நலந்தரும் புதுவருடம் கவிதை

இருள்கெட ஒளிதரும் இரவியென
       எழுந்திடும் சுடர்மிகு புதுவருடம்!
உருண்டிடும் உலகினில் உயிர்வளர
       உறுபிணி ஒழித்திடும் புதுவருடம்!

பிரிவினை வளர்த்திடும் பகைவிலக்கிப்
       பெருந்துயர் தடுத்திடும் புதுவருடம்!
விரிந்திடும் மனங்களின் துணையுடனே
       வியனுல குதவிடும் புதுவருடம்!

அறிவினில் தெளிவினை அளித்திடுமே,
       அறவழி நிலைத்திட ஒளிதருமே,
குறைவினை அகற்றிடும் கனவுகளை
       நிறைவுற வழிதரும் புதுவருடம்!

கடந்திடும் வருடத்தின் துயர்மறப்போம்,
       கவலைகள் தொலைத்திங்கு மனம்துளிர்ப்போம்,
அடைந்திட விரும்பிடும் வளம்பெறவே
       அருள்மிகு நலந்தரும் புதுவருடம்!   

Leave a Reply