காக்களூர் வீர ஆஞ்சநேயர் பதிகம்

காக்களூர்

காக்களூர் வீர ஆஞ்சநேயர் பதிகம்

கவிதை : இமயவரம்பன்

பாவகை : அறுசீர் ஆசிரிய விருத்தம்

Sri Kaakkalur Veera Anjaneyar Pathigam

1.
கடற்பரப் பினைக்க டந்து
… கடிநகர் கெடக்க டிந்து 
படைபொரு(து) இகல்க டந்த
… பாதமே புகழ்ந்து நின்றேன்
வடிவுயர் ஆஞ்ச நேயா
… வளந்திகழ் காக்க ளூராய்
கடுவினைத் துயரில் வாடும்
… கடையனேற்(கு) அருள்செய் யாயோ?

அருஞ்சொற்பொருள்:

கடிநகர் = காவல் வாய்ந்த இலங்கை நகர்
பொருது = போரிட்டு
இகல் = பகைவர்களை
கடந்த = வெற்றிகொண்ட
2
திடமதி திறலென் றோங்கும்
… சிறகிரண் டருளு வாயேல்
கடலெனத் துயர்வந் தாலும்
… கருடன்போல் கடந்து வெல்வேன்
அடலருஞ் சிலையி ராமற்(கு)
… அன்பனே காக்க ளூராய்
அடிதொழு தரற்று வேனை
… அஞ்சலென் றளித்தி டாயோ?  

அருஞ்சொற்பொருள்:

திட மதி = திடமான சித்தம்
திறல் = ஆற்றல், வலிமை, வல்லமை
அடல் அரும் = யாராலும் வெல்ல முடியாத
சிலை = வில் (வில்லையுடைய)
அஞ்சல் = ‘நீ பயப்படாதே’
அளித்திடாயோ? = காப்பாற்ற மாட்டாயோ?
3.
விரைகமழ் கமலம் விட்டு
… வெஞ்சிறை யிருந்த தேவி
அருள்விழிப் பார்வை பெற்றன்(று)
… அண்ணலுக் கறியச் சொன்னாய்
பொருவரு வாயு மைந்தா
… பொழிலெழில் காக்க ளூராய்
இரவுநண் பகலும் வாட்டும்
… என்துயர் அழித்தி டாயோ?

அருஞ்சொற்பொருள்:

விரை கமழ் = மணம் கமழும்
கமலம் = தாமரை
தேவி = சீதை(யின்)
அண்ணல் = இராமன்
பொருவரும் = ஒப்பற்ற
பொழில் = பூங்கா
4.
மேகத்தின் நிறத்தி னானை
… மிதிலையார் மடந்தை யோடும்
ஆகத்தில் இருத்தும் உன்றன்
… அன்பினைத் துதித்து நின்றேன் 
காகுத்தன் போற்றும் வீரா
… காக்களூர் ஆஞ்ச நேயா
போகத்தை விரும்பி வீழும்
… பொய்யனேற் கிரங்கி டாயோ?

அருஞ்சொற்பொருள்:

மடந்தை = பெண்
ஆகத்தில் = நெஞ்சத்தில்
காகுத்தன் = இராமன்
பொய்யனேற்கு = பொய்யனேனுக்கு
5.
மாயமான் மாய அன்று 
… வரிசிலை வளைத்த வென்றி 
நாயகன் திறத்துத் தூதாய்
… நன்னெறி எடுத்துச் சொன்னாய், 
தாய்நிகர் கருணை யானே! 
… தண்வயல் காக்க ளூராய் 
ஓய்தலற் றுழலும் என்றன் 
… உளத்துயர் ஒழித்தி டாயோ?

அருஞ்சொற்பொருள்:

வென்றி = வெற்றி
வரிசிலை = கட்டமைந்த வில்
நாயகன் திறத்து = நாயகன் பொருட்டு
தண்வயல் = குளிர்ந்த வயல் சூழ்ந்த
ஓய்தல் அற்று = ஓய்வின்றி
உழலும் = சுழன்று அல்லற்படும்
6.
உவமைகள் கடந்து நின்றாய்
… உயர்வற உயர்ந்தொ ளிர்ந்தாய்
நவையறும் உரைமொ ழிந்தாய்
… நமனையும் ஆடல் கொண்டாய்
கவினுறு வடிவி னானே
… கலிவயல் காக்க ளூராய்
தவமெனக் கருமம் ஆற்றும்
… தனித்திறம் அருளி டாயோ?

அருஞ்சொற்பொருள்:

நவையறும் = குற்றமற்ற
நமன் = காலன்
ஆடல் கொண்டாய் = வெற்றி கொண்டாய்
கலிவயல் = செழித்த வயல்
7.
பரமனின் பாதம் தன்னைப்
… பருவரைத் தோளில் ஏற்றாய்
அருமறை செழித்து வாழ
… அறத்தினைச் சிறக்கக் காத்தாய்
தெரிவரும் பெருமை மேவும்
… செழுவயல் காக்க ளூராய்
கருள்மிகும் மனத்தி னேற்குன்
… கழல்நிழல் அளித்தி டாயோ?

அருஞ்சொற்பொருள்:

பரமனின் = பரமாத்மாவான இராம பிரானது
பருவரை = பருத்த மலை போன்ற
தெரிவரும் = தெரிவு + அரும் = முழுவதும் தெரிந்து உணர்வதற்கு அரியதான
கருள்மிகு = கருள் கொண்ட = இருண்ட
கழல் நிழல் = திருவடிகளின் நிழலை
8.
மெய்வளர் வடிவி னானே
… மேவரும் குணத்தின் குன்றே
பொய்வளர் மனத்தி னேன்றன்
… புந்தியில் புகுந்த தேனே
செய்வளர் காக்க ளூரில்
… திகழ்ந்தொளிர் அறிவின் சீரே
ஐயனே அனும னேநின்
… அன்பினை அருளி டாயோ?

அருஞ்சொற்பொருள்:

மெய்வளர் = மெய்ம்மை நிறைந்த
மேவரும் = அடைவதற்கு அரிய
செய்வளர் = வயல்கள் செறிந்த
9.
சிறியன சிந்தை செய்யாச்
… செழுமனப் பொலிவு வேண்டும்
மறிகடல் மடுத்த போதும்
… வெருவுறா வலிமை வேண்டும்
பொறிவழி போகா நெஞ்சும்
… புந்தியில் தெளிவும் வேண்டும்
மறைவளர் காக்க ளூராய்
… வரமிவை வழங்கி டாயோ? 

அருஞ்சொற்பொருள்:

வெருவுறா = அஞ்சாத
10.
அருக்கனைப் பறிக்கப் பாய்ந்தன்(று)
… அணிக்கரம் விரித்தாய் போற்றி
அருக்கனின் தேர்முன் நின்றே
… அருங்கலை அறிந்தாய் போற்றி
அருக்கனின் குலத்தி ராமன்
… அடியவர்க் கன்பா போற்றி!
அருக்கன்நின் றொளிரும் சோலைக்
… காக்களூர் அழகா போற்றி!

அருஞ்சொற்பொருள்:

அருக்கன் = சூரியன்
அணிக்கரம் = அழகிய கரங்கள்

Leave a Reply