நல்லதோர் வீணை செய்தே

நல்லதோர் வீணை செய்தே
நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே !
சொல்லடி சிவசக்தி – நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? 

விசையுறு பந்தினைப்போல் — உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன், — நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீச்சுடினும் — சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்; — இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?
– மகாகவி பாரதியார்
Nallathor Veenai Seithe – English Translation
Who would discard a lovely Veena,
having created it with exquisite beauty and artistry?
O Shiva-Shakti, like that Veena, You have created me with an enlightened mind
that is illuminating with intelligence.
Why won’t you bestow upon me the capability to make myself serviceable to the world
so that my intelligence can be applied for the benefit of humanity?
Without this ability to make myself useful, I would be a mere burden to mother earth.
Would you let my life be pointless? You wouldn’t, right?

A tossed ball rightly propelled by force reaches its intended target for sure.
Like that ball, I pray for a strong body that does what it was bidden to do
(and hence does not falter in performing the actions directed by the mind).
I pray for an unblemished mind that does not get attached to material pleasures,
And a spirit that is renewing itself afresh each day,
discarding the old thoughts and focussing on the here-now,
I pray for a devoted heart that sings Thy Praise even in the face of adversity,
A mind in meditation that is still, untroubled and calm
no matter what happens around, I pray for such a mind
O Shiva-Shakti, Is there anything that prevents You from answering my prayers
and granting the wishes I seek?
(There is nothing impossible for You because You are all-powerful and omnipotent.
So, without further delay grant me these wishes!)
நல்லதோர் வீணை செய்தே – கவிதை விளக்கம்

‘சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொல் புதிது’ என்று தம் கவிதையைப் பற்றிப் பெருமிதத்தோடு தோள் தட்டிக் கொள்ளும் சிங்கக் கவிஞன் பாரதி.  இறைவனிடம்  ‘பொன் வேண்டும், பொருள் வேண்டும், மண் வேண்டும் மனை வேண்டும்’ என்று பட்டியலிட்டு வேண்டிக் கொள்ளும் வேடிக்கை மனிதர் போல் இல்லாமல்,   உலகத்துக்குப் பயன்படுமாறு வாழ்வதற்குண்டான திறனை அருளக் கேட்கும் இந்தப் பாடல்கள் பாரதியின் பரந்த உள்ளத்தைக் காட்டுகின்றன.

‘தோத்திரப் பாடல்கள்’ என்னும் கவித்தொகுப்பில் ‘கேட்பன’ என்னும் தலைப்பில் அமைந்த இந்தப் பாடல்களில் இனிமை, பெருமிதம், கம்பீரம், ஆதங்கம், ரெளத்திரம், உரிமை, பக்தி, சாந்தம் போன்ற பல்வேறு உணர்வுகளின் வெளிப்பாட்டைப் பார்க்கலாம். இந்தகைய உணர்ச்சி ததும்பும் கவிதையை எழுத பாரதி தேர்ந்தெடுத்த பாடல் உருவம் – நொண்டிச் சிந்து. இந்த சிந்துப் பாக்கள் எளிய சொல்லாட்சியுடன் தனிச்சொல் பெற்று ஓசையின்பம் மிகுந்து இங்கு அமைந்துள்ளன.  ‘நல்லதோர் வீணை செய்தே’ – என்னும் இப்பாடல்களில் பாரதி என்னும் வீணை செய்யும் ஞான ஒலியை நம் செவிமதிழக் கேட்கலாம். இப்பாடல்களின் ஆழ்பொருளை இங்கு ஆய்ந்து நோக்குவோம்.

மங்கல வீணையை மண்ணில் எறிவதோ?

‘நல்லதோர் வீணை செய்தே’ – இதில் ‘நல்லது’ என்னும் சொல் வீணையின் மங்கலத் தன்மையைக் குறிக்கும்.

