விவேகானந்த வெண்பா – விவேகானந்தர் புகழ் மாலை

விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர் – பாரதத்தின் பெருமையைப் பாருக்கு உணர்த்திய ஆன்ம ஞானி.

“சொல்லுரம் பெற்ற செல்வன், சோர்விலாத் தூய வீரன்” என்று அனுமனைக் குறித்துக் கவிச்சக்ரவர்த்தி கம்பர் பாடியது விவேகானந்தருக்கும் பொருந்தும்.
வீரம், விவேகம், பற்றற்றத் தூய்மை, தன்னலமற்ற அன்பு போன்ற நற்பண்புகளின் இருப்பிடமாகக் கொண்டு விளங்கும் விவேகானந்தரைப் போற்றும் வெண்பாக்கள் இங்கே.

விவேகானந்தர் – காரிருள் போக்கும் கதிரவன்

வீர விழிபார்க்க, விண்ணதிரும் சொல்முழங்கக்,
காரிருளைப் போக்கும் கதிரவன்போல் – பாரிருளை
வேரறுக்க வந்தான் விவேகா னந்தனெனும்
பாரதத்தாய் பெற்ற பரன்.
சோர்வை ஒழித்திடும், பற்றனைத்தும் சுட்டெரிக்கும்,
பார்வையில் போர்வலிமை பாய்ச்சிடுமே - நேரில்
நவமாய்ச் சுடர்தந்து ஞானவொளி வீசும்
விவேகா னந்தன் விழி.

வேதாந்த சிங்கத்தின் விண்முழக்கம் கேட்டொடுங்கி
மோதும் நரிக்கூட்டம் ஓடிவிடும் - ஓதாய்
உபநிடத மொன்றேனும் என்றான், உயர்வாம்
சுபமனைத்தும் மேவும் தொடர்ந்து.
சகமனைத்தும் வாழ்த்தும் தனிச்சக்தி உன்றன்
அகமிருக்க நற்செயலை ஆற்றாய் -  திகழ்ந்தொளிரும்
தோள்வலிமை காட்டித் துயர்துடைப்பாய் என்றான் நெஞ்(சு)
ஆளும்விவே கானந்தன் தான்.

Leave a Reply