தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் என்ன? தியானம் செய்வது எப்படி? எவ்வளவு நேரம் தியானம் செய்தால் சிறந்தது?

தியானம் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு விடைகளாக நம் செவிகளில் இப்போதெல்லாம் நொடிதோறும் சேரும் அறிவுரைகள் பலவிதம். இந்த கருத்துகள் எல்லாம் சேர்ந்து நம் அறிவுக்குத் தெளிவை அளிப்பதை விடக் குழப்பத்தை வளர்ப்பதே அதிகம். இந்த அறிவுரைகளைக் சற்று ஒதுக்கிவைத்து விட்டு, சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருமூல நாயனார் அருளிய திருமந்திரம் என்னும் திருநூல் தியானம் என்றால் என்ன என்பதையும் எவ்வளவு நேரம் தியானம் செய்தால் சிறப்பு என்றும் தியானிப்பதின் பலன்களையும் தியான அனுபவங்களைக் குறித்தும் சொல்லும் அருள்மொழிகளை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

மனக்கண்ணாடியில் மகேசனைக் காண்போம்

எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதனைக் கண்டறி வாரில்லை
உண்ணாடி உள்ளே ஒளிபெற நோக்கிடில்
கண்ணாடி போலே கலந்திருந் தானே.
அருஞ்சொற் பொருள் :
எண்ணா யிரத்தாண்டு = எண்ணாயிரத்து + ஆண்டு = எட்டாயிரம் ஆண்டுகள்
கண்ணார் = கண் + ஆர் = கண்கள் ஆர்ந்த = கண்களில் நிறைந்த
கண்டறி வாரில்லை = கண்டறிவார் + இல்லை
உண்ணாடி = உள் + நாடி = உள்ளத்தில் நாடி

விளக்கம் : எட்டாயிரம் வருடங்கள் யோக நிலையில் மனத்தை ஒருமைப்படுத்தி தியானம் செய்தாலும் கண்களுக்கு அமுதம் போன்ற காட்சி தரும் இறைவனை கண்ணாரக் கண்டவர் யாரும் இல்லை. அவ்விறைவனைத் தம் உள்ளத்துள்ளே நாடி மனத்தில் எழும் சோதி ஒளி தோன்றுமாறு (ஒரு நொடியேனும்) நோக்கினால், கண்ணாடியில் உருவம் தோன்றி பிரதிபலிப்பது போல, இறைவன் உள்ளத்தினுள்ளே கலந்து தோன்றுவான்.

தியானம் என்றால் என்ன? – மறித்து உள்ளே நோக்குவதே தியானம்

சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டுநீர்
மாத்திரைப் போது மறித்(து)உள்ளே நோக்குமின்
பார்த்த அப்பார்வை பசுமரத் தாணிபோல்
ஆர்த்த பிறவி அகலவிட் டோடுமே.
அருஞ்சொற் பொருள் :
சதுர்கள் = பொய்ப்பெருமைகள்
மாத்திரை = ஒரு நொடி
மறித்து = திருப்பி
ஆர்த்த = கட்டிவைக்கும் அல்லது பிணிக்கும்

விளக்கம் : சாத்திரங்களையும் வேதங்களையும் படித்துவிட்டு தம் அறிவைப் பிறர்க்குக் காட்டி வீண்பெருமைகள் பேசிக்கொண்டு திரிவதை விட்டுவிட்டு, வெளியே புறவின்பங்களை நாடி அலைந்து திரியும் மனத்தைத் தடுத்து உட்பக்கம் திருப்பி தியானித்து ஒரு நொடியேனும் அசைவின்றி பாருங்கள்! அப்படிப் பார்த்த பார்வையானது நம்மைப் பிணித்திருக்கும் பிறவி என்னும் நோயை விரட்டி அடித்து விடுதலை அளிக்கவல்ல சக்தி மிகுந்தது.

மேற்கண்ட பாடல்கள் இரண்டும் புகட்டும் உண்மை இதுதான் : தியானம் என்றால் என்ன என்று அறிந்து ஞானம் பெறுவதற்குப் பல சாத்திரங்களையும் யோக நூல்களையும் கற்றுத் தேர்ந்தாலும், மனத்தைச் சிந்தனையின்றி அசையாமல் உள் நோக்கிப் பார்த்தால் அன்றி மகேசன் என்றும் மாலவன் என்றும் பல நாமங்களில் பல்வேறு விதமாக நாம் அழைக்கும் அந்த பரம்பொருளைக் காண முடியாது. எவ்வளவு நேரம் தியானம் செய்தாலும், எத்தனை ஞான நூல்களைப் பயின்றாலும், மனத்தில் தேடாமல் புறத்தில் தேடினால் கடவுளைக் காண முடியாது என்பதைத் தெளிவாக விளக்குகிறார் திருமூலர்.

