அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்

agni kunjondru kanden

Agni Kunjondru Kanden Bharathiyar Kavithai

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
    அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
    வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

     – மகாகவி பாரதியார்

எண்ணத்தில் தோன்றும் எரிதழலின் சிறுபொறியை, மனத்தில் உறைந்திருக்கும் சிறுமை எனும் மரப்பொந்தில் இட்டேன். அந்தச் சிறு பொறியின் சக்தியால் மனத்தின் சிறுமைகள் மடிந்தது மட்டுமல்லாமல், அச்சம், மடமை, துன்பம்,பொய் முதலிய தீமைகள் அனைத்தையும் கொண்ட மனமென்னும் காடே ஒட்டுமொத்தமாக எரிந்தது; சிறுமைகள் சிதைந்தழிந்த நெஞ்சம் நற்குணங்கள் பொலிந்து தெளிவுற்றது. இந்த விந்தை நிகழ்வு உணர்த்தும் உண்மை யாதெனில், வாழ்வில் அல்லவை தேய்ந்து அறம் பெருக வைக்க, பலனளிக்காத ஆயிரம் செயல்கள் செய்வதைக் காட்டிலும், செம்மைப்பட்ட சக்தி வாய்ந்த ஒரே ஒரு எண்ணம் மட்டும் போதும்; தீமைகள் எல்லாம் மாய்ந்து துயர் தீரும். எழுச்சிமிக்க எண்ணத்தின் சக்தியில் சிறியது பெரியது என்ற பாகுபாடில்லை; ஒரே ஒரு எண்ணத்தையோ, சொல்லையோ, செயலையோ கொண்டு பெரியதொரு மாற்றத்தைத் தோற்றுவிக்கும் ஆற்றல் மனிதனுக்கு உண்டு.

In a forest tree I placed a spark
Deep in the bark in a hole so dark
The forest blazed till flames abate
A spark or a blaze, both have strength great

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – பொருளடக்கம்

விளக்கம்

‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்’ (Agni Kunjondru Kanden) என்னும் இந்தப் பாடல், ஒவ்வொரு மனிதனும் ஆன்ம ஒளிக்கடலின் ஒரு பகுதியான அக்கினிக் குஞ்சே என்றும், அளவிட முடியாத அவனது ஆற்றலால் இந்த உலகத்தையே மாற்றி விடலாம் என்றும் பறைசாற்றுகின்றது.

ஆழ்ந்த சிந்தனையையும், அறிவின் களிப்பையும், சிறுமை கண்டு பொங்கும் சீற்றத்தையும் பாரதியின் இந்த ‘சோதிமிக்க சுடர்க்கவிதை’ வெளிக்காட்டுகிறது.

அக்னி குஞ்சொன்று கண்டேன்

அக்னி – இது பாரதியின் பாடல்களில் பரவலாகக் காணப்படும் வார்த்தை. தீயினைக் கும்பிடும் செழுங்கவிஞரான பாரதி, தீமைகளை அழிக்கும் ஒரு புனித சக்தியாகவே அக்கினியைப் பார்த்தார். அக்னி ஸ்தோமம் என்னும் பாட்டில் ‘எங்கள் வேள்விக் கூட மீதில் ஏறுதே தீதீ!’ என்று முழங்குகிறார். அதோடு நிற்காமல், அந்தப் பாட்டை ‘Agni – The God-Will’ என்னும் தலைப்பில், (‘Agni and other poems and Translations’ என்னும் புத்தகத்தில்) ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தார் பன்மொழிப் புலவரான பாரதி.

எங்கள் வேள்விக் கூட மீதில்
ஏறுதே தீ! தீ! – இந் நேரம்
பங்க முற்றே பேய்க ளோடப்
பாயுதே! தீ!தீ!

பாரதி (அக்னி ஸ்தோமம்)

Lo, He is arising on the altar of our sacrifice, Agni, the All-Will ablaze, and He leaps forth on all sides chasing the defeated shadows of the Dark Realm, – the Flame!

