வெண்பா எழுதுவது எப்படி? – மரபுக் கவிதை வடிப்போம்

‘எல்லாப் புலவர்க்கும் வெண்பாப் புலி’ – என்று சொல்வார்கள். வெண்பா எழுதுவதற்குக் கடினமாக இருந்தாலும், படிப்பதற்கும் கேட்பதற்கும் மிகவும் இனியதாகவே இருக்கும். இரண்டு முறை ஒரு வெண்பாவைச் சொன்னால் அதை எளிதாக மனப்பாடம் பண்ணிவிடலாம் என்று பலர் கூறுவர். அத்தகைய சிறப்பு வாய்ந்த வெண்பா எழுதுவது எப்படி என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

அசையும் சீரும்

வெண்பா எழுதுவது எப்படி என்று நாம் கற்குமுன் யாப்பிலக்கணத்தின் அடிப்படை உறுப்புகளான எழுத்து, அசை, சீர், அடி, தளை முதலியவற்றைப் பற்றி சற்று பார்ப்போம்.

எழுத்துக்கள் ஒன்றோ பலவோ சேர்ந்தது அசை; அசைகள் ஒன்றோ பலவோ சேர்ந்து உருவானது சீர்; சீர்கள் பலவற்றை அங்கமாகக் கொண்டது அடி; பல அடிகள் சேர்ந்து அமைந்தது ஒரு பா.

வெண்டளை

வெண்பாவின் அமைப்பில் முக்கிய அங்கமாகக் கருதப்படுவது வெண்டளை (வெண்மை + தளை). தமிழில் ஏழு தளைகள் இருந்தாலும், வெண்பாவில் பயின்று வருவது இந்த வெண்டளை மட்டும் தான்.

தளை என்னும் சொல் ‘கட்டு’ அல்லது ‘விலங்கு’ என்று பொருள்படும். ‘இரண்டு இரயில் பெட்டிகளைச் சேர்ப்பதற்கு இடையே கொக்கி இருப்பது போல இரண்டு சீர்கள் இணையும் போது உள்ள கொக்கி அல்லது சங்கிலி போன்ற அமைப்பையே தளை என்று சொல்வார்கள்’ என்று கி.வா.ஜ அவர்கள் ‘கவி பாடலாம்‘ என்னும் தமது நூலில் அருமையான உருவகத்துடன் தெளிவாக விளக்குகிறார்.

ஒரு வாய்பாடு மூலம் வெண்டளையின் இலக்கணத்தை நாம் எளிதாக நினைவில் கொள்ளலாம். ‘மாமுன் நிரையும் விளமுன் நேரும் காய்முன் நேரும்’ என்பதே அந்த வாய்பாடு.

இந்த வாய்பாட்டில் உள்ள மூன்று விதிகளை கீழ்வரும் வெண்பாவை எடுத்துக்காட்டாகக் கொண்டு சற்றே விரிவாகப் பார்ப்போம்.

வெண்பா எழுத விருப்பம் உடையவென்
நண்பாவிவ் வாய்பாட்டை ஞாபகம்வை – வெண்பாவில்
மாமுன் நிரையாம் விளமுன் வரு(ம்)நேராம்
காய்முன்நேர் என்றே கருது.
– இமயவரம்பன்

பொருளடக்கம்

வாய்பாடு

மாமுன் நிரை

மாச்சீரைத் தொடர்ந்து நிரை அசையில் ஆரம்பிக்கும் சீர் வரவேண்டும் என்பதே இந்த இலக்கண விதியின் பொருள். இந்த விதி வெண்டளைக்கு மட்டுமே பொருந்தும். நேர் அசையில் முடியும் தேமா புளிமா என்னும் ஈரசைச் சீர்களே மாச்சீர் எனப்படும்.

வெண்பா எழுத”

இதில் ‘வெண்பா’ என்பது தேமா. இதை அடுத்த சீரில் முன்னால் நிற்கும் அசை ‘எழு’ என்னும் நிரையசை. இதுவே ‘மாமுன் நிரை’ என்னும் விதிக்கு எடுத்துக்காட்டாகும்.

விளமுன் நேர்

விளச்சீரைத் தொடர்ந்து நேர் அசையில் தொடங்கும் சீர் வரவேண்டும். நிரை அசையில் முடியும் கூவிளம், கருவிளம் என்னும் இரண்டும் விளச்சீர் எனப்படும்.

“உடையவென் நண்பாவிவ்”

இதில் ‘உடையவென்’ என்பது கருவிளம். இதை அடுத்த சீரில் முன்னால் நிற்கும் அசை ‘நண்’ என்னும் நேரசை. இதுவே ‘ விளமுன் நேர்’ என்னும் விதிக்கு எடுத்துக்காட்டாகும்.

காய்முன் நேர்

காய்ச்சீருக்குப் பின்நேர் அசையில் தொடங்கும் சீர் வரவேண்டும். காய்ச்சீர் என்றால் நேர் அசையில் முடியும் தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய் என்னும் மூவசைச்சீர்களே ஆகும்.

