அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி

அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி

அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி பாடல் வரிகள்

அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி,
    அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின் மீது தனியர சாணை,
    பொழுதெலாம் நினதுபே ரருளின்
நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்
    நிலைத்திடல் என்றிவை யருளாய்,
குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்
    குலவிடு தனிப்பரம் பொருளே!                  

மகாகவி பாரதி

Arivile Thelivu Lyrics

ARivilE thelivu nenjilE uRudhi
    AgathilE anbinOr veLLam
PoRigaLin meedhu thaniyara sANai
    PozhudhelAm ninadhupE raruLin
NeriyilE nAttam karuma yOgathil
    Nilaiththidal enRivai aruLAi
KuRiguNa mEdhum illadhAi anaiththAi
    Kulavidu thaniparam poruLE

Mahakavi Bharathi

English Translation

Clarity in thinking with uncluttered knowledge,
Strength of mind that endures hardship,
Abundance of compassion that flows from heart,
Complete control over the senses,
Contemplation of Your Divine Grace,
Selfless action – Bestow upon me these things,
O Supreme Being, who, without any specific form or attribute,
pervades all that is in the universe!

அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி – கவிதை விளக்கம் | A commentary on Arivile Thelivu

‘அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி’ என்று தொடங்கும் இந்தப் பாடல் பாரதியார் எழுதிய ‘சுயசரிதை‘ என்னும் சுவைமிகுந்த கவிதை நூலின் இறுதிப் பாட்டாகச் சிறப்புற அமைந்துள்ளது.  கலங்காத அறிவும் மனத்துணிவும் கடல்போன்ற அன்பும் மனக்கட்டுப்பாடும் கடவுள் பக்தியும் பற்றற்ற செயல்திறனும்  பெற வேண்டி உருவமும் குணமும் இன்றி எங்கும் நிறைந்த பரம்பொருளைப் பிரார்த்திக்கின்றது இந்தப் பாடல்.   இப்பாடலின் பொருளை இங்கு சற்று விரிவாகக் காணலாம்.

பாரதியார் வேண்டுவன

அறிவிலே தெளிவு

இக்காலகட்டத்தில் நாம் அறிந்துகொள்ள நம் செவியில் பாயும் செய்திகள் மற்றும் தகவல்கள் ஏராளம். எட்டுத் திசையிலிருந்தும் வருகின்ற இந்த அறிவுப் பெருக்கால் நமக்கு உண்டாகும் குழப்பங்கள் நம் வாழ்வை திசைதிருப்பி, நினைவில் தெளிவைச் சிதைத்து , எது உண்மை எது பொய் என்று கலங்க வைக்கின்றதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

திருக்குறள்

என்ற பொய்யாமொழிப் புலவரின் வார்த்தைப்படி, கேட்டறிவனவற்றை மெய்யென்று உடனே நம்பிவிடாமல் ஆய்ந்துணர்ந்து தெளிதல் வேண்டும்.

உயர்வற உயர்நலம் உடையவன் யவன்அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன்அவன்

திருவாய்மொழி

திருவாய்மொழியின் முதற்பத்தில் அமைந்த இந்த அருமையான பாடலில், இறைவனின் உயர்ந்த நற்குணங்களைப் போற்றித் துதிக்கும் நம்மாழ்வார், ‘மயர்வற மதிநலத்தை’ – அதாவது, குழப்பம் தீர்ந்த அறிவு கொண்ட மனநிலையை – தமக்கு அருளிய மாலவனின் கருணையைப் போற்றி வணங்குமாறு தம் மனத்துக்கு அறிவுறுத்துகிறார்.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் தமது இராம காதையில், ‘இது தக்கது, அது தகாதது என்று பகுத்துப் பார்க்காமல் முடிவெடுத்துச் செயலில் இறங்குபவர்கள் உயர்ந்த நிலையில் உள்ள மாந்தராய் இருந்தாலும் அவர்கள் ஐந்தறிவே உள்ள விலங்குகளை ஒத்தவர் ஆவர்’ என்று சொல்லித் தெள்ளறிவின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்.

