விருத்தம் என்றால் என்ன – மரபுக் கவிதை வடிப்போம்

விருத்தம் என்றால் என்ன

‘அளவொத்த நான்கடிகள் கொண்ட கவிதையே விருத்தம்’ என்பர். அதாவது, நான்கு அடிகள் பெற்றிருந்து, ஓவ்வொரு அடியிலும் சீர்களின் எண்ணிக்கை சமமாக அமைந்திருந்தால் அதுவே விருத்தக் கவிதையாகும்.

இந்தப் பதிவில் சில வகை விருத்தங்களை எடுத்துக்காட்டுகளுடன் விரிவாக பார்க்கலாம்.

அடிகளின் வகைகள்

குறளடி

குறள் என்னும் சொல்லின் பொருள் என்ன?

‘குறள்’ என்றால் ‘குறுகிய வடிவம் கொண்ட’ என்று பொருள். உருவத்தில் உயரம் குறைந்த தோற்றம் கொண்ட குறுமுனிவராக திருமால் வாமன அவதாரம் எடுத்ததால் அவரைக் குறள் என்று அழைப்பர். இதனை ‘மாலும் குறளாய் வளர்ந்துஇரண்டு மாணடியால், ஞாலம் முழுதும் நயந்தளந்தான்’ என்ற திருவள்ளுவமாலைப் பாடல் மூலம் நாம் அறியலாம். மேலும், இரண்டே அடிகளைக் கொண்டதாக இயற்றப்பட்ட நூலை நாம் திருக்குறள் என்று அழைக்கிறோம்.

அதேபோல், இரண்டே சீர்களைக் கொண்ட அடியைக் குறளடி என்று கூறுவர். குறளடிகள் பொதுவாக வஞ்சிப்பாவில் வரும்.

சிந்தடி

சிந்து என்னும் சொல்லின் பொருள் என்ன?

‘சிந்து’ என்ற சொல்லுக்கு ‘சராசரி அளவுக்கு சற்றே குறைந்த உருவம்’ என்று பொருள். குறளோடு சற்று பெரியதாகவும் நெடிலோடு சற்று சிறியதாகவும் ஓர் உருவம் அமைந்தால் அதனைச் சிந்து என்கிறோம். ‘சிந்தொடு. குறளும் கூனும் சிலதியர் குழாமும்’ என்று கம்பராமாயணம் சொல்வதையும் இங்கு ஒப்பு நோக்கலாம். இங்கு மூன்றடி உயரம் கொண்டவர்களைச் ‘சிந்து’ என்று குறிப்பிடுகிறார் கம்பர்.

எனவே குறளடிபோல் இரண்டு சீர்களைக் கொண்டிருக்காமல், மூன்று சீர்களைப் பெற்றிருந்தால் அந்த அடியைச் சிந்தடி எனலாம். சிந்தடிகள் எல்லா வெண்பாக்களிலும் ஈற்றடியாக வரும். மேலும், நேரிசை ஆசிரியப்பாவில் ஈற்றயடியாக (கடைசி அடிக்கு முன்) வரும்.

நெடிலடி

நான்கு சீர்களைக் கொண்ட அடியை ‘அளவடி’ அல்லது ‘நேரடி’ என்று கூறுவது போல, ஐந்து சீர்களைக் கொண்ட அடியை ‘நெடிலடி’ என்று கூறுவர். கலித்துறையில் எல்லா அடிகளும் நெடிலடிகளாகவே வரும்.

கழிநெடிலடி

ஐந்து சீர்களுக்கு மேல் ஓர் அடியில் காணப்பட்டால், அதனைக் ‘கழிநெடிலடி’ எனலாம். ‘கழி’ என்பது மிகுதியைக் குறிக்கும் சொல். எனவே ‘கழிநெடிலடி’ என்றால் நெடிலடியை விட அதிகமான சீர்களைக் கொண்டது என்று பொருள். ஆசிரிய விருந்தங்களில் ஐந்து சீர்களுக்கு மேற்பட்டு அமைந்த அடிகளே வரும்; அதாவது, கழிநெடிலடியே வரும்.

