‘பற்றற்று நோக்கப் படுதுயரம் போய்விடுமே
சித்தம் கலங்காமல் தீவிழிக்கப் பார்த்திட்டால்
மொத்தத் தடுமாற்றம் உப்பாய்க் கரைந்துவிடும்
புத்தம் புதுப்பார்வை பூக்கும் உனக்குள்ளே!’
– ஜேகே

ஜேகே என்று அறியப்படும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி எந்த மதத்தையும் மரபையும் சாராத தலைசிறந்த தத்துவ ஞானி. ஜே கிருஷ்ணமூர்த்தி தமது கவித்துவமான சொற்களால் தம் எண்ணங்களை இயல்பாகத் தெளிவுறுத்தும் திறம் வாய்ந்தவர். இவர் தன்னை ஒரு குருவாகக் கருதாமல், மனித மனத்தின் தன்மையை பிரதிபலிக்கும் கண்ணாடி போல யாவரும் கருதவேண்டும் என்று விரும்பினார்.

எந்தவிதமான ஆளுமையும் ஆதிக்கமும் மிடுக்கும் இல்லாத இவரது நேர்கொண்ட பேச்சு கேட்பவர் நெஞ்சில் கருத்தூன்றி சிந்திக்கத் தூண்டியது. அதனால் மதங்களின் மீது நம்பிக்கை இழந்து மன விடுதலை தேடிச் சோர்ந்தவர்களுக்குப் புத்துணர்வூட்டும் அருமருந்தாக ஜே கிருஷ்ணமூர்த்தியின் சொற்கள் விளங்கின.

புகையற்ற விளக்கினைப் போல் அசையாத சித்தத்தால் தூய ஒளி வீசும் ஜே கிருஷ்ணமூர்த்தியின் தத்துவங்கள் சிலவற்றை கவிதை வடிவில் இங்கு அளித்துள்ளேன். பிழையிருப்பின் பொறுத்தருளி பேரன்பு காட்டுவீர்!

குறிப்புகள்

இந்தப் பதிவிலுள்ள கருத்துக்களும் கவிதைகளும் ஜே கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ‘விவேகத்தின் விழிப்பு’ (The Awakening of Intelligence) என்னும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. பின்வரும் கவிதைகள் ‘எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்‘ என்ற பாவகையைச் சார்ந்துள்ளமை காண்க.

நீதான் உலகம் – மற்றவர்களையும் உன்னைப் போல் பார்

"நீதான்(இப்) பேருலகம், உன்னைப் போலே
   நினைவுகளும் உணர்வும்யா வர்க்கும் உண்டு,
பாதைகள்சென் றடையாப்பே ருண்மை தன்னைப்
   பழமதங்கள் சாத்திரங்கள் காட்டுமோ சொல்?
வேதனைகள் வரும்போது விழித்தி ருந்தால்
   விட்டொழிந்து போய்விடும்பே ரின்னல் எல்லாம்"
ஓதரிய இவ்வுண்மை தெளியப் பேசும்
   ஜேகிருஷ்ண மூர்த்தியுரை கேளாய் நெஞ்சே!

விளக்கம்:

நீ தான் இந்த உலகம், உன்னைப் போல் மற்றவர்களும் மனத்தளவில் சமமானவர்கள். நம்மிடையே வெளிப்படும் வேற்றுமைகள் எல்லாம் மேலோட்டமானவை தான். அடிப்படை உணர்வுகளால் நாம் வேறுபட்டவர்கள் அல்லோம்.

உண்மையை அடைய பாதை ஏதும் இல்லை. மதங்களும் அவை சாற்றும் சாத்திரங்களும் உண்மையை உணர உதவமாட்டா. துன்பம் வரும்போது விழிப்புடன் இருந்து தள்ளி நின்று பார்த்தால் இன்னல் விலகும். பற்றற விழி!

குறுகாத நெஞ்சத்தின் தெளிவே கலக்கம் போக்கும் – கொள்கை கோட்பாடுகள் உதவா

"முரண்பாடே உயிர்வாழ்வில் இணக்கம் நீக்கும்,
   முந்திவரும் சிந்தனைநேர் பார்வை நீக்கும்,
 இருள்சேர்க்கும் இயக்கங்கள் இறுக்கம் ஊட்டும்
   இதயத்தில் அன்பழித்துப் பகையுண் டாக்கும்,
 ஒருங்கிணைக்க வந்தமதம் வழிபட் டோரை
   முழுதாகப் பயன்படுத்தி ஏய்க்கப் பார்க்கும்,
 சுருங்காத விரிநெஞ்சின் தெளிதல் ஒன்றே
   துணையாம்நல் வாழ்வமைக்க", என்றார் ஜேகே!

விளக்கம்:

முரண்பாடு நிறைந்த வாழ்வில் இணக்கம் இருக்காது. எண்ணங்கள் எல்லாம் கடந்த கால நிகழ்வுகளிலிருந்து பிறந்தவை. அவற்றில் புதுமை எதுவும் இல்லை. பார்க்கும் போது எண்ணங்கள் மிகுதியானால், நேர் கொண்ட பார்வையால் நிகழ்வனவற்றைப் புதிதாக நோக்க முடியாது. இயக்கங்களும் கொள்கைகளும் மனித மனத்தில் ஒரு விதமான இறுக்கத்தையே உருவாக்கி பகைமை சேர்க்கும். மதங்கள் மனிதனின் இயலாமையைப் பயன்படுத்தித் தம்மை நிலைப்படுத்திக் கொள்ளப் பார்க்கும். மனத்தை விரிவுபடுத்தித் தெளிவு கொண்டாலொழிய வாழ்வு வளம்பெறத் துணைசெய்யும் யுக்தி வேறெதுவும் இல்லை.

Leave a Reply