தக்க இன்ன தகாதன இன்ன என்று
ஒக்க உன்னலர் ஆயின் உயர்ந்துள
மக்களும் விலங்கே

கம்பர்

சாத்திரங்கள் தரும் ஞானம் ஓரளவுக்கு தான் நம்மை வழி நடத்தும். நம் வாழ்வுக்கு வழித்துணையாக இறுதிவரை வரும் அறிவு தன்னறிவே ஆகும். தன்னை அறியும் அக அறிவு இல்லை என்றால் எந்தப் புற அறிவு பெற்றிருந்தாலும் அவ்வறிவு நஞ்சாக நம்மை வாட்டும். இதையே கீழ்வரும் திருமந்திரப் பாட்டில் காணலாம்:

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே.

திருமூலர்

இந்தப் பாட்டில் தன்னை அறியும் ஆற்றல் மிக்க ஒருவன் தனக்குள் இறைவன் உறைவதை அறிந்து, தன்னையே அர்ச்சிக்கத் தகுதி உடையவனாகத் தன்னை ஆக்கிக் கொள்ளலாம் என்ற திருமூலரின் வாக்கு, ‘அஹம் ப்ரம்மாஸ்மி’ என்னும் மகாவாக்கியத்தின் ஆழ்பொருள் விளக்கமாகத் திகழ்வதைக் காண்கிறோம்.

இறைவன் ஞான சொரூபன் என்று அருமறைகள் கூறுகின்றன. ‘சுத்த அறிவே சிவமென்று ‘ தெளிந்த பாரதியும், ஞானச் சுடராக உள்ளத்தில் ஒளிரும் இறைவனை அறிந்துணரும் மனத்தெளிவையே இங்கு வேண்டுகிறார்.

பொருளடக்கம்

‘Thelivu’ meaning in English

The word ‘Thelivu’ means Clarity. It implies a state of mind that is free from imperfections and signifies purity and cleanliness. Only a clear mind can have an unclouded understanding of Truth. In this modern age, we have information flowing towards us from all directions, we have better education and we also have knowledge and expertise in many important areas. But in this age of information overload, clarity of knowledge is what we lack. It is becoming increasingly difficult to make sense of all the information vying for our attention. Without clear understanding of our life and the problems we are facing, we cannot resolve conflicts and make better decisions. That is why, Bharathi, who lived more than 100 years ago, stressed the importance of Clarity in knowledge and place this at the top of his wishes in this ‘Arivile thelivu’ poem.

நெஞ்சிலே உறுதி

ஞானத்தைப் புகட்டும் பல நூல்களைக் கற்றறிந்திருந்தாலும், இந்த உலகத்தில் நாம் படும் இன்னல்களும் அநீதிகளும் நம் மன உறுதியைக் குலைக்க நேரிடும். அழிக்கவரும் துன்பத்தை அலைகடலெனப் பொங்கி எதிர்த்து நின்று ஆளும் திறமை பெறாமல் இருந்தால் நாம் கற்ற அறிவால் நமக்கும் பிறர்க்கும் நன்மை ஏற்படாமல் ‘நலங்கெட்டு புழுதியில் விழுந்த வீணை‘யைப் போல் நம் வாழ்வு சீர்குலையும் என்பது உண்மை.

மலையே வந்து விழினும் மனிதர்காள்
நிலையில் நின்று கலங்கப் பெறுதிரேல்
தலைவ னாகிய ஈசன் தமர்களைக்
கொலைசெய் யானைதான் கொன்றிடு கிற்குமே

திருநாவுக்கரசர் (அப்பர்)

‘மலையே வந்து விழுந்தாலும் தங்கள் நம்பிக்கையிலிருந்து பிறழாமல் உறுதியோடு நிற்கும் அடியார்களுக்கு, கொன்றழிக்கும் வல்லமை வாய்ந்த ஐந்து புலன்களாகிய யானைகளால் எந்த ஆபத்தும் நேராது’ என்கிறார் நாவுக்கரசர். கல்லில் கட்டப்பட்டுக் கடலில் விடப்பட்ட போதிலும், யானையின் காலால் மிதிபடவிருந்த போதிலும், வயிற்றை வாட்டும் கடுமையான சூலை நோயால் வருந்திய போதிலும் மனம் தளராமல் இறைவனைத் தியானித்த திருவருட்செல்வர் நம் அப்பர் சுவாமிகள். இவரது பாடல்களை ஆழ்ந்து பயின்ற பாரதியும்,

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
அச்சமில்லை அச்சலில்லை அச்சமென்ப தில்லையே

பாரதி

என்று வீர முழக்கமிட்டார்.