பொருளடக்கம்

ஆசிரிய விருத்தம்

ஆசிரிய விருத்தம் என்பது ஆறு சீர்முதல் எத்தனை சீராலும் அளவொத்த நான்கு அடிகளால் அமைந்த பாடல்.
ஆசிரிய விருத்தத்தின் வகைகளை இங்கு நாம் விரிவாகப் பார்க்குமுன் அடிகளின் வகைகளைச் சற்று நோக்குவோம்.

ஆசிரிய விருத்த வகைகள்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

ஆறு சீர்களைக் கொண்ட அளவொத்த நான்கடிகளால் ஆன பாடல். சீர்களின் அமைப்பை ஒட்டி இந்த விருத்தத்தையும் கீழ்வருமாறு ஏழு விதமாக வகைப்படுத்தலாம்.

1. இருமா காய்ச்சீர்

இவ்வகை அறுசீர் ஆசிரிய விருத்தத்திற்கு எடுத்துக்காட்டாக சிலப்பதிகாரத்தில் வரும் இந்த ஆற்றுவரிப் பாட்டைக் காண்போம்.

மருங்கு வண்டு சிறந்தார்ப்ப
    மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்க யற்கண் விழித்தொல்கி
    நடந்தாய் வாழி காவேரி
கருங்க யற்கண் விழித்தொல்கி
    நடந்த வெல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
    அறிந்தேன் வாழி காவேரி.

இளங்கோ அடிகள்

இந்தப் பாட்டை வாய்பாடு கொண்டு அமைப்போமானால், ஒவ்வொரு அடியும் இவ்வாறு வரும்:

புளிமா தேமா புளிமாங்காய்
புளிமா தேமா தேமாங்காய்
(முதலடியின் இறுதிச் சீர் மட்டும் புளிமாங்காய் என்று வரும்)

இந்தப் பாடல், அரையடிக்கு இரண்டு மாவும், ஒரு காயுமாக வந்த ‘அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்’ என்னும் பாவகையைச் சார்ந்தது என்று ‘விருத்தப்பாவியல்’ நூற்பாவினால் அறியலாம்:

இருமா காய்ச்சீர் அரையடிக்காய்
இவையே மற்றை அரையடிக்கும்
– விருத்தப்பாவியல்
2. விளச்சீர் மாச்சீர் தேமா

எடுத்துக்காட்டாக தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடிய இந்தத் ‘திருமாலை’ பாடலைக் காண்போம்.

பச்சைமா மலைபோல் மேனி
    பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
    ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
    இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
    அரங்கமா நகரு ளானே.

தொண்டரடிப்பொடி ஆழ்வார்

இந்தப் பாட்டின் முதலடியை மட்டும் வாய்பாடு கொண்டு அமைப்போமானால், இவ்வாறு வரும்:

கூவிளம் புளிமா தேமா
கருவிளம் புளிமா தேமா

இந்தப் பாடல், அரையடிக்கு விளச்சீர், மாச்சீர், தேமாச்சீர் என்று வந்த ‘அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்’ என்னும் பாவகையைச் சார்ந்தது என்று ‘விருத்தப்பாவியல்’ நூற்பாவினால் அறியலாம்:

சீர்விள மாச்சீர் தேமாச்
சீரிணைந் திரட்டும் ஈங்கே
– விருத்தப்பாவியல்
3. முதல் நான்கும் காயாகி பின்னவை மா தேமா

எடுத்துக்காட்டாக இந்த பாரதியார் பாடலைக் காண்போம்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ
     தெங்கும் காணோம்,
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சிசொலப்
      பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டங்கு வாழ்ந்திடுதல்
      நன்றோ சொல்லீர்
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை
      செய்தல் வேண்டும்.

