நளவெண்பா

‘நிடத பதி நளன் சீர் வெண்பாவால் பேரார் புகழேந்தி பேசினான்’ என்று புகழப்படும் நளவெண்பா, வடமொழியில் மகாபாரத்தில் ஆரணிய பருவத்தில் வரும் ‘நளோ பாக்கியானம்’ என்னும் கிளை நூலை முதல் நூலாகக் கொண்டு தமிழில் புகழேந்திப் புலவரால் எழுதப்பட்ட அருமையான நூல். இந்த நூல் அணியும் ஆழமும் நிறைந்த வெண்பாக்களால் கற்க கற்க பேரின்பம் தரவல்லது. இந்தகைய சிறந்த நூலைப் படைத்தமையால் இந்நூலாசிரியர் ‘வெண்பாவில் புகழேந்தி’ என்று போற்றப்படுகிறார். இந்தத் தேன்சுவைக் காவியத்தைப் பற்றியும் இந்நூலை எழுதிய புகழேந்திப் புலவரைப் பற்றியும் இந்தப் பதிவில் விரிவாக நாம் காண்போம். முதலில் நளவெண்பாவையும் புகழேந்திப் புலவரையும் இங்கு வாழ்த்துவோம்.

நளவெண்பா வாழ்த்துக் கவிதை

புகழேந்திப் புலவரின் கவிநயத்தையும் நளவெண்பாவின் நூல்நயத்தையும் போற்றி இந்த பாடல்களை இயற்றியுள்ளேன். இந்தப் பாடல்கள் கலிவிருத்தம் என்னும் இசை நிறைந்த பாவகையில் புனையப் பட்டவை.

 காதல் நெஞ்சம் கலந்ததைப் பாடிடும்
 சூதில் வெங்கலி சூழ்ச்சியைச் சாடிடும்
 நீதி என்றும் நிலைப்பதைக் கூறிடும்
 தீதில் சொல்லுயர் தேன்சுவைப் பாக்களே!
 வாழ்க கோநளன் வாழ்வின் சரித்திரம்
 வாழ்க வெந்துயர் வீழ்த்திடும் வாய்மையே
 வாழ்க அன்பின் வளம்சொலும் காவியம்
 வாழ்க மாக்கவி வான்புக ழேந்தியே!

— இமயவரம்பன்

புகழேந்திப் புலவர் வரலாறு

புகழேந்திப் புலவர் தொண்டை நாட்டிலுள்ள பொன்விளைந்த களத்தூரில் பிறந்தவர். இப்பொன் விளைந்த களத்தூர் செங்கல்பட்டூக்கு அண்மையில் இருக்கிறது. இவருடைய இயற்பெயர் இன்னதென்று தெரியாத காரணத்தாலும், இவர் புலமையில் புகழ் பெற்றமையாலும் அறிஞர்கள் இவரைப் ‘புகழேந்தி’ என்று அழைக்கின்றனர்.

கம்பரும் இவரும் சமகாலத்தவர்கள் என்று கூறுவர். இவர் இரண்டாம் குலோத்துங்கன் என்னும் சோழ மன்னன் ஆட்சிபுரிந்த பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்றும் ஆராய்ச்சியாளர்கள் உரைப்பர். இவர் வைணவ மதத்தைச் சார்ந்தவர் என்பது நளவெண்பாவில் இவர் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடல்கள் மூலம் புலனாகின்றது.

புகழேந்தியார், தென்மதுரையை ஆண்டு வந்த சண்பகமாறன் என்னும் பாண்டிய மன்னன் அவையில் தலைமைப் புலவராகத் திகழ்ந்தார் என்பர். பின்னர் பாண்டிய நாட்டுக்கு சோழமன்னன் சார்பில் விஜயம் செய்த ஒட்டக்கூத்தருடன் வாக்குபாதம் செய்து வெற்றிபெற்றார் என்றும், அதனால் மனம் வெகுண்ட ஒட்டகூத்தரால் சோழ நாட்டுச் சிறையில் புகழேந்தியார் அடைக்கப்பட்டார் என்றும், சோழ அரசியாரால் சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டார் என்றும் கூறுவர். அதன்பின் சந்திரன் சுவர்க்கி என்னும் மன்னன் ஆதரவினால் நளவெண்பாவை இயற்றினார் என்றும் அறிஞர்கள் சான்றுரைப்பர்.

நளவெண்பா கதைச் சுருக்கம்

நிடத நாட்டு மன்னாகிய நளன், அறநெறி தவறாமல் சிறந்த முறையில் ஆட்சி நடத்தி வந்தான். அவன் வேனில் காலத்தில் ஒருநாள் இளைப்பாறுவதற்கு ஒரு பூஞ்சோலைக்குச் சென்றான். அங்குள்ள ஒரு குளத்தில் அன்னப் பறவையொன்றைக் கண்டான். அந்த அன்னத்தின் அழகை வியந்து அதைக் கைப்பற்றினான். அஞ்சி வாடிய அந்தப் பறவையைக் கண்டு மனம் நெகிழ்ந்த மன்னன் அதைத் தன் கைப்பிடியிலிருந்து விடுவித்தான். பறந்து சென்ற அந்த அன்னம் திரும்பி வந்து நளனிடம் தமயந்தி என்னும் அழகிய மங்கையைப் பற்றிக் கூறி, அவன் மணம் புரிய ஏற்றவள் என்றும் சொல்லிற்று. அன்னம் கூறிய சொற்களால் தமயந்தியிடம் காதல் வயப்பட்ட நளன் அந்த அன்னத்தைத் தமயந்தியிடம் தூதாக அனுப்பினான். அது தமயந்தியிடம் சென்று அவளது காதலையும் அறிந்து நளனிடம் தெரிவித்தது.

