அருகன் அடியே சரணம் – சமண சமயக் கடவுள் துதி

அருகன் அடியே சரணம் - சமண சமயக் கடவுள் துதி

அருகன் அடியே சரணம்

பாவகை : சந்த விருத்தம்
சந்த அமைப்பு : தனனா தனனா தனனா தனனா / தனனா தனனா தனனா
திருவிற் பொலிமுக் குடைமா நிழலில்
   திகழா சனமீ தமர்வான்
மருளுற் றிடுமைம் பொறிவாய் அறவே
   மறுவிற் சுடர்போல் ஒளிர்வான்
முரணுற் றிடுமூ வெயிலைச் செறுமோர்
   முழுநற் றவமே உடையான் 
அருளைப் பொழியும் அறவோன் அறிவன்
   அருகன் அடியெம் சரணே.

பதம் பிரித்து:

திருவில் பொலி முக்குடை மா நிழலில்
   திகழ் ஆசனம் மீது அமர்வான்
மருள் உற்றிடும் ஐம்பொறி வாய் அறவே
   மறு இல் சுடர் போல் ஒளிர்வான்
முரண் உற்றிடும் மூ எயிலைச் செறும் ஓர்
   முழு நல் தவமே உடையான் 
அருளைப் பொழியும் அறவோன் அறிவன்
   அருகன் அடி எம் சரணே.

பொருள்:

திருவில் = புனிதத் தன்மையில்
பொலி = உயர்ந்து விளங்கும்
முக்குடை = மூன்று குடைகளின்
மா நிழலில் = சிறப்பு வாய்ந்த நிழலில்
திகழ் ஆசனம் மீது = திகழ்ந்து விளங்கும் ஆசனத்தின் மீது
அமர்வான் = அமர்ந்திருப்பான்;
மருள் உற்றிடும் = விஷய சுகங்களில் மயங்கக் கூடிய
ஐம்பொறி = கண் வாய் செவி மூக்கு உடல் என்னும் ஐந்து புலன்களின்
வாய் அறவே = வாசலை அடைத்து
மறு இல் = குற்றமற்ற
சுடர் போல் ஒளிர்வான் = விளக்கின் சுடர் போல ஒளிவீசுவான்;
முரண் உற்றிடும் = மாறுபட்டு இருக்கும்
மூ எயிலை = காமம், சினம், மயக்கம் என்ற மூன்று மதில்களை
செறும் = அழித்த
ஓர் முழு நல் தவம் உடையான் = முழுமையான நல்ல தவநிலையில் இருப்பான்;
அருளைப் பொழியும் = (அத்தகைய உயர்ந்த நிலையில் விளங்கி) திருவருளை வழங்குவனும்
அறவோன் = தரும நெறி உடையவனும்
அறிவன் = அறிவில் சிறந்தவனும் ஆகிய
அருகன் = அருகக் கடவுளின்
அடி = திருவடிகள்
எம் சரணே = எமக்கு நல்ல சரணாகும்.

Leave a Reply