Bharathi (Agni and other poems and Translations)

மேலும், ‘தீக்குள் விரலை வைத்தால், நந்தலாலா, நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா’ என்ற பாடல் வரிகளில், இறைவன் அக்னி ஸ்வரூபமானவன் என்று உணர்ந்துருகிப் பாடுகிறார். ‘காய் அழல் ஏந்திய பித்தன்’ என்றே பிறிதோர் இடத்தில் இறைவனைக் குறிக்கிறார். தமது வசனக் கவிதையிலும் தீயினை அறிவுக் கனலெனவே போற்றுகிறார்.

தீயின் இயல்பே ஒளி. தீ எரிக. அதனிடத்தே நெய்
பொழிகின்றோம். தீ எரிக. அதனிடத்தே தசை பொழிகின்றோம். தீ எரிக அதனிடத்தே செந்நீர் பொழிகின்றோம். தீ எரிக. அதற்கு வேள்வி செய்கின்றோம். தீ எரிக.

அறத் தீ, அறிவுத் தீ, உயிர்த் தீ, விரதத் தீ,வேள்வித் தீ,சினத் தீ, பகைமைத் தீ, கொடுமைத் தீ-இவை யனைத்தையும் தொழுகின்றோம். இவற்றைக் காக்கின்றோம் இவற்றை ஆளுகின்றோம். தீயே நீ எமது உயிரின் தோழன். உன்னை வாழ்த்துகின்றோம்.

நின்னைப்போல, எமதுயிர் நூறாண்டு வெம்மையும்-சுடரும்
தருக, தீயே நின்னைப்போல,எமதுள்ளம் சுடர்விடுக. தீயே,நின்னைப்போல எமதறிவு கனலுக.

பாரதியார் (வசனக் கவிதைகள்)

தீயிடம் பாரதியாருக்கிருந்த ஈடுபாட்டையும் வேட்கையையும் உணர்ந்த பாவேந்தர் பாரதிதாசனும் ‘மண்டும் மதங்கள் அண்டா நெருப்பு’ என்று பாரதியைப் போற்றி மகிழ்கிறார்.

பாரதியார் தமக்குள் சுடர்விட்டு எரியும் ஞானத் தீயை ‘வேர்ச்சுடர் பர மாண்பொருள்’ என்கிறார். அந்த மெய்ப்பொருளை அக்கினிப் பொறியாகத் தம் மனத்தின்கண் காண்கிறார்; கண்டுணர்ந்த பரவசத்தால் ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்’ என்று ஆனந்தக் களிப்புடன் தமது பாடலைத் தொடங்குகிறார்.

பொருளடக்கம்

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

‘மொத்தக் காட்டையே வெட்டி அழியுங்கள்; மரத்தை மட்டுமல்ல’ – என்றார் புத்த பகவான். அவர் குறிப்பிடும் காடு எத்தகையதென்றால், ஆசை, கோபம், அறியாமை போன்ற மரங்கள் அடர்ந்த வனப்பிரதேசம். அத்தகைய காட்டினை முழுவதுமாக வேரொடு சாய்க்காமல், வெறும் மரங்களை மட்டும் அவ்வப்போது வெட்டிக் கொண்டிருந்தால் அக்காட்டினால் வரக்கூடிய தீமைகள் அடங்க மாட்டா. காடு முழுவதும் எரிந்தாலன்றி ஆசையால் உண்டாகும் ஆபத்துகள் மறைய மாட்டா.

போதி முனிவரின் இந்தப் போதனையை மனத்தில் கொண்ட பாரதியார், தம் மனத்தை மாசுபடுத்தும் தீமையெனும் காட்டை அழிக்க முனைந்தார். ‘அவ்வாறு அந்தக் காட்டை அழிப்பதற்கு ஒவ்வொரு மரமாக வெட்ட வேண்டியதில்லை; ஒரே ஒரு மரத்தில் ஒரு சிறிய பொந்தில் தமது ஞானத்தீயின் பொறியை மட்டும் வைத்தால் போதும். அது பற்றி எரிந்து மொத்தக் காட்டினையும் அழிக்க வல்லது’ – என்பதை உணர்ந்து பொய்ம்மையெனும் பொந்தில் அந்த அக்கினிக் குஞ்சினை வைத்துவிட்டுக் காடு தானாக அழிவதை வேடிக்கைப் பார்த்தார்.

