாங்காய், குறிலீற்றுத் தேமா, புளிமா என்று வரும்.

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
    மிகநல்ல வீணை தடவி
கூவிளம் தேமா தேமா புளிமாங்காய் தேமா
    புளிமாங்காய் தேமா புளிமா

மேற்கூறியவாறு வாய்பாடு கொண்டால் இந்த விருத்தத்தின் அமைப்பை எளிதில் புரிந்து கொண்டு அதன் ஓசை யின்பத்தில் களித்திடலாம்.

1. வேயுறு தோளிபங்கன்

இந்தப் பாடல் கோளறு பதிகத்தின் முதல் பாட்டு. ஓசை இன்பம் குறையாமல் ஒலிப்பதற்காக இங்கே பதம் பிரிக்காமல் அப்படியே அளித்துள்ளேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். பின்வரும் பகுதிகளில் பதம் பிரித்தும் பொருள் விளக்கியும் காட்டியுள்ளேன்.

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
    மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல ணிந்தென்
    உளமேபு குந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
    சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
    அடியார வர்க்கு மிகவே.

பதம் பிரித்தல்

விடமுண்ட = விடம் + உண்ட
முடிமேல ணிந்தென் = முடிமேல் + அணிந்து + என்
உளமேபு குந்த = உளமே + புகுந்த
சனிபாம்பி ரண்டு முடனே = சனி + பாம்பு + இரண்டும் + உடனே
அடியார வர்க்கு + அடியார் + அவர்க்கு

பாடல் பொருள்

வேயுறு = மூங்கில் போன்ற
தோளி = தோளையுடைய உமையம்மையை
பங்கன் = ஒரு பாகமாகக் கொண்டவனும்
விடமுண்ட = ஆலகால விடத்தை உண்ட
கண்டன் = கழுத்தை உடையவனும் ஆகிய சிவபெருமான்
மிக நல்ல வீணை தடவி = மகிழ்ச்சியுற்ற நிலையில் மங்கல வீணையை மீட்டிக்கொண்டு
மாசறு = குற்றமற்ற
திங்கள் கங்கை முடிமேல் அணிந்து = குளிர் நிலவையும் கங்கையையும் முடிமேல் சூடிக்கொண்டு
என் உளமே புகுந்த அதனால் = என் உள்ளத்தில் புகுந்து குடிகொண்டிருந்த காரணத்தால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புகன் வியாழம் வெள்ளி சனி = ஞாயிறு முதலான ஏழு நாட்களும்
பாம்பு இரண்டும் உடனே = இராகு கேது என்று சொல்லப்படும் இரண்டு பாம்புகளும், இவை உள்ளடங்கிய ஒன்பது கோள்களும்
அடியார் அவர்க்கு மிகவே = சிவனடியார்களுக்கு மிகவும்
ஆசறு = குற்றமற்ற
நல்ல நல்ல = நலத்தைக் கொடுக்கும்! நன்மையே செய்யும்!

Kolaru Pathigam Verse 1 – Translation

Lord Siva, as Ardhanareeshwara, gave his half body to the beautiful Parvati. To save the world from evil, He drank the Halahala poison and held it in his Divine throat. Playing the sweet music from the Veenai, He, whose head is adorned with the Crescent and the Ganges, entered my heart and pervades all the space. Because of His presence in my heart, no harm would arise from the effects of the Grahas : Sun, the Moon, Mercury, Venus, Mars, Jupiter, Saturn and the two Serpents Rahu and Ketu. The Grahas would only have positive impacts on the devotees of Lord Shiva.

2. என்பொடு கொம்பொடாமை

என்பொடு கொம்பொ டாமை இவைமார்பி லங்க
    எருதேறி ஏழை யுடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்தென்
    உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொ டேழு பதினெட்டொ டாறும்
    உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
    அடியா ரவர்க்கு மிகவே.