பாரதியார்

இந்தப் பாட்டின் முதலடியை மட்டும் வாய்பாடு கொண்டு அமைப்போமானால், இவ்வாறு வரும்:

கூவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய் புளிமாங்காய்
தேமா தேமா

இந்தப் பாடல், ஒவ்வொரு அடியிலும் முதல் நான்கு சீர்கள் காய்ச்சீராகவும், ஐந்தாம் சீர் மாச்சீராகவும் ஆறாம் சீர் தேமாச்சீராகவும் வந்த ‘அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்’ என்னும் பாவகையைச் சார்ந்தது என்று ‘விருத்தப்பாவியல்’ நூற்பாவினால் அறியலாம்:

முதனான்கும் காயாகிப் பின்னவைமா தேமாவாய்
முடியும் மன்றே.
– விருத்தப்பாவியல்
4. குறிலீற்று மாச்சீரும் கூவிளமும் விளச்சீர் மூன்றும் காய்ச்சீர் ஒன்றும்

எடுத்துக்காட்டாக திருமங்கை ஆழ்வார் அருளிய இந்த இனிமையான பாடலைக் காண்போம்.


வாலி மாவலத் தொருவன துடல்கெட 
    வரிசிலை வளைவித்தன்
றேல நாறுதண் தடம்பொழி லிடம்பெற 
    இருந்தநல் லிமயத்துள்
ஆலி மாமுகி லதிர்தர அருவரை 
    அகடுற முகடேறி,
பீலி மாமயில் நடஞ்செயும் தடஞ்சுனைப் 
    பிரிதிசென் றடைநெஞ்சே.

திருமங்கை ஆழ்வார்

இந்தப் பாட்டின் முதலடியை மட்டும் வாய்பாடு கொண்டு அமைப்போமானால், இவ்வாறு வரும்:

தேமா கூவிளம் கருவிளம் கருவிளம்
கருவிளம் புளிமாங்காய்

இந்தப் பாடல், ஒவ்வொரு அடியிலும் முதல் சீராக குறிலீற்று மாச்சீர் அல்லது மெய்யீற்று மாச்சீரும், இரண்டாம் சீராக கூவிளச்சீரும், மூன்று நான்கு மற்றும் ஐந்தாம் சீராக விளச்சீரும், ஆறாம் சீராக மாங்காய்ச்சீரும் வந்த ‘அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்’ என்னும் பாவகையைச் சார்ந்தது என்று ‘விருத்தப்பாவியல்’ நூற்பாவினால் அறியலாம்:

குறிய வீற்றுமாக் கூவிள முவ்விளங்
காயொடும் குறிகொள்ளே.
– விருத்தப்பாவியல்
5. முதல் மூன்று ஆறு ஆகிய இடங்களில் மாச்சீர், பிற இடங்களில் விளச்சீர்

எடுத்துக்காட்டாக சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய இந்தத் தேவாரப் பாடலைக் காண்போம்.

நீல வண்டறை கொன்றை
    நேரிழை மங்கையொர் திங்கள்
சால வாளர வங்கள்
    தங்கிய செஞ்சடை எந்தை
ஆல நீழலு ளானைக்
    காவுடை ஆதியை நாளும்
ஏலு மாறுவல் லார்கள்
    எம்மையும் ஆளுடை யாரே
சுந்தரர் தேவாரம்

இந்தப் பாட்டின் முதலடியை மட்டும் வாய்பாடு கொண்டு அமைப்போமானால், இவ்வாறு வரும்:

தேமா கூவிளம் தேமா
கூவிளம் கூவிளம் தேமா

இந்தப் பாடல், ஒவ்வொரு அடியிலும் முதல், மூன்று மற்றும் ஆறாம் இடங்களில் மாச்சீர் அமைந்து ஏனைய இடங்களில் விளச்சீராக வந்த ‘அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்’ என்னும் பாவகையைச் சார்ந்தது என்று ‘விருத்தப்பாவியல்’ நூற்பாவினால் அறியலாம்:

ஒன்று மூன்றுடன் ஆறு
மாவிளம் பிறவிடம் உறுமே.
– விருத்தப்பாவியல்
6. மூன்று ஆறு ஆகிய இடங்களில் மாச்சீர் வந்து, பிற இடங்களில் விளச்சீரும் மாச்சீரும் வெண்டளையில் புணர்ந்து வருதல்

எடுத்துக்காட்டாக நம்மாழ்வார் அருளிய இந்தத் திருவாய்மொழி பாடலைக் காண்போம்.


