திருவேங்கடத் துதி – தசாவதாரப் பாடல்

திருவேங்கடத் துதி - தசாவதாரப் பாடல்

திருமாலின் பத்து அவதாரங்களின் பெருமைகளும் ஒரே பாசுரத்தில் தோன்றுமாறு நான் எழுதிய திருவேங்கடத் துதிப்பாடல்.

பாவகை : எழுசீர் ஆசிரிய விருத்தம்

மீனம தாகி மாமறை காத்தான்
   வெற்பமர் ஆமையும் ஆனான்
ஏனம தாகி இருநிலம் இடந்தான்
   எரிவிழி மடங்கலென் றெழுந்தான்
வானமும் நிலனும் மாணியாய் அளந்தான்
   மழுவொடு வில்லுமேர் அணிந்தான்
ஆனிரை காத்தான் அடல்பரி அமர்ந்தான்
   அருள்மிகு வேங்கடத் தரியே.

பதம் பிரித்து:

மீனம் அது ஆகி மாமறை காத்தான்
   வெற்பு அமர் ஆமையும் ஆனான்
ஏனம் அது ஆகி இருநிலம் இடந்தான்
   எரிவிழி மடங்கல் என்று எழுந்தான்
வானமும் நிலனும் மாணியாய் அளந்தான்
   மழுவொடு வில்லும் ஏர் அணிந்தான்
ஆனிரை காத்தான் அடல்பரி அமர்ந்தான்
   அருள்மிகு வேங்கடத்து அரியே.

பொருள்:

அருள்மிகு = அருள் மிகுந்த
வேங்கடத்து = திருவேங்கடத்தில் வேங்கடேசனாக எழுந்தருளியிருக்கும்
அரி = ஶ்ரீமன் நாராயணன்
மீனம் = மீன் உருவத்தில்
அது ஆகி = அவதாரம் எடுத்து
மாமறை = பெருமைமிக்க வேதங்கள் நான்கினையும்
காத்தான் = கடலுக்கடியிலிருந்து மீட்டு எடுத்தான்
வெற்பு = (பாற்கடலைக் கடையும் மத்தாக விளங்கிய) மேரு மலையானது
அமர் = தன் முதுகில் தங்குமாறு அருள்புரிந்து நிற்கும்
ஆமையும் = ஆமை உருவிலான
ஆனான் = கூர்மாவதாரம் எடுத்தான்
ஏனம் = வராக உருவத்தில்
அது ஆகி = அவதாரம் எடுத்து
இருநிலம் = இந்த பெரிய பூலோகத்தை
இடந்தான் = கடலுக்கடியிலிருந்து மேலே கொண்டுவந்தான்
எரிவிழி = கனல் தெறிக்கும் கண்களை உடைய
மடங்கல் = சிங்கம்
மடங்கல் என்று எழுந்தான் = நரசிம்மமாக அவதரித்தான்
வானமும் நிலனும் = வானத்தையும் பூமியையும்
மாணியாய் = வாமனனாக அவதாரம் எடுத்து
அளந்தான் = தன் திருவடிகளால் அளந்தான்
மழுவொடு = பரசுராமனாகப் பரசு என்னும் ஆயுதத்தையும்
வில்லும் = ஶ்ரீராமனாக வில்லையும்
ஏர் = பலராமனாக ஏரையும்
அணிந்தான் = தன் திருக்கரத்தில் தரித்தான்
ஆனிரை = ஆன் + நிரை = பசுக்கூட்டத்தை
காத்தான் = (கண்ணனாக திருவவதாரம் எடுத்து) கோவர்த்தனகிரியைக் குடையாக எடுத்து மழைதடுத்துக் காத்தான்
அடல் = சக்தி வாய்ந்த
பரி = குதிரையின்
அமர்ந்தான் = மீது அமர்ந்த கல்கியும் ஆனான்
(இவ்வாறு எல்லா அவதாரங்களுமாகத் திகழ்ந்து ஒளிர்பவன் அந்தத் திருவேங்கடத்தில் இருக்கும் பெருமாளே)
படமும் பாடலும்
இமயவரம்பன்

Leave a Reply