பதம் பிரித்தல்

கொம்பொடாமை = கொம்பொடு + ஆமை
இவைமார்பி லங்க= இவை + மார்பு + இலங்க
எருதேறி = எருது + ஏறி
ஒன்பதொடொன்றொடேழு = ஒன்பதொடு + ஒன்றொடு + ஏழு
பதினெட்டொடாறும் = பதினெட்டொடு + ஆறும்

பாடல் பொருள்

என்பொடு = எலும்போடு = எலும்பும்
கொம்பொடு = கொம்போடு = கொம்பும்
ஆமை இவை = ஆமையும் ஆகிய இன்மூன்றையும்
மார்பு + இலங்க = திருமார்பில் அணிகலன்களாக விளங்க
எருது ஏறி = ரிஷப வாகனத்தில் ஏறி
பொன் பொதி = பொன்போன்று மிளிரும்
மத்த மாலை = ஊமத்தை மாலையும்
புனல் சூடி = கங்கை நீரையும் சூடி
ஏழை உடனே = உமையாள் சகிதமாக
வந்து என் உளமே புகுந்த அதனால் = என் உள்ளத்தில் எழுந்தருளிய காரணத்தால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் = அசுவினி முதலாக உள்ள நாள்களில் ஆகாதனவாகிய ஒன்பது, பத்து, பதினாறு, பதினெட்டு, ஆறு ஆகிய எண்ணிக்கையில் வரும் நாள்கள்
உடனாய நாள்கள் அவைதாம் = உள்ளிட்ட நட்சத்திரங்களும்
அன்பொடு = அன்போடு
அடியார் அவர்க்கு மிகவே = சிவனடியார்களுக்கு மிகவும்
நல்ல நல்ல அவை நல்ல நல்ல = நலத்தையே கொடுக்கும்! எந்த நாளும் நன்மையே செய்யும்!

Kolaru Pathigam Verse 2 – Translation

The Lord, who wears the bones, boar’s horn and the tortoise shell on his chest and has his head adorned with the golden unmatha garland and the holy Ganges, entered my heart, seated , along with Parvati, on the Bull. Since the Lord dwells in my heart, I have no reason to fear the evil effects of the inauspicious days 9th, 10th , 16th , 18th and 6th, as any day brings happiness and well-being to the devotees of Lord Maheswara.

3. உருவளர் பவள மேனி

உருவளர் பவள மேனி ஒளிநீற ணிந்து
    உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல ணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய தூர்தி செயமாது பூமி
    திசைதெய்வ மான பலவும்
அருநெறி நல்ல நல்ல அவைநல்ல நல்ல
    அடியா ரவர்க்கு மிகவே.

பதம் பிரித்தல்

நீறணிந்து = நீறு + அணிந்து
முருகலர் = முருகு + அலர்
மேலணிந்தென்= மேல் + அணிந்து + என்

பாடல் பொருள்

உருவளர் = அழகிய
பவளமேனி = பவளம் போன்ற திருமேனியில்
ஒளி நீறணிந்து = ஒளி பொருந்திய திருஎண்ணீறை அணிந்து
முருகலர் = மணம் பொருந்திய
கொன்றை திங்கள் = கொன்றை மலர், வெண்ணிலவு ஆகியவற்றை
முடிமேலணிந்து = செஞ்சடை மேல் அணிந்துகொண்டு
உமையோடும் வெள்ளை விடைமேல் = (சிவபிரான்) உமையம்மையோடு வெள்ளை ஏற்றின் மீது ஏறி வந்து
உளமே புகுந்த அதனால் = என் உள்ளம் புகுந்த காரணத்தால்
திருமகள் = இலக்குமி
கலையதூர்தி = துர்க்கை
செயமாது = ஜெயமகள்
பூமி = நிலககள்
திசைதெய்வமான பலவும் = மற்றும் பல திசைத்தெய்வங்களும்
அருநெறி நல்ல நல்ல = அரிய செல்வங்களையே நல்லனவாகத் தரும்.
அடியார் அவர்க்கு மிகவே = சிவனடியார்களுக்கு மிகவும்
அவை நல்ல நல்ல = நலத்தையே கொடுக்கும்!

Leave a Reply