அஷ்டலட்சுமி விருத்தம்

அஷ்டலட்சுமி விருத்தம்

அஷ்டலட்சுமி விருத்தம்

வடமொழியில் அமைந்த அஷ்டலட்சுமி ஸ்தோத்திரத்தைத் தழுவித் தமிழில் எழுதிய விருத்தங்கள்

கவிதைகள் : இமயவரம்பன்
பாவகை : எழுசீர் ஆசிரிய விருத்தம்
வாய்பாடு : விளம் மா விளம் மா / விளம் விளம் மா
1.
ஆதிலட்சுமி
அற்புத வடிவே நற்றவர்க் குயிரே
  அச்சுதன் அகமகிழ் அமுதே
கற்பகத் தருவே கனகமா நிதியே
  கனிவெழும் குணங்களின் நிறைவே
வற்புறு வினைதீர்த் துய்யுமா றருள்வாய்
  மறையெலாம் வழுத்திடத் திகழ்வாய்
பொற்புடை மலர்வாழ் ஆதியந் திருவே
  புவிமிசை ஆள்கநின் னருளே!
2.
தானியலட்சுமி
கலிதரும் இடும்பை களைந்திட வருவாய்
  கருமுகில் உருவனுக் கினியாய்
ஒலிசெயும் மறைகள் யாவிலும் ஒளிர்வாய்
  ஓதுமந் திரங்களில் உறைவாய்
நலமிகும் அமுதோ டலைகடல் பிறந்தாய்
  நண்ணினர் நெஞ்சகத் தமர்ந்தாய்
பொலிவுடை நவதா னியம்பொழி திருவே
  பூமிசை ஆள்கநின் னருளே!
3.
கஜலட்சுமி
அல்லவை அழிப்பாய் அருவரம் அளிப்பாய்
  அரவணை யானகத் திருப்பாய்
வெல்லரும் பெருந்தேர் கரியொடு புரவி
  மிகுபடை உடையவெந் திறலாய்
எல்லையில் கருணை ஏத்திநின் றிறைஞ்ச
  இருந்துயர் ஒழித்துயர் வருள்வாய்  
மல்லலம் வளமே தரும்கயத் திருவே
  மண்மிசை ஆள்கநின் அருளே!
4.
தைரியலட்சுமி
வாரெழில் மடவாய் மாதவற் கினியாய்
  மந்திர வடிவெனப் பொலிவாய்
பூரண ஞானம் புந்தியில் அருள்வாய்
  புரையறு தெளிவினைப் பொழிவாய்
காரிருள் கடிந்தென் னுளந்தனில் ஒளிர்வாய்
  கடுவினை களைந்தருள் புரிவாய்
ஆருயிர்க் குயிரே வீரமெய்த் திருவே
  அவனிமேல் ஆள்கநின் அருளே!
5.
சந்தானலட்சுமி
சிறையெழிற் பறவை மிசையமர்ந் துகந்தாய்
  செப்பரு மோகனம் மிகுந்தாய்
திறல்மிகு திகிரி திருக்கரத் தணிந்தாய்
  தெரிவரும் அறிவெனத் திகழ்ந்தாய்
மறைநிகர் சுரமேழ் பரவிடும் குணத்தாய்
  முனிக்கணம் வணங்கிடும் பதத்தாய்
மறுவில்சந் தான வரந்தரும் திருவே
  மகிதலத் தாள்கநின் அருளே!
6.
விஜயலட்சுமி
பங்கயத் திருப்பாய் பன்னலம் விளைப்பாய்
  பகரரும் பரகதி அளிப்பாய்
திங்கணன் னுதலில் குங்குமம் தரிப்பாய்
  தெள்ளிசை ஒலித்திடக் களிப்பாய்
மங்கல மொழியால் சங்கரர் துதிக்க
  மன்னுபொன் மணிமழை பொழிவாய்  
பொங்குவண் புகழ்சேர் விசயமாத் திருவே
  பூதலத் தாள்கநின் அருளே!
7.
வித்யாலட்சுமி
வாணியோ டுமையாள் வாழ்த்துமாண் புடையாய் 
  மணிவளர் உருவினில் ஒளிர்வாய்
வாணிலா முறுவல் மலர்தரு முகத்தாய்
  வயங்கொளி இலங்குகுண் டலத்தாய்
பேணுமா தவத்தார் வேண்டுவாழ் வளிப்பாய்
  நவநிதிப் பெருங்குவை நிறைப்பாய் 
மாணுமா விச்சை தான்தரும் திருவே
  மாநிலத் தாள்கநின் அருளே!
8.
தனலட்சுமி
திமிதிமி எனவே துந்துபி முழங்கத்
  திரண்டெழும் இசையிடைத் திகழ்வாய்
குமகும குமவென் றார்த்துசங் கெழுப்பும்
  குரைகட லொலியினில் மகிழ்வாய்
கமலமா மகளே களைகணீ எனவே
  கழறுநான் மறைதொழும் புகழாய்
தமர்நலம் பெருகத் தனம்தரும் திருவே
  தரணியில் ஆள்கநின் அருளே!

Leave a Reply