பிரம்மம் என்றால் என்ன

பிரம்மம் என்றால் என்ன

பிரம்மம் என்றால் என்ன

பிரம்மம் என்றால் என்ன? அது எத்தன்மையது? அதன் பேரும் உருவமும் யாவை? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்வது போன்று அமைந்த பாரதியின் இந்தப் பாடலின் ஆழ்பொருளை நாம் இங்கு ஆராய்வோம்.

ஓமெனப் பெரியோர்கள் — என்றும்
    ஓதுவ தாய், வினை மோதுவ தாய்,
தீமைகள் மாய்ப்பது வாய், — துயர்
    தேய்ப்பது வாய், நலம் வாய்ப்பது வாய்,
நாமமும் உருவும் அற்றே — மனம்
    நாடரி தாய்ப்புந்தி தேடரி தாய்,
ஆமெனும் பொருளனைத் தாய், — வெறும்
    அறிவுடன் ஆனந்த இயல்புடைத் தாய்.

நின்றிடும் பிரமம் என் பார்; — அந்த
    நிர்மலப் பொருளினை நினைத்திடு வேன்,
நன்றுசெய் தவம்யோ கம் — சிவ
    ஞானமும் பக்தியும் நணுகிட வே,
வென்றிகொள் சிவசக்தி — எனை
    மேவுற வேஇருள் சாவுற வே,
இன்றமிழ் நூலிதுதான் — புகழ்
    ஏய்ந்தினி தாயென்றும் இலகிடவே.

– மகாகவி பாரதி (பாஞ்சாலி சபதம்)

பொருள்

பிரம்மம் என்று கூறப்படும் பரம்பொருளானது – ஓங்கார வடிவாக ஞானியர்கள் தொழுதெழ, நல்வினை தீவினை ஆகிய இருவினைகளையும் கடந்து நின்று குணம் குற்றம் அற்ற உன்னத நிலையில் இருப்பது; பொய்ம்மை, அறியாமை, கடும்பகை போன்ற தீமைகளைத் தடுத்து ஆட்கொள்ளும் சக்தி வாய்ந்தது; நன்மைகள் நல்கி துன்பங்களைத் துடைக்க வல்லது; பெயரும் ரூபமும் இல்லாதது; மனத்தினால் நாட முடியாதது; அறிவால் தேட முடியாதது; எதுவெல்லாம் உள்ள பொருளோ எதுவெல்லாம் இருக்கிறது என்று அறியப் படுகிறதோ அவை எல்லாமாக நிறைந்து இருப்பது; அறிவுடன் கூடிய ஆனந்த நிலையில் ஒன்றியிருப்பது.

அத்தகைய பிரமமாகிய குற்றமற்ற பரம்பொருளை வணங்கிடுவேன். நன்மை தருகின்ற அருந்தவப் பயனும் யோக சித்தியும், மெய்ஞ்ஞானமும் இறையன்பும் நான் பெற்று உய்வதற்கும், வெற்றி திகழும் சிவசக்தியின் அருளைப் பெற்று இருள்தரும் தடைகள் விலகுவதற்கும், ‘பாஞ்சாலி சபதம்’ என்னும் இந்த நூல் புகழ் கொண்டு இனிதாக அமைந்திடவும் அந்தப் பரப்பிரமத்தைப் பிரார்த்திக்கிறேன்.

பிரம்மம் என்றால் என்ன – What is Brahman?

பிரம்மம் என்றால் என்ன என்று தெளிவாக விளக்கும் அருமையான இந்தப் பாடலை பாரதியார் தாம் எழுதிய ‘பாஞ்சாலி சபதம்’ என்னும் கவிதை நூலின் கடவுள் வணக்கப் பாட்டாக அமைத்துள்ளார்.

அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
– மாணிக்கவாசகர் (திருவெம்பாவை)

‘பரம்பொருளான பிரமமானது கனியின் சுவைபோலும் அமுதம் போலும் எனவும், அது அறிவதற்கு முடியாது எனவும், அது அறிவதற்கு எளிதானது எனவும் வாதித்துத் தேவர்களும் அதனை அறியாத நிலையில் இருப்பார்கள்’ – என்றார் மாணிக்கவாசகர். ‘பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்’ என்று விநாயகர் நான்மணிமாலையில் கூறிய பாரதியாரும், ‘ஓம் எனப் பெரியோர்கள்’ என்னும் இந்தப் பாட்டில் யாரும் அறிந்துணராத பிரம்மத்தின் இயல்புகளை ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டி அதன் அருளை வேண்டுகிறார்.