நாவினுள் நின்று மலரும் 
    ஞானக் கலைகளுக் கெல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே 
    அழிப்போ டளிப்பவன் தானே
பூவியல் நால்தடந் தோளன்
    பொருபடை ஆழிசங் கேந்தும்
காவிநன் மேனிக் கமலக்  
    கண்ணனென் கண்ணினு ளானே.

நம்மாழ்வார்

இந்தப் பாட்டின் முதலடியை மட்டும் வாய்பாடு கொண்டு அமைப்போமானால், இவ்வாறு வரும்:

கூவிளம் தேமா புளிமா
தேமா கருவிளம் தேமா

இந்தப் பாடலில், ஒவ்வொரு அடியிலும் மூன்று மற்றும் ஆறாம் இடங்களில் மாச்சீர் அமைந்து, பிற இடங்களில் விளச்சீரும் மாச்சீரும் மாறி மாறி வந்து வெண்டளையில் அமைந்துள்ளதைக் காண்க. சில இடங்களில் விளச்சீருக்கு பதிலாகக் மாங்காய்ச்சீர் அமைவதும் உண்டு.

‘விருத்தப்பாவியல்’ நூற்பா:

குறிய வீற்றுமாக் கூவிள முவ்விளங்
காயொடும் குறிகொள்ளே.
– விருத்தப்பாவியல்
7. ஐந்து மாச்சீர், ஒரு காய்ச்சீர்

எடுத்துக்காட்டாக திருமங்கை மன்னன் அருளிய இந்த வண்ணமிகு பாடலைக் காண்போம்.

முன்னை வண்ணம் பாலின் வண்ணம்
    முழுதும் நிலைநின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம்
    வண்ணம் எண்ணுங்கால்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம்
    புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர்
    இந்த ளூரீரே!

திருமங்கை ஆழ்வார் (நூல்: பெரிய திருமொழி)

இந்தப் பாட்டின் முதலடியை மட்டும் வாய்பாடு கொண்டு அமைப்போமானால், இவ்வாறு வரும்:

தேமா தேமாதேமாதேமா
புளிமா புளிமாங்காய்

இந்தப் பாடலில், ஒவ்வொரு அடியிலும் முதலைந்து இடங்களில் ச்சீர் அமைந்து, இறுதிச் சீர் சீராக அமைந்தமை காண்க.

‘விருத்தப்பாவியல்’ நூற்பா:

மாச்சீர் ஐந்து காய தொன்று
வண்டார் குழன்மாதே
– விருத்தப்பாவியல்

பொருளடக்கம்

எழுசீர் ஆசிரிய விருத்தம்

ஏழு சீர்களைக் கொண்ட அளவொத்த நான்கடிகளால் ஆன பாடல். இரண்டு நான்கு ஏழு ஆகிய இடங்களில் மாச்சீரும் பிற இடங்களில் விளச்சீரும் வரும்.

எடுத்துக்காட்டாக பாரதியார் எழுதிய மகாசக்தி பஞ்சகத்தில் வரும் இந்தப் பாடலைக் காண்போம்.

கரணமுந் தனுவும் நினக்கெனத் தந்தேன்,
    காளிநீ காத்தருள் செய்யே,
மரணமும் அஞ்சேன், நோய்களை அஞ்சேன்,
    மாரவெம் பேயினை அஞ்சேன்,
இரணமுஞ் சுகமும், பழியுநற் புகழும்
    யாவுமோர் பொருளெனக் கொள்ளேன்,
சரணமென் றுனது பதமலர் பணிந்தேன்,
    தாயெனைக் காத்தலுன் கடனே.