‘நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்’ கொடுக்கும் மன வலிமையின் முக்கியத்துவத்தை உணர்ந்தறிந்த பாரதியார், தம்மிடம் நிறைந்துள்ள நெஞ்சுறுதி உயர்ந்து, மலையே வந்து விழுந்தாலும் நிலை கலங்காமல் இருக்க வரம் வேண்டுகிறார்.

பொருளடக்கம்

அகத்திலே அன்பின் ஓர் வெள்ளம்

பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!
பகைவனுக் கருள்வாய்!

புகை நடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோமே
பகைநடுவினில் அன்புருவான நம்
பரமன் வாழ்கின்றான்

பாரதி

‘பகைவனுக்கு அருள்வாய் ‘ என்று நெஞ்சுக்கு நீதி சொல்லும் பாரதி, அன்பையும் கனிவையும் ஒரு சக்தியாகவே பாவித்தார். தெளிவும், நெஞ்சுறுதியும் இருந்துவிட்டால் மட்டும் போதாது. ஆற்றலை நல்ல வழியில் செலுத்த அன்பின் தீபமே வழிகாட்டும்.

‘கொல்லவரும் புலி தன்னையும் அன்புடன் சிந்தையில் போற்றிடுவாய்’ என்று கொடும்புலிக்கும் அன்பு செலுத்த விரும்பும் பாரதியின் உள்ளம், தம்மைக் கொல்லவரும் தீயவர்களுக்கும் அருள்வேண்டிப் பிரார்த்திக்கும் இயேசு கிறிஸ்துவின் தூய உள்ளத்தை ஒத்திருத்தல் காணலாம்.

‘அன்பு வேறு கடவுள் வேறு என்று இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கும் அறிவில்லாதவர்கள், அன்பே கடவுளாக விளங்குவதை உணராதவர்களே ஆவர்.’ – என்று திருமூலர் அன்பையும் ஆண்டவனையும் சமமாகக் கருதுமாறு போதித்து அன்பின் சக்தியைக் கீழ்வரும் பாடல் வரிகள் மூலம் உணர்த்துகிறார்:

அன்பும் சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாய் ஆவது அறிகிலார்

திருமந்திரம்

கம்பர் தாம் இயற்றிய இராமாயணக் காவியத்தில் சீதையின் திருமணத்தைப் பற்றிச் சொல்லும்போது, சனகன் தன் பொருள் முழுவதையும் வழங்கி திருமண விழாவை நடத்தினான் என்று குறிப்பிடுகிறார். அப்படி அவன் பொருள் வழங்கும் போது, இன்னார் இனியார் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று வேற்றுமை பாராமல் அன்பென்னும் வெள்ளத்தின் பெருக்கை அனைவரிடமும் சமமாகப் பொழிந்தான். சனகன் சமதிருஷ்டி கொண்ட ஞானி ஆகையால், மருமகனான இராமனிடத்திலும் ஏழை எளியவர்களிடமும் ஒரே அளவிலான அன்பை வைத்தான். சனக மன்னனின் இந்தப் பேரன்பைப் போற்றும் கம்பர், ‘அன்புதான் இழிந்துளார்க்கும் இராமனுக்கும் ஒத்ததே’ என்று வியந்து பாடுகிறார்.

ஒழிந்த என் இனி? ஒண்ணுதல் தாதைதன்
பொழிந்த காதல் தொடர, பொருள் எலாம்
அழிந்து மன்றல் கொண்டாடலின், அன்புதான்
இழிந்துளார்க்கும் இராமற்கும் ஒத்ததே.

பொருள் : ஒள்நுதல்  தாதை –  ஒளிமிகும்  நெற்றியாள்  ஆகிய  சீதையின்
தந்தையாகிய   சனக  மன்னன்; தன்  பொழிந்த  காதல்  தொடரப்
பொருள் எலாம் அழிந்து
  –  பொழிகின்ற அன்பின் நெறியை பின்பற்றி, தன்
செல்வம்  முழுவதையும்  செலவழித்து; மன்றல்  கொண்டாடலின் –
இத்திருமண     விழாவைக்     கொண்டாடுவதால்;     அன்புதான்
இழிந்துளார்க்கும் இராமற்கும் ஒத்தது
 –  அந்த  சனக  மன்னனின்
அன்பு  (வெள்ளம்) தாழ்ந்த நிலையில் உள்ளார்க்கும்.  (அனைவரிலும்
உயர்ந்த)  இராமனுக்கும் சமமாகவே வாய்ந்தது; ஒழிந்த என் இனி? –
(இதற்கு  மேல்  இம்  மண  நிகழ்வுபற்றிக்  கூற)  மீதம்  உள்ளவை
யாவை?