ஓம் என்று பெரியோர்கள் கூறும் பரம்பொருளின் இயல்பு – Nature of Brahman

ஓம் என்னும் ஓரெழுத்தே இறைவனின் நாத வடிவம்; அங்கிங்கெனாதபடி எங்கு பிரகாசமாய் விளங்கும் ஞான ஒளி; தியானிப்பவர்களுக்கு வினைகளைப் போக்க வல்லது; தீமைகளைப் போக்கி நலம் அளிக்க வல்லது.

பரந்தது மந்திரம் பல்லுயிர்க் கெல்லாம்
வரந்தரும் மந்திரம் வாய்த்திட வாங்கித்
துரந்திடு மந்திரம் சூழ்பகை போக
உரந்தரு மந்திரம் ஓம்என் றெழுப்பே .
– திருமூலர்

“ஓம் என்னும் மந்திரம் எல்லா உயிர்களுக்குள்ளும் பரவி நிற்கின்றது. அது வரங்களைத் தந்து வினையாகிய பகையை அழிக்கும். மேலும் துணையாக நின்று வல்லமை அளிக்கும். ” – இது திருமூலர் வாக்கு.

திருமூலரின் இந்தத் தெளிவார்ந்த கருத்தை மனத்தில் இருத்தித் தியானிக்கும் பாரதியும் ஓங்கார வடிவினனான இறைவனை வணங்கித் தமது பாஞ்சாலி சபதக் காவியத்தைத் தொடங்குகிறார். பாரதியின் வேதாந்தப் பார்வையின் பரந்த நோக்கும் அவரது தெளிந்த மெய்ஞ்ஞானமும் இந்தப் பாடலில் நன்கு வெளிப்படுவதை நாம் உணரலாம்.

நாமமும் உருவும் அற்றே – Brahman – the Nameless and Formless

ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்,
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்,
பேணுங்கால்பேணும் உருவாகும் அல்லனுமாம்,
கோணை பெரிதுடைத்து எம்பெம்மானைக்கூறுதலே.
– நம்மாழ்வார் (திருவாய்மொழி)

பொருள்: எம்பெருமான் ஆணும் அல்லன், பெண்ணும் அல்லன், இவை இரண்டும் அல்லாத அலியும் அல்லன். நம் கண்களால் காண முடியாதவன்; உண்டு இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியாதவன். பக்தர்கள் எந்த வடிவத்தில் எந்த நாமம் கொண்டு எப்போது வழிபடுகிறார்களோ அந்த ரூபத்தில் அந்தப் பெயரில் காட்சி தருபவன். அதனால், அந்தப் பரந்தாமனின் தன்மையை எடுத்துரைப்பது என்பது கடினமான காரியம்.

தன்னுடைய உண்மை இயல்பாகிய சொரூப நிலையில் தனக்கென ஒரு உருவமும் பெயரும் தொழிலும் இல்லாத இறைவன் தன்னை வழிபடும் உயிர்களின் பொருட்டு பலப்பல உருவமும் பெயரும் தொழிலும் உடையவன் ஆகிறான். இந்த உண்மையை நன்குணர்ந்த பாரதியும் பிரமத்தின் இயல்பைக் குறிக்கும் போது அதன் உருவற்ற பெயரற்ற தன்மையை எண்ணி வியந்து துதிக்கிறார்.

மனம் நாட அரிதாய் புந்தி தேட அரிதாய்

அது அன்று அது அன்று – நேதி நேதி – Neti Neti – Describing the indescribable

வேதம் மற்றப் பொருளைப் பற்றிச் சொல்லி, இறைவனை அவை அல்லாத ஒருவன் என்று கூறி மறைமுகமாக எதிர்மறை வாயிலாகச் சுட்டுகிறது. “ந இதி, ந இதி” என்று சொல்கிறது. ‘இது அன்று, இது அன்று’ என்று பலபல பொருள்களை எல்லாம் மறுத்து ஒதுக்கிவிடுகிறது.இதைப் பரஞ் சோதியார் சொல்கிறார்.