பின் தமயந்தியின் தந்தையான விதர்ப்ப நாட்டரசன் வீமன் சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்தான். இந்திரன்,முதலிய தேவர்களும் நளன் உருவத்தில் மாறி அந்தச் சுயம்வர மண்டபத்தில் வீற்றிருந்தனர். மண்ணுலக மன்னர்கள் பலரும் கடலெனத் திரண்டு அங்கு வந்திருந்தனர். ஆயினும் தமயந்தி நளமன்னனுக்கே மாலை சூட்டி மணவாளனாகக் கொண்டாள்.

சுயம்வரத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த தேவர்கள் வழியில் கலியைக் கண்டனர்; அவனிடம் திருமண நிகழ்ச்சியைப் பற்றி உரைத்தனர். அதுகேட்ட பெருங்கோபம் கொண்ட கலி, தான் நளனைக் கீழ்மைப்படுத்த போவதாகவும், நளனையும் தமயந்தியையும் பிரித்துவிடப் போவதாகவும் சபதம் செய்தான். சில ஆண்டுகள் கழிந்தன. பதத்தை நிறைவேற்ற சரியான காலத்தை எதிர் நோக்கியிருந்த கலி, புட்கரன் என்னும் மன்னனை நளனுடன் சூதாட அனுப்பினான். நளன் சூதாடி அனைத்து செல்வத்தையும் இழந்தான். பின்னர் தன் மகன்கள் இருவரையும் தன் மாமன் வீமனிடம் அனுப்பிவிட்டுத் தன் மனைவி தமயந்தியுடன் காட்டில் வசித்துவந்தான்.

ஒரு நாள் காட்டில் நள்ளிரவு நேரத்தில் ஒரு பாழடைந்த மண்டபத்தில் நளனும் தமயந்தியும் உறங்கினர். அப்போது விழித்தெழுந்த நளன் கலியின் வலிமையினால் அந்தக் காட்டில் தமயந்தியைத் தன்னந்தனியாக விட்டுவிட்டு நீங்கினான். உறக்கம் நீங்கி எழுந்த தமயந்தி நளனைக் காணாமல் பதறி, வணிகன் ஒருவனின் துணையுடன் விதர்ப்ப நாட்டுக்குச் சென்று தன் தந்தை வீமனிடம் நளனைத் தேடிக் கண்டுபிடிக்கும்படி வேண்டினாள். அதே நேரத்தில், அவளைப் பிரிந்து சென்ற நளன், கார்க்கோடகன் என்னும் பாம்பைக் காட்டுத்தீயிலிருந்து காப்பாற்றும்போது அந்தப் பாம்பினால் கடிபட்டு மேனி கறுத்தான். தன் பழைய உருவத்தை மீண்டும் பெற நினைத்தால் உடுத்துக்கொள்ளும்படி அந்தப் பாம்பு இரண்டு ஆடைகளை நளனுக்குக் கொடுத்தது. அந்த ஆடைகளைப் பெற்றுக்கொண்ட நளன், அயோத்தி நகர் சென்றான். அந்த நாட்டு மன்னன் இருதுபன்னனிடம் வேலைக்குச் சேர்ந்து சமையல்காரனாகவும் தேரோட்டியாகவும் வாகுகன் என்னும் பெயரில் பணிபுரிந்து வந்தான்.

வீமனால் நளனைத் தேடுவதற்காக நியமிக்கப்பட்ட அந்தணன் ஒருவன், அயோத்தியில் நளன் இருப்பதை எவ்வாறோ அறிந்து கொண்டுவந்து தமயந்தியிடம் தெரிவித்தான். தமயந்திக்கு இரண்டாம் சுயம்வரம் நிகழ்வதாக, அவள் சொற்படி, அந்த அந்தணன் இருதுபன்னனுக்கு மணவோலை கொடுத்து அழைப்பு விடுத்தான். இருதுபன்னனும், வாகுகன் என்னும் பெயரில் இருந்த நளன் தேரை ஓட்ட, வீமனின் தலை நகரமான குண்டினபுரத்தை அடைந்தான்.

இந்த இருவரும் தேரில் வருவதைக் கண்ட தமயந்தி, தேரோட்டி உண்மையில் நளன் தானா என்பதைக் கண்டறிய தன் மகன்களை வாகுகனிடம் அனுப்பித் தோழியின் மூலம் நிகழ்ந்ததை அறிந்து தேரோட்டி நளனே என்பதைத் தெளிந்தாள். தன் தந்தையுடன் வாகுகனிடம் சென்று அவனுடைய உண்மையான உருவத்தைக் காட்டும்படிக் கேட்டுக் கொண்டாள். வாகுகன் உருவம் மாறி நள மன்னனாகத் தோண்றினான்.

அதன்பின்னர் நளமன்னன் தன் மனைவி மக்களுடன் தன் நாடான நிடத நாட்டுக்குச் சென்று, புட்கரனுடன் மறுபடியும் சூதாடி வெற்றிபெற்று, தன் நாடு நகரமெல்லாம் மீண்டும் கைப்பற்றி, முடிசூடி, மன்னர் மன்னனாக நல்லாட்சி செய்து இனிது வாழ்ந்தான்.

Leave a Reply