வெந்து தணிந்தது காடு

சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே

சூரிய காந்தமும் சூழ்பஞ்சைச் சுட்டிடா

சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்

ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே  .

திருமூலர் திருமந்திரம்

பொருள் : சூரிய காந்தக்கல் தனியே நிற்கும்போது தன்னை மூடியுள்ள பஞ்சினைச் சுடாது. ஆனால், சூரியன் தோன்றியபின் அதன் கிரணங்களைப் பெற்றுத் தன்னை மூடியுள்ள பஞ்சுகளைச் சுட்டெரிக்கும். அதுபோல் இறைவன் குருவாக தோன்றியவுடன் நம் மனத்தில் உள்ள மாசுகள் அழிந்து மனம் சுடர்விடும்.

இறைவன் ஞானவடிவாக வந்தவுடன் அவன் முன்னிலையில் மாசுகள் அழிவதைப்போல, பாரதியின் அக்கினிக் குஞ்சின் வலிமையால் சிறுமையெனும் காடு எரிந்தொழிந்தது. அதன் விளைவாகப் பழமையும் பொய்ம்மையும் மடமையும் மிடிமையும் அழிந்தொழிந்தன. தீயின் வெப்பம் அடங்கியதும் மனம் வெட்டவெளியாகிப் பிரகாசித்தது.

தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

ஒரு சிறு பொறியிலிருந்தும் பெருநெருப்பு கிளர்ந்தெழலாம்.

இத்தாலியக் கவிஞர் டாண்டே

From the little spark may burst a mighty flame

Italian poet Dante

கவிஞர் டாண்டே இயற்றிய நூல்களைக் கற்றுணர்ந்த பாரதியார் அக்கினிக் குஞ்சும் ஆற்றல் வாய்ந்தது என்பதை அறிந்திருந்தார். உலகினில் தீமைகள் மாய அகத்தினை முதலில் தூய்மையாக்க வேண்டும். அதற்கு முதற்படியாக மனமென்னும் காட்டில் அடர்ந்து பரவியிருக்கும் மாசுகள் மறையவேண்டும். அந்த மாசுகளை அழிக்க ஞானப்பெருக்கின் முதிர்வினால் (மூப்பினால்) விளைந்த அக்கினிச் சுவாலைகள் தேவையில்லை; ஒரே ஒர் அறிவார்ந்த சிந்தனையால் உண்டாகும் சிறிய அக்கினிப் பொறி (அக்கினிக் குஞ்சு) மட்டுமே போதும். அந்த அக்கினிக் குஞ்சின் ஆற்றல் (வீரம்) சுடர்விட்டு எரியும் பெரிய தீப்பிழம்பின் ஆற்றலுக்குச் சமமானது. அதனால் நெருப்பின் ஆற்றலை ஆராய்ந்து பார்க்கும்போது சிறுபொறியும் பெருநெருப்பும் நிகரானவை தானே? – என்று எண்ணி வியக்கிறார் பாரதியார்.

பொருளடக்கம்

மனிதனென்பவன் தெய்வமாகலாம்

சாமி நீ; சாமி நீ; கடவுள் நீயே; தத்வமஸி; தத்வமஸி; நீயே அஃதாம்‘ – என்று தனிமனிதனைக் கடவுளுக்கு நிகரான ஆற்றல் படைத்தவனாகக் காட்டும் புரட்சிகரமான பாடல் இது. ‘தத்வமஸி’ என்னும் வேத வாக்கியத்தின் பொருள் ‘அதுவே நீயென்று இரு’ ( தத் + த்வம் + அஸி ) . இந்தக் கருத்தினை மேலும் வலியுறுத்தும் பாரதி ‘ஒன்று பிரமம் உளது உண்மை – அஃது உன் உணர்வு எனும் வேதமெலாம்’ என்றும் உணர்த்துகிறார். மனிதனின் தன்மை இறைவனின் தன்மையினும் வேறானது அல்ல என்னும் இக்கருத்தை வள்ளலாரும் மொழிவதைக் காணலாம் :