வேயுறு தோளி பங்கன் விடம் உண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
கோளறு பதிகம்

‘மிக நல்ல வீணை தடவி’ என்று சம்பந்தர் ‘கோளறு பதிகத்தில்’  மொழிந்தவாறு பாரதி இந்த மங்கலச் சொல்லோடு தம் பாடலைத் தொடங்குகிறார். 

எழுத்தில் மட்டுமின்றி இசையிலும் புலமை கொண்ட பாரதி ‘வீணை’ என்னும் அழகிய உருவகத்தை இங்குக் கையாண்டிருக்கிறார். கடுவெளிச் சித்தர் பாடிய ‘நந்தவனத்திலோர் ஆண்டி’  என்னும் பாடலில் வரும் தோண்டியோடு பாரதியின் வீணையை ஒப்பு நோக்கிப் பார்க்கலாம். 

நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி!
– கடுவெளிச் சித்தர்

நந்தவன ஆண்டி மிகவும் பிரயத்தனப்பட்டு பத்து மாதங்கள் பிரமனிடம் கெஞ்சிக் கேட்டுப் பெற்ற உடலாகிய குடத்தை நன்முறையில் பயன்படுத்தாமல் பழுதாக்கித் தொலைத்தான். அதுபோலவே,  ‘அருமையான வீணையைப் போல் பிறர் நலமுறப் பயன்படக்கூடியவனாக சுடர் மிகும் அறிவுடன் என்னைப் படைத்த நீ,  அந்த அறிவால் உலகுக்கு உதவிட ஆற்றலை அருளவில்லையென்றால் ஏது பயன்? ‘தேடிச் சோறு நிதம் தின்று கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்’  சாதாரண மனிதர்களைப் போல் என்னையும் உலகத்துக்கு பாரமாக வாழ்ந்து மடிந்திடச் செய்யவேண்டும் என்பது உனது எண்ணமோ?’  – என்று சிவசக்தியைப் பார்த்து உரிமையுடன் இருமுறை விளித்து உணர்ச்சியுடன் கேட்கிறார் பாரதி.

நல்லவனாக வாழ்ந்தால் மட்டும் போதாது; வல்லவனாகவும் வாழ வேண்டும் என்று சக்தியிடம் பாரதி கேட்பது சுய நலப்போக்கன்று; பொது நலப்பார்வையே ஆகும்.. ‘பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும்’  என்று விழையும் பாரதி தனது பேரறிவு பயன்படாமல் சராசரி வாழ்க்கை வாழ்ந்து, நல்லதோர் வீணை செய்தே அதைப் புழுதியில் எறிவதுபோல் வீணே மடிய மாட்டேன் என்று அறுதியிட்டுச் சொல்கிறார்.

கேட்பன

உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல்

‘உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்’
‘உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்’
– திருமந்திரம்

உள்ளமும் உடலும் இறைவன் உறையும் கோவில் என்றார் திருமூலர். அத்தகைய புனிதமான உடலை வளர்ப்பதால் உயிர் வளர்ந்து வாழ்வு செழிக்கும் என்பதில் ஐயமில்லை.  மனத்தில் உதிக்கும் எண்ணத்தை நொடிப்பொழுதில் நிறைவேற்றும் ஆற்றல் மிக்கதாக தேகம் இருந்துவிட்டால் உலகில் எதையும் சாதிக்கலாம்.  சிறந்த நோக்கம் கொண்ட உள்ளம் ஊருக்கு உதவும் ஒரு காரியத்தைச் செய்ய எத்தனிக்கும் போது உடல் ஒத்துழைக்காமல் மெலிந்து வாடினால், அத்தகைய நல்ல மனம் இருந்தும் உலகத்துக்குப் பயன் ஒன்றும் இல்லாமல் போய்விடும்.  அதனால் மனம் சொன்னபடி கேட்கும் திடமான தேகத்தையே பாரதி இங்கு சிவசக்தியிடம்  வேண்டுகிறார்.