‘அல்லை ஈது அல்லை ஈது’ என மறைகளும் அன்மைச்
சொல்லி னால்துதித்து இளைக்கும்இச் சுந்தரன்.
– பரஞ்சோதி முனிவர் ( திருவிளையாடல் புராணம்)

வேதம் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறது. எல்லாவற்றையும் அக்கு வேராக ஆணிவேராக அறிவிக்கிறது. ஆனால் ஆண்டவனை நேரே சுட்டாமல், “நீ இப்பொருளும் அல்ல, இப் பொருளும் அல்ல” என்று சொல்லித் துதித்து இளைத்துப் போகிறதாம். பரஞ்சோதியாரைப் போலவே, எதிர்மறைத் துதியில் அருணகிரி நாதரும் தமது ‘கந்தர் அலங்காரத்தில்’ இறைவனை வர்ணிக்கிறார்.

வான்அன்று, கால்அன்று, தீஅன்று
நீர்அன்று, மண்ணும் அன்று,
தானன்று, நான்அன்று,
அசரீரிஅன்று, சரீரிஅன்றே.
– அருணகிரி நாதர் (கந்தர் அலங்காரம்)

பிரம்மம் ஒன்றுதான் – பல அல்ல

ஒன்று பிரமம் உளதுண்மை அஃதுன்
உணர்வெனும் வேதமெல்லாம் – என்றும்
ஒன்று பிரமம் உளதுண்மைஅஃதுன்
உணர்வெனக் கொள்வாயே
– பாரதி

தெய்வம் பலப்பலச் சொல்லிப் பகைத்தீயை வளர்த்திடும் மூடர்களைப் பார்த்துப் ‘பாருக்குள்ளே தெய்வம் ஒன்றே – இதில் பற்பலச் சண்டைகள் வேண்டா’ என்று தடுத்து நல்வழிப்படுத்தும் ஆசானாக பாரதி இந்தப் பாட்டில் விளங்குகிறார் மேலும், ‘தத் த்வம் அஸி’ என்னும் வேத மந்திரத்தை அழகிய தமிழில் ‘அஃது உன் உணர்வு!’ என்று முழங்கி நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் கடவுள் தன்மையை நமக்கு உணர்த்துகிறார். ‘பிரம்மம் ஒன்று தான் இருக்கிறது; அது உண்மை’ என்று சொல்லி ஆன்ம ஒளிக்கடலில் மூழ்கித் திளைக்கும் பாரதியின் மெய்ஞ்ஞானத்தைப் போற்றுவோமாக.

அவனே நான் – ஸோ அஹம் அஸ்மி – I am Brahman

நம்மாழ்வாரும் பரஞ்சோதியாரும் அருணகிரிநாதரும் இவ்வாறு கூறுவதை எதிரொலிப்பதுபோல் அமைந்த விவேகானந்தரின் இந்தக் கவிதையின் ஆழ்பொருளும் இங்குக் கருதத்தக்கது.

Nor angel I, nor man, nor brute,
Nor body, mind, nor he nor she,
The books do stop in wonder mute
To tell my nature; I am He.
– Swami Vivekananda

தேவன்நான் அல்ல மனிதனும்அல்ல
    தெளிவிலா விலங்கினம் அல்ல;
ஆவிசேர் உடலும் உள்ளமும்அல்ல
    ஆண்பெண்பால் இரண்டும்நான் அல்ல;
தாவரு ஞான மறைகளும் என்றன்
    தன்மைசொல் லிடமுடி யாமல்
நாவடைத் திளைத்து வியப்பினில் துதிக்கும்,
    ‘நான் அவன்’ என்பதை அறிமின்!
விவேகானந்தர்

‘அவனே நான் – ஸோ அஹம் அஸ்மி’ என்று கூறும் ஈஸா உபநிடதத்தின் அரும்பொருளை உணர்த்தும் வண்ணம் ‘நான்’ என்னும் தலைப்பில் அமைந்துள்ள பாரதியின் ஞானப் பாடலும் இங்கு ஒப்பு நோக்கற்குரியது.

