ஶ்ரீ ரமணர் அகவல் – ரமண மகரிஷியின் ஞானமொழிகள்

ரமண மகரிஷி

நமது உண்மை சொரூபம் என்பது நினைவுகளற்றிருக்கும் நன்னிலை. அதனைத் தெளிய ஆன்ம விசாரம் ஒன்றே வழி; ‘நான் யார்’ என்று தன்னை வினவிப் பார்த்தால் விவேகம் பிறக்கும் என்றார் ஶ்ரீ ரமண மகரிஷி.

மகரிஷி மொழிந்தருளிய மறையுரையானது, மனத்தின் அஞ்ஞானம் என்னும் பிணியைப் போக்கும் அருமருந்து; எண்ணங்களின் பிடியிலிருந்து இந்தக் கணமே ஆத்ம விடுதலை பெற எழிச்சியூட்டி இதமளிக்கும் இன்மொழி; வேதாந்தத்தின் சாரத்தை விளக்கி வழிகாட்டும் விளக்கொளி.

ஶ்ரீ ரமண மகரிஷி என்ற அந்த மகா ஞானியின் அருளுரைகள் சிலவற்றை நேரிசை ஆசிரியப்பாவில் அளிக்க இங்கு முயன்றுள்ளேன். கருத்துப்பிழை சொற்பிழை இருப்பின் பொறுத்தருளி அறிவுறுத்தவும்.

குறிப்பு : இந்தப் பதிவிலுள்ள கருத்துக்களும் கவிதைகளும் ஶ்ரீ ரமண மகரிஷியின் ‘நான் யார்’ என்னும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை.

ஶ்ரீ ரமண மகரிஷி : அருணை இருந்த அருந்தவ யோகி

 திருச்சுழி பிறந்து திகழொளி வீசி
 இருள்கெட உலகில் எழுந்திடும் இரவி,
 அருணை என்னும் அருட்சுடர் மலையில்
 அருந்தவம் புரிந்த ஆன்ம விளக்கு,
 தன்னை அறிந்து தன்னலம் துறந்து
 தனிப்பெரும் ஞானம் தழைத்திடும் முனிவர்,
 அருமறை போன்ற அருளுரை செய்தே
 இரமணர் இனிதாய் இங்ஙனம் மொழிவார்:

நான் யார்?

 நான்யார் என்ற ஞான விசாரம்
 ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும்,
 இறவா நன்னிலை இன்றே அமைய
 ஆத்ம சொரூபத்தின் அறிவை அளிக்கும்,
 எல்லாச் சீவனிலும் இருக்கும் சிவனை
 எல்லை இல்லாமல் இலங்கிடும் உண்மையை
 இதுவும் அன்றே இதுவும் அன்றென
 வேதாந்த சொற்படி பொய்ம்மை விலக்கித்
 தீதறப் பார்த்தால் பிறந்திடும் தெளிவு

நினைவுகள் நானா?

 மனம்செயும் ஜால வித்தையின் மயக்கம்
 தினம்தினம் ஆய்ந்தால் தெளிவு பிறக்கும்,
 மனமே கவலையும் மலர்ச்சியும் கொடுக்கும்
 மனமே நினைவுகள் யாவும் வளர்த்திடும்,
 காலம் என்பது மனத்தின் கற்பனை
 காலன் என்பதும்  மனம்சொலும் பொய்தான்,
 எல்லாம் நானென்ற எண்ணம் பிறந்தால்
 எழும் நினைவெல்லாம் எரிசாம்பல் ஆகும்,
 தானென ஒன்று தனித்தே இல்லை
 ஆன உயிர்கள் அனைத்திலும் உறையும்
 தன்னைக் கண்டால் இன்னல் மறையும்

எது நிஜம் – திரையா உருவமா? சிவனா சீவனா?

 வெண்திரை மீது வெளிப்படும் படத்தில்
 திரையைப் பார்த்தால் உருவம் மறையும்
 உருவம் பார்த்தால் திரைதான் மறையும்,
 திரையில் தோன்றும் உருவம் போல
 ஆன்ம சொரூபமாம்  அருந்திரை தன்னில்
 எண்ணங்கள் என்னும் உருவங்கள் எழுந்திட
 மனந்தான் சொரூபத்தை மறக்கச் செய்யும்
 நிரந்தர சொரூபமே நிஜமெனத் தெளிந்தால்
 நினைவுகள் எல்லாம் நிழலெனத் தொடரா,
 தன்னை அறிந்திடும் தெளிவால்
 பொன்போல் உள்ளம் பொலிந்திடும் இங்கே!

Leave a Reply