திருஞானசம்பந்தர்

சம்பந்தர் வரலாறு

திருஞானசம்பந்தர்

திருவரலாறும் அருட்பதிகங்களும்

திருஞானசம்பந்தர் திருவடிகளைத் தலைமேல் கொள்வோம்

வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.
- திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் (சேக்கிழார் - பெரிய புராணம்)

பொருள்:

வேதங்கள் காட்டும் வழிகளின்படி பின்பற்றப்படும் நெறிமுறைகள் பொலிந்து உயரவும், அவற்றுள் சிறப்புடையனவாக விளங்கும் சிவதருமங்கள் யாவும் ஆகம விதிகளின்படிக் குறைவின்றி செழிக்கவும், உயிர்கள் எல்லாம் பல்வேறு பிறவிகள் தரும் பக்குவத்திற்கேற்ப வழிவழியாகத் திருவருள் பெற்று ஆன்ம மேம்பாடு அடையவும், ‘அம்மே அப்பா’ என்று இறைவனைத் தாய் தந்தையாகக் மனத்தில் இருத்திக் கூப்பிட்டுத் தூயத் திருவாய் மலர்ந்து அழுதவரும், குளிர்ந்த வளமுடைய வயல்கள் சூழ்ந்த சீர்காழியில் பிறந்தவருமான திருஞானசம்பந்தரது மலர் போன்ற திருவடிகளைத் தலைமேல் கொண்டு வணங்கி, அவர் செய்த திருத்தொண்டுகளின் சிறப்பைப் போற்றத் தொடங்குவோம்.

திருஞானசம்பந்தர் – சிறு குறிப்பு
நாடுசோழ நாடு
பிறந்த ஊர்சீர்காழி
தந்தையார் பெயர்சிவபாத இருதயர்
தாயார் பெயர்பகவதி அம்மையார்
பாடிய திருமுறைகள்1-ஆம் 2-ஆம் 3-ஆம் திருமுறைகள்
முதலில் பாடிய பதிகம்தோடுடைய செவியன்
இறுதியில் பாடிய பதிகம்காதலாகிக் கசிந்து

திருஞானசம்பந்தர் வரலாறு மற்றும் வாழ்க்கைக் குறிப்பு

திருஞானசம்பந்தர் சோழநாட்டில் சீர்காழிப் பதியில், சிவபாத இருதயர்க்கும் பகவதி அம்மையார்க்கும் மகவாக அவதரித்தார்.

திருஞானசம்பந்தர்

உமையம்மை சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல்

(படங்களுக்கு நன்றி : சிவனருள் திரட்டு)

பிறந்து மூன்றாம் வருடத்திலேயே செம்புலமையினாலும் தெள்ளறிவாலும் ஒரு தெய்வீகக் களை அவர் முகத்தில் என்றும் பொலிந்தபடி இருந்தது. உமையம்மையாரால் ஞானப் பாலுண்டு திருவருள் பெற்றதன்பின் தந்தையார் சிவபாத இருதயர் உள்பட பலராலும் அவரது தெய்வீகத் தன்மையை உணர முடிந்தது. அத்தகைய தெய்வக் குழந்தையாகிய திருஞானசம்பந்தர், தமது குறுகிய வாழ்நாளில், பாரதத்தின் பல்வேறு சிவாலயங்களுக்குத் தலயாத்திரை செய்தார். அவரது மூன்றாவது தலயாத்திரைப் பயணம் தான் நிகழ்வுகள் மிக்கதும் அற்புதங்கள் பல நிறைந்ததுமாக அமைந்தது; சம்பந்தரின் ஒவ்வொரு திருச்செயலிலும் அவரது திருவருள் செம்மை ஓங்க, அன்பும் நீதியும் கருணையும் சுடர்விட்டு ஒளிர்ந்தது.

திருஞானசம்பந்தர்

‘பால் கொடுத்தது யார்?’ என்று வினவிய தந்தையாருக்கு உமையம்மையுடன் இடப வாகனத்தில் தோன்றிய தோடுடைய செவியனைக் காட்டிப் பாட்டிசைத்தது

பாடிய பதிகம் : தோடுடைய செவியன்

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்       
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்        
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த         
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.      