பாரதியார் (மகாசக்தி பஞ்சகம்)

இந்தப் பாட்டின் முதலடியை மட்டும் வாய்பாடு கொண்டு அமைப்போமானால், இவ்வாறு வரும்:

கருவிளம் புளிமா கருவிளம் தேமா
கூவிளம் கூவிளம் தேமா

இந்தப் பாடல், ஒவ்வொரு அடியிலும்இரண்டு நான்கு மற்றும் ஏழாம் இடங்களில் மாச்சீரும் பிற இடங்களில் விளச்சீரும் வந்த ‘எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்’ என்னும் பாவகையைச் சார்ந்தது என்று ‘விருத்தப்பாவியல்’ நூற்பாவினால் அறியலாம்:

நால்விள மும்மா நடைபெறும் கொடிய
    நச்சுவே நயனமா ரமிழ்த்தே
– விருத்தப்பாவியல்

பொருளடக்கம்

எண்சீர் ஆசிரிய விருத்தம்

எட்டு சீர்களைக் கொண்ட அளவொத்த நான்கடிகளால் ஆன பாடல். சீர்களின் அமைப்பை ஒட்டி இந்த விருத்தத்தையும் கீழ்வருமாறு இரண்டு விதமாக வகைப்படுத்தலாம்.

1. முதலிரண்டு சீர்களும் காய்ச்சீர், மூன்றாம் சீர் மாச்சீர், நான்காம் சீர் தேமாச்சீர் என அரையடி அமைதல்

எடுத்துக்காட்டாக அப்பர் பாடிய இந்தத் தேவாரப் பாடலைக் காண்போம்.

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
    அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
    உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
    பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
    காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே

திருநாவுக்கரசர்

இந்தப் பாட்டின் முதலடியை மட்டும் வாய்பாடு கொண்டு அமைப்போமானால், இவ்வாறு வரும்:

கூவிளங்காய் கூவிளங்காய் தேமா தேமா
கருவிளங்காய்கூவிளங்காய் புளிமா தேமா

இந்தப் பாடல், ஒவ்வொரு அரையடியிலும் முதல் இரண்டு இடங்களில் காய்ச்சீரும், மூன்றாம் இடத்தில் மாச்சீரும், நான்காம் இடத்தில் தேமாச்சீரும் வந்த ‘எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்’ என்னும் பாவகையைச் சார்ந்தது என்று ‘விருத்தப்பாவியல்’ நூற்பாவினால் அறியலாம்:

காயிரண்டு மாவென்று தேமா வொன்று
கலந்தவடி இரட்டுமதன் விகற்பம் தானே.
– விருத்தப்பாவியல்

குறிப்பு: மூன்றாம் இடத்தில் மாச்சீருக்கு பதிலாக காய்ச்சீர் வருவதும் உண்டு. எடுத்துக்காட்டாக, வள்ளலார் பாடிய இந்தத் திருவருட்பா பாடலைக் காண்போம்:

தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச்

    சர்க்கரையுங் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே
தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலும் தேங்கின்
     தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி
இனித்தநறு நெய்அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி
     எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந்தெள் ளமுதே
அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே
     அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கல்அணிந் தருளே.

வள்ளலார்
2. முதல் இடத்தில் குறில் ஈற்று மாச்சீர், இரண்டாம் இடத்தில் கூவிளம், மூன்றாம் இடத்தில் விளச்சீர், நான்காம் இடத்தில் மாச்சீர் என அரையடி அமைதல்

எடுத்துக்காட்டாக பாரதி பாடிய இந்தக் காளி துதி பாடலை நோக்குவோம்.