தந்தை தன்மையே தனையன்தன் தன்மை
என்று சாற்றுதல் சத்தியம் கண்டீர்
அந்த ணாளன்மெய் அறிவுடை யவன்என்
அப்பன் தன்மைஎன் தன்மைஎன் றறிமின்.

வள்ளலார்

‘அப்பன் தன்மை என் தன்மை’ என்று ஒவ்வொரு மனிதனின் உள்ளேயும் ஒளிரும் தெய்வீக இயல்பை எவ்வளவு அழகாக வள்ளலார் இங்குச் சுட்டிக் காட்டுகிறார் பாருங்கள்!

ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே ஒளிப்பிழம்பின் பகுதிகள்தான் என்பதைப் பறைசாற்றும் இந்தக் கவிதை, திருமூலரின் இந்த மந்திர வார்த்தைகளை நினைவுபடுத்துகிறது.

சீவனெனச் சிவனென வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட் டிருப்பரே

திருமூலர்

‘மனிதனும் தெய்வமும் வெவ்வேறல்ல; தானும் கடவுள் என்று அறியாத வரைக்கும் தான் அவன் மனிதன். தனக்குள் உறையும் கடவுளை அறிந்தபின், மனிதனும் கடவுளாகிறான்’ – என்கிறார் திருமூலர்.

திருமழிசை ஆழ்வார் தம் ‘திருச்சந்த விருத்தம்’ என்னும் நூலில், ‘கடலலைகள் எவ்வாறு கடலில் தோன்றி கடலிலேயே மறைகின்றனவோ, அதே போன்று தான் மனிதர்களும் கடவுளின் ஒரு பகுதியாகத் தோன்றி கடவுள் என்னும் சக்தியில் இறுதியில் அடங்கிவிடுகின்றனர்’ என்று சொல்லி ‘ஜீவாத்மா என்பது பரமாத்மாவின் ஒரு பகுதியே. ஜீவாத்மா பரமாத்மாவினும் முற்றிலும் வேறுபட்டதல்ல’ என்னும் விசிஷ்டாத்வைதத் தத்தவத்தை உணர்த்துகிறார்.

தன்னுளே திரைத்தெழும் தரங்க வெண் தடங்கடல்
தன்னுளே திரைத்தெழுந்து அடங்குகின்ற தன்மைபோல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே.

திருமழிசை ஆழ்வார்

இதையே, ஓஷோவும், கிருஷ்ணரைப் பற்றித் தன் ‘கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும்’ (Krishna – the man and his philosophy’) என்னும் புத்தகத்தில் பின்வருமாறு சொல்கிறார்:

நாம் எல்லோரும் கிருஷ்ணனைப் போன்றவர்கள். ஆனால் நமக்கும் கிருஷ்ணனுக்கும் ஒரு சிறிய வித்தியாசம் உண்டு. அது என்னவென்றால், கிருஷ்ணன் தான் அலையாக இருக்கும்போதே தான் சமுத்திரம் என்று உணர்ந்தவன். ஆனால் நாமோ நம்மை அலைகளாகவே பார்க்கிறோம், ‘நாம் சமுத்திரத்தைச் சேர்ந்தவர்கள், நாமும் சமுத்திரம்’ என்னும் பேருண்மையை மறந்து விடுகிறோம்.

ஓஷோ

All of us are like Krishna, but there is a small difference. When Krishna is dancing as a wave he
is aware that he belongs to the ocean, he is the ocean itself. But as far as we are concerned we
know ourselves only as waves; we forget that we are the ocean. This is the difference between us
and Krishna. And since we know ourselves only as waves, we fail to understand the oceanic form
of Krishna.