பாடல் பொருள்

தோடுடைய செவியன் = தோடு அணிந்த திருக்காது உடையவன்
விடை ஏறி = எருதின் மீது ஏறி உலா வந்து
ஓர் தூ வெண் மதி சூடி = தூய வெள்ளை நிலவினை சடையில் சூடி
காடுடைய சுடலைப்பொடி பூசி = சுடுகாட்டில் உள்ள திருநீற்றைப் பூசிக்கொண்டு
என் உள்ளம் கவர் கள்வன் = எனது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கள்வன்.
ஏடுடைய = இதழ்களை உடைய
மலரான் = தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் பிரமன்
முனை நாள் = முன்னொரு நாள்
பணிந்து ஏத்த = வணங்கி வழிபட
அருள் செய்த = அந்த நான்முகனுக்குத் தன் இன்னருளை வழங்கிய
பீடுடைய = திருத்தலமாக பெருமையுடன் விளங்கும்
பிரமாபுரம் = திருப்பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீகாழியில்
மேவிய = எழுந்தருளியிருக்கும்
பெம்மான் = இறைவன்
இவன் அன்றே = இவன் அல்லவோ!

திருஞானசம்பந்தர்

திருக்கோலக்காவில் பொற்றாளம் பெறுதல்

பாடிய பதிகம் : மடையில் வாளை

மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீள்
உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ.     

திருக்கோலக்காவில் அந்த ஞானக் குழந்தைக்கு ஐந்தெழுத்துப் பொறிக்கப்பட்ட பொற்றாளம் (பொருள்: பொன் + தாளம் = தங்கத்தால் செய்யப்பட்ட தாளம்) அருளப் பட்டது. அவரது தாளத்தின் இனிமை பொங்கும் பாட்டிசையால் அடியார்கள் பலர் ஈர்க்கப்பட்டனர். அவரது திருவடி நிழல் மண்மேல் படவேண்டி, சம்பந்தரின் தாயாரின் ஊரான திருநனிப்பள்ளியில் அந்த ஊர் மக்களால் வரவேற்கப்பட்டார். அவ்வூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனைப் புகழ்ந்து பதிகம் பாடி அருளியவுடன் தமது அன்புத் தந்தையின் தோள்மீது அமர்ந்து தலயாத்திரையைத் தொடர்ந்தார். அவ்வாறு பயணித்து, திருக்கருகாவூர் உள்ளிட்ட ஏழு சிவாலயங்களைத் தரிசித்தவுடன் பிரமாபுரத்திற்குத் திரும்பினார். அங்கு திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்னும் சிறந்த யாழ் வித்தகர் சம்பந்தரைத் தரிசிப்பதற்காகக் காத்திருந்தார். பாணரை வரவேற்று உபசரித்த சம்பந்தர் திருநீலகண்டரின் யாழிசையில் மெய்மறந்து உருகினார். அதனால் தாம் எங்கு சென்றாலும் பாணரையும் நிழல் போலக் கூட அழைத்துச் சென்று தமது இன்றமிழ்ப் பாடல்களுக்கு இன்னிசை அமைக்கச் செய்தார்.

சிதம்பரத்து இறைவனைத் தரிசிக்கும் ஆவலுடன், பெருந்திரளாக அடியார்கள் தொடர, தமது இரண்டாம் தலயாத்திரையை மேற்கொண்டார். அப்போது திருநீலகண்டரின் விண்ணப்பத்தின் படி, பாணரின் சிற்றூரான திரு எருக்கத்தம்புலியூருக்கு எழுந்தருளியிருந்து அங்குக் கோயில் கொண்ட சிவபெருமானைப் போற்றிப் பதிகம் பாடினார். பின்னர் திருமுதுகுன்றம், திருநெல்வேலி போன்ற திருத்தலங்களைத் தரிசித்துவிட்டுக் கடைசியில் திருவரத்துறை என்னும் திருத்தலத்திற்குச் சென்றிருக்கும்போது இறைவன் அருளால் முத்துப்பல்லக்கும், முத்துச் சாமரமும் அவ்வூர் அந்தணர்களிடம் அன்புப் பரிசாகப் பெற்றார். அந்த நாள் முதற்கொண்டு திருஞானசம்பந்தரின் யாத்திரைகள் அடியார்கள் புடைசூழ அந்த முத்துப் பல்லக்கிலேயே மேற்கொள்ளப்பட்டது. இது அவரது அன்புத் தந்தையார் சிவபாத இருதயருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

பல்லக்கைப் பெற்ற போது பாடிய பதிகம் : எந்தை ஈசன் எம்பெருமான்

எந்தை யீசனெம் பெருமான் ஏறமர் கடவுளென் றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லாற் சென்றுகை கூடுவ தன்றால்
கந்த மாமல ருந்திக் கடும்புன னிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.