எடுத்த காரியம் யாவினும் வெற்றி,
     எங்கு நோக்கினும் வெற்றிமற் றாங்கே
விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி
     வேண்டி னேனுக் கருளினன் காளி,
தடுத்து நிற்பது தெய்வத மேனும்
     சாரு மானுட வாயினும் அஃதைப்
படுத்து மாய்ப்பள் அருட்பெருங் காளி,
     பாரில் வெற்றி எனக்குறு மாறே.

இந்தப் பாட்டின் முதலடியை மட்டும் வாய்பாடு கொண்டு அமைப்போமானால், இவ்வாறு வரும்:

புளிமா கூவிளம் கூவிளம் தேமா
தேமா கூவிளம் கூவிளம் தேமா

இந்தப் பாடல், ஒவ்வொரு அரையடியிலும் முதல் இடத்தில் குறில் ஈற்று மாச்சீர், இரண்டாம் இடத்தில் கூவிளம், மூன்றாம் இடத்தில் விளச்சீர், நான்காம் இடத்தில் மாச்சீரும் வந்த ‘எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்’ என்னும் பாவகையைச் சார்ந்தது என்று ‘விருத்தப்பாவியல்’ நூற்பாவினால் அறியலாம்:

ஆதி மாவொடும் கூவிளம் விளமா
ஆகு மாயரை அடியிரும் குழலே.
– விருத்தப்பாவியல்

பொருளடக்கம்

கலி விருத்தம்

கலி விருத்தம் என்பது நான்கு சீர்களையுடைய அளவடி நான்கினால் அளவொத்து அமைவது. அதாவது, ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களைக் கொண்டு, நான்கு அடிகளால் ஆன பாடல். எடுத்துக்காட்டாக கம்பராமாயணத்தில் வரும் கடவுள் வாழ்த்துப் பாடலையும் திருஞான சம்பந்தர் அருளிய திருமுறைப் பாடலையும் காண்போம்.

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யார்அவர்
தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே.

கம்பர்

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.

திருஞானசம்பந்தர்

ஒரு கலி விருத்தக் கவிதை சிறப்பாக அமைய கீழ்வரும் இலக்கண விதிகளை முறைப்படி அக்கவிதை பின்பற்ற வேண்டும்.

 • முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும். மேலே எடுத்துக்காட்டப்பட்ட கம்பரின் கலிவிருத்தக் கவிதையில், முதல் சீர்களாகிய ‘உலகம்’, ‘நிலைபெ’, ‘அலகி’, ‘தலைவ’ என்னும் சீர்கள், ‘கம்’, ‘பெ’, ‘கி’, ‘வ’ போன்ற குறில் அசைகளுடன் முடிந்து, புளிமா என்னும் அசை வாய்பாட்டைச் சார்ந்து அமைந்துள்ளன.
 • விருத்தம் நிரையசையில் தொடங்கினால் அடிக்கு 12 எழுத்து; கம்பரின் இந்தக் கலி விருத்தம் ‘உல’, ‘நிலை’, ‘அல’, ‘தலை’ என்ற நிரையசையில் தொடங்கியுள்ளதால், ஒவ்வொரு அடியிலும் 12 எழுத்துகள் (ஒற்றெழுத்துகளை நீக்கினால்) அமைந்துள்ளன.
 • நேரசையில் தொடங்கியிருந்தால் 11 எழுத்தெண்ணிக்கை வரும்.
 • 2வது அல்லது 3வது சீர்களில் மாச்சீர் வந்தால் அடுத்த சீர் நிரையில் தொடங்கும். எடுத்துக்காட்டாகப் பார்ப்போமானால், சம்பந்தரின் பாடலில் முதலடியில் இரண்டாம் சீர் ‘லாகி’ என்ற மாச்சீர். அதை அடுத்து ‘கசிந்துகண்’ என்று நிரையில் தொடங்கும் சீர் வந்துள்ளதைக் காண்க.
 • பொதுவாக ‘மா கூவிளம் கூவிளம் கூவிளம்’ என்னும் அசை ஓசைப்படி கலி விருத்தங்கள் அமையும்.
 • விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. எடுத்துக்காட்டாக, ‘காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி’ என்னும் சம்பந்தர் பாட்டில், ‘ணீர்மல்கி’ என்னும் சீர் தேமாங்காய்ச்சீராக வந்துள்ளதைக் காணலாம்.
 • முதலிரண்டு சீர்களுக்கிடையில் ‘மாவைத் தொடர்ந்து நேர்’ என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும். ‘காத லாகி’ என்னும் சீர்கள் ‘தேமா தேமா’ என்று வந்துள்ளதால், ‘த’ என்னும் நேரை (மாவை) தொடர்ந்து ‘லா’ என்னும் நேர் அமைந்துள்ளதையும் காணலாம். அதேபோல், ‘லாகிக் கசிந்துகண்’ என்னும் சீர்கள் ‘மாமுன் நிரை’ என்னும் வெண்டளை விதிப்படி வந்துள்ளதும் இங்குக் கவனிக்கத் தக்கது.