Osho

அக்கினிக் குஞ்சொன்றைக் கண்ட பாரதியும், ‘சிறுபொறியாக இருந்தாலும் ஆற்றல் குறையாது; இந்தப் பிரபஞ்ச சக்தியின் அனைத்து வலிமையும் ஒரு மனிதனுக்குள் உண்டு’ என்னும் தத்துவத்தைச் சொல்லி இந்தப் பாடல் மூலம் மன உறுதியும் தன்னம்பிக்கையும் ஊட்டுகிறார்.

பொருளடக்கம்

எண்ணமும், சொல்லும், உள் நோக்குக் பார்வையும்

‘எண்ணத்திருக்கும் எரியே சக்தி’ – பாரதி

தீமை பொடிபட நன்மை விளங்கிட உதிக்கும் ஞானத்தின் சிறுபொறியானது சீறி எழுந்து சிறுமை எனும் காட்டை அழிக்கும் திறன் வாய்ந்தது. இந்த ஞானச் சிறுபொறியையே எண்ணத்திருக்கும் எரி என்கிறார் பாரதி.

இந்த எண்ணத்தின் எரிதழலே உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகக் காரணமாகின்றது. இந்தச் சிறுபொறியே நாவில் ஒளியேற்றி விடுத்த வாய்மொழிக்கெல்லாம் வெற்றி விளைவிக்கின்றது. நினைவில் தோன்றும் இந்த சிறுநெருப்பே வெள்ளப் பெருக்காக கலையையும் கவிதையையும் தோற்றுவிக்கின்றது; அறியாமை நீக்கி விழித்தெழச் செய்கின்றது. இந்த அருமையான கருத்தைப் பாரதி பின்வரும் பாடலின் மூலம் தெரிவிக்கிறார்.

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்
      வாக்கினிலே ஒளி உண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப் பெருக்கும்
     கவிப்பெருக்கும் மேவுமாயின்
பள்ளத்தில் வீழ்ந்து இருக்கும் குருடர் எல்லாம்
     விழி பெற்றுப் பதவி கொள்வார்,
தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவைகண்டார்
      இங்கு அமரர் சிறப்புக் கண்டார்.

பாரதி

அத்தகைய உண்மை ஒளியை உள்ளத்தில் எவ்வாறு கொண்டு வருவது? ஒரே ஒரு சொல்லை மட்டும் சொன்னால் இன்ப ஒளி வெள்ளம் பெருகி கவலை என்னும் காட்டை அழிக்க முடியும் என்றால் மிக நன்றாக இருக்குமல்லவா? இந்தக் கேள்விகள் பாரதியின் மனத்தில் தோன்றியதும், தேவசக்திகளை நம்முள் வேரூன்றி நிலைக்கச் செய்யும் வார்த்தை ஒன்றைத் தேடிப்பார்க்கிறார். மெய்ப்பொருளை அறிந்துரைக்கும் ஒரே ஒரு வார்த்தைக்குக் கூட நம் வாழ்வையே மாற்றியமைக்கக் கூடிய சக்தி உண்டு என்று கண்டறிந்த பாரதியார் அத்தகைய ஒரு சொல்லைத் தமக்குத் தெரிவிக்குமாறு தேவர்களைப் பார்த்துக் கேட்கும் பாடல் இங்கே:

‘ஓம்’ என் றுரைத்துவிடிற் போதுமோ? — அதில்
உண்மைப் பொருளறிய லாகுமோ?
தீமை யனைத்துமிறந் தேகுமோ? — என்றன்
சித்தம் தெளிவுநிலை கூடுமோ?

‘உண்மை ஒளிர்க’ என்று பாடவோ? — அதில்
உங்கள் அருள் பொருந்தக் கூடுமோ?
வண்மை உடையதொரு சொல்லினால் — உங்கள்
வாழ்வு பெறவிரும்பி நிற்கிறோம்.