விசையுறு பந்தினைப் போல்

வீசி எறியப்பட்ட பந்து எறிபவர் செலுத்தும் திசையை நோக்கி எறிந்த வேகத்தின்படியே பாய்ந்து செல்லுவது போல, மனம் கட்டளையிடும் செயலை மனத்தின் விருப்பம்போல முடிக்கும் உடம்பே வலிமையானது.  அத்தகைய உடல் திண்மையைப் பெரிதும் விழைந்த பாரதியார், தமது புதிய ஆத்திச்சூடியிலும்  ‘உடலினை உறுதி செய்’, ‘ஊண் மிக விரும்பு’, ‘ரூபம் செம்மை செய்’ என்பன போன்ற முத்தான பொன்மொழிகளை நமக்கு அளிக்கிறார். 

நசையறு மனம்

‘நசை’ என்னும் சொல் ‘ஆசை’ மற்றும் ‘பற்று’ என்று பொருள்பட இங்கு அமைந்துள்ளது.

மனம் சொன்னபடி கேட்கும் உடல் அமைந்துவிட்டால் மட்டும் போதாது; அந்த மனம் நிர்மலமான பற்றற்ற உயர்ந்த உள்ளமாக இருக்கவேண்டும். இல்லையென்றால் உடலைத் தப்பான வழிகளில் செலுத்தித் தனக்கும் பிறர்க்கும் கேடு விளைவிக்கக் கூடும். ‘பொன்னைப் பொருளைப் புகழை விரும்பிடும்’ கறைப்பட்ட மனத்தில் கவலை தங்கும்; அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் போன்ற தீய எண்ணங்கள் பெருகும். அத்தகைய கறை படிந்த மனம் வெளுக்க எந்த எளிய வழியும் இல்லாததால் சிவசக்தியிடம் சரண்புகுந்து நன்மனம் பெற வேண்டுகிறார்.

நசைபடிந்த மனத்தைப் பற்றி சிவவாக்கியர் என்னும் சித்தர் என்ன சொல்கிறார் என்று இங்கு பார்க்கலாம். மனத்தில் தோன்றும் ஆசை முதலிய அழுக்குகளை வெல்லுவதற்குத் துறவறம் தேவையில்லை என்றும், இந்த உலகத்தின் இன்பங்களை அனுபவித்துக் கொண்டே அவற்றின் மீது பற்றில்லாமல் இருக்க முடியும் என்றும் இந்தச் சித்தர் தமது திருநூலான சிவவாக்கியத்தில் சொல்கிறார்.

மனத்தகத்து அழுக்கு அறாத மவுனஞான யோகிகள்
வனத்தகத்து இருக்கினும் மனத்தகத்து அழுக்கு அறார்
– சிவவாக்கியர்

‘ஆசை முதலிய மாசுகளை நீக்காத யோகிகள், காட்டுக்குச் சென்று கடுந்தவம் செய்தாலும் அவர்களின் மனத்தில் இருக்கும் ஆசை நீங்காது. அதே சமயம், ஆசையிலிருந்து விடுபட்ட யோகிகள் உலக இன்பங்களை அனுபவித்துக் கொண்டு எங்கு வாழ்ந்தாலும், இறை நிலையை அடைவார்கள்’ என்று ஆன்ம வளர்ச்சிக்கு இடம் தேவையில்லை, கறையற்ற மனமே தேவை என்ற பொருள்படக் கூறுகிறார் சிவவாக்கியர். மேலும், ஆசைப்பட்ட பொருளை அடைய வேண்டுமானால் அந்தப் பொருள்மேல் உள்ள ஆசையை விடவேண்டும் என்றும், அப்படி ஆசையை விட்டுவிட்டால், அந்தப் பொருளை அடைவதற்குண்டான தடைகள் அகன்று அப்பொருள் தானாகவே நமக்குச் சீக்கிரம் கிட்டும் என்றும் கீழ்வரும் பாடல் வரிகள் மூலம் நமக்கு உணர்த்துகிறார் சிவவாக்கியர்.

