ஞானிகள் காட்டும் நல்வழிகள்

வாழ்வின் போக்கை வழிநடத்தி மனத்தைச் செம்மைப்படுத்தும் நூல்களைக் காண்பது மிகவும் அரிது; அந்நூல்களை நமக்கு அளிக்க இந்தப் புவியில் புகழொடு தோன்றிய மெய்ஞ்ஞானிகள் வெகு சிலரே ஆவர். அத்தகைய ஞானியரில் என் மனம் வியந்த சான்றோரைப் பற்றிப் பின்வரும் பாடல்களில் காணலாம்.

ஞானிகள் புகழ் பாடுவோம்

ஆரமுதாம் தமிழிசைக்கோர் அழகைச் சேர்க்கும்
    ஆழ்வார்நா யன்மார்தம் கவியில் ஆழ்ந்தேன்,
வீரமிகு பார்வையில்வே தாந்தம் சொல்லும்
    விவேகா னந்தமுனி ஞானம் கேட்டேன்,
“சேருமொளி ஆவாய்நீ உனக்கே” என்று
    தெளிவித்த புத்தனின்சொற் பொருளை ஆய்ந்தேன்,
பார்பிணைக்கும் தளையகன்று சிறுமை சாயப்
    பரிவுடன்’ஜே கே’மொழிந்த உரைகேட் டேனே!
நான்யாரென்(று) ஆத்மவிசா ரணைசெய் தாலே
    ஞானங்கொள் வாயென்றார் ரமண யோகி,
தேனூறும் கவிதையில்வாழ் நெறியைச் சொல்லிச்
    சிந்திக்கச் செய்தார்நம் கலீல் ஜிப்ரான்,
தானாகக் கண்சொரிய மனம் உருக்கும்
    கீதாஞ்ச லிதந்தார் தாகூர் எம்மான்,
வானோடு மண்ணாளும் அன்பைச் சொல்லும்
    மாமனிதர் இவர்களென்றன் நெஞ்சாள் வாரே!

வேதாந்தம் முழங்கிய விவேகானந்தரையும், ‘நீயே உனக்கு ஒளியாவாய்’ என்று ஞானம் சொன்ன புத்தரையும், ‘நான்யார்’ என்ற ஆத்ம விசாரணையைப் போதித்த ஶ்ரீரமணரையும், அருள்பெருஞ்சோதியாய் ஒளிதந்த வள்ளாலாரையும், ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்ற நாவுக்கரசரையும், ‘உள்ளம் கவர் கள்வர்’ ஞான சம்பந்தரையும் பின்வரும் பாடல்களில் போற்றித் துதிப்போம். ஞானிகள் காட்டும் நன்னெறிகளைக் கடைப்பிடிப்போம்.

விவேகானந்தர்

ஞானிகள் காட்டும் நல்வழிகள்

நம் பாரத தேசத்தில் தலைசிறந்த ஞானிகள் பலர் தோன்றி ஆன்ம ஒளி பரப்பிச் சிறப்பித்துள்ளார்கள். அவர்களில் முதன்மையானவர் சுவாமி விவேகானந்தர்.

“சொல்லுரம் பெற்ற செல்வன், சோர்விலாத் தூய வீரன்” என்று அனுமனைக் குறித்துக் கவிச்சக்ரவர்த்தி கம்பர் பாடியது விவேகானந்தருக்கும் பொருந்தும்.
வீரம், விவேகம், பற்றற்றத் தூய்மை, தன்னலமற்ற அன்பு போன்ற நற்பண்புகளின் இருப்பிடமாகக் கொண்டு விளங்கும் விவேகானந்தரைப் போற்றும் வெண்பாக்கள் இங்கே.

வீர விழிபார்க்க, விண்ணதிரும் சொல்முழங்கக்,
காரிருளைப் போக்கும் கதிரவன்போல் – பாரிருளை
வேரறுக்க வந்தான் விவேகா னந்தனெனும்
பாரதத்தாய் பெற்ற பரன்.
சோர்வை ஒழித்திடும் பற்றனைத்தும் சுட்டெரிக்கும்
பார்வையில் போர்வலிமை பாய்ச்சிடுமே – நேரில்
நவமாய்ச் சுடர்தந்து ஞானவொளி வீசும்
விவேகா னந்தன் விழி.
வேதாந்த சிங்கத்தின் விண்முழக்கம் கேட்டொடுங்கி
மோதும் நரிக்கூட்டம் ஓடிவிடும் – தீதில்
இலக்கை அடைய விழித்தெழுங்கள் என்றான்
கலைக்கடலே போன்றக் கவி.
சகமனைத்தும் காக்கும் தனிச்சக்தி உன்றன்
அகமிருக்க நற்செயலை ஆற்றாய் – திகழ்ந்தொளிரும்
தோள்வலிமை காட்டித் துயரழிப்பாய் என்றான்நெஞ்(சு)
ஆளும்விவே கானந்தன் தான்.