“தீயை அகத்தினிடை மூட்டுவோம்” — என்று
செப்பும் மொழிவலிய தாகுமோ?
ஈயைக் கருடநிலை யேற்றுவீர் — எம்மை
என்றுந் துயரமின்றி வாழ்த்துவீர்.

பாரதி

ஒரே ஒரு சொல்லால் மட்டும் தான் உண்மை ஒளி உண்டாக்க முடியுமா? உள்ளம் தெளிவடைய ஒரே ஒரு பார்வை மட்டுமே போதும் என்பார் திருமூலர். “பொய்ச் சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தைகளை நம்பியிராமல், அந்தச் சாத்திரங்கள் சொல்லும் முரண்பட்ட கருத்துக்களாலும் கோட்பாடுகளாலும் மனம் குழம்பாமல், அவற்றையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு, ஒரு கணமேனும் எண்ணங்களின் ஓட்டத்தைக் கவனித்துப் பாருங்கள். அவ்வாறு பார்த்த அந்த ஒரு பார்வையானது பசுமரத்து ஆணிபோல் ஆழமாகப் பதிந்து, உங்களைக் கட்டிப்போட்டிருக்கும் பிறவி என்னும் தளையைத் தகர்த்தெறிந்து உங்கள் மனத்தை விடுவித்து உள்ளொளி பெருக்கும்.”

சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டு நீர்
மாத்திரைப் போது மறித்து உள்ளே நோக்குமின்
பார்த்த அப் பார்வை பசுமரத்து ஆணி போல்
ஆர்த்த பிறவி அகல விட்டு ஓடுமே.

திருமந்திரம்

உள் நோக்கிப் பார்க்கும் பார்வை என்னும் அக்கினிக் குஞ்சொன்றால் பிறப்பு-இறப்பு சுழற்சியுள் பட்ட பந்தமென்னும் காட்டுக்குத் தீவைத்த திருமூலரும், சொல்லென்னும் தீப்பொறியால் துயர் எனும் காட்டை அழித்து ஈயையும் கருடநிலைக்கு ஏற்றம் பெறச்செய்யும் பாடல் பொழிந்த பாரதியும் தீயை அகத்தில் மூட்டவல்ல செழுங்கவிஞர்கள் என்பதில் ஐயமில்லை.

பொருளடக்கம்

இலக்கு

இலக்கு என்பது நமது வாழ்வை நெறிப்படுத்தும் ஒரு சக்தி ஆகும். அது நம் வாழ்க்கைப் பயணத்தின் துருவ நட்சத்திரமாக இருந்து நம்மை வழி நடத்துகின்றது. பாரதியின் ‘அக்கினிக் குஞ்சாக’ உள்ளத்தில் சுடர் விட்டு எரிந்து நம் வாழ்க்கைப் பாதையில் ஒளி ஏற்றுகின்றது. எதிர்ப்படும் தடைகளெனும் காடுகளையெல்லாம் எரித்துத் தரைமட்டமாக்க வைக்கும் ஆற்றல் வாய்ந்தது. ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்’ (Agni kunjondru kanden) என்று பாரதியை ஆனந்தக் களிப்பில் அருங்கவி பாட வைத்தது அவன் தன் சீரிய இலக்கை நோக்கிப் பார்த்த தீர்க்கதரிசனப் பார்வையே எனலாம்.

ஒரு கருத்தை எடுத்துக்கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை மயமாக்கு. அதையே கனவு காண். அந்த கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா. மூளை, தசைகள், நரம்புகள், உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தே நிறைந்திருக்கட்டும் அந்த நிலையில் மற்ற எல்லாக் கருத்துக்களையும் தவிர்த்துவிடு. வெற்றிக்கு இதுதான் வழி.

விவேகானந்தர்

“Take up one idea. Make that one idea your life — think of it, dream of it, live on that idea. Let the brain, muscles, nerves, every part of your body, be full of that idea, and just leave every other idea alone. This is the way to success.”