திருநெல்வெண்ணை, திருப்பழவூர், விசயமங்கை, திருபுறம்பயம் ஆகிய தலங்களையெல்லாம் தரிசித்து விட்டு, சண்டேசுர நாயனாரின் பிறந்த ஊரான சேய்ஞலூர் சென்றடைந்தார் திருஞானசம்பந்தர். சண்டேசுரருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம், அவ்வூரை அடைந்ததும், பல்லக்கினை விட்டிறங்கி கோவிலை நோக்கி நடந்து சென்று இறைவனை வழிபட்டார் நம் ஆளுடைய பிள்ளை. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிப் பதிகம் பல பாடி, இறுதியில் திருக்கருப்பறியலூரில் நிறைவுற்றது சம்பந்தரின் இரண்டாம் தலயாத்திரை. பிரமாபுரத்தை அடைந்ததும் தம் பெற்றோர்கள் முன்னடத்த அவரது பூணூல் வைபவம் இனிதே நடைபெற்றது. சம்பந்தர் இந்த வைபவம் நிறைவுற்றவுடன் ஐந்தெழுத்தின் மகிமையைப் போற்றிப் பதிகம் பாடினார். அப்போது அருள்தவச்செல்வரான திருநாவுக்கரசர் பிரமாபுரத்திற்கு எழுந்தருளியுள்ளதை அறிந்து சம்பந்தர் அவரைச் சந்தித்தார். அப்போது நாவரசரை ‘அப்பா’ என்று நாவார அழைத்துப் போற்றினார் திருஞானசம்பந்தர். அது முதற்கொண்டு ‘அப்பர்’ என்னும் திருநாமம் திருநாவுக்கரசருக்கு வழங்கலாயிற்று. சிறிது காலம் சென்றபின், திருக்கோலக்காவில் சம்பந்தரிடம் விடைபெற்றுக் கொண்ட அப்பர் தம் யாத்திரையைத் தொடர்ந்தார்.

திருஞானசம்பந்தர்

திருப்பாச்சிலாச்சிரமத்தில் கொல்லி மழவன் மகள் உற்ற ‘முயலகன்’ என்னும் நோயைப் பதிகம் பாடிப் போக்குதல்

பாடிய பதிகம் : துணிவளர் திங்கள்

துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச்
   சுடர்ச்சடை சுற்றிமு டித்துப்
பணிவளர் கொள்கையர் பாரிடஞ் சூழ
   வாரிட மும்பலி தேர்வர்
அணிவளர் கோலமெ லாஞ்செய்து பாச்சி
   லாச்சிரா மத்துறை கின்ற
மணிவளர் கண்டரோ மங்கையை வாட
   மயல்செய்வ தோஇவர் மாண்பே. 

இதன் பின், அற்புத அதிசயங்கள் நிறைந்த சம்பந்தரின் மூன்றாவது தல யாத்திரை தொடங்கியது. காவிரியின் வடகரையில் அமைந்த தலங்களுக்கெல்லாம் சென்று பதிகம் பாடி அருளிய சம்பந்தர், திருப்பாச்சிலாச்சிரமம் என்னும் இடத்தில் கொல்லி மழவன் என்னும் அரசனின் செல்வ மகளை வாட்டிய ‘முயலகன்’ என்னும் கொடிய நோயைக் குணப்படுத்தினார். தமது அருள்யாத்திரையைத் தொடர்ந்த திருஞானசம்பந்தர், காவிரியைக் கடந்து அதன் தென்கரையில் அமைந்திருக்கும் கொங்கு நாட்டுத் திருத்தலங்களையெல்லாம் தரிசித்து வந்தார்.

திருக்கொடிமாடம் என்னும் இடத்தில் அவர் இருக்கும்போது, குளிர்ச்சுரத்தால் மொத்த கிராமமும் வருந்த, அந்த ஊர் மக்கள் திருஞானசம்பந்தரிடம் தங்களைக் காக்க வேண்டினர். அப்போது அவர் திருநீலகண்ட பதிகம் பாடி, இறையருள் பெருக, பிணிகளையெல்லாம் போக்கினார்.