வாய்பாட்டைஞாபகம்வை”

இதில் ‘வாய்பாட்டை’ என்பது தேமாங்காய். இதை அடுத்த சீரில் முன்னால் நிற்கும் அசை ‘ஞா’ என்னும் நேரசை. இதுவே ‘ காய்முன் நேர்’ என்னும் விதிக்கு எடுத்துக்காட்டாகும்.

வெண்டளையின் விதிகளை இந்த விளக்கப்படம் மூலம் மேலும் தெளிவாக அறியலாம்.

வெண்பா எழுதுவது எப்படி? - மரபுக் கவிதை வடிப்போம்

குறிப்புகள்

நின்றசீர் – முன்னால் நிற்கும் சீர்
வரும்சீர் – அடுத்து வரவேண்டிய சீர்
மாச்சீர் – நேரில் முடியும் தேமா மற்றும் புளிமா ஆகிய ஈரசைச்சீர்கள்
விளச்சீர் – நிரையில் முடியும் கூவிளம் மற்றும் கருவிளம் ஆகிய ஈரசைச்சீர்கள்
காய்ச்சீர் – நேரில் முடியும் தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய் ஆகிய சீர்கள்

கேள்விகள்

கீழ்வரும் வினாக்களின் மூலம் உங்கள் வெண்டளை அறிவைச் சோதிக்கலாமா?

/4
1 votes, 5 avg
78
Created on

வெண்டளைக் கேள்விகள்

கோடிட்ட இடத்தை நிரப்ப வெண்டளையின் விதிகளின்படி சரியான சீரைத் தேர்ந்தெடுக்கவும்

1 / 4

ஞானத்தை ----------- நன்றாகக் கற்றிடுவோம்

2 / 4

வெண்பா ------------- மிகவெளிதாய்க் கற்றிடலாம்

3 / 4

தமிழை --------------- தேனென்று சொல்வர்

4 / 4

வாழ்க ------------  பாரதி

Your score is

0%

Please rate this quiz

பொருளடக்கம்

வெண்பா எழுதுவது எப்படி?

இப்போது மீண்டும் நமது இந்த முக்கியமான கேள்விக்கு வருவோம்.

மேற்கூறிய விதிகளை நினைவில் கொண்டு பின்பற்றினால் வெண்பா எழுதுவதில் உள்ள கடினம் குறைவது உறுதி. அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு வாக்கியத்தை எவ்வாறு வெண்பா ஆக்குவது என்பதைப் பார்க்கலாம்.

எடுத்துக்காட்டு வாக்கியம்

ஒன்றும் இல்லாத விஷயத்தைப் பெரிதாக்கி மனம் வாடித் தவிப்பது எதைப்போன்றது என்றால், இருட்டு அறையில் ஒரு மலர் மாலையைப் பார்த்துப் ‘பாம்பு’ என்று நினைத்துப் பதறுவதை ஒக்கும்.

வாக்கியத்தைக் கொண்டு இயற்றப்பட்ட வெண்பா

ஒன்றுமில் லாத விஷயத்திற் குள்ளத்தில்
என்றும் துயர்கொண் டிருந்திடுதல் – நன்றோ?
இருட்டறையில் பூமாலை பார்த்துப்பாம் பென்றே
அரற்றுவதைப் போன்ற தது.
– இமயவரம்பன்
குறிப்பு:
ஒன்றுமில் லாத = ஒன்றும் + இல்லாத
விஷயத்திற் குள்ளத்தில் = விஷயத்திற்கு + உள்ளத்தில்
துயர்கொண் டிருந்திடுதல் = துயர்கொண்டு + இருந்திடுதல்
பார்த்துப்பாம் பென்றே = பார்த்து + பாம்பு + என்றே

இலக்கண விளக்கம்

மேற்கண்ட வெண்பா ‘நாற்சீர் – முச்சீர் – நடுவே தனிச்சீர்’ என்னும் வாய்பாடு படி அமைந்துள்ளது. இந்த வகை வெண்பாவை நேரிசை வெண்பா என்பர்.

எதுகை

இந்த வெண்பாவில் முதல் இரண்டு அடிகள், ‘நன்றோ’ என்னும் தனிச்சொல் உட்பட, ‘ஒன்றும்’, ‘என்றும்’, ‘நன்றோ’ என்று ஓரெதுகையாகவும், பின் இரண்டு அடிகள் ‘இருட்டு’, ‘அரற்று’ என்று ஓரெதுகையாகவும் வந்துள்ளன. கடைசி இரண்டு அடிகளில் ‘ரு’, ‘ர’ என்னும் வருக்க எழுத்துகள் எதுகை வரும் இடத்தில் வந்ததால்,‘இருட்டு’, ‘அரற்று’ என்னும் எதுகைகள் ‘வருக்க எதுகை’ என்னும் வகையைச் சார்ந்தன.

