ஆழ்வார்கள் நான்மணிமாலை - குருகூர் சடகோபர்

ஆரமுதாம் தமிழுக்கு அருந்தொண்டாற்றியவர்களில் ஆழ்வார்கள் தனிப்பெருமை வாய்ந்தவர்கள். நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் பாடல் திரட்டு ஆழ்வார்களின் நாவன்மையை நமக்கெல்லாம் பறைசாற்றும்.

தேனினும் இனிக்கும் அவர்களுடைய பாடல்கள் ஆழ்ந்த பொருள் பொதிந்த அருமணிகளாகவும் சுடர்விட்டு ஒளிர்ந்தன. சடகோபர் அருளிய திருவாய்மொழி போன்ற முத்துக்கள் பதிந்த பிரபந்தம் ஆழ்துயரைப் போக்கும் அருமருந்து என்று சொன்னால் மிகையாகாது. அத்தகைய சிறப்புடைய பிரபந்தம் என்னும் பேரிலக்கியத்தைப் படைத்த பன்னிரு ஆழ்வார்கள் பெருமையப் போற்றி நான்மணிமாலையாக இங்கு அளித்துள்ளேன்.

குறிப்பு: இந்தப் பதிவு ‘ஆழ்வார்கள் நான்மணிமாலை‘ என்னும் தொடரின் முதல் பகுதி. இந்தப் பகுதியில் ‘வேதம் தமிழ்செய்த மாறன்’ என்றும் சடகோபர் என்றும் அழைக்கப்படும் நம்மாழ்வார் பெரும்புகழைப் பாடும் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பகுதி தமிழ்த்தாய் காப்புச் செய்யுளுடன் தொடங்கி, முறையே வெண்பா, கட்டளைக் கலித்துறை, விருத்தம், அகவல் என்ற வரிசைப்படி நான்மணிமாலையின் இலக்கணத்துடன் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளமை காண்க.

காப்பு

நேரிசை வெண்பா
 சந்தம் மிகுந்த தமிழ்மறைநா லாயிரமும்
 தந்தபெரி யோர்பெருமை சாற்றிடவே - சிந்தையினில்
 வற்றாத அன்பால் மணிமாலை நான்மொழியத்
 தொற்றமிழ்த்தாய் நிற்பாள் துணை.

நம்மாழ்வார்

நேரிசை வெண்பா
 ஆசிரியம் அந்தாதி அன்பார் திருவிருத்தம்
 மாசறியா நற்றிரு வாய்மொழியும் - பாசுரமாய்
 ஞானத் தமிழ்ப்பாட்டில் நல்கினான் மாறனெனும்
 மோனத் தவஞ்செய் முனி.
கட்டளைக் கலித்துறை
 முனிவரன் ஓங்கும் உயர்நலம் கொண்டவன் ஓதுமொழி
 கனியினில் தீந்தேன் கலந்ததை ஒத்தே கவர்ந்தினிக்கும்
 அனைவரும் கற்க அருமறை சொன்ன அறிஞர்களில்
 தனியிடம் பெற்ற சடகோபன் பொங்கும் தமிழ்க்கடலே!
அறுசீர் ஆசிரிய விருத்தம்
 கடலே போன்ற கவித்திரளில்
   கண்ணி ஒன்றே போதுமவன்
 தொடைசேர் பாட்டின் புகழ்சொல்ல
   துலங்கா ஞானத் திறம்சொல்ல
 அடலே றனைய கவியாற்றல்
   அழகைச் சேர்க்கும் தமிழ்மொழிக்கே
 உடலும் உயிரும் உருகிடவே
   உயர்வாம் நலம்செய் வாய்மொழியே!
நேரிசை ஆசிரியப்பா
 மொழியும் சொற்களால் தூரியம் முழக்கி
 அழிவிலாப் புகழ்கொள் அருந்தமிழ் மொழியில்
 ஆயிரம் இன்கவி அருளிச் செய்தவன்
 மாயப் பிறப்பை மாய்த்திட வல்லவன்
 கலிகெட உலகில் கலகங்கள் நீங்க
 மெலிவுசெய் சாபங்கள் வீழ்ந்து நலிய
 மதிநலம் வாய்த்து மனம்தெளி வடைய
 புதிராம் வாழ்வின் உண்மைகள் புரிய
 பயனுறும் வாய்மொழி படிமின்
 மயர்வினை அழிப்பான் மாறனென் தேவே.

This Post Has 2 Comments

 1. Dr.V.K.Kanniappan

  அருமையான பாடல்கள்.

  நேரிசை ஆசிரியப்பாவில்,

  அழிவிலாப் புகழ்கொள்
  புதிராம் வாழ்வின்

  மிகச் சிறப்பான பாடல்கள். இனிய வாழ்த்துகள்.

  1. இமயவரம்பன்

   ஐயா, என் வலைத்தளத்திற்கு வருகை தந்து, தங்கள் மேலான கருத்துக்களை அளித்தமைக்கு மிகவும் நன்றி!

   வாழ்கபன் னூற்றாண்டு வண்டமிழ்த்தொண் டாற்றிடும்நீர்
   சோழவந்தான் தோன்றும் சுடர்.

Leave a Reply