தியானத்தில் கேட்கும் நாதங்கள்

மணிகடல் யானை வளர்குழல் மேகம்
மணிவண்டு தும்பி வளைபே ரிகையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்
பணிந்தவர்க் கல்லது பார்க்க வொண்ணாதே.
அருஞ்சொற் பொருள் :
வளர்குழல் = இசை ஓசையை வளர்க்கும் புல்லாங்குழல்
மணிவண்டு = நீலமணி போன்ற நிறமுடைய வண்டு
வளை = சங்கு
தணிந்தெழு = தணிந்து + எழு = மென்மையாகத் தோன்றுகின்ற
பணிந்தவர்க்கல்லது = பணிந்தவர்க்கு + அல்லது = தன்னைத் தாழ்த்தி தியானிப்பவர்க்கு அன்றி
பார்க்க ஒண்ணாதே = இறைவனைப் புலன்களால் கண்டு கேட்டு உணர முடியாது
விளக்கம் : பத்து நாதங்கள்
1. மணி
2. கடல்
3.யானை
4.இசை ஓசையை வளர்க்கும் புல்லாங்குழல்
5.மேகம்
6.நீலமணி போன்ற நிறமுடைய வண்டு
7.தும்பி
8.சங்கு
9.பேரிகை
10.யாழ்
மென்மையான இந்த பத்து வகை ஒலிகளும், தான் என்ற நினைவகன்று தன்னைத் தாழ்த்தி இறைவனை முன்னிலைப்படுத்தித் தியானம் செய்பவர்க்கு அன்றி, மற்றவர்களால் தம் மனத்தினுள் கேட்டுணர முடியாது.

அட்டமா சித்திகள்

தானே அணுவும் சகத்துத்தன் நோன்மையும்
மானாக் கனமும் பரகாயத் தேகமும்
தானாவதும் பரகாயஞ் சேர் தன்மையும்
ஆனாத உண்மையும் வியாபியும் ஆம் எட்டே.
அருஞ்சொற் பொருள் :
சகத்து = உலகத்தில்
மானா = அளவிடமுடியாத
வளை = சங்கு
பரகாயம் = பரந்த ஆகாயம் (இரண்டாம் அடியில்) / பிற வடிவில் (மூன்றாம் அடியில்)
விளக்கம் : அட்ட மா சித்திகள்:
1. தன்னை அணுவாகச் சுருக்கிக் கொள்ளும் அணிமா
2. மலையை விடப் பெரிய வடிவம் கொள்ளும் மகிமா
3. இலேசான பஞ்சைக் கூட அளவிட முடியாத கனமுடையதாகச் செய்யும் கரிமா
4. எத்தனை கனமுடைய பொருளையும் ஆகாயம் போல இலேசானதாக்கும் இலகிமா
5.வேண்டியதெல்லாம் விரும்பியவடி அடையச் செய்யும் பிராப்தி
6.தான் விரும்பிய பொருள்களைப் படைத்து விரும்பிய உருவத்தில் புகுந்து அவற்றை அனுபவிக்கும் பிராகாமியம்
7.உண்மை நிலையடையும் ஈசத்துவம்
8.எங்கும் வியாபித்து எல்லாவற்றையும் தன்னிடம் ஈர்க்கும் வசித்துவம்
இந்த அட்ட மகா சித்திகளும் யோக நிலையில் இறைவனைக் கண்டு தெளிவடைந்தவர்களுக்கு வாய்க்கும்.

This Post Has 2 Comments

  1. Anonymous

    வாழ்கவளமுடன் அய்யா. ஒவ்வொருபகுதியும்தெளிவாகவிளக்கியிருப்பதுஅற்புதம்.உங்களின்படைப்புகள்சிறப்பானவைகள்.திருமந்திரப்பாடல்தெரிந்ததுதான்என்றாலும்மீண்டும்அதன்பொருளோடுசேர்த்துபடிக்கும்போதுஉண்மையில்படிப்பவர்கள்அனைவருமேபாக்கியசாலிகள்தான்என்பதில்மாற்றுகருத்தேஇல்லைங்கய்யா
    நீங்களும் உங்கள்அன்புக்குடும்பமும் வாழ்கவளமுடன். சுகமேசூழ்க

    1. இமயவரம்பன்

      மிக்க நன்றி!

Leave a Reply