விருத்தம் எழுதுவது எப்படி – மரபுக் கவிதை வடிப்போம்

விருத்தம் எழுதுவது எப்படி என்று கற்றுக்கொள்ளுமுன் விருத்தம் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். அளவொத்த நான்கடிகள் கொண்ட கவிதையே விருத்தம் எனப்படும்.

விருத்தம் என்றால் என்ன

‘அளவொத்த நான்கடிகள் கொண்ட கவிதையே விருத்தம்’ என்பர். அதாவது, நான்கு அடிகள் பெற்றிருந்து, ஓவ்வொரு அடியிலும் சீர்களின் எண்ணிக்கை சமமாக அமைந்திருந்தால் அதுவே விருத்தக் கவிதையாகும்.

இந்தப் பதிவில் சில வகை விருத்தங்களை எடுத்துக்காட்டுகளுடன் விரிவாக பார்க்கலாம்.

கலி விருத்தம்

கலி விருத்தம் என்பது நான்கு சீர்களையுடைய அளவடி நான்கினால் அளவொத்து அமைவது. அதாவது, ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களைக் கொண்டு, நான்கு அடிகளால் ஆன பாடல். எடுத்துக்காட்டாக கம்பராமாயணத்தில் வரும் கடவுள் வாழ்த்துப் பாடலையும் திருஞான சம்பந்தர் அருளிய திருமுறைப் பாடலையும் காண்போம்.

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யார்அவர்
தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே.
கம்பர்
காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.
திருஞானசம்பந்தர்

ஒரு கலி விருத்தக் கவிதை சிறப்பாக அமைய கீழ்வரும் இலக்கண விதிகளை முறைப்படி அக்கவிதை பின்பற்ற வேண்டும்.

  • முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும். மேலே எடுத்துக்காட்டப்பட்ட கம்பரின் கலிவிருத்தக் கவிதையில், முதல் சீர்களாகிய ‘உலகம்’, ‘நிலைபெ’, ‘அலகி’, ‘தலைவ’ என்னும் சீர்கள், ‘கம்’, ‘பெ’, ‘கி’, ‘வ’ போன்ற குறில் அசைகளுடன் முடிந்து, புளிமா என்னும் அசை வாய்பாட்டைச் சார்ந்து அமைந்துள்ளன.
  • விருத்தம் நிரையசையில் தொடங்கினால் அடிக்கு 12 எழுத்து; கம்பரின் இந்தக் கலி விருத்தம் ‘உல’, ‘நிலை’, ‘அல’, ‘தலை’ என்ற நிரையசையில் தொடங்கியுள்ளதால், ஒவ்வொரு அடியிலும் 12 எழுத்துகள் (ஒற்றெழுத்துகளை நீக்கினால்) அமைந்துள்ளன.
  • நேரசையில் தொடங்கியிருந்தால் 11 எழுத்தெண்ணிக்கை வரும்.
  • 2வது அல்லது 3வது சீர்களில் மாச்சீர் வந்தால் அடுத்த சீர் நிரையில் தொடங்கும். எடுத்துக்காட்டாகப் பார்ப்போமானால், சம்பந்தரின் பாடலில் முதலடியில் இரண்டாம் சீர் ‘லாகி’ என்ற மாச்சீர். அதை அடுத்து ‘கசிந்துகண்’ என்று நிரையில் தொடங்கும் சீர் வந்துள்ளதைக் காண்க.
  • பொதுவாக ‘மா கூவிளம் கூவிளம் கூவிளம்’ என்னும் அசை ஓசைப்படி கலி விருத்தங்கள் அமையும்.
  • விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. எடுத்துக்காட்டாக, ‘காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி’ என்னும் சம்பந்தர் பாட்டில், ‘ணீர்மல்கி’ என்னும் சீர் தேமாங்காய்ச்சீராக வந்துள்ளதைக் காணலாம்.
  • முதலிரண்டு சீர்களுக்கிடையில் ‘மாவைத் தொடர்ந்து நேர்’ என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும். ‘காத லாகி’ என்னும் சீர்கள் ‘தேமா தேமா’ என்று வந்துள்ளதால், ‘த’ என்னும் நேரை (மாவை) தொடர்ந்து ‘லா’ என்னும் நேர் அமைந்துள்ளதையும் காணலாம். அதேபோல், ‘லாகிக் கசிந்துகண்’ என்னும் சீர்கள் ‘மாமுன் நிரை’ என்னும் வெண்டளை விதிப்படி வந்துள்ளதும் இங்குக் கவனிக்கத் தக்கது.

இந்த இலக்கண விதிகளைப் பின்பற்றினால் கலி விருத்தம் எழுதுவது எப்படி என்று நாம் தெளிவாக அறிந்துகொள்ள உதவும்.

ஆசிரிய விருத்தம்

ஆசிரிய விருத்தம் என்பது ஆறு சீர்முதல் எத்தனை சீராலும் அளவொத்த நான்கு அடிகளால் அமைந்த பாடல். எடுத்துக்காட்டாக சிலப்பதிகாரத்தில் வரும் இந்த ஆற்றுவரிப் பாட்டைக் காண்போம்.

மருங்கு வண்டு சிறந்தார்ப்ப
    மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்க யற்கண் விழித்தொல்கி
    நடந்தாய்வாழி காவேரி
கருங்க யற்கண் விழித்தொல்கி
    நடந்தவெல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
    அறிந்தேன் வாழி காவேரி.
– இளங்கோ அடிகள்

இந்தப் பாடல், அரையடிக்கு இரண்டு மாவும், ஒரு காயுமாக வந்த ‘அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்’ என்னும் பாவகையைச் சார்ந்தது.

Leave a Reply