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்;
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்
ஆன பொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்கும் முதல்சோதி நான்! 

தெய்வம் நீ என்று உணர் – தத் துவம் அஸி – Thou art That

‘ஒன்று பிரமம் உளது உண்மை; அஃது உன் உணர்வு’ என்று முழக்கமிட்டு ‘தத் துவம் அஸி (அதுவே நீயாக இருப்பாய்)’ என்னும் வேத வாக்கியத்தின் பொருளை நமக்கு உணர்த்திய பாரதி, தமது புதிய ஆத்திச்சூடியில் ‘தெய்வம் நீ என்று உணர்’ என்றும் தெளிவிக்கிறார்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அக்கினிக் குஞ்சாக அந்த பிரமத்தின் சிறுபொறி உள்ளதென்றும், அந்தத் தீப்பொறியை நாம் உணர்ந்த அந்தக் கணமே அது பெருந்தீயாக மாறி நம் வினைகளென்னும் காட்டை எரித்துப் பொடிசாம்பலாக்க வல்லது என்றும் பொருள்பட பாரதி பாடிய கவிதை இங்கே:

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?

இத்தகைய பேருண்மைகளை தனக்குள் உள்ளடக்கிக் கொண்டு, ‘பிரம்மம் என்றால் என்ன?’ என்னும் கேள்விக்கு விளக்கம் தருகிறது இந்த ‘ஓமெனப் பெரியோர்கள்’ என்ற வேதாந்தப் பாட்டு.

பிரம்மம் என்றால் என்ன? – தாயுமானவர் விளக்கம்

நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய் நிராமயமாய்
நிறைவாய் நீங்காச்
சுத்தமுமாய் தூரமுமாய்ச் சமீபமுமாய்த் துரியநிறை
சுடராய் எல்லாம்
வைத்திருந்த தாரகமாய் ஆனந்த மயமாகி
மனவாக் கெட்டாச்
சித்துருவாய் நின்றவொன்றைச் சுகாரம்பப் பெருவெளியைச்
சிந்தை செய்வாம்.

பொருள்:
நித்தியமாய் = என்றென்றும் உள்ளதாய்
நிர்மலமாய் = குற்றமற்றதாய்
நிட்களமாய் = உருவமில்லாததாய்
நிராமயமாய் = நோயற்றதாய் (குறையற்றதாய்)
நிறைவாய் = பரிபூரணமானதாய்
நீங்காச் சுத்தமுமாய் = என்றும் விலகாத தூய்மையுடையதாய்
தூரமுமாய் = நினையாதவர்களுக்கு வெகுதூரத்திலும்
சமீபமுமாய் = தியானிப்பவர்களுக்கு மிக அருகிலும் தோன்றுவதாய்
துரிய நிறை சுடராய் = தூங்காமல் தூங்கும் விழிப்பு நிலையான துரியத்தில் தோன்றும் ஞானச் சுடராய்
எல்லாம் வைத்திருந்த தாரகமாய் = எல்லாம் தன்னிடத்தில் அடக்கிவைத்திருக்கும் ஆதாரப் பொருளாய்
மன வாக்கு எட்டா = மனத்தால் நினைப்பதற்கும் வாயால் உரைப்பதற்கும் அரிதான ஒன்றாய்
சித்து உருவாய் = ஞான சொரூபமாய்
நின்ற ஒன்றை = விளங்குகின்ற அந்த ஒப்பற்ற பரம்பொருளை
சுக ஆரம்பப் பெருவெளியை = பேரின்பத்தின் தொடக்கமாக விளங்கும் அந்த வெட்டவெளியை (சிதாகாசத்தை)
சிந்தை செய்வாம் = தியானிப்போம்

English:
I meditate on the eternal Brahman, the Pure,
All-bliss, All-right, and perceived in Turiya state.
It has no form, nor ailment, nor blemishes.
It is the First cause of all wellness,
It fills all and it is the Great Space with its vastness.
It is intelligence beyond our thought and speech.
It reveals itself to those with True Love but to others it conceals.

Leave a Reply