செந்தமிழில் ஷேக்ஸ்பியர் கவிதைகள்

இரக்கம் (Mercy)

இது ஷேக்ஸ்பியர் கவி எழுதிய ‘Merchant of Venice’ என்னும் நாடகத்தில் உள்ள ஒரு சானட்டைத் தமிழில் மொழிபெயர்த்து ‘நிலைமண்டில ஆசிரியப்பாவில்’ எழுதப்பட்டது.

மற்றவர் தூண்ட மலர்ந்திடா(து) இரக்கம்;
இனிய வான்மழை போல மண்ணகம்
நனையப் பெய்து நலந்தரும் இரக்கம்;
இரண்டு விதமாய் இன்னருள் புரியும் -
இரங்கிடும் பெரியோர்க்(கு) இன்பம் அருளிடும்,
இரங்கப் படுபவர்க்(கு) இன்னல் அகற்றிடும்;
வலியவர்க் கெல்லாம் மாபலம் தந்திடும்;
அரியணை மீதினில் ஆண்டிடும் மன்னற்கு
முடியினும் உயர்ந்தது முகத்தொளிர் இரக்கம்;
அரசனின் செங்கோல் - மாட்சியும் ஆற்றலும்
தரைமிசை யாவர்க்கும் தெரியப் படுத்திடும்,
பயமும் நடுக்கமும் பரப்பிடும் செங்கோல்;
செங்கோ லைவிட இரக்கம் சிறந்தது,
அரசனின் மனமாம் அரியணை அதற்(கு)இடம்;
இறைவனின் குணமாய் விளங்கிடும் இரக்கம்;
இரக்கம் மேலுற நீதி எழுந்திடில்
தரையின் சக்தியே வானவன் சக்தியாம்!
அதனால் யூதனே! அன்புடன் கேளாய், -
நீதியை மட்டும்நீ நாடுவாய் ஆயினும்
நியாயத்தைச் சற்றே நினைத்துப் பார்ப்பாய்.
நீதியால் மட்டுமே நற்கதி அடைந்திடோம்,
கருணையும் வேண்டிக் கதிபெறக் கருதுவோம்;
வேண்டிடும் இந்த வேண்டுதல் மட்டுமே
கருணை செயல்செயக் கற்பித் திடுமே. 
- இமயவரம்பன் (மொழிபெயர்ப்பு)

English Original : The Merchant of Venice, Act IV, Scene I [The quality of mercy is not strained] William Shakespeare

The quality of mercy is not strained;
It droppeth as the gentle rain from heaven
Upon the place beneath. It is twice blest;
It blesseth him that gives and him that takes:
'T is mightiest in the mightiest; it becomes
The throned monarch better than his crown:
His sceptre shows the force of temporal power,
The attribute to awe and majesty,
Wherein doth sit the dread and fear of kings;
But mercy is above this sceptred sway;
It is enthronèd in the hearts of kings,
It is an attribute to God himself;
And earthly power doth then show likest God's
When mercy seasons justice. Therefore, Jew,
Though justice be thy plea, consider this,
That, in the course of justice, none of us
Should see salvation: we do pray for mercy;
And that same prayer doth teach us all to render
The deeds of mercy. 

Leave a Reply