புத்தர்

ஞானிகள் காட்டும் நல்வழிகள்

போதியம் திருநிழல் புனிதன், மாரனை வெல்லும் வீரர், மாயையைத் விலக்கும் சோதி, பூரணம் அடைந்த தேவர் என்று போற்றப்படும் சாக்கிய முனியாம் கௌதம புத்தரின் பொன்மொழிகள், போதனைகள் மற்றும் ஆன்ம சாதனைகள் பற்றிப் புகழ்ந்திசை பாடும் கவிதைகள் இங்கே!

புத்தரின் போதனைகள் பாரெங்கும் பரவியதால் கல்வியும் கலைகளும் சிறந்தன; சிற்பங்களும் சிலைகளும் செழித்துப் பெருகின. சாதி ஏற்றத் தாழ்வுகள் குறைந்து, எங்கும் சமரச மனப்பான்மை தழைக்க புத்தரின் போதனைகள் பெருந்துணை புரிந்தன. புத்தர் தமது போதனைகளில் சாத்திரங்களையோ புராணங்களையோ மேற்கோள்களாகக் கொள்ளவில்லை. கண்முன்பு கண்ட விஷயங்களையே ஆதாரமாய்க் கொண்டு, பகுத்தறிவுக்கு ஒத்த முறையிலேயே புத்தர் போதனைகள் செய்து வந்தார்.

உலகில் எங்கும் துக்கம் நிறைந்திருப்பதைக் கண்டு, அவர் அதன் காரணத்தை ஆராய்ந்து பார்த்தார். துக்கத்துக்குக் காரணம் அவா; அவாவிற்குக் காரணம் பேதைமை என்பதை அறிந்து கொண்டார். இவைகளை நீக்கி, மனிதன் விடுதலை பெற அறிவுறுத்தி நன்னெறியில் செல்ல புத்தரின் போதனைகள் வழிவகுக்கின்றன.

குறிப்பு: இங்கு அளிக்கப்பட்டுள்ள புத்தரின் பொன்மொழிகள் அனைத்தும் ‘தம்மபதம்‘ என்னும் பெருநூலிலிருந்து தொகுக்கப்பட்டவை.

பாவகை : நொண்டிச் சிந்து

சோதி முகத்தின் மோன ஒளி

போதி மரநிழலில் – திகழ்
  புத்தெழில் பொங்கும் புனிதனவன்
சோதி முகத்தினையே – மோனம்
  சூழ்ந்திடும் பூரண ஒளியெனலாம்.

புத்தரின் பொன்மொழிகள்

மோதும் துயர்கெடவே – அருள்
  ஓங்கிடும் அன்புடன் ஞானமொழி
போதனை யாயுரைத்தான் – அவன்
   பொன்மலர் வாய்மொழி கேட்டுயர்வீர்!

வெற்றியின் மீது பற்று வேண்டாம்

வெற்றியே பகைவளர்க்கும் – பின்பு
  வெல்லப் பட்டார்க்கெலாம் துயர்விளைக்கும்
முற்றிலும் பற்றைவிட்டால் – வெற்றி
  மோகத்தை ஞானம் அழித்தொழிக்கும்.

தருமமே அருந்துணை

சுற்றமும் துணைவருமோ – தேகம்
  சுட்டெரிந் திறுதியில் கிடக்கையிலே
உற்றநல் தருமமொன்றே – உன்றன்
  உயிர்த்துணை யாக உடன்வருமே!

தருமம் எனும் நிலத்தில் ஆசை எனும் களை எடுப்பீர்

தருமம் எனும் நிலத்தில் – வாழ்வைத்
  தாழ்த்திடும் ஆசையாம் களை(இ)ருந்தால்
கருதும்மெய்ஞ் ஞானமென்னும் – உயர்
  கலப்பைகொண் டே(அக்) களைகளைவீர்!

தெளிவு விதை தூவி ஒழுக்க நீர் பாய்ச்சுவோம்

உன்னத மனநிலத்தில் – விடா
  முயற்சியாம் எருதுகொண் டே(இ)ழுப்போம்
பன்னரும் தெளிவுவிதை – தூவிப்
  பாய்ச்சுவோம் ஒழுக்கமாம் நீரினையே.

முக்தி அறுவடை

அழிவில்நிர் வாணமென்னும் – தெள்
  ளமுதத்தை அறுவடை செய்துவெல்வோம்
ஒழிவிலா முக்திநிலை – எய்தி
  உணர்வெலாம் ஒருநிலைப் படுத்திநிற்போம்.

