சித்தர்கள் புகழ் பாடுவோம்

சித்தர்கள்

சித்தர்கள்

தன்னை அறிந்துணர்ந்த தவயோகிகள்,
சீவனே சிவனெனத் தெளிந்த தெய்வச் சான்றோர்கள்,
சும்மா இருக்கும் சுகத்தைச் சொன்னவர்கள்,
உறங்கி உறங்காமல் வாழ்ந்த உயர்ஞானிகள்

அத்தகைய பெருஞ்சித்தர்கள் செந்தமிழில் கவிபாடி நம் மனம் இனிக்கச் செய்தவர்கள்.
அந்த ஞானப் பெருந்தகையரின் திருப்புகழைப் போற்றி ‘ஆனந்தக் களிப்பு‘ மெட்டில் பாடல் இயற்றி இங்கு அளித்துள்ளேன்.
பாரதியின் ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்‘ என்னும் பாட்டின் தாளத்தை ஒட்டி அமைந்த பாட்டுக்கள் இவை.

சித்தர்கள் பெருமை போற்றுவோம், சித்தத்தில் தெளிவை நாடுவோம்!

சித்தர்கள் பெருமையை நான் இங்கு சொல்ல, செந்தமிழ் அன்னை ஒளி காட்டித் துணை புரிவாளாக!

சித்தர் பெருமை சிறப்புறவே நான்மொழிய
முத்தமிழே காட்டும் ஒளி!

சித்தர்களின் இனிமையான பாடல்களைக் கேட்டு அந்தக் கவிதைகளின் தித்திப்பால் நான் பிதற்றும் இந்த வார்த்தைகளில் பிழை இருப்பின் அன்புடன் பொறுத்தருள்க!

சித்தர்கள் பெருமை

முத்தமிழ் கற்று முழங்கும்மெய்ஞ் ஞானியராம்
சித்தர் தெளிந்துரைத்த தேன்கவியின் – தித்திப்பால்
பித்தனேன் நான்பிதற்ற மன்னிப்பீர் பேரன்பால்
மொத்தப் பிழையும் மறந்து.
இடைக்காட்டுச் சித்தர் புகழ்
தானென்ற எண்ணத்தை விட்டால் – மனம்
    தானே அடங்கிடும் நிசத்தினைச் சொல்லி
ஆனந்தத் தாண்டவம் ஆடும் – அருள்
    ஆனந்தக் கோனார் இடைக்காட்டுச் சித்தர்!
குதம்பைச் சித்தர் புகழ்
ஓங்கார மேடையில் ஏறி – நின்று
    முழங்கிட யோகத்தின் மேன்மையைக் கூறி
தூங்காமல் தூங்கும் சுகத்தை – நமக்குச்
    சொல்லும்மெய்ஞ் ஞானியாம் குதம்பை நற்சித்தர்!
பாம்பாட்டிச் சித்தர் புகழ்
சோம்பிடும் உள்ளத்தைத் தேற்று – பாம்பின்
    தூக்கம் கலைத்திடும் சொற்களைப் போற்று
பாம்பாட்டி யார்புகழ் பாடு – ஆதி
    பகவனை உன்னோடு விளையாடத் தேடு!
அழுகணிச் சித்தர் புகழ்
கண்ணம்மா ளைப்பார்த்துக் கேட்கும் – நெஞ்சம்
    கவர்ந்திடும் கேள்விகள் சிந்திக்க வைக்கும்
எண்ணத்தில் எரியெழும் யோகி – அழகு
    இன்பக் கவிசொல்லும் அழுகணிச் சித்தர்!
அகப்பேய்ச் சித்தர் புகழ்
மனமெனும் பேய்தனை வெல்லும் – ஒரு
    மந்திரம் தருமிவர் ஒவ்வொரு சொல்லும்
நினைவறச் சும்மா இருந்தால் – நீங்கா
    நிர்மலம் வாய்க்குமென் றாரகப் பேயார்!
கடுவெளிச் சித்தர்
ஆண்டியின் தோண்டியைப் பாடி – அந்த
    அகண்ட வெளியினில் ஆனந்தம் தேடி
தூண்டா விளக்கின் சுடர்போல் – இருள்
    தொலைத்தருள் காட்டுவார் கடுவெளிச் சித்தர்!

Leave a Reply