போதி நிழல் புனிதன் – புத்தரின் போதனைகள்

புத்தரின் போதனைகள்

போதியம் திருநிழல் புனிதன், மாரனை வெல்லும் வீரர், மாயையைத் விலக்கும் சோதி, பூரணம் அடைந்த தேவர் என்று போற்றப்படும் சாக்கிய முனியாம் கௌதம புத்தரின் போதனைகள் மற்றும் ஆன்ம சாதனைகள் பற்றிப் புகழ்ந்திசை பாடும் கவிதைகள் இங்கே!

புத்தரின் போதனைகள் பாரெங்கும் பரவியதால் கல்வியும் கலைகளும் சிறந்தன; சிற்பங்களும் சிலைகளும் செழித்துப் பெருகின. சாதி ஏற்றத் தாழ்வுகள் குறைந்து, எங்கும் சமரச மனப்பான்மை தழைக்க புத்தரின் போதனைகள் பெருந்துணை புரிந்தன. புத்தர் தமது போதனைகளில் சாத்திரங்களையோ புராணங்களையோ மேற்கோள்களாகக் கொள்ளவில்லை. கண்முன்பு கண்ட விஷயங்களையே ஆதாரமாய்க் கொண்டு, பகுத்தறிவுக்கு ஒத்த முறையிலேயே புத்தர் போதனைகள் செய்து வந்தார்.

உலகில் எங்கும் துக்கம் நிறைந்திருப்பதைக் கண்டு, அவர் அதன் காரணத்தை ஆராய்ந்து பார்த்தார். துக்கத்துக்குக் காரணம் அவா; அவாவிற்குக் காரணம் பேதைமை என்பதை அறிந்து கொண்டார். இவைகளை நீக்கி, மனிதன் விடுதலை பெற அறிவுறுத்தி நன்னெறியில் செல்ல புத்தரின் போதனைகள் வழிவகுக்கின்றன.

குறிப்பு: இங்கு அளிக்கப்பட்டுள்ள புத்தரின் போதனைகள் அனைத்தும் ‘தம்மபதம்‘ என்னும் பெருநூலிலிருந்து தொகுக்கப்பட்டவை.

பாவகை : நொண்டிச் சிந்து

சோதி முகத்தின் மோன ஒளி

போதி மரநிழலில் – திகழ்
  புத்தெழில் பொங்கும் புனிதனவன்
சோதி முகத்தினையே – மோனம்
  சூழ்ந்திடும் பூரண ஒளியெனலாம்.

மலர் வாய் மொழிந்திடும் ஞானமொழி

மோதும் துயர்கெடவே – அருள்
  ஓங்கிடும் அன்புடன் ஞானமொழி
போதனை யாயுரைத்தான் – அவன்
   பொன்மலர் வாய்மொழி கேட்டுயர்வீர்!

வெற்றியின் மீது பற்று வேண்டாம்

வெற்றியே பகைவளர்க்கும் – பின்பு
  வெல்லப் பட்டார்க்கெலாம் துயர்விளைக்கும்
முற்றிலும் பற்றைவிட்டால் – வெற்றி
  மோகத்தை ஞானம் அழித்தொழிக்கும்.

தருமமே அருந்துணை

சுற்றமும் துணைவருமோ – தேகம்
  சுட்டெரிந் திறுதியில் கிடக்கையிலே
உற்றநல் தருமமொன்றே – உன்றன்
  உயிர்த்துணை யாக உடன்வருமே!

தருமம் எனும் நிலத்தில் ஆசை எனும் களை எடுப்பீர்

தருமம் எனும் நிலத்தில் – வாழ்வைத்
  தாழ்த்திடும் ஆசையாம் களை(இ)ருந்தால்
கருதும்மெய்ஞ் ஞானமென்னும் – உயர்
  கலப்பைகொண் டே(அக்) களைகளைவீர்!

தெளிவு விதை தூவி ஒழுக்க நீர் பாய்ச்சுவோம்

உன்னத மனநிலத்தில் – விடா
  முயற்சியாம் எருதுகொண் டே(இ)ழுப்போம்
பன்னரும் தெளிவுவிதை – தூவிப்
  பாய்ச்சுவோம் ஒழுக்கமாம் நீரினையே.

முக்தி அறுவடை

அழிவில்நிர் வாணமென்னும் – தெள்
  ளமுதத்தை அறுவடை செய்துவெல்வோம்
ஒழிவிலா முக்திநிலை – எய்தி
  உணர்வெலாம் ஒருநிலைப் படுத்திநிற்போம்.

நீயே உனக்கு அடைக்கலம், உன் வாழ்வுக்கு நீயே வழிகாட்டும் சோதி

அடைக்கலம் யாருமில்லை – உனக்(கு)
  அடைக்கல மாகநீ யே(இ)ருப்பாய்.
துடைத்துத் துயர்விலக்கும் – சுடர்ச்
  சோதியாய் நீயுனக் கே(இ)ருப்பாய்.

பாவகை : ஆனந்தக் களிப்பு மெட்டு

ஆன்ம ஜெயமே வீரம்

ஆயிரம் யானைகள் வீழ்த்திப் – படை
  ஆயிரம் வெல்வது வீரமும் அல்ல
மாய மனத்தினைக் கட்டி – ஆசை
  மாய்த்திடும் வீரமே மாவீர மாகும்.

மனக் கட்டுப்பாடே ஆயிரம் யாகம் வளர்த்ததற்கு சமம்

ஆயிரம் யாகம் வளர்த்துப் – பல்
  லாண்டுகள் ஆற்றிடும் வேள்விகள் வேண்டாம்
பாயும் மனத்தினை வென்றால் – அது
  பல்யாகம் செய்ததன் பலனினைத் தருமே.

தானே தனக்குத் தலைவன்

தனக்குத் தானேதனித் தலைவன் – என்றும்
  தனக்குத் தானே தனிச் சுடர்மிகும் சோதி
தனக்குத் தானே சரண் புகுந்தால் – என்றும்
  தன்னை வருத்திடும் தளைகளும் அறுமே.

Leave a Reply