நீயே உனக்கு அடைக்கலம், உன் வாழ்வுக்கு நீயே வழிகாட்டும் சோதி

அடைக்கலம் யாருமில்லை – உனக்(கு)
  அடைக்கல மாகநீ யே(இ)ருப்பாய்.
துடைத்துத் துயர்விலக்கும் – சுடர்ச்
  சோதியாய் நீயுனக் கே(இ)ருப்பாய்.

பாவகை : ஆனந்தக் களிப்பு மெட்டு

ஆன்ம ஜெயமே வீரம்

ஆயிரம் யானைகள் வீழ்த்திப் – படை
  ஆயிரம் வெல்வது வீரமும் அல்ல
மாய மனத்தினைக் கட்டி – ஆசை
  மாய்த்திடும் வீரமே மாவீர மாகும்.

மனக் கட்டுப்பாடே ஆயிரம் யாகம் வளர்த்ததற்கு சமம்

ஆயிரம் யாகம் வளர்த்துப் – பல்
  லாண்டுகள் ஆற்றிடும் வேள்விகள் வேண்டாம்
பாயும் மனத்தினை வென்றால் – அது
  பல்யாகம் செய்ததன் பலனினைத் தருமே.

தானே தனக்குத் தலைவன்

தனக்குத் தானேதனித் தலைவன் – என்றும்
  தனக்குத் தானே தனிச் சுடர்மிகும் சோதி
தனக்குத் தானே சரண் புகுந்தால் – என்றும்
  தன்னை வருத்திடும் தளைகளும் அறுமே.

ஶ்ரீ ரமண மகரிஷி

ஞானிகள் காட்டும் நல்வழிகள்

நமது உண்மை சொரூபம் என்பது நினைவுகளற்றிருக்கும் நன்னிலை. அதனைத் தெளிய ஆன்ம விசாரம் ஒன்றே வழி; ‘நான் யார்’ என்று தன்னை வினவிப் பார்த்தால் விவேகம் பிறக்கும் என்றார் ஶ்ரீ ரமண மகரிஷி.

மகரிஷி மொழிந்தருளிய மறையுரையானது, மனத்தின் அஞ்ஞானம் என்னும் பிணியைப் போக்கும் அருமருந்து; எண்ணங்களின் பிடியிலிருந்து இந்தக் கணமே ஆத்ம விடுதலை பெற எழிச்சியூட்டி இதமளிக்கும் இன்மொழி; வேதாந்தத்தின் சாரத்தை விளக்கி வழிகாட்டும் விளக்கொளி.

திருச்சுழி பிறந்து திகழொளி வீசி
இருள்கெட உலகில் எழுந்திடும் இரவி,
அருணை என்னும் அருட்சுடர் மலையில்
அருந்தவம் புரிந்த ஆன்ம விளக்கு,
தன்னை அறிந்து தன்னலம் துறந்து
தனிப்பெரும் ஞானம் தழைத்திடும் முனிவர்,
அருமறை போன்ற அருளுரை செய்தே
இரமணர் இனிதாய் இங்ஙனம் மொழிவார்:
நான்யார் என்ற ஞான விசாரம்
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும்,
இறவா நன்னிலை இன்றே அமைய
ஆத்ம சொரூபத்தின் அறிவை அளிக்கும்,
எல்லாச் சீவனிலும் இருக்கும் சிவனை
எல்லை இல்லாமல் இலங்கிடும் உண்மையை
இதுவும் அன்றே இதுவும் அன்றென
வேதாந்த சொற்படி பொய்ம்மை விலக்கித்
தீதறப் பார்த்தால் பிறந்திடும் தெளிவே!

வள்ளலார்

வள்ளலார்

சமரச மார்க்கம் தழைத்திட வந்து
  சமயங்கள் பிணக்கற இணைத்தார்!
தமக்கென வாழா அன்பினில் ஓங்கும்
  தருமத்தால் பசிப்பிணி தடுத்தார்!
அமைதியின் உருவாம் அசைந்திடா ஜோதி
  அருள்வடி வாகும்நம் அடிகள்
கமலபா தங்கள் நடந்திட்ட வழியைக்
  கருதியே கடைப்பிடித் திடுவோம்!
நெஞ்சினை உருக்கி நெகிழ்த்திடும் சொற்கள்
  நித்தியக் களிப்பினை அளிக்கும்,
பஞ்சினை எரிக்கும் பொங்கழல் அதுபோல்
  பழமையில் மடமையை அழிக்கும்,
நஞ்சென மாய்க்கும் நாம்படும் துயரை,
  நலமுறத் தெள்ளறி வருளும்,
செஞ்சொலால் அமைந்த தெய்வநல் அருட்பா
  திரண்டிடும் தேன்சுவை அமுதே!