Swami Vivekananda

‘ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு தனித்துவமும், மகத்தான ஆற்றலும், பேரார்வத்துடன் செயல்படும் திறனும், தன்னை அறிந்து சாதனை பல படைக்கும் வல்லமையும் உண்டு’ என்று நன்குணர்ந்தவர் சுவாமி விவேகானந்தர். அதனால்தான், ‘அத்தகைய சாதனைகளைச் செயல்படுத்தத் தேவை ஒரு திட்டம். ஒரு இலக்கு நெறி. அது உங்களை வழி நடத்தும். உங்கள் எண்ணங்களை எல்லைகள் பல தாண்டி அப்பால் பயணிக்க வைக்கும். உங்கள் உணர்வு நிலைகள் புதிய பரிமாணங்களில் விரிவடையும். உங்கள் திறன்களும் மேம்பட்டு நீங்கள் எண்ணிய நிலையை விட, கனவு கண்டதை விட, அனைத்தையும் தாண்டிய ஓர் உன்னத நிலையை நீங்கள் அடைய முடியும். எனவே, அந்த இலக்கை அடையும் வரை உங்கள் வெற்றிப் பயணத்தை நிறுத்தாதீர்கள்! எழுமின்! விழிமின்!’ என்று வீர முழக்கம் செய்தார்.

பொருளடக்கம்

திட்டமிடுதல்

‘இளைஞர்களே கனவு காணுங்கள்’ என்ற நமது முன்னாள் குடியரசுத் தலைவர் திரு அப்துல் கலாம் அவர்களின் எழுச்சி வாசகம் இன்றைய இந்திய இளைஞர்களுக்கு இலக்குகள் நோக்கிய பயணத்திற்கான உத்வேகத்தை கொடுத்துள்ளது. இத்தகைய இலக்கை அடைவதற்கு திட்டமிடுதல் மிகவும் அவசியம். திட்டமிடுதல் உங்களை உங்கள் இலக்கு நோக்கிய உறுதிப்பாட்டுடன் இருக்க வைக்கின்றது. மேலும், இன்றைய உங்களை விட நாளைய நீங்கள் சிறப்புடன் தோன்ற, செயல்பட உதவுகின்றது.

இலக்கினை உருவாக்குதல் என்பது நெஞ்சில் ஓர் அக்கினிக் குஞ்சினைத் தோற்றுவிப்பதற்கு சமம். அந்த இலக்கினை அடைவதற்கு திட்டமிடுவதைக் காட்டில் ஒரு மரப்பொந்தில் எரிமூட்டுவதோடு ஒப்பிடலாம். அவ்வாறு திட்டமிட்ட பின், அந்த இலக்கின் சக்தியே தடைகளை அழித்து வெற்றிக்கொடி நாட்டும். இதையே பாரதி ‘வெந்து தணிந்தது காடு’ என்று முழங்குவதாகக் கொள்ளலாம். வாழ்வில் நிறைய இலக்குகளை வைத்திருப்பதைக் காட்டிலும் ஒரே இரு இலக்கு மட்டும் இருப்பின், உங்கள் ஒட்டுமொத்த சக்தியையும் குவித்து அந்த இலக்கினை நோக்கிச் செலுத்த வெற்றி கிட்டுவது நிச்சயம். அந்த அக்கினிக் குஞ்சாம் ஒற்றை இலக்கின் வலிமையைக் குறைவாக மதிப்பிடவேண்டாம் என்பதையே ‘தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ’ என்று பாடி உணர்த்துகிறார் பாரதி.

பாவகை

‘அக்னி குஞ்சொன்று கண்டேன்’ என்னும் இந்தப் பாட்டு ‘ஆனந்தக் களிப்பு’ என்னும் சிந்துப் பாடலின் மெட்டில் அமைந்துள்ளது. இந்த மெட்டில் அமைந்துள்ள மற்ற பாடல்கள்: பாரதியின் ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்ற பாட்டும், கடுவெளிச் சித்தரின் ‘நந்தவனத்திலோர் ஆண்டி’ என்னும் பாட்டும் சில எடுத்துக்காட்டுகள்.

பொருளடக்கம்

Leave a Reply