அப்பர் வரலாறு

அப்பர்

அப்பர்

Appar

அப்பர், வாகீசர், சொல்லரசர், தமிழ்வேந்தர், நாவரசர், தாண்டக வேந்தர் முதலிய பல பெயர்களால் வழங்கப் படுபவர் திருநாவுக்கரசு நாயனார். ‘நாமார்க்கும் குடியல்லோம்! நமனை அஞ்சோம்!’ என்று வீர முழக்கம் செய்த மாபெரும் சிவ ஞானியான இவர் திருமுனைப்பாடி நாட்டில், திருவாமூரில் தோன்றினார். தந்தையார் புகழனார்; தாயார் மாதினியார். தமக்கையார் திலகவதியார். இளமை இயற்பெயர் ‘மருள் நீக்கியார்’. 

மருள் நீக்கியார் இளமையில் சமண சமயம் சார்ந்து, கலை நூல் பலவும் கற்றுத் தேர்ந்தார். தருமசேனர் என்னும் பட்டம் பெற்று, வித்தகராய் சமண சமயத் தலைமை பெற்று விளங்கினார். தமக்கையார் திலகவதியார் பலகாலும் பணிந்து விண்ணப்பித்துக்கொண்டபடி, திருவதிகை வீரட்டானேசுவரர் இவரைச் சூலைநோய் தந்து வருத்தித் தடுத்து ஆட்கொண்டார். அப்போது “கூற்று ஆயினவாறு விலக்ககிலீர்” என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி இறையருளால் சூலை நோய் நீங்கப்பெற்றார். அவரது செந்தமிழ்ப் பாமாலையைச் செவியாரக் கேட்ட சிவபெருமான் இவருக்குத் ‘திருநாவுக்கரசன்’ என்னும் திருநாமத்தை அருளினான்.

சமண சமயத்தை விட்டு சைவ சமயம் சார்ந்தமைக்காக வெகுண்ட மகேங்திரவர்ம பல்லவன் (கி.பி. 600-630), இவரைப் பெருந்தீயின் வெப்பம் கொண்ட நீற்றறையில் அடைத்து வைக்கும்படி தன் ஏவலாளர்களுக்கு ஆணையிட்டான். அப்போது திருநாவுக்கரசர் சிவபெருமானைத் துதித்து “மாசில் வீணையும் மாலை மதியமும்” எனத் தொடங்கும் திருப்பதிகத்தைத் திருவாய்மலர்ந்தருளினார். அந்த நீற்றறை அவருக்கு இளவேனிலும், தென்றல் காற்றும், பொய்கையும், வெண் நிலவும், வீணையோசையும் போலக் குளிர்ந்திருந்தது. 

நீற்றறையில் இட்டும் நாவரசருக்கு ஒன்றும் நேராமல் இருந்ததைக் கண்ட சமணர்கள், அவரை விஷம் கலந்த அன்னத்தை உண்ணும்படி செய்தார்கள். நஞ்சை உண்டும் அவருக்கு ஒன்றும் ஆகாததைக் கண்ட சமணர்கள் யானையை விட்டு அவரை மிதிக்கச் செய்யுமாறு அரசனுக்கு அறிவுறுத்தினார்கள். சீறி வரும் யானையைக் கண்டும் சிறிதும் அஞ்சாமல் சிவபெருமானைத் தியானித்த வாகீசர், ‘அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதும் இல்லை’ என்று பதிகம் பாடித் தொழுதார். யானையும் நாவரசரை வலமாக வந்து பணிந்து எழுந்தது திரும்பிச் சென்றது.

யானையின் செயலைக் கண்டு அவமானப்பட்ட சமணர்கள், வாகீசரைக் கல்லோடு கட்டிக் கடலில் விடுமாறு அரசனுக்கு ஆலோசனை சொன்னார்கள். சினம் கொண்டிருந்த அரசனும் சமணர்கள் சொல்லைக் கேட்டு அவ்வாறே செய்ய ஆணையிட்டான். கடலில் தள்ளப்பட்ட அந்த நிலையிலும் சிறிதும் மனம் தளராத திருநாவுக்கரசர், இறைவனைத் துதித்து ‘சொற்றுணை வேதியன்’ என்னும் திருப்பதிகத்தைப் பாடி அருளினார். உடனே கல்லும் கடலில் மிதந்தது; நாவுக்கரசரும் கரை சேர்ந்தார்.

சமணர்களின் கொடிய செய்கைகளால் தமக்கு ஒன்றும் தீங்கு நேராமல் வெற்றி கொண்ட திருநாவுக்கரசரின் பக்திச் சிறப்பை உணர்ந்த பல்லவ மன்னன் அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினான்; தான் சமணர்களோடு சேர்ந்து, அறியாது செய்த குற்றங்களை மன்னித்து அருளுமாறு வேண்டினான். சுவாமிகளும் பல்லவ மன்னனைச் சிவபெருமானுடைய திருவடிகளில் பணியச்செய்து சைவ சமயத்தில் சேர்ப்பித்து அருளினார்.

திருத்தூங்கானை மாடம் என்னும் திருத்தலத்தில் ‘பொன் ஆர் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம்’ என்று பாடி ‘சூல முத்திரையும் இடப முத்திரையும் அடியேன்மேல் பொறித்து அருளவேண்டும்’ என்று சிவபெருமானிடம் விண்ணப்பித்து சூல இடப முத்திரைகளைத் தம் திருத்தோளில் பொறிக்கப்பெற்றார்.

