இந்தப் பதிவு ‘ஆழ்வார்கள் நான்மணிமாலை‘ என்னும் கவித்தொடரின் நான்காம் பகுதி. இந்தப் பகுதியில், பரந்தாமனுக்குப் பல்லாண்டு பாடிய பேருள்ளம் கொண்ட பெரியாழ்வாரைப் போற்றிப் புகழ்ந்து அந்தாதியாகப் பாடியுள்ளேன்.

நேரிசை வெண்பா

 மாலிருஞ் சோலை மலைக்காட்டின் பேரழகும்
 கோலவாய் ஊதும் குழலழகும் - மாலழகும்
 பிள்ளைத் தமிழிசைத்துப் பாடும் பெரியாழ்வார்
 தெள்ளமுதாம் பாட்டே சிறப்பு. 

கட்டளைக் கலித்துறை

 சிறப்புற்ற செங்கண் கருமுகில் வண்ணன் திருவடியைப்
 பிறப்பற்று நீங்கத் தினம்பற்று கின்ற பெருமனத்தார்
 அறுப்புற்றுப் பொற்கிழி வீழ அருமறை ஆழ்பொருளை
 நெறிப்பட்ட நெஞ்சில் நிலைத்திடச் சாற்றும் நெடுங்கவியே! 

அறுசீர் ஆசிரிய விருத்தம்

 கவி நயத்துடன் செந்தமிழ் ஓசை
   கலந்தே இனிக்கின்ற
 சுவை நிறைந்து மனத்தைக் கவர்ந்திடும்
   சுந்தரச் சொல்தூவி
 புவி நலம்பெறப் பல்லாண் டிசைத்தகம்
   பொங்கும் பரிவாலே
 செவி நிறைந்திடும் தீங்கவி தைவிட்டு
   சித்தன் திருமொழியே. 

நேரிசை ஆசிரியப்பா

 மொழியும் சொற்களால் அழிவிலா அமுதம்
 அன்புடன் ஊட்டி இன்புறும் தாய்போல்
 ஆதி பகவனை அணியுறப் பாடிடும்
 தீதில் காதல் விட்டு சித்தர்
 ஈடில் கவியிலொன் றேனும்
 பாடா நாள்மனம் பசித்து வாடுமே. 

Leave a Reply