குளிர்ச்சுரத்தால் அடியார்களும் பிறரும் வருந்துவதைக் கண்டு பாடிய பதிகம்

அவ்வினைக்கு இவ்வினை

அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 

சோழ நாட்டில் இருபத்தைந்து சிவாலயங்களைத் தரிசித்த பின்னர் திருஞானசம்பந்தர் பட்டீச்சுரத்தை நெருங்கும்போது வெயில் மிகுதியால் வாடிய அவரது பல்லக்குத்தூக்கிகளுக்கும் அவரைத் தொடர்ந்து வரும் மற்ற அன்பர்களுக்கும் அருள்பாலிக்கும் வண்ணம் சிவகணம் ஒன்று தோன்றி முத்துப் பந்தல் கொடுத்தது. பின்னர் திருவாவடுதுறையில் பிள்ளையார் சிலகாலம் தங்கியிருக்கும் போது, அவரது தந்தையார் யாகம் நடத்த பொருள் வேண்டி விண்ணப்பித்தார். தந்தையின் வேள்விக்காகப் பொருள் வேண்டிப் பாசுரம் பாடிய மகனின் பக்தியை மெச்சி இறைவனும் உலவாக்கிழி (குறைவற்ற பொற்கிழி) ஒன்றை அருளினார். அந்தப் பொற்கிழியை நன்றியுடன் பெற்றுக் கொண்ட சிவபாத இருதயர் தமது யாகங்களை இனிதே நடத்தினார்.

தந்தையார் யாகம் செய்வதற்கு உதவ இறைவனிடம் பொன்பொருள்வேண்டிப் பாடிய பதிகம்

இடரினுந் தளரினும்

இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
    இதுவோயெமை ஆளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.

திருத்தருமவரத்தில், திருஞானசம்பந்தர் பாடிய பாட்டுக்கு தகுந்த இசையமைக்க முடியாமல் வருந்திய யாழ்ப்பாணர் மனம் மிக வாடித் தமது யாழை முறிக்க முனைந்தார். அப்போது பாணரை அச்செயல் செய்யா வண்ணம் தடுத்தாட்கொண்ட சம்பந்தர், ‘இறைவன் அருளால் பாடப்பட்ட பாட்டுக்கு இசையமைப்பது எளிதன்று’ என்று அன்புடன் ஆறுதல் கூறிப் பாணரைத் தேற்றினார். பிரமிக்கவைக்கும் இந்த நிகழ்வுக்குப்பின் சாத்தமங்கையில் திருநீலநக்கரையும் திருச்செங்காட்டங்குடியில் சிறுத்தொண்டரையும் சந்தித்தார். திருமருகலில் அவர் தங்கி இருக்கும்போது, கோவில் மண்டபம் ஒன்றில் ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டு அங்கே சென்றார். அவளது காதலன் பாம்புக் கடியால் மரணமடைந்ததை அறிந்து அவள் மேல் பரிவுகொண்டு பதிகம் பாடினார். இறந்துபோயிருந்த அவள் காதலன் உயிர்பெற்று எழுந்தான். அவர்கள் இருவருக்கும் திருமணம் நடத்தி மகிழ்வுற்றார் சம்பந்தர். பின்னர் சிறுத்தொண்டரை மீண்டும் அவரது இல்லத்தில் சந்தித்தபின், முருகனாரின் அழைப்பை ஏற்றுத் திருப்புகலூர் சென்றார்.

திருஞானசம்பந்தர்

திருமருகலில் பாம்பு தீண்டி இறந்த வணிகன் உயிர்பெற்று எழப் பாடுதல்

பாடிய பதிகம் : சடையா எனுமால்

சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
விடையா யெனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே.

திருப்புகலூர் தலமே பேரடியார்களின் சந்திப்பால் பொலிவு பெற்றிருந்தது. அப்பர், திருநீலநக்கர், சிறுத்தொண்டர், திருஞானசம்பந்தர், முருகனார் உள்ளிட்ட பெரியோர்கள சில நாள்கள் ஒன்றாகத் தங்கி இருந்து இறையனுபத்தில் மூழ்கிக் களித்தனர். அந்த மகத்தான சந்திப்புக்குப்பின் அப்பரும் சம்பந்தரும் திருவாம்பூரில் மீண்டும் சந்தித்து, சோழன் செங்கணான் எழுப்பிய சிவாலயத்தை வழிபட்டனர். திருக்கடவூரில் இந்தத் திருவருட்செல்வர் இருவரும் குங்கலிய நாயனாரால் அவரது இல்லத்தில் வரவேற்கப்பட்டு உபசரிக்கப்பட்டனர்.