சீகாழிப் பதிக்கு எழுந்தருளிய நாவரசர், திருஞானசம்பந்த சுவாமிகளைச் சந்தித்து அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். சம்பந்தர் அவரை எதிர் வணங்கி ‘அப்பரே!’ என்று இருகைகளையும் பற்றி எடுத்தார். அந்த நாள் முதல், திருநாவுக்கரசர் ‘அப்பர்’ என்னும்  திருப்பெயராலும் வழங்கப்பெற்றார். 

திருநல்லூரில் சிவபெருமானை வணங்கி எழுந்த அப்பரின் திருமுடிமீது பரமன் தன் பதமலரைச் சூட்டி அருளினான். உடனே, ஈசனின் இன்னருளை எண்ணி, ‘நினைந்து உருகும் அடியாரை’ எனத் தொடங்கும் திருதாண்டக மாலையைச் சாற்றி, ‘தாண்டக வேந்தர்’ என்னும் திருப்பெயரையும் பெற்றார்.

திங்களூரில் அப்பூதி அடிகள் என்னும் தொண்டரின் இல்லத்தில் வாகீசர் எழுந்தருளி இருந்தபோது அவர் அமுது செய்வதற்காக வாழை இலை அரிந்து வரச் சென்ற அப்பூதியாரின் புதல்வனைப் பாம்பு தீண்டி அவன் இறக்க நேரிட்டது. இதை அறிந்த நாவரசர், ‘ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர் வரை’ என்றும் தொடங்கும் பதிகத்தைப் பாடி அச்சிறுவனை மீண்டும் உயிர் பெற்று எழச் செய்து அருளினார். 

திருஞானசம்பந்தருடன் பலத் திருத்தலங்களை வழிபட்டுத் திருமறைக்காடு சென்றடைந்தார் திருநாவுக்கரசர்.  அவர்கள் இருவரும் மறைக்காடருடைய ஆலயத்திற்குச் சென்று, அக்கோவில் கதவு அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். அக்கதவினைத் திறக்கப் பாடுமாறு சம்பந்தர் நாவரசரிடம் வேண்ட,  அவரும் ‘பண்ணின் நேர் மொழியாள்’ எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடிக் கதவைத் திறக்கச்செய்தார். அப்பரின் வேண்டுகோளுக்கிணங்க அக்கதவினை மீண்டும் அடைக்கவும் திருப்பதிகம் பாடி அருளினார் சம்பந்தர்.

திருமறைக்காட்டில் அப்பர் சம்பந்தரோடு தொண்டு செய்து இருக்கும்போது, பாண்டிய நாட்டில்  கூன்பாண்டியன் என்னும் அரசன் சமண சமயத்தைத் தழுவி இருந்தான். அப்போது பாண்டி மாதேவியும், அமைச்சர் குலச்சிறையாரும் சமணர்களை வெல்லும்பொருட்டு சம்பந்தரை அழைத்துவரத் தூதுவரை அனுப்பினார்கள். அது கேட்டு சம்பந்தரும் பாண்டியநாட்டிற்குப் புறப்பட, சமணர்களால் நேரக்கூடிய இடர்களை எடுத்துக்கூறி அவரைத் தடுத்தார் அப்பர் சுவாமிகள்.  தாமும் கூட வரவும் துணிந்தார். ஆனால், சம்பந்தர் அதற்கு சம்மதிக்காமல் ‘கோளறு பதிகம்’ பாடி, பாண்டிய நாட்டிற்குத் தாமே சென்றார். அதனால், அப்பர் சம்பந்தரிடம் விடைபெற்றுக் கொண்டு பிறதலங்களை வணங்கச் சென்றார்.

திருப்பைஞ்ஞீலி என்னும் தலத்தில் மிகவும் களைத்துச் சோர்வடைந்திருந்த அப்பருக்குப் பொதிச்சோறும் குடிநீரும் கொடுத்தருளினான் பரமன். திருக்கயிலையைக் கண்ணினால் காண வேண்டும் என்று விரும்பிய அப்பருக்கு திருவையாற்றிலே கயிலைக் கோலத்தில் காட்சிதந்தான். அப்போது ‘ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே’ என்று திருத்தாணடகம் பாடி உள்ளம் குழைய உருகி ஆடினார். 

திருப்பூந்துருத்தியில் திருநாவுக்கரசர் எழுந்தருளியிருந்தபோது, அவரைத் தரிசிப்பதற்காகத் திருஞானசம்பந்தப் பெருமான் அந்தத் திருத்தலத்தை நோக்கிச் சென்றார். அவரை எதிர் சென்று வரவேற்கச் சென்ற அப்பர், யாரும் அறியாதபடி சம்பந்தருடைய முத்துச் சிவிகையைத் தாங்கினார். சம்பந்தர் திருப்பூந்துருத்தியில் திருநாவுக்கரசரைக் காணாமல் ‘அப்பர் எங்கு உற்றார்?’ என்று வினவ, நாவுக்கரசர் ‘தங்களைச் சுமக்கும் பேறு பெற்ற நான் இங்கு உற்றேன்’ என்றார். அதைக் கேட்டுப் பதைபதைத்த திருஞானசம்பந்தர் சிவிகையிலிருந்து இறங்கி வந்து நாவரசரை வணங்க, நாவரசரும் அவரை வணங்கி நின்றார். 

சம்பந்தரிடம் விடைபெற்றுக்கொண்ட அப்பர், மதுரை, திருவிராமேச்சுரம், திருநெல்வேலி முதலிய தலங்களைத் தரிசித்துவிட்டுத் திருப்புகலூரை அடைந்தார். அங்கு ‘புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன்’ என்று  புகலூர்த்தாண்டகத்தைத் திருவாய் மலர்ந்தருளி, சிவபெருமானுடைய திருவடியை அடைந்தார்.

Leave a Reply