‘விருத்தத்தின் வரலாறு’ என்னும் இந்தக் கட்டுரையில், தமிழ் விருத்தங்கள் எவ்வாறு தோன்றின? அவற்றின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்த இலக்கிய நிகழ்வுகள் யாவை? என்ற கேள்விகளுக்கு விடை காண முயல்வோம். இந்தப் பதிவு, தணிகாசல முதலியார் அவர்கள் எழுதிய ‘The Evolution of Tamil Viruthams’ என்னும் ஆங்கில ஆய்வுக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு.
தமிழ் இலக்கியத்தில், கம்பராமாயணம், வில்லிபாரதம், சீவக சிந்தாமணி, தேவாரம், திருவாசகம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் போன்ற பெருமை வாய்ந்த சிறந்த நூல்கள் எல்லாம் முழுவதும் தமிழ் விருத்த யாப்பு முறையிலேயே இயற்றப்பட்டவை.
விருந்தங்கள் யாவும் முதன்முதலில் வடமொழியில் தோன்றியவை. தமிழ்க்கூறு நல்லுலகத்தில் அடியெடுத்தவுடன் விருத்தங்கள் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்தன.
சங்க காலத்தில் விருத்தங்கள் பெரிதும் வளர்ச்சி அடையவில்லை. தமிழ்ச் சங்கங்கள் மூன்றும் சிறப்பு வாய்ந்த பழந்தமிழ் நூல்கள் பலவற்றை நமக்கு அளித்திருந்தாலும், தம் குறுகிய நோக்கால் புதுமையான பாவகைகளின் வளர்ச்சியை முடக்கி வைத்து நம் மொழியின் வளத்திற்குத் தடைகளாக இருந்தன. எந்தப் படைப்பு யார் இயற்றியிருந்தாலும் அது நம் இலக்கியத் தொகுப்பில் இடம் பெறவேண்டுமென்றால் அதற்குரிய அங்கீகாரத்தை அந்தத் தமிழ்ச்சங்கங்களிடம் பெற்றாக வேண்டும். தமிழ்ச்சங்கங்களின் தீர்ப்புக்கு எதிர்த்து யாரிடமும் முறையிட முடியாது. அதனால் சங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத பலப்பல நல்ல நூல்கள் யாருக்கும் பயன்படாமல் அழிந்து போயின.
திருக்குறளைக் கூடத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்ற முடியாமல் திருவள்ளுவருக்குச் சங்கப் புலவர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது எனவும், குறளைச் சங்கப்பலகையில் வைக்க அப்பலகை திருக்குறளை மட்டும் வைத்துக்கொண்டு பலகையில் அமர்ந்திருந்த புலவர்களை எல்லாம் பொற்றாமரைக் குளத்தில் தள்ளிவிட்டது என்றும் வரலாறு கூறும். அக்காலத்து யாப்பிலக்கணத்து நெறிகளைப் பின்பற்றாத புதுமையான பாவகையாகவே அந்த இரண்டடி வெண்பா கருதப்பட்டதால் திருக்குறளை ஒரு கவிதையாகவே ஏற்க மறுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
கடைச்சங்க காலம் முடிவுற்ற பின்னர், கவிஞர்களால் எந்த விதத் தடையுமின்றி புதுப்புது பாவகைகளை உருவாக்கிக் கொண்டுவந்துத் தமிழ் மொழிக்கு சிறப்பினை சேர்க்க முடிந்தது. திருவள்ளுவரின் குறள்வெண்பா என்னும் இந்தப் புதுமையான பாவகையே வேற்று மண்ணில் தோன்றிய விருத்தங்கள் போன்ற இன்ன பிற புதிய பாவகைகளைத் தமிழகம் வரவேற்று வளர்ப்பதற்கு வழியமைத்தது எனலாம். விருத்தங்களின் வளர்ச்சிக்குத் திருக்குறள் என்னும் ஒரு வெண்பா தான் காரணம் என்று கூறுவது சற்று முரண்பாடாகத் தோன்றலாம். ஆனால் திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்றை ஆய்ந்து பார்க்கும்போது, மதுரையில் அவரது நூலைச் சங்கப்பலகை ஏற்றுக்கொள்ளாமல் போயிருந்தால் அவரைப் போல ஒரு இலக்கியப் புரட்சியாளர் நமக்குக் கிடைக்காமல் போயிருக்கும்; மேலும் தமிழ்க்கவி உலகமே படைப்புகள் குன்றி இருண்டு போயிருக்கும்.
கவிதை என்பது ஒரு செயற்கையான கலை அல்ல, அது உள்ளத்தில் உறைந்திருக்கும் உணர்வுகளின் வெளிப்பாட்டால் எழுந்த படைப்பாக்கத்தின் வெடிப்பு; இலக்கியம் என்பது எப்போதும் இலக்கணத்தைச் சார்ந்து எழுதப்படுவதில்லை; ஆனால், ஒரு சிறந்த இலக்கியம் உருவாகும்போது இலக்கணம் எப்போதும் அந்த இலக்கியத்திற்குத் துணை போகும். அந்த இலக்கியத்திற்குத் தகுந்தபடி இலக்கணம் தன்னை மாற்றிக்கொள்ளும். இந்த உண்மையை உலகத்துக்குக் கற்றுக் கொடுத்த முதல் ஆசான் திருவள்ளுவரே என்பது அவரது வாழ்க்கை மூலம் உணர்ந்து கொள்ளலாம்.
திருவள்ளுவரின் மறைவுக்குப் பின், வெண்பா பல்வேறு வடிவங்கள் பெற்று, அதிலிருந்து சற்று வேறுபட்ட வெண்டுறை, வெண்தாழிசை போன்ற பல்வேறு பாவினங்களைத் தோற்றுவித்தது. திருவாசகத்தை மட்டும் நாம் எடுத்துக்கொண்டு ஆய்ந்து நோக்கினால், திருவள்ளுவரின் காலம் தொடங்கித் தமிழ் இலக்கியங்கள் அடைந்த படிப்படி மாற்றங்களும் அம்மாற்றங்கள் எவ்வாறு பல்வேறு வகையான விருத்தங்கள் தோன்றுவதற்குக் காரணமாகத் திகழ்ந்தன என்றும் விளங்கும்; இவ்விருத்தங்களின் வளர்ச்சிக்குத் தொன்றுதொட்டு வந்த இலக்கண மரபுகள் எவ்வாறு வழிவிட்டு உதவின என்றும் நாம் புரிந்து கொள்ளலாம்.