கம்பர்

மலையிலிருந்து பாய்ந்து வரும் வெள்ளம் தன் வழியில் கிடக்கும் அனைத்துப் பொருள்களையும் உருட்டி மக்கள் பரப்பில் அளிப்பதுபோல், மனமென்னும் மலையில் உதிக்கும் அன்பு என்ற வெள்ளம் மக்கள் அனைவரையும் அரவணைக்கும் இயல்புடையது; குணம் குற்றம் பாராமல் நிபந்தனை அற்ற (Unconditional love) இயல்புடையது. மாசற்ற அன்பின் பெருமையை சனகனின் வள்ளன்மை மூலம் நமக்கு இங்குப் புரியவைக்கிறார் கம்பர்.

‘உள்ளதெலாம் ஓர் உயிர்’ என்று உணர்ந்த பாரதியும், அன்பின் வெள்ளத்தால் அருந்துயரைப் போக்கிடலாம் என்று இந்த ஞானப் பாடலில் முழங்குகிறார்:

உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்
உள்ளங் குலைவ துண்டோ?-மனமே!
வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்
வேதனை யுண்டோடா?

பாரதி

‘அளவுபடாததோர் அன்போடு ஐயாறு அடைகின்றபோது’ என்று திருநாவுக்கரசர் தாம் திருவையாறு சென்றடையும்போது இறைவனைக் கண்டு துதிப்பதற்கு அளவிட முடியா அன்பும் ஆர்வமும் நிறைந்த உள்ளத்துடன் இருந்ததாகப் பாடியுள்ளார். அப்பர் பெருமான் சொன்னதுபோல், அந்த அன்பு குறை ஒன்றும் இல்லாமல் அளவுகடந்த பெருவெள்ளமாக மிகுந்து மனமெல்லாம் பரவ வேண்டும் என்று பாரதி விரும்புகிறார்.

அத்தகைய வெள்ளமெனப் பொழியும் அன்பால் தான் உலகில் உள்ள பிரிவினை மற்றும் காழ்ப்புணர்வுகளால் உண்டான வெம்மை தணிந்து ஒற்றுமை உண்டாகும் என்றும் உணர்த்துகிறார்.

பொருளடக்கம்

பொறிகளின் மீது தனி அரசாணை

வாரி சுருக்கி மதக்களி றைந்தினையும்
சேரி திரியாமல் செந்நிறீஇ – கூரிய
மெய்ஞ்ஞானத் தால்உணர்வார் காண்பரே மேலொருநாள்
கைந்நாகம் காத்தான் கழல்.

பொய்கை ஆழ்வார்

மெய், வாய், கண், மூக்கு, செவி என்று சொல்லப்படும் ஐம்பொறிகளையும் ஐந்து மத யானைகள் என்று பொய்கை ஆழ்வார் குறிப்பிடுகிறார். அந்த மத யானைகளைக் கட்டுப்படுத்தி அடக்கினால் தான் இறையருள் கிட்டும் என்றும் மொழிகின்றார்.

‘ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.’

திருக்குறள்

‘ஆமை தன் ஐந்து உறுப்புகளையும் தன் ஓட்டினுள் அடக்குவது போல ஒருவன் ஐம்புலன்களையும் அடக்கினால் அது ஏழேழு பிறவிக்கும் பாதுகாப்பாகும்’ என்று கூறும் இந்தக் குறளும் இங்கு நினைவு கூரத்தக்கது.

பாரதியும் புதிய ஆத்திச்சூடியில் ‘ஐம்பொறி ஆட்சி கொள் ‘ என்று முழங்குகிறார். ஐம்பொறிகளை அடக்கிக் கட்டுக்குள் வைப்பதின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்திருந்த பாரதி, ‘அறிவிலே தெளிவு’ என்னும் இந்தப் பாட்டில் அந்தப் பொறிகளை ஆளும் திறனையே இறைவனிடமே வரமாகப் பெற வேண்டுகிறார்.