வேணும் வேணும் என்று நீர் வீண் உழன்று தேடுவீர்
வேணும் என்று தேடினாலும் உள்ளதல்லது இல்லையே
வேணும் என்று தேடுகின்ற வேட்கையைத் துறந்தபின்
வேணும் என்ற அப்பொருள் விரைந்து காணல் ஆகுமே!!
சிவவாக்கியர்

‘கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள் கவர்ந்திட மாட்டாவோ’ என்று பராசக்தியைப் பார்த்துக் கேட்ட பாரதியும், வையத்திற்குப் பயனுற வாழ்ந்திடத் தடையாக இருக்கும் ஆசையைக் கொன்று வெற்றி பெற ‘நல்லதோர் வீணை செய்தே’ என்னும் இந்தப் பாட்டில் வரம் வேண்டுகிறார்.

நவமெனச் சுடர்தரும் உயிர்

‘நவம்’ என்றால் புதிது என்று பொருள்.

‘சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற் புதிது, சோதிமிக்க நவகவிதை’ என்று தம் கவிதையின் புதுமை உணர்வைப் பற்றிப் பெருமிதம் கொள்ளும் பாரதி, பழமையெனும் பிடியிலிருந்து விடுதலை பெறுவதை முக்கியமாகக் கருதினார்.

இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.
– பாரதி

நடந்ததை நினைத்து நெஞ்சம் பதைக்காமல், இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நினைத்துவிட்டாலே போதும்; எந்தக் கவலையும் நம்மை அணுகாது என்று நன்குணர்ந்தவர் பாரதி.   பாம்பு தனது பழந்தோலை விலக்கிப் புதுத்தோல் பெறுவது போல, எந்நாளும் தன்னைப் புதிப்பித்துக் கொள்ளும் இதயத்தைப் பெற வேண்டி இங்கு சிவசக்தியிடம் வேண்டுகிறார்.

சிவசக்தியைப் பாடும் நல்லகம்

உடல் தசையைத் தீப்பிழம்புகள் பற்றி வருத்தும் போதும் பராசக்தியிடம் பக்திப் பெருக்கெடுத்து ‘உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்’ என்று ஊனுருக அந்தாதி பாடிய அபிராமி பட்டரின் இறையன்பு பாரதியை மிகவும் நெகிழ்த்தியது. ‘தீக்குள் விரலை வைத்தாலும்’ தெய்வத்தைத் தீண்டும் பேரின்பம் பெற்று சக்தியின் அருளைப் பாடும் நல்ல மனம் வேண்டும் என்று பாரதி இங்கே வேண்டுகிறார்.

கல்லோடு பூட்டிக் கடலில் விடப்பட்ட போதும் கயிலைத் தலைவனைத் துதிக்கும் மனம் கொண்ட நாவுக்கரசரையும் இங்கு நினைத்துப் பார்க்கலாம்.

கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணை ஆவது நமச்சி வாயவே
– திருநாவுக்கரசர்

‘கல்லைத் துணையாகப் பூட்டிக் கடலில் என்னை விட்டுவிட்டாலும், நல்ல துணையாக இருந்து என்னைக் காப்பாற்றியது நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தே’ – என்று நெஞ்சுருகப் பாடுகிறார் நாவரசர். அவர் சமண மதத்திலிருந்து சைவ மதத்தைத் தழுவிய காலத்தில், சமண சமயத்தைச் சார்ந்திருந்த மகேந்திர வர்ம பல்லவனால் கல்லோடு பிணிக்கப்பட்டுக் கடலில் தள்ளப் பட்டார். அப்போது இறையருளால் கல் மிதந்து அப்பர் பெருமானைக் கரை சேர்த்தது என்பர் பெரியோர்.

சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்கி
– மாணிக்கவாசகர்

இறைவனை வணங்கவும் அவன் அருள் வேண்டும் என்று சிவ புராணத்தில் மாணிக்க வாசகர் சொன்னது போல, சிவசக்தியிடம் பக்தி பெருக சக்தியின் அருள் மிகவும் தேவை என்று பாரதியார் கருதினார்.

தாய்தடை என்றேன் பின்னர்த்
தாரமே தடைஎன்றேன் நான்
சேய்தடை என்றேன் இந்தச்
சிறுதடை எல்லாந் தீர்ந்தும்
தோய்தடைச் சிறியேன் இன்னுந்
துறந்திலேன் எனைத் தடுக்க
ஏய்தடை யாதோ எந்தாய்
என்செய்கேன் என்செய் கேனே.
– வள்ளலார்

வள்ளலார் என்று போற்றப்படும் இராமலிங்க அடிகள் சொல்வதுபோல், பொதுவாக நமக்கெல்லாம் கடவுளை நினைக்கப் பல தடைகள் வந்து கொண்டே இருக்கும். முதலில் தாய், பின்னர் தாரம், அப்புறம் பிள்ளைகள் என்று ஆயிரம் தடைகள் வந்து நம்மைத் திசைதிருப்பி இறைவனை வணங்க விடாமல் தடுக்கும். ‘உன்னை அடைந்திட எனக்குத்தான் ஆயிரம் தடைகள், என்னை அடைய உனக்கு ஏது தடை?’ என்று இறைவனிடம் முறையிடுகிறார் வள்ளலார்.

பாரதியும் இந்தத் தடைகளையெல்லாம் தடுத்துத் தம்மை ஆட்கொள்ள வேண்டுமென்று இறைவனை ‘நல்லதோர் வீணை செய்தே’ என்னும் இந்தப் பாட்டில் இறைஞ்சுகிறார்.

அசைவறு மதி

‘உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே’ என்று முழங்கிய பாரதி, வாழ்வில் இன்பம் துன்பம் என்று இவற்றில் எது வந்தாலும் சஞ்சலப் படாமல்,’நமக்கேன்’ என்று இருக்கும் மனத்தைப் பெற விழைகிறார்.  

காற்றுக்கு இலைகள் அசைகின்றன; மலர்கள் அசைகின்றன; கொடிகள் அசைகின்றன; மரங்கள் கூட அசைகின்றன; ஆனால் மலைகள் அசைவதில்லை. அசைவது பலவீனத்தைக் காட்டுகிறது; அசையாதது உறுதியைக் காட்டுகிறது.
– கண்ணதாசன் (அர்த்தமுள்ள இந்துமதம்)

கண்ணதாசன் சொல்வதுபோல், சலனமற்ற மெளன நிலையில் ‘சும்மா இருப்பதே சுகம்’ என்று இருந்தால் நிர்விகல்ப சமாதியில் நிலைக்கலாம். அத்தகைய நாடி அதிர்ச்சி அற்ற நன்னிலையில் மன நலமும் உடல் வளமும் பெருகும். ஜகதீச சந்திர வசு (Jagdish Chandra Bose) என்னும் பிரபல விஞ்ஞானி ‘மரணம் ஏன் ஏற்படுகிறாது’ என்பதற்கான காரணமாக அறிவியல் ரீதியில் கண்டறிந்த உண்மையும் அதுவே. ‘பாரதி அறுபத்தாறு’ என்னும் பாடல் தொகுதியில், ‘நாடி அதிர்ச்சியே மரணத்திற்குக் காரணம்’ என்று சந்திர வசு கண்டறிந்ததாகவும், அதனால் நாம் அனைவரும் கோபத்தைத் தவிர்த்து அசைவற்ற அமைதி நிலையில் இருந்தால் உலகில் மரணத்தையும் வெல்லலாம் என்றும் பாரதி கருத்துரைக்கிறார்.