குங்கலியரிடம் விடைபெற்றுக் கொண்ட குரவர் இருவரும் திருவீழிமிழலையைச் சென்றடைந்தனர். அங்கே பஞ்சத்தால் வாடிய மக்களைக் காக்க வேண்டி இறைவனிடம் முறையிட்ட இவ்விரு அடியார்களின் விண்ணப்பத்தை ஏற்று அருளிய இறைவன், ஊரில் பஞ்சம் தீரும்வரை அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருநாளும் ஒரு பொற்காசு தரச்சொல்லி தம் பூதகணங்களுக்குப் பணித்தார். அடியவர் இருவரும் அந்தப் பொற்காசுகளைக் கொண்டு ஊர் மக்களின் பசிப்பிணியைப போக்கினர். சில நாள்களில் மழை பெய்து பஞ்சமும் ஒழிந்தது.

பஞ்சத்தால் வாடிய அடியார்களுக்கு படிக்காசு அருள வேண்டிப் பாடிய பதிகம்

வாசி தீரவே காசு நல்குவீர்

வாசி தீரவே, காசு நல்குவீர்    
மாசின் மிழலையீர், ஏச லில்லையே.  
இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்    
கறைகொள் காசினை, முறைமை நல்குமே. 

இந்த அதிசய நிகழ்வுக்குப் பின்னர், இருவரும் திருமறைக்காட்டுக்குச் சென்றடைந்தனர். வேத ஞானத்திற்குப் பேர்பெற்ற அவ்வூர் சில காலமாகத் தன் பழம்பெருமை குன்றியிருந்ததோடு மட்டுமல்லாமல் அவ்வூர் கோவில் கதவும் தாழிடப்பட்டிருந்ததை அறிந்து சிவத்தொண்டர் இருவரும் வேதனையுற்றார்கள். ஊர்மக்களின் வேண்டுகோளுக்கிணங்க பிற சமயத்தினருடன் வாதம் செய்து அவர்களை வென்றபின், பதிகம் பாடிக் கோவில் கதவைத் திறப்பித்தனர்.

திருமறைக்காட்டில் திருஞானசம்பந்தர் அப்பருடன் தங்கியிருந்த காலத்தில், பாண்டிமாதேவியார் மங்கையர்க்கரசியாரும் அவரது அமைச்சர் குலச்சிறையாரும் தத்தம் தூதுவரைச் சம்பந்தரின்பால் அனுப்பி, பாண்டிய நாட்டில் சமண மதத்தின் வளர்ச்சியைத் தடுத்தருளுமாறு விண்ணப்பித்தனர். அப்போது அப்பர் பெருமான், தாம் சமணர்களிடன் மிகுந்த துன்பத்திற்கு முன்பு ஆளானதை நினைவு படுத்தி, சம்பந்தரைப் பாண்டிய நாட்டிற்கு அப்போது செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினார். மேலும், நாளும் கோளும் நலமாக இல்லாத அந்தச் சமயத்தில் சமணர்களுடன் வாதிட்டால் வெற்றி கிட்டுதல் அரிது என்றும் அவர் கருதினார். ஆனால், சமணர்களைத் தடுத்து சைவ நெறியை நிலைநாட்ட விழைந்த சமபந்தரை, அனுபவ ஞானமும் சோதிட ஞானமும் நிறைந்த அப்பர் தமது அன்புரைகளால் தடுக்க முடியவில்லை. தம்முடன் துணை வர விழைந்த அப்பரின் பேரன்பில் நெகிழ்ந்த சம்பந்தர், இறைவன் துணை இருக்கத் தமக்கு ஒன்றும் தீங்கு நேராது என்று சொல்லி நாவுக்கரசிடம் விடைபெற்றுக்கொண்டு மதுரையை நோக்கிப் பயணத்தைத் தொடங்கினார்.

அடியார்களை நாளும் கோளும் என்றும் வருத்தாது என்று பாடிய பதிகம்

கோளறு பதிகம்

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
    மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல ணிந்தென்
    உளமேபு குந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
    சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
    அடியார வர்க்கு மிகவே.