மோனை

இந்த வெண்பாவில் முதலடியில் ‘ஒன்றுமில்’ , ‘உள்ளத்தில்’ என்னும் முதல் மற்றும் நான்காம் சீர்களில் முறையே ‘ஒ’ ‘உ’ என்னும் எழுத்துகளில் மோனை அமைந்துள்ளது. ‘ஒ’ ‘உ’ என்னும் எழுத்துகள் வருக்க எழுத்துகள் என்பதால் இதனை ‘வருக்க மோனை’ எனலாம். மேலும் முதல் சீரிலும் நான்காம் சீரிலும் மோனை அமைந்துள்ளதால், இதனை ‘ஒரூஉ மோனை’ என்பர். இதேபோல், மூன்றாம் அடியிலும் ‘வருக்க மோனை’ மற்றும் ‘ஒரூஉ மோனை’ அமைந்துள்ளமை காணலாம். மற்ற அடிகளில் ஒன்றாம் மற்றும் மூன்றாம் சீர்களில் மோனை அமைந்தபடியால் ‘பொழிப்பு மோனை’ எனலாம்.

வெண்டளை

இவ்வெண்பாவில் வெண்டளை பிறழாமல் வந்துள்ள இடங்களை இங்குப் பார்க்கலாம்.

 • ஒன்றுமில் – கூவிளம்; லாத – தேமா ➡ விளமுன் நேர் வந்த வெண்டளை
 • லாத – தேமா; விஷயத்திற் – புளிமாங்காய் ➡ மாமுன் நிரை வந்த வெண்டளை
 • விஷயத்திற் – புளிமாங்காய்; குள்ளத்தில் – தேமாங்காய் ➡ காய்முன் நேர் வந்த வெண்டளை
 • குள்ளத்தில் – தேமாங்காய்; என்றும் – தேமா ➡ காய்முன் நேர் வந்த வெண்டளை
 • என்றும் – தேமா; துயர்கொண் – புளிமா ➡ மாமுன் நிரை வந்த வெண்டளை
 • துயர்கொண் – புளிமா; டிருந்திடுதல் – கருவிளங்காய் ➡ மாமுன் நிரை வந்த வெண்டளை
 • டிருந்திடுதல் – கருவிளங்காய்; நன்றோ – தேமா ➡ காய்முன் நேர் வந்த வெண்டளை
 • நன்றோ – தேமா; இருட்டறையில் – கருவிளங்காய் ➡ மாமுன் நிரை வந்த வெண்டளை
 • இருட்டறையில் – கருவிளங்காய்; பூமாலை – தேமாங்காய் ➡ காய்முன் நேர் வந்த வெண்டளை
 • பூமாலை – தேமாங்காய்; பார்த்துப்பாம் – தேமாங்காய் ➡ காய்முன் நேர் வந்த வெண்டளை
 • பார்த்துப்பாம் – தேமாங்காய்; பென்றே – தேமா ➡ காய்முன் நேர் வந்த வெண்டளை
 • பென்றே – தேமா; அரற்றுவதை – கருவிளங்காய் ➡ மாமுன் நிரை வந்த வெண்டளை
 • அரற்றுவதை – கருவிளங்காய்; போன்ற – தேமா ➡ காய்முன் நேர் வந்த வெண்டளை
 • போன்ற – தேமா; தது – மலர் ➡ மாமுன் நிரை வந்த வெண்டளை

வெண்பா எழுதுவது எப்படி என்னும் இந்தப் பதிவைக் குறித்து உங்களுடைய கருத்துகள் கேள்விகள் மற்றும் திருத்தங்களை எனக்குத் தெரிவித்து இந்தப் பதிவை மேலும் பயனுள்ளதாக அமைக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பொருளடக்கம்

விருத்தம் என்றால் என்ன – மரபுக் கவிதை வடிப்போம்

 • விருத்தம் என்றால் என்ன ‘அளவொத்த நான்கடிகள் கொண்ட கவிதையே விருத்தம்’ என்பர். அதாவது, நான்கு அடிகள் பெற்றிருந்து, ஓவ்வொரு அடியிலும் சீர்களின் எண்ணிக்கை சமமாக அமைந்திருந்தால் அதுவே விருத்தக் கவிதையாகும். இந்தப் பதிவில் சில வகை விருத்தங்களை எடுத்துக்காட்டுகளுடன் விரிவாக பார்க்கலாம். பொருளடக்கம் அடிகளின் வகைகள் குறளடி குறள் என்னும் சொல்லின் பொருள் என்ன? ‘குறள்’ என்றால் ‘குறுகிய வடிவம் கொண்ட’ என்று பொருள். உருவத்தில் உயரம் குறைந்த தோற்றம் கொண்ட குறுமுனிவராக திருமால் வாமன அவதாரம்…

  மேலும் படிக்க


பொருளடக்கம்

This Post Has 3 Comments

 1. அ.முகிலன்

  அகவல் முதலிய மீதமுள யாவையும் கழறுங் களன்பரே

  1. இமயவரம்பன்

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, அன்பரே!

   இதைத் தொடர்ந்து வரும் பதிவுகளில் அகவல் இலக்கணத்தையும் மற்ற பிற பாவகைகளையும் எடுத்துக்காட்டுகளுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். தங்கள் ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும் மிகவும் நன்றி!

 2. காஞ்சிபுரம் க தங்கவேல்

  வெண்பா எழுதுவதை எளிய முறையில் விளக்கிய தங்களுக்கு நன்றி 🙏

Leave a Reply