உள்ளம் கவரும் கள்வர் – ஞான சம்பந்தர்

ஞான சம்பந்தர்

செந்தமிழுக்குச் சந்தம் சேர்த்த பாவலர்களில் முதன்மையானவர் திருஞான சம்பந்தர். யாழினிக்கப் பாடும் இசைப்புலவரான சம்பந்தப் பெருமானைப் போற்றிப் பாடும் இந்த வெண்பாக்கள்.

காதொளிரும் தோடும் கவின்மதியும் கொண்டிலங்கும்
மாதொரு பாகர் மகிமையினை – தீதற்ற
தெள்ளமுதச் சொல்லால் திருக்கவிசொல் சம்பந்தா
உள்ளம் கவர்கள்வன் நீ!
பாட்டால் பிணியறுத்தான் பண்சுமந்த பாட்டொன்றால்
வாட்டும் படும்பஞ்சம் மாற்றினான் – மீட்டுயிர்த்து
வாழும் வகைசெய்தான் மாண்டாரை, வெல்லும்(எ)ங்கோன்
யாழை முறிக்கும் இசை.
யாழொழுகும் ஓசை இனித்திடவே தெய்வமணம்
சூழவரும் கானவொலித் தோன்றிடவே – ஏழுலகும்
கேட்டு மகிழக் கிளர்ஞான சம்பந்தன்
பாட்டுப் படைத்தான் பரிந்து.
நாளோடு கோளும் நல்லடியார் துன்பமெலாம்
தூளாக்கித் தொல்லையறத் தோள்கொடுக்கும் – தாளேத்திக்
கோளறு நற்பதிகம் பாடீர் குறையறுக்கும்
ஆளுடைய பிள்ளை அருள்.
அம்மேயப் பாவென் றழைக்க அளித்தாளே
செம்மையுறும் ஞானத் திருவருட்பால் – அம்மையவள்
தாளிரண்டும் ஏத்தித் தலைவனையும் கைதொழுத
ஆளுமறை மாமுனிவற் கன்று.

Leave a Reply