நாவுக்கரசர்

ஞானிகள் காட்டும் நல்வழிகள்

கூற்றம் நடுங்கக் குரலெடுத்தான், யாரிடமும்
போற்றிப் பணிந்தடிமை பூணாதான் –  ஏற்றமுற
நாவுக் கரசன் நவின்றுரைக்கும் நன்மொழிதான்
ஆவிக்(கு) அமுதென்(று) அறி.
அலைகடலில் ஆழ்ந்தாலும் அஞ்சார், தலைமேல்
மலைவிழினும் தாம்பதற மாட்டார் – நிலைகலங்கா
நன்மனத்தர் செந்தழிழர் நாவுக் கரசர்புகழ்
பொன்மலரால் போற்றும் புவி.

ஞான சம்பந்தர்

ஞானிகள் காட்டும் நல்வழிகள்

காதொளிரும் தோடும் கவின்மதியும் கொண்டிலங்கும்
மாதொரு பாகர் மகிமையினை – தீதற்ற
தெள்ளமுதச் சொல்லால் திருக்கவிசொல் சம்பந்தா
உள்ளம் கவர்கள்வன் நீ!
பாட்டால் பிணியறுத்தான் பண்சுமந்த பாட்டொன்றால்
வாட்டும் படும்பஞ்சம் மாற்றினான் – மீட்டுயிர்த்து
வாழும் வகைசெய்தான் மாண்டாரை, வெல்லும்(எ)ங்கோன்
யாழை முறிக்கும் இசை.
யாழொழுகும் ஓசை இனித்திடவே தெய்வமணம்
சூழவரும் கானவொலித் தோன்றிடவே – ஏழுலகும்
கேட்டு மகிழக் கிளர்ஞான சம்பந்தன்
பாட்டுப் படைத்தான் பரிந்து.
நாளோடு கோளும் நல்லடியார் துன்பமெலாம்
தூளாக்கித் தொல்லையறத் தோள்கொடுக்கும் – தாளேத்திக்
கோளறு நற்பதிகம் பாடீர் குறையறுக்கும்
ஆளுடைய பிள்ளை அருள்.
அம்மேயப் பாவென் றழைக்க அளித்தாளே
செம்மையுறும் ஞானத் திருவருட்பால் – அம்மையவள்
தாளிரண்டும் ஏத்தித் தலைவனையும் கைதொழுத
ஆளுமறை மாமுனிவற் கன்று.

சித்தர்கள் பெருமை

முத்தமிழ் கற்று முழங்கும்மெய்ஞ் ஞானியராம்
சித்தர் தெளிந்துரைத்த தேன்கவியின் – தித்திப்பால்
பித்தனேன் நான்பிதற்ற மன்னிப்பீர் பேரன்பால்
மொத்தப் பிழையும் மறந்து.
இடைக்காட்டுச் சித்தர் புகழ்
தானென்ற எண்ணத்தை விட்டால் – மனம்
    தானே அடங்கிடும் நிசத்தினைச் சொல்லி
ஆனந்தத் தாண்டவம் ஆடும் – அருள்
    ஆனந்தக் கோனார் இடைக்காட்டுச் சித்தர்!
குதம்பைச் சித்தர் புகழ்
ஓங்கார மேடையில் ஏறி – நின்று
    முழங்கிட யோகத்தின் மேன்மையைக் கூறி
தூங்காமல் தூங்கும் சுகத்தை – நமக்குச்
    சொல்லும்மெய்ஞ் ஞானியாம் குதம்பை நற்சித்தர்!
பாம்பாட்டிச் சித்தர் புகழ்
சோம்பிடும் உள்ளத்தைத் தேற்று – பாம்பின்
    தூக்கம் கலைத்திடும் சொற்களைப் போற்று
பாம்பாட்டி யார்புகழ் பாடு – ஆதி
    பகவனை உன்னோடு விளையாடத் தேடு!
அழுகணிச் சித்தர் புகழ்
கண்ணம்மா ளைப்பார்த்துக் கேட்கும் – நெஞ்சம்
    கவர்ந்திடும் கேள்விகள் சிந்திக்க வைக்கும்
எண்ணத்தில் எரியெழும் யோகி – அழகு
    இன்பக் கவிசொல்லும் அழுகணிச் சித்தர்!
அகப்பேய்ச் சித்தர் புகழ்
மனமெனும் பேய்தனை வெல்லும் – ஒரு
    மந்திரம் தருமிவர் ஒவ்வொரு சொல்லும்
நினைவறச் சும்மா இருந்தால் – நீங்கா
    நிர்மலம் வாய்க்குமென் றாரகப் பேயார்!
கடுவெளிச் சித்தர்
ஆண்டியின் தோண்டியைப் பாடி – அந்த
    அகண்ட வெளியினில் ஆனந்தம் தேடி
தூண்டா விளக்கின் சுடர்போல் – இருள்
    தொலைத்தருள் காட்டுவார் கடுவெளிச் சித்தர்!

Leave a Reply