இந்தப் பதிவு ‘ஆழ்வார்கள் நான்மணிமாலை‘ என்னும் தொடரின் இரண்டாம் பகுதி. இந்தப் பகுதியில், இனித்திடும் எளிய கவிதைகளால் மாறன் புகழ்பாடி ‘நாவினால் நவிற்றின்பம் எய்திய’ மதுரகவி ஆழ்வாரைப் போற்றியும், ‘பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்’ என்று ஆணையிட்டு, இறைவனையே காஞ்சி நகரிலிருந்து இடம் பெயர வைத்த திருமழிசை ஆழ்வாரின் கவியாற்றலைப் புகழ்ந்தும் அந்தாதியாகப் பாடியுள்ளேன்.

மதுரகவி ஆழ்வார்

நேரிசை வெண்பா
 தேவன் எனக்கென்றும் தெய்வச் சடகோபன்
 ஆவியினை அன்புருக ஆட்கொண்டான் - ஓவாமல்
 மாறன் புகழ்சொல்வேன் என்னும் மதுரகவி
 மாறாப் பிறவி மருந்து.
கட்டளைக் கலித்துறை
 மருந்தென்று நாளும் மகிழ்மாறன் தூய மலர்ப்பதத்தைச்
 சிரந்தன்னில் சூடிச் சிறுத்தாம்பு பாடிச் செழுந்தமிழில்
 வருந்தென்றல் காற்றாய் மணம்வீசும் பாக்கள் மலர்ந்தருளி
 அருந்தொண்டு செய்த மதுர கவியார் அருட்சுடரே!

திருமழிசை ஆழ்வார்

சந்த விருத்தம்
 சுடர்விளங்கும் சந்தமேவும் சுந்தரச் சுகந்தியில்
 இடர்விலக்கும் இன்பகீதம் இங்கெமக் கருளினார்
 படம்விளங்கும் பாம்பின்மேல் பயின்றபள்ளி நீங்கிட
 இடம்பெயர்ந் தெழுப்பிடும் இசைஞரூர் மழிசையே.
நேரிசை ஆசிரியப்பா
 மழிசை வந்த மணிச்சுடர் ஒளியே!
 அழிவிலா ஆழ்பொருள் அமைந்த(அ)ந் தாதியும்
 நந்தா விளக்காய் நலமுற விளங்கும்
 சந்த விருத்தமும் தந்தருள் புரிந்தீர்!
 வள்ளல் எனவெறும் மனிதரைப் பாடா
 வெள்ளை மனத்தால் விண்தொட உயர்ந்தீர்!
 மாண்புறும் உம்கவி வலியால்
 வீண்படு பொய்யை வென்றிடும் வையமே!

This Post Has One Comment

  1. Dr.V.K.Kanniappan

    ‘அருந்தொண்டு செய்த மதுர கவியார் அருட்சுடரே!’

    மிகச் சிறப்பான கவிதை! வரவேற்கிறேன்; அருட்தொண்டு தொடருங்கள்.
    வாழ்த்துகள்.

Leave a Reply