நலம் தரும் நூலகம்

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை அற்று. – திருக்குறள்

பொய்யாமொழிப் புலவரின் இந்த வாக்குப்படி, நூல்கள் பல கற்று நுண்ணறிவு பெறாதவர்களின் வடிவ அழகில் சிறப்பொன்றும் இல்லை. அத்தகைய நுண்ணறிவை வளர்க்கும் நூலகங்களின் நற்பயனைச் சொல்லும் என் சந்தத் தமிழ்ப் பாடல்கள் இங்கே!

குறிப்பு: இந்தப் பாடல்கள் சந்த விருத்தம் (எழுசீர் சுகந்தி விருத்தம்) என்னும் பாவகையைச் சார்ந்தது என்பது நோக்கத் தக்கது.

 காலங்கள் கடந்தநுண் கலைகள்காட்டும் நூலகம்
 பாலமாகி பழமையோடு புதுமைசேர்க்கும் நூலகம்
 வேலைவாய்க்கும் கல்விகற்க வெற்றிகாட்டும் நூலகம்
 சாலையெங்கும் சபைகளெங்கும் தமிழ்முழக்கும் நூலகம்!

 அறமுணர்த்தும் ஞானநூல்கள் அறியவைக்கும் நூலகம்
 மறமுணர்த்தும் வீரர்வாழ்வின் மாட்சிசொல்லும் நூலகம்
 திறமைசேர செயல்சிறக்க சிந்தைதூண்டும் நூலகம்
 அறிவிலோங்கி ஆற்றலும் அடையவைக்கும் நூலகம்!

 காவியங்கள் பேசும்நற் கதைகள்சொல்லும் நூலகம்
 ஓவியங்கள் மூலம்வாழ்வின் உண்மைசொல்லும் நூலகம்
 கோவிலாகிக் கல்வியில் குறைகள்தீர்க்கும் நூலகம்
 யாவருக்கும் நூலகம் இனிக்கும்நன்மை காட்டுமே!

Leave a Reply