பொருளடக்கம்

பேரருளின் நெறியிலே நாட்டம்

சக்தியென்று நேரமெல்லாம் தமிழ்க்கவிதை பாடி,
பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்தும் தீரும்

பாரதி

பாரதி ஆசைப்படுவனவற்றுள் மிகச்சிறப்பான ஒன்று, சக்தியின் புகழைப் பாட வேண்டும் என்பதுதான். அதுவும், சிறிதும் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து அவளது பெருமையைப் பாடிக்கொண்டே இருக்கவேண்டும்; எத்தனை சோதனைகள் வந்தாலும் அவள் அருளை நாடுகின்ற பக்திநெறியை என்றும் தவறவிடக்கூடாது. இதுவே பாரதியின் வேண்டுகோள்.

குலசேகரப் பெருமாளும், வித்துக்கோடு என்னும் தலத்தில் வாழும் இறைவனிடம் வேண்டும் போது, ”இறைவா! என் துன்பத்தை நீக்கா விட்டாலும், உன்சரண் அன்றி வேறு துணை எனக்கில்லை. கோபத்தால் குழந்தையிடம் தாய் கடிந்து கொண்டாலும், தாயின் அருளையே நினைந்து அழும் குழந்தை போல உன் திருவடியையே என்றென்றும் தொழுதெழுவேன்’ என்று கூறித் தம் இறையருள் நாட்டத்தை அருமையான உருவகத்துடன் வெளிப்படுத்துகிறார்.

தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை,
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே,
அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும், மற்றவள்தன்
அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே.

குலசேகர ஆழ்வார்

எப்பொழுதும் கவலையிலே இணங்கியிராமல் சக்தியின் புகழ் பாடுவதால், அச்சம் நீங்கி ஆன்ம ஒளிக்கடலில் மூழ்கிக் கிடக்கும் பேறு கிட்டும். இந்த உண்மை தெளிந்துணர்ந்த பாரதி, தமது பாஞ்சாலி சபதப் பாட்டில், இடைவிடாமல் எப்போதும் துதிபாடக் கலைமகளிடமும் வேண்டுகிறார்.

இடையின்றி அணுக்களெலாம் சுழலுமென
  இயல்நூலார்இசைத்தல் கேட்டோம்;
இடையின்றிக் கதிர்களெலாஞ் சுழலுமென
  வானூலார்இயம்பு கின்றார்.
இடையின்றித் தொழில்புரிதல் உலகினிடைப்
  பொருட்கெல்லாம் இயற்கை யாயின்,
இடையின்றிக் கலைமகளே நினதருளில்
  எனதுள்ளம் இயங்கொ ணாதோ?

பொருள் : இடைவிடாமல் அணுக்களும் கதிர்களும் சுழன்றுகொண்டே இருக்கும் என்று அறிவியலார் சொல்கின்றனர். இவ்வாறு, உலகில் உள்ள பொருள்கள் யாவும் இடைவிடாமல் இயங்கிக்கொண்டே இருக்கையில், கலைமகளே, உனது பேரருளின் சக்தி மட்டும் என் உள்ளத்தில் நிறைந்து அதை என்றென்றும் இயக்காதோ?

பாரதி

பொருளடக்கம்

கரும யோகத்தில் நிலைத்திடல்

தெளிந்த அறிவே யோகத்துக்கு  முதற்படி.   குழப்பம் சூழ்ந்த மனத்தில் யோகம் நிலைக்க முடியாது. அதனால்தான் பாரதியார் ‘அறிவிலே தெளிவு’ (Arivile Thelivu) கொண்ட உள்ளத்தை முதலில் வேண்டுகிறார். அந்த கலக்கமில்லாத தெளிந்த அறிவின் துணைகொண்டு ‘இமைப்பொழுதும் சோராமல்’ ஓயாமல் தொழில் செய்தால் வாழ்வு சிறக்கும். எது செய்தாலும் அது நல்லதாகவே முடியும்.  அத்தகைய தெளிந்த அறிவு கொண்டவர்கள் சும்மா இருந்தாலும் மனம் நன்மை செய்து கொண்டே இருக்கும்.   இதுவே கர்ம யோகமாகும். 

