ஆரமுதாம் தமிழுக்கு அருந்தொண்டாற்றியவர்களில் ஆழ்வார்கள் தனிப்பெருமை வாய்ந்தவர்கள். நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் பாடல் திரட்டு ஆழ்வார்களின் நாவன்மையை நமக்கெல்லாம் பறைசாற்றும்.

தேனினும் இனிக்கும் அவர்களுடைய பாடல்கள் ஆழ்ந்த பொருள் பொதிந்த அருமணிகளாகவும் சுடர்விட்டு ஒளிர்ந்தன. ஆழ்வார்களின் பிரபந்தம் ஆழ்துயரைப் போக்கும் அருமருந்து என்று சொன்னால் மிகையாகாது. அத்தகைய சிறப்புடைய பிரபந்தம் என்னும் பேரிலக்கியத்தைப் படைத்த பன்னிரு ஆழ்வார்கள் பெருமையை போற்றி நான் எழுதிய வெண்பாக்கள் இவை.

 

 

 சந்தம் மிகுந்த தமிழ்மறைநா லாயிரமும்
 தந்த தனிப்பெரியோர் தம்பெருமை - சிந்தையுறச்
 சொல்லத் துணிந்துத் தொடுக்கின்றேன் சொல்மாலை
 வெல்லும்சீர் வெண்பா விரித்து.

 நம்மாழ்வார்
 ஆசிரியம் அந்தாதி அன்பார் திருவிருத்தம்
 மாசறியா நற்றிரு வாய்மொழியும் -பாசுரமாய்
 ஞானத் தமிழ்ப்பாட்டில் நல்கினான் மாறனெனும்
 மோனத் தவம்செய் முனி.

 மதுரகவியார்
 செவிக்கினிய பாடல் தெளிவுறவே பாடிப்
 புவிக்கருளி நன்மை புரிந்தார் - அவியாத
 ஞானஞ்சேர் மாறனடி நாடும் மதுரகவி
 வானத்தார் சூடும் மணி.

 ஆண்டாள்
 வையம் விழிக்க மணிவிளக்காம் நற்பாவை
 உய்ய உலகுக் குவந்தளித்தாள் - பொய்யற்ற
 காதலால் நெஞ்சம் கசிந்துருக வைத்திடுமே
 கோதை கொடுத்தத் தமிழ்.
 கண்ணன் புகழைக் கனிச்சுவையோ(டு) ஓதுகின்ற
 வண்ணக் கிளியை வணங்குவாள் - வெண்சங்கை
 வேண்டுவாள், பூங்குயிலைத் தூதிடுவாள், வெல்லுதமிழ்
 ஆண்டிடுவாள் அன்பின் அணங்கு.

 பெரியாழ்வார்
 மாலிருஞ் சோலை மலைக்காட்டின்  பேரழகும்
 கோலக் குழலோசைப் பாட்டழகும் - மாலழகும்
 பிள்ளைத் தமிழ்மணக்கப் பாடும்  பெரியாழ்வார்
 உள்ளம் உருக்கும் கவி.
 கண்ணன் குழல்வாராய் காக்கையே!  கண்ணனொடு
 வெண்ணிலவே வந்து விளையாடாய்! -  கண்ணே(று)
 ஒழிந்திடவே பல்லாண்(டு) உரைகிளியே! என்றார்
 பழந்தமிழ்தேர் பட்டர் பிரான்.

 குலசேகர ஆழ்வார்
 படியாய்க் கிடக்கும் பணிவுடையான், வெற்றி
 முடியாளும் சேரர் முதல்வன் - வடிவார்ந்த
 பொற்கொன்றைச் சூடும் புகழ்க்குல சேகரன்றன்
 சொற்கேட்டால் ஓடும் துயர்.

 திருமங்கையார்
 வாடி வருந்தி மனமுருகிச்  செஞ்சொல்லால்
 பாடிப் பலகவிகள் பண்ணெடுத்தான் - நாடும்
 மெலியோர் இடர்க்கெடுக்க வெற்றிவாள்  ஏந்தும்
 கலியன் கவியே கவி!

 திருமழிசையார்
 மானிடர் தம்மைத் தொழமறுத்து  மாநகரைத்
 தானகல நேரத் தளராதார் - தேனொழுகும்
 சந்த விருத்தமும்  வெண்பாவும் தந்தருள
 வந்தார் மழிசை மகான்.

 தொண்டரடிப்பொடியார்
 திருமாலை என்னும் சிறப்புடைநன் நூலில்
 பொருளார்ந்த  பாக்கள் பொழிந்தார் - அருளார்ந்த
 சொல்லிற் சிறந்திடும் தொண்டர்  அடிப்பொடியார்
 நல்லோர்க்கு ஞானச் சுடர்.
 ஞானக் கலைதேர்ந்த நான்குமறை  வித்தகரும்
 ஈனர்களே அன்பர்க் இடர்க்கொடுத்தால் -  ஊனமில்
 அன்பே இறையென்னும் தொண்டர்  அடிப்பொடியைப்
 பின்பற்றி வாழ்ந்தால் வளம்.

 திருப்பாணாழ்வார்
 குலத்தாழ்ச்சி சொல்லும் கொடியவரும்  மாறித்
 தலைதாழ்த்தி ஏத்தும் தலைவர் -  கலைவாய்ந்த
 யாழொலிக்கப் பாடும் இசைப்பாணர்  பாடற்கேட்டு
 ஏழுலகும் இன்பம் பெறும்.

 முதலாழ்வார் மூவர் - பொய்கைமுனி,  பூதத்தார், பேயாழ்வார்
 பாட்டுக் குரிய பழையவர் முப்பெரியோர்
 காட்டும் நெறியறிவுக் கண்திறக்கும் - வாட்டும்
 இருட்போக்கி ஓட்டிடும் ஈடில் இயற்பா
 திருக்காட்டும் தீபச் சுடர்.

 உடற்குடிசை தன்னில் ஒளியேற்றிச் சாந்தம்
 படர இமைக்காமல் பார்த்தால் - இடரறுமே!
 பொய்கையார் சொல்லும் பொருள்பொதிந்த இவ்வுண்மை
 பொய்யெரிக்கும் தீயின் பொறி.

 கல்லும் கவிசொல்லும் கண்கவரும் காட்சிமிகும்
 மல்லைப் பதியுதித்த மாணிக்கம் - நல்லன்பால்
 சோதி விளக்கேற்றித் தூயகவி தான்படைக்கும்
 பூதத்தார் என்பேன் புகழ்ந்து.

 அனைத்தறமும் கைவிட்டே அன்பொன்றே பற்றி,
 நினைப்பை நெறிப்படுத்தி நின்றால் - தனித்திலங்கும்
 நற்பொருளைக் காணலாம் நன்னெஞ்சே, பேயாழ்வார்
 சொற்பொருளே உற்றத் துணை.

ஆங்கில மொழியாக்கம்

Leave a Reply