மதுரையை நெருங்கும்போது ‘திருவாலவாய் இது’ என்று அடியார்கள் சுட்டிக்காட்டக் கண்டறிந்த சம்பந்தர், கைமலர் குவித்துப் பேரன்பால் பாடிய பதிகம்

திருஆலவாய் பதிகம்

மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை
     வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
     பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநா யகன்நால்
     வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடு மமர்ந்த
     ஆலவா யாவது மிதுவே

மதுரைக்கு வருகை தந்த திருஞானசம்பந்தருக்கு பாண்டிமாதேவியும் அமைச்சர் குலச்சிறையாரும் மகத்தான வரவேற்பளித்தனர். சம்பந்தரின் வருகையால் கலக்கமடைந்த சமணர்கள், நாயனாரைத் தடுத்துச் சைவநெறியை மதுரையில் பரப்பவிடாமல் செய்யுமாறு அரசனைத் தூண்டினர்.
அப்போது அப்பர் கவலைப்பட்டதுபோல் சம்பந்தர் தங்கியிருந்த மண்டபம் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. சம்பந்தர் ‘செய்யனே திரு ஆலவாய்’ என்று தொடங்கும் பதிகம் பாடியதால், மண்டபத்தைப் பற்றிய தீ நீங்கியது; ஆனால், அந்த தீ பாண்டிய மன்னனுக்கு சூளை நோயாக மாறி அவன் உடலினைக் கொதிக்கச் செய்தது.

திருஞானசம்பந்தர் தங்கியிருந்த மண்டபம் தீப்பற்றி எரிந்தபோது பாடிய பதிகம்

செய்யனே திருஆலவாய்

செய்ய னேதிரு ஆலவாய் மேவிய
ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப்
பொய்ய ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
பைய வேசென்று பாண்டியற் காகவே.

அப்போது ‘மந்திர மாவது நீறு’ என்னும் பதிகம் பாடி சம்பந்தர் அரசனின் நோயைக் குணப்படுத்தினார். பின்னர் சமணர்களுடன் நடத்திய அனல் வாதம், புனல் வாதம் ஆகிய வாதப்போர்களிலும் திருஞானசம்பந்தர் வென்றார். பாண்டிய மன்னன் கூன் பாண்டியனும் தன் நோய் நீங்கி மீண்டும் சிவபக்தனான்.

திருஞானசம்பந்தர்

மதுரையில் சமணரால் தீர்க்கமுடியாத பாண்டியனின் சூளை நோயை சம்பந்தர் பதிகம் பாடித் தீர்த்து வைத்தல்

பாடிய பதிகம் : மந்திரமாவது நீறு

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே.

திருஞானசம்பந்தர் புனல் வாதத்தில் சமணர்களை வென்ற போது பாடிய பதிகம்

வாழ்க அந்தணர்

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே. 

பாண்டிய நாட்டில் சைவ நெறியை நிலைநாட்டியபின்னர், இராமேச்சுரம், திருக்குற்றாலம், திருநெல்வேலி முதலிய தலங்களில் பதிகம் பாடித் தொழுதார் சம்பந்தர். சோழ நாட்டுக்குத் திரும்பிச் செல்லும் வழியில், குலச்சிறையாரின் அழைப்புக்கிணங்கி அவரது சொந்த ஊரான மணல்மேல்குடியில் சில காலம் தங்கியிருந்தார். சோழ நாட்டு எல்லையை அடைந்தபின் போதிமங்கை என்னுமிடத்தில் புத்தநந்தி என்னும் தலைமைப் பிக்குவுடன் இடியும் மின்னலும் சூழ அற்புதம் நடத்தி வாதத்தில் வெற்றி பெற்றார். பின்னர் திருப்பூந்துருத்தி என்னும் இடத்தில் அப்பர் பெருமானைச் சந்தித்து அவருடன் சில காலம் தங்கியிருந்தார். அப்பரிடம் விடைபெற்றுக்கொண்ட சம்பந்தர் சீர்காழியை வந்தடைந்தார்.