கீதை மொழிந்தருளும் இந்தப் பேருண்மையை நமக்கெல்லாம் புரியும்படி இப்பாட்டில் சொல்லும் பாரதியார், தம் வாழ்க்கையில் கர்ம யோகத்தை ஒரு முக்கிய நெறியாகவே கருதி அதைத் தம் சொல்லிலும் செயலிலும் கடைப்பிடித்து வாழ்ந்தார்.  தொழில் என்பது உடம்பினால் மட்டும் செய்யப்படுவதல்ல.  மனத்தால்  செய்யப்படும் கவிதை , தியானம் , படிப்பு முதலான தொழில்களும் தொழிலேயாகும்.   தொழில் செய்யும்போது  இன்பம் துன்பம் எது வந்தாலும் பலன் கருதாமல் களிப்புடன் செய்தால், இறைவன் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்து செயல் சிறக்கச் செய்வான்.  இதையே : 

நமக்குத் தொழில்கவிதை, நாட்டிற்(கு) உழைத்தல்,
இமைப்பொழுதும் சோரா(து) இருத்தல் – உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நம்குடியை வாழ்விப்பான்
சிந்தையே இம்மூன்றும் செய்.

பாரதி

என்ற பாட்டிலும் சொல்லித் தம் நெஞ்சுக்கு அறிவுறுத்துகிறார். ஊருக்கு உழைப்பதையே யோகமென்றும், பிறர் நலம் சிறக்கப் பாடுபடுவதே யாகமென்றும் கருதிய பாரதி, போருக்குச் சென்று சண்டையிடுவதற்குத் தயாராக உள்ள நிலையிலும் மனம் சஞ்சலப் படாமல் சாந்தமாக இருப்பதே மெய்ஞ்ஞானமென்று கீழ்வரும் பாட்டில் தெரிவிக்கிறார் :

ஊருக்கு உழைத்திடல் யோகம் – நலம்
ஓங்கிடு மாறு வருந்துதல் யாகம்
போருக்கு நின்றிடும் போதும் – உளம்
பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞ் ஞானம்

பாரதி

பொருளடக்கம்

குறிகுணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய்

இந்தப் பாடலில் ‘குறி’ என்னும் சொல் உருவம் என்னும் பொருளில் வருகின்றது.  கடவுள் உருவமும் குணமும் கடந்து எல்லாப் பொருள்களுக்குள்ளும் நிறைந்துள்ள தன்மையையே இங்கு ‘குறிகுணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய்’ என்று பாரதியார் குறிப்பிடுகிறார்.

இறைவன் ஆனந்தமயமாக இருப்பவன். உருவங்களைக் கடந்து விளங்கும் இறைவன் அன்பர்கள் வணங்கும் பொருட்டு பல்வேறு உருவங்களைக் (குறிகளை) கொண்டு திகழ்கின்றான். அதேபோல், முக்குணங்கள் என்று கூறப்படும் சத்துவ, ரஜஸ, தமோ குணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டும் விளங்குகிறான். அதனால், அவனைப் புத்தியினால் அறிவது என்பது இயலாத ஒன்று. ‘நெஞ்சமெல்லாம் உருகி உள்ளே கனிந்து எழுந்த அன்பினால் அன்றி இறைவனை அறியமுடியாது’ என்ற திருமழிசை ஆழ்வாரின் அருள்மொழிப்படி, இறைவனை அன்பாலும் அவன் தரும் அருளாலும் மட்டுமே உணர முடியும். மேலும், அவன் எல்லாமாகிக் கலந்து நிறைந்துள்ளபடியால், இட வரம்பில்லாதவன். யாதுமாகி நின்று எங்கும் நிறைந்து பூதங்கள் ஐந்துமாய்ப் பொலிந்து புலன்கள் ஐந்தையும் இயக்கும் உள்ளொளியாய் இருப்பவன் இறைவன். இவ்வாறு உருவ (குறி) வரம்பின்றி, குண வரம்பும் இட வரம்பும் அற்று அனைத்துமாய் விளங்குபவன் இறைவன்.

மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி
    மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்
    ஓரூர னல்லன் ஓருவம னில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
    அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
    இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே

அப்பர்

என்றார் அப்பர் பெருமான்.  இறைவன் ஒரு உருவம் இல்லாதவன், ஒப்பற்றவன், ஓர் ஊர் காரனும் அல்லன். இத்தகைய குணமும், நிறமும் உடையவன் என்று யாராலும் அறுதியிட்டுக் கூற இயலாத பெருமை உடையவன். 

இதையே ‘ஜாதி நீதி குல கோத்ர தூரகம், நாம ரூப குண தோஷ வர்ஜிதம்’ என்று வட நூலான விவேக சூடாமணியும் ‘சாதி தர்மம் குலம் கோத்திரம் எல்லாம் கடந்தவன் இறைவன், அவனுக்கு பெயர், உருவம், குணம் , குற்றம் ஒன்றும் கிடையாது’ என்று பொருள்பட விளக்குகிறது. 

கச்சியப்ப சிவாச்சாரியார் கந்த புராணத்தில் இறைவன் இயல்பை மொழியும்போது, ‘இறைவனுக்கு ஊர், குணம், அடையாளம், செயல் பேர், காலம், பற்றுக்கோடு, போக்கு, வரவு, உயர்வு, ஒப்பு முதலிய ஒன்றும் இல்லை’ என்று அருளுகிறார்.

ஊரிலான் குணங் குறியிலான் செயலின் உரைக்கும்
பேரிலான் ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர
 சாரிலான் வரல் போக்கிலான் மேலிலான் தனக்கு
 நேரிலான் உயிர்க் கடவுளாய் என்னுளே நின்றான்

கந்த புராணம்

பாரதியாரும் தாம் எழுதிய பாஞ்சாலி சபதத்தின் தொடக்கப் பாடலில் ‘நாமமும் உருவுமற்றே மனம் நாட அரிதாய் புந்தி தேட அரிதாய்’  திகழும் பிரமத்தையே தொழுகின்றார்.  

இவ்வாறு உருவமற்றுத் திகழும் ஓர் உண்மைக்கு பல வேடங்கள் உள்ளன என்று வேதங்கள் கூறுகின்றன. அந்த வேதங்கள் சொல்வதைக் கேட்காமல், உலகத்தார் தாம் வணங்கும் இறையுருவம் தான் உண்மை என்று எண்ணித் தமக்குள் சண்டையிட்டு மடிகின்றனர். அதைக் கண்டு நெஞ்சு பொறுக்காத பாரதி,  உலகுக்கு நன்மை போதிக்கும் வகையில் இறைவனின் உண்மையான தன்மையை ‘அறிவிலே தெளிவு’ என்னும் இந்தப் பாட்டின் மூலம் விவரிக்கிறார்.

சிவவாக்கியர் இந்த சிந்தனையை ஒருபடி மேலே கொண்டுபோய், சிலைகளில் மட்டுமே கடவுளைத் தேடி மனத்தில் குடிகொண்டிருக்கும் இறைவனைக் காண மறுப்பவர்களைக் கடுமையாகச் சாடுகிறார்.

நட்ட கல்லைத் தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொண மொணென்று சொல்லு மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்?

சிவவாக்கியர்

‘நட்டு வைத்த கல்லை தெய்வம் என்று எண்ணி அந்தக் கல்லின் மேல் மலர்களைத் தூவி அதைச் சுற்றி சுற்றி வந்து மொண மொண என்று ஏதோ மந்திரங்களைச் சொல்லுவதால் எந்தப் பயனும் இல்லை. ஏனென்றால், இறைவன் உள்ளத்தில் மட்டுமே உறைகிறான், கல்லில் இல்லை’ – என்று நமக்குப் புரியவைக்க முயல்கிறார் சிவவாக்கியர்.

இதையே கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும், கோவிலில் தேடிக் காண முடியாத இறைவனை உள்ளத்தில் காணலாம் என்று இந்த அருமையான சொற்பொருள் அமைந்த கவிதையில் இரண்டு தோழிகளுக்கு நடுவே நடக்கும் உரையாடல் மூலம் தெரிவிக்கிறார்.

கோவில் முழுதும் கண்டேன் – உயர்
கோபுரம் ஏறிக் கண்டேன்
தேவாதி தேவனை யான் – தோழி!
தேடியும் கண்டிலனே.