இந்த இலக்கண விதிகளைப் பின்பற்றினால் கலி விருத்தம் எழுதுவது எப்படி என்று நாம் தெளிவாக அறிந்துகொள்ள உதவும்.

விருத்தம் எழுதுவது எப்படி

விருத்தம் என்றால் என்ன என்பதையும் விருத்தத்தின் வகைகள் என்னென்ன என்பதையும் இதுவரைக் கற்றுக்கொண்டோம். இப்போது, விருத்தம் எழுதுவது எப்படி என்பதையும் அதை எளிதில் எழுதுவதற்கான வழிமுறைகளையும் எடுத்துக்காட்டுடன் இங்கு ஆய்ந்து நோக்குவோம்.

ஒரு விருத்தக் கவிதையை எழுதத் தொடங்குமுன் அதன் கருத்தை முதலில் உரைநடையில் எழுதிப் பார்க்கலாம். பின்னர் அந்தக் கருத்தைச் சிறப்பாக வெளிப்படுத்த எந்த வகை விருத்தத்தைத் தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவுசெய்யவேண்டும்.

எடுத்துக்காட்டாக உலகப் பொதுமறையாம் திருக்குறளின் பெருமையைச் சொல்லும் இந்த உரைநடைப் பகுதியைப் பார்க்கலாம்:

வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்றிடவும், வேதனைகள் மறைந்திடவும், குற்றம் குறை எல்லாம் நீங்கி நற்குணங்கள் செழிக்கவும், இன்பங்கள் நிறைந்து வாழ்வு வளம் பெறவும் திருக்குறளை நாள்தோறும் படியுங்கள்!

மேற்கண்ட உரைநடைப் பகுதியைக் கலி விருத்தத்தில் எழுதினால் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்:

வெற்றி பெற்றிட வெந்துயர் தீர்ந்திட
குற்றம் நீங்கிக் குணங்கள் ஒளிர்ந்திட
உற்ற இன்பங்கள் ஓங்கி வளம்பெற
நற்ற மிழ்க்குறள் நாளும் படிமினே!

இதே கருத்தை அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் (விளச்சீர் மாச்சீர் தேமா) எழுதிப் பார்ப்போம்:

வெற்றிகள் கிடைக்க வேண்டின்
 வெந்துயர் விலக வேண்டின்
குற்றமும் குறையும் நீங்கிக்
 குணங்களும் உயர வேண்டின்
உற்றிடும் இன்பம் ஓங்கி
 உள்ளத்தில் தெளிவு வேண்டின்
நற்றமிழ் அன்னை நல்கும்
 நயமிகு குறள்கற் பீரே!

இதுவே, குழந்தைகளுக்காக எழுதும்போது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் (இருமா காய்ச்சீர்) எழுதலாம்:

வெற்றி என்றும் பெற்றிடவே
 விலகித் தீமை நீங்கிடவே
குற்றம் குறைகள் போக்கிடவே
 குணத்தில் சிறந்து விளங்கிடவே
முற்றும் அறிவு பெருகிடவே
 முழுதும் நெஞ்சம் தெளிந்திடவே
கற்றே உயர்வோம் திருக்குறளைக்
 கடைப்பி டிப்போம் அதன்நெறியை!