ஜகதீச சந்த்ரவஸீ கூறு கின்றான்:
(ஞானானு பவத்திலிது முடிவாங் கண்டீர்)
“நாடியிலே அதிர்ச்சியினால் மரணம்” என்றான்.
கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி யுண்டாம்;
கொடுங் கோபம் பேரதிர்ச்சி; சிறியகோபம்
ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறிய தாகும்;
அச்சத்தால் நாடியெலா மவிந்து போகும்;
தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்;
கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்;
கோபத்தை வென்றிடலே பிறவற் றைத்தான்
கொல்வதற்கு வழியெனநான் குறித்திட் டேனே.
– பாரதியார் (பாரதி அறுபத்தாறு)

கடவுளை உரிமையோடு ‘நேரே இன்று தருவாய்’ என்னும் தொனியில் இயல்பாகக் கேட்பது இந்தப் பாடலின் தனிச்சிறப்பு.  ‘நான் கேட்பது பொன்னோ பொருளோ மண்ணோ மனையோ அல்ல,; இறவா வரமோ பிறவா வரமோ அல்ல; நான் கேட்பன உடல் வளமும் பற்றற்ற மனமும் புத்துயிரும் பக்தி நிறைந்த நல்லகமும் அசையா மதியும் தான். இவையெல்லாம் உன்னால் எளிதில் தரக்கூடிய வரங்களே. அதனால் காலம் தாமதிக்காமல் உடனே இவ்வரங்களைத் தா’ என்று கடவுளிடம் கேட்கும் துணிவும் தோழமையும் பாரதியிடம் தான் காண முடியும்.

அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி‘ என்னும் பாரதியின் சுயசரிதைக் கவிதையுடன் இந்தப் பாடலை ஒப்பு நோக்கலாம். ‘அறிவிலே தெளிவு’ பாட்டில் தெளிந்த அறிவையும், அன்பையும், மன ஆளுமையையும் தேடும் பாரதி, ‘நல்லதோர் வீணை செய்தே’ என்னும் இந்தப் பாட்டில் அந்த நற்பண்புகளை நன்முறையில் பயன்படுத்தும் வல்லமையை வேண்டுகிறார்.

மனிதனின் நிறைவாழ்வுக்கு வழிகாட்டும் இப்பாடல் கற்பவர் நெஞ்சில் ஆன்ம ஒளி பரப்பி வாழ்வின் உண்மையைக் காணச் செய்கிறது.  ‘நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற திருமூலரின் பிறர்நல நோக்கினைப் போல் , தனக்காக மட்டும் இல்லாமல் இந்த உலகம் பயன்பெறுவதற்காக இவ்வரங்களை யாசிக்கும் பாரதியின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்க எல்லாம் வல்ல அந்த சிவசக்தியிடம் வேண்டுவோம்.

தொடர்புடைய பதிவு

அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி

‘அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி’ என்று தொடங்கும் இந்தப் பாடல் பாரதியார் எழுதிய ‘சுயசரிதை‘ என்னும் சுவைமிகுந்த கவிதை நூலின் இறுதிப் பாட்டாகச் சிறப்புற அமைந்துள்ளது.  பாரதியின்  ‘பகவத் கீதை மொழிபெயர்ப்பு ‘ என்னும் அருமையான நூலின் சாரமாக இந்தப் பாடல் திகழ்கின்றது என்று சொன்னால் மிகையாகாது. கலங்காத அறிவும் மனத்துணிவும் கடல்போன்ற அன்பும் மனக்கட்டுப்பாடும் கடவுள் பக்தியும் பற்றற்ற செயல்திறனும்  பெற வேண்டி உருவமும் குணமும் இன்றி எங்கும் நிறைந்த பரம்பொருளைப் பிரார்த்திக்கின்றது இந்தப் பாடல்.   இப்பாடலின் பொருளை இங்கு சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மேலும் படிக்க

Leave a Reply