உள்ளத்தில் உள்ளான் அடி! -அது நீ
உணர வேண்டுமடி
உள்ளத்தில் காண்பாய் எனில் – கோவில்
உள்ளேயும் காண்பாயடி

கவிமணி

பொருளடக்கம்

இலக்கண விளக்கம்

‘அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி’ (Arivile Thelivu Nenjile Urudhi) என்னும் இந்தப் பாடல் எழுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் என்னும் பாவகையைச் சார்ந்தது.

நால்விள மும்மா நடைபெறும் கொடிய
    நச்சுவே நயனமா ரமிழ்த்தே

விருத்தப் பாவியல்

‘விருத்தப் பாவியல்’ என்னும் இலக்கண நூலாசிரியரின் கூற்றுப்படி எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமானது நான்கு விளச்சீரும் மூன்று மாச்சீரும் கொண்டது என்பதை அறியலாம். இரண்டு நான்கு மற்றும் ஏழாம் இடங்களில் மாச்சீரும் பிற இடங்களில் விளச்சீரும் வரும் என்பதை இந்த நூற்பா விளக்குகிறது. அதன்படி ‘அறிவிலே தெளிவு’ என்னும் இந்தப் பாட்டின் முதல் அடியை மட்டும் அசை வாய்பாடு அமைத்துப் பார்க்கலாம்.

அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி
    அகத்திலே அன்பினோர் வெள்ளம்
கருவிளம் புளிமா கூவிளம் புளிமா
    கருவிளம் கூவிளம் தேமா

இவ்வாறு வாய்பாடு ஊட்டிப் பார்க்கும்போது விருத்தப் பாவியல் கூறும் இலக்கணத்தின்படி பாரதியார் ‘அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி’ (Arivile Thelivu Nenjile Urudhi) என்னும் தம் பாட்டைச் சிறப்பாக அமைத்துள்ளார் என்பதை அறியலாம்.

பொருளடக்கம்

நல்லதோர் வீணை செய்தே

நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

‘நல்லதோர் வீணை செய்தே – அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ – பாரதியின் ‘தோத்திரப் பாடல்கள்’ என்னும் கவித்தொகுப்பில் ‘கேட்பன’ என்னும் தலைப்பில் அமைந்த இந்தப் பாடல் சிவசக்தியை வணங்கி ஆற்றலும், நன்மனமும், மன உறுதியும் பெற வேண்டி நெஞ்சுருகப் பாடும் அருங்கவிதை.

மேலும் படிக்க

பாரதி வெண்பா மாலை

பாரதி வெண்பா மாலை என்னும் இந்தக் கவிதைத் தொகுப்பில், மகாகவி பாரதியாரின் எழுத்தின் சிறப்பையும் நேர்கொண்ட சிந்தனையையும் போற்றி எழுதியுள்ளேன். இந்தப் பாடல்கள் அந்தாதித் தொடையில் அமைந்த வெண்பாக்களைக் கொண்டு ஒரு மாலையாகத் தொடுத்து யாக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

 எரிதிகழும் பார்வை எழுத்தினிலோர் ஏற்றம்
 இருதயத்தில் பொங்கும் இரக்கம் - உருகவரும்
 ஊக்கமிகு வாய்ச்சொல் முழங்கிடும்சீர்ப் பாரதியாம்
 மாக்கவியை நெஞ்சமே வாழ்த்து. 

மேலும் படிக்க

பொருளடக்கம்

This Post Has 7 Comments

  1. Dr.V.K.Kanniappan

    வாழ்த்துகள்
    வணக்கம். கட்டுரை நன்று.

    அன்புடன்,
    வ.க.கன்னியப்பன்

    1. இமயவரம்பன்

      மிக்க நன்றி, ஐயா!

  2. Dr S. Uma

    ஆய்வுப் பூர்வமான கட்டுரை. மேற்கோள்கள் காட்டிய விதம் மிக அருமை

    1. இமயவரம்பன்

      தங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும் மிக்க நன்றி!

  3. T. Subramanian

    Very well written. Keep it up Sir!

  4. Anonymous

    Well written, I think it will be nice if you can elaborate the last line “குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்
    குலவிடு தனிப்பரம் பொருளே”

    1. இமயவரம்பன்

      Thank you very much! I have added more explanation in the second paragraph under the sub-heading ‘குறிகுணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய்’.

Leave a Reply