பொருளடக்கம்

This Post Has 12 Comments

 1. Anonymous

  அருமையான விளக்கம்

  1. இமயவரம்பன்

   மிக்க நன்றி!

 2. Anonymous

  நன்றி. நான் தேடிய விளக்கம்.

 3. Anonymous

  Many many thanks.

 4. Gajendran

  மிகச் சிறந்த விளக்கங்கள். எடுத்துக் காட்டுகள். மிக்க நன்றி. உங்கள் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துகள்.

  1. இமயவரம்பன்

   மிக்க நன்றி, திரு.கஜேந்திரன்!

   1. Gajendran

    நன்றி. ஒரு சிறிய ஐயம். விருத்தம் என வரும்போது அவை தளை சார்ந்தவை அல்ல. சரிதானே தவறாய் இருப்பின் மன்னிக்கவும்.

    1. இமயவரம்பன்

     வெண்பா மற்றும் கட்டளைக் கலித்துறையில் மட்டும் தான் தளை பார்ப்பது வழக்கம் என்று தமிழறிஞர் கி.வா.ஜா கூறுகிறார். விருத்தங்கள் பொதுவாகப் பல விதமான வடிவங்களைப் (Patterns) பின்பற்றி இருக்கும். ஆதலால், விருத்தங்கள் தளை சார்ந்தவை அல்ல. தங்கள் கேள்விக்கு மிகு நன்றி!

 5. அருள்மொழி வர்மன்

  அருமை ஐயா,
  தங்கள் இருப்பிடத்தை நான் அறிந்து கொள்ளலாமா

  1. இமயவரம்பன்

   தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி 🙏

   என்னைப் பற்றிய விவரங்களை அறிய இந்த வலைப்பக்கத்தைப் பார்க்கவும் : https://www.imayavaramban.com/என்னைப்-பற்றி

 6. மகாதேவன்

  அருமையான விளக்கம். கம்பர் பாட்டிலும், ஞானசம்பந்தரின் பாட்டிலும் எப்படி அவைகளை நான்கு சீராகப் பிரிப்பது என்பதையும் விளக்கவும். மிக்க நன்றி.

  1. இமயவரம்பன்

   மிக்க நன்றி!

   கம்பரின் பாடலும் ஞானசம்பந்தரின் பாடலும் கட்டளைக் கலிவிருத்தம் என்னும் பாவகையைச் சார்ந்தவை.
   ஒவ்வோர் அடியும் பொதுவாக ‘புளிமா கூவிளம் கூவிளம் கூவிளம்’ அல்லது ‘தேமா கூவிளம் கூவிளம் கூவிளம்’ என்னும் வாய்பாட்டில் அமைந்திருக்கும். முதல் சீர் தவிர ஏனைய சீர்களில் வெண்டளை இருக்கும். அதாவது, இரண்டாம் அல்லது மூன்றாம் சீர்கள் மாச்சீராக வந்தால் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும். உதாரணமாக, ‘காத லாகிக் கசிந்துகண்’ – இங்கே இரண்டாம் சீர் ‘லாகிச்’ என்பது மாச்சீர். ‘மாமுன் நிரை’ என்னும் வெண்டளை வாய்பாட்டின் படி, அடுத்த சீர் ‘கசிந்’ என்று நிரை அசையில் தொடங்குவதைக் காணலாம்.

   மற்றுமொரு எடுத்துக்காட்டு : “வாழ்க வாழ்க வளமுடன் வாழ்கவே”. இங்கே, நிலைமொழியாகிய ‘வாழ்க’ என்னும் மாச்சீரை அடுத்து ‘வள” என்று நிரையசையில் தொடங்கும் வருமொழி வருவதைக் காணலாம்.

   🙏🙏

Leave a Reply