தமிழன்னை புகழ் மாலை

இனிக்கும் தமிழ்

தமிழன்னையின் தனிச்சிறப்பு

 ‘தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
 தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்’
       - பாவேந்தர் பாரதிதாசன் 

தமிழ் மொழி இனிய மொழி மட்டுமன்று; சித்தர்கள் பாடிய ஞானமொழி; பாரதியும் பாரதிதாசனும் பரவிய புதுமை மொழி; அறிவியல் வளர்க்கும் அருமொழி. அத்தகைய நற்றமிழ் சிறப்பை இந்தப் பாடல்களில் காணலாம்.

இந்தப் பாடல்கள் ‘குற்றாலக் குறவஞ்சி‘ என்னும் நூலில் ‘கொல்லிமலை எனக்குஇளைய செல்லிமலை அம்மே‘ என்று வரும் பாட்டின் மெட்டில் அமைக்கப்பட்டவை.

 திருவடியாய்க் குறளடிகள் கொண்டமொழி அம்மே
  சிலம்பொலியால் இசைமுழக்கம் செய்யுமொழி அம்மே
 இருளகற்றும் கதிரொளியாய் எழுந்தமொழி அம்மே
  இனித்திடும்தெள் ளமுதத்தமிழ் எங்கள்மொழி அம்மே
 

 புவிமகிழக் கவிபடைத்த கம்பன்மொழி அம்மே
  புகழேந்தி நளன்கதையைச் சொன்னமொழி அம்மே
 சுவையுடன்தெள் ளறிவுதரும் சித்தர்மொழி அம்மே
  தோன்றுமத உண்மையெல்லாம் செப்புமொழி அம்மே
 

 பாரதியின் பாட்டுயர்வால் பொலிந்தமொழி அம்மே
  பாவேந்தர் புத்துலகைப் படைத்தமொழி அம்மே
 பாருயர நீதிசொலும் புதுமைமொழி அம்மே
  பழமைவளம் மாறாமல் செழிக்குமொழி அம்மே
 

 பூத்திடும்நுண் கலைகள்பல பொங்குமொழி அம்மே
  புலமையுடன் அறிவியலில் சிறக்குமொழி அம்மே
 வாழ்த்துமன்பு நெஞ்சங்களை ஆளுமொழி அம்மே
  வையம்புகழ் செம்மொழிதான் எங்கள்தமிழ் அம்மே 

தமிழ் என்னும் செம்மொழி

தமிழ் என்னும் செம்மொழி – இந்தக் கவிதைகள் ‘கும்மிப் பாட்டு‘ என்னும் பாட்டு வகையில் எழுதப் பட்டவை. பாரதியின் ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ என்னும் பாட்டின் மெட்டில் அமைந்த சிந்துக் கண்ணிகள்.

 ஆதியில் நின்ற அருமொழியாம் - அணி
  ஆயிரம் கொண்ட தனிமொழியாம்
 ஓதிடும் செம்மொழி யாவினுமே - புகழ்
  ஓங்கி இருக்கும் தமிழ்மொழியே!
 

 அறிவு சிறந்திட நெறியருளும்  - அன்பு
  ஆர்ந்த வழிசொலும் நூல்கள்தரும்
 செறிவு மிகுந்த பொருளுணர்த்தும் -  பல
  தீங்கவி யாக்கித் தெளிவளிக்கும்.
 

 சோர்வுறும் போது துணிவுதரும் - துயர்
  சூழ்ந்திடும் போது துணையிருக்கும்
 ஆர்வம் உடையவர்க் காற்றல்தந்தே - அவர்க்கு
  அருங்கவி பாடும் வலிமைதரும்
 

 விருத்தம் எனும்சுவை விருந்தளித்தே - உயர்
  வெண்பா எனும்நறும் தேன்பொழிந்து
 பொருந்தும் கலியினில் பண்ணமைத்தே - புகழ்
  புரிந்து மிளிர்பவள் தமிழன்னை!
 

 சிந்து கவிதையில் களிநடனம் - ஆடிச்
  சிந்தை களிப்புறச் செய்திடுவாள்
 சந்தம் மிகுந்திடும் பள்ளுச்சொல்லித் - தனித்
  தாளத் திசைமழை பெய்திடுவாள்!
 

 கன்னல் கரும்பின் சுவையதனை - வெல்லும்
  காதல் சுவையுடை காவியங்கள்
 அன்னை எமக்களித் தேற்றமுற்றாள் - நெஞ்சை
  ஆளும் தமிழமு தூற்றிவிட்டாள்! 

தமிழ் என்னும் பெயர் எவ்வாறு தோன்றியது?

தமிழ்மொழி தனது இனிமையான பெயரை எப்படிப் பெற்றது என்பதை அறிஞர்கள் பலர் பலவாறு ஆய்ந்து உரைக்கின்றனர்.  அவர்கள் சொல்லும் காரணங்கள் ஒவ்வொன்றும்  பெருமிதம், வியப்பு, களிப்பு போன்ற உணர்வுகளைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதாகவும் இருக்கின்றன. அத்தகைய சுவைமிகுந்த காரணங்களில் சிலவற்றை இந்தப் பதிவில் காணலாம்.