சீர்காழியில் சில காலம் கழித்தபின், அப்பரால் பதிகம் பாடப்பட்ட தலங்களைத் தரிசிக்க விரும்பிய சம்பந்தரின் நான்காம் தலயாத்திரை தொடங்கியது. சிதம்பரத்தில் தொடங்கி வடக்கு நோக்கிப் பயணம் தொடர்ந்த திருஞானசம்பந்தர், திருவண்ணாமலையை அடைந்து பதிகம் பாடி உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவனைக் கைதொழுதார். பின்னர் திருவோத்தூரில் பெருந்திரளாக வந்து எதிர்த்து நின்ற சமணர்களையெல்லாம் வென்று வெற்றுப் பனைமரத்தில் காய்கள் தோன்றச்செய்து அற்புதம் நடத்தினார். பின்னர் கண்ணப்ப நாயனார் வழிபட்ட திருக்காளத்திக் குன்றின் மேல் ஏறி திருக்கண்ணப்பரைப் புகழ்ந்து பாடல் மழை பொழிந்தார். திருவொற்றியூரில் சிலகாலம் தங்கிய பின்னர், திருமயிலை சென்றடைந்தார். அப்போது அவரை வரவேற்று உபசரித்த சிவநேசர் என்னும் வணிகரின் மகள் பூம்பாவை இறந்ததை அறிந்து, பதிகம் பாடி அவளை உயிர்பெற்றெழச் செய்தார்.

திருஞானசம்பந்தர்

இறந்த பூம்பாவை உயிர்பெற்று எழப் பாடுதல்

பாடிய பதிகம் : மட்டிட்ட புன்னை

மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.

அந்த அதிசய நிகழ்வுக்குப் பின், சிதம்பரத்தில் சில காலம் தங்கியிருந்து இறைவனை வாழ்த்தி அனுதினமும் பதிகம் பாடி மகிழ்ந்தார். தமது அழைப்பை ஏற்று சீர்காழிக்கு வருகை தந்த சம்பந்தருக்கு மணமுடித்து வைக்க அவரது தந்தையார் சிவபாத இருதயர் ஆசைப்பட்டார். தந்தையின் விருப்பப்படி மணம் செய்து கொள்ள சம்மதித்த திருஞானசம்பந்தருக்கும் திருநல்லூர் நம்பியாண்டார் நம்பியின் திருமகளாருக்கும் திருமணம் நடைபெற்றபோது, மணமக்களோடு கூடியிருந்த அனைவரும் இறைவனின் அருள் ஜோதியில் கலந்து மறைந்தனர்.

திருஞானசம்பந்தர்

திருஞானசம்பந்தர் திருமணக்கோலத்தில் காணப்படுதல்

பாடிய பதிகம் : கல்லூர்ப் பெருமணம்

கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில
சொல்லூர்ப் பெருமணம் சூடல ரேதொண்டர்
நல்லூர்ப் பெருமண மேயநம் பானே. 

‘காதலியும் நீவிரும் திருமணம் காணவந்தோர் அனைவரும் நம்பால் சோதியில் கலமின்’ என்று ஒலி கேட்டபோது பாடிய பதிகம்

காதலாகிக் கசிந்து

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.

திருஞானசம்பந்தரின் பெயர்கள்

சம்பந்தர் தாம் இயற்றிய பதிகங்களில், சம்பந்தன், ஞான சம்பந்தன், ஞானன், திருஞான சம்பந்தன், பந்தன் – என்னும் பெயர்களால் தம்மைக் குறித்துள்ளார். அவரது அறிவு, குணம், தமிழ்ப்பற்று முதலிய காரணங்களால் வந்துள்ள அவர் பெயர்களுள் சில : – அணிகொள் சம்பந்தன், அந்தமில் ஞான சம்பந்தன், அழகார் சம்பந்தன், இசைஞான சம்பந்தன், இணையில் சம்பந்தன், கலைஞான சம்பந்தன், காழி ஞான சம்பந்தன், சந்தங்கொள் சம்பந்தன், சிரபுரக்கோன், தமிழ் ஞான சம்பந்தன், தமிழ்விரகன், தோணிபுரத் தலைவன், நல்ல கேள்வி ஞானசம்பந்தன், நவஞான சம்பந்தன், நிகரிலி, பழுதில் ஞான சம்பந்தன், பிரமபுரத் தலைவன், புகலித் திருஞானசம்பந்தன், புறவ நன்னகர் மன்னன், பூந்தராய்ப் பந்தன், பொன்னி நாடன், மறைஞான சம்பந்தன், மெய்ஞ்ஞான சம்பந்தன், வெங்குரு நன்னகரான், வேதியர் அதிபதி.

This Post Has 2 Comments

    1. இமயவரம்பன்

      மிக்க நன்றி!🙏

Leave a Reply