குறிப்பு: இந்தப் பதிவு, S.W. கூமாரசுவாமி அவர்கள் எழுதிய ‘The origin of the name Tamil’ என்னும் ஆய்வுக் கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது.

ஐந்தெழுத்து அருமொழி

தமிழ் என்னும் சொல்லை ‘த் + அ + ம் + இ + ழ்’ என்று ஐந்து எழுத்துக்களாகப் பிரித்துப் பார்த்த சில அறிஞர்கள், இவ்வெழுத்துக்கள் எல்லாம் தமிழின் ஐந்து இலக்கணப் பிரிவுகளையும் ( எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி), ‘ற, ன, ழ, எ, ஓ’ என்னும் ஐந்து தனித்தன்மை வாய்ந்த எழுத்துக்களையும், ஐந்து வகையான பகுப்புகளையும் (ஆண்பால், பெண்பால் முதலிட்ட ஐம்பால்) குறிப்பதாகக் கூறுவர்.  இது கற்பனைச் சுவையுடன் கண்டறிந்த காரணமேயன்றி இதற்குச் சான்றுகள் காண இயலாது. 

தன்னேர் இல்லாத தமிழ்

‘இலக்கணக் கொத்து’ என்னும் நூலின் ஆசிரியர் சுவாமிநாத தேசிகர், தமிழின் பெயர்த் தோற்றத்துக்கு வேறொரு காரணத்தை முன்வைக்கிறார். இவர் தமிழ் என்னும் சொல்லை  ‘தம் (தனக்கே உரிய)  + இழ் (‘ழ்’ என்னும் எழுத்து)’ என்று பிரித்து, ‘ழ்’ என்னும் எழுத்தைப் பெற்ற தனித்தன்மை வாய்ந்த மொழி என்று பொருள்பட அமைந்த பெயரே ‘தமிழ்’ என்கிறார். இவர் கூற்றுப்படி ’ழ்’ என்னும் எழுத்து தமிழுக்குத் தனிச்சிறப்பு கொடுத்தாலும்,  இந்த எழுத்து தமிழுக்கு மட்டுமே உரியது என்று சொல்ல முடியாது. ஏனெனில், மலையாளம் மற்றும் ஒருசில திபெத்திய மொழிகளிலும் ‘ழ்’ என்ணும் எழுத்துப் பயின்றுள்ளதைப் பார்க்கின்றோம்.

திருமல்லம்

‘மல்லர்’ என்னும் பழந்தமிழ்க் குடியினரின் பெயரை மூலமாகக் கொண்டே தமிழ் மொழி தன் பெயர் பெற்றது என்றும் வேறொரு சாரார் மொழிவர்.  ‘மல்லர்’ என்னும் சொல், திருமல்லம் -> திரமிலம் -> திரமிடம் -> திரவிடம் -> தமிழ் என்று மாற்றம் பெற்றது என்பது இவ்வாய்வாளர்களின் கருத்து. 

தென்னகத்துத் தேன்மொழி

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் என்னும் தமிழறிஞர், ‘தென்மொழி’ என்னும் சொல்லிருந்து தமிழ் என்னும் பெயர் பிறந்தது என்று கருதினார். தென்மொழி என்னும் சொல், தெம்மொழி->தெமொழி->தெமிலி->தமிழ்  என்று மாற்றம் பெற்றது என்று இவர் மொழிந்தார்.  இதேபோன்று தேன்மொழி என்னும் சொல்லிருந்து தமிழ் எனும் பெயர் தோன்றியது என்று சொல்வாரும் உளர்.

முடிவுரை

இந்தக் காரணங்களை எல்லாம் ஆய்ந்து நோக்கிவிட்டு,  சுவாமி நாத தேசிகரின் கருத்துக்கு மீண்டும் வருவோம்.  தமிழை, ‘தம் + இழ்’ என்று பிரிக்கும் போது,  ‘ழ்’ என்னும் எழுத்துப் பின்வருவனவற்றைக் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம் : அமிழ்,  இமிழ்(ஓசை),  கமழ்,  நெகிழ், திகழ்.  எனவே, இவரின் கூற்றுப்படி, தமிழை ‘தனக்கே உரித்தான வகையில் நம் மனத்தை இனிமை எனும் கடலில் அமிழ வைத்து, இன்ப ஒலி எழுப்பி மணம் வீசும் சொற்கொண்டு, கேட்பவரை நெகிழ வைத்துத் திகழும் மொழி’ எனலாம்.

‘இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்’ என்று தமிழின் சிறப்பைச் சொல்லுகிறது பிங்கல நிகண்டு என்னும் நூல்.  தமிழின் பெயர்க் காரணம் இன்னதென்று யாரும் அறுதியிட்டுக் கூற இயலாது என்றாலும்,  தமிழ் என்றால் ‘இனிமை, இயற்கை (நீர்மை), தனித்தன்மை’ என்பது மறுக்க முடியாத உண்மை. இது தமிழறிந்து பேசும் நாம் அனைவரும் போற்றிக் கருதும் கருத்தாகவே விளங்குகிறது.

Leave a Reply