சின்னஞ்சிறு கதைகள் பேசி
– மகாகவி பாரதியார்
‘பல சின்னஞ்சிறு கதைகள் பேசி’ – இந்தச் சொற்கள், பயனற்ற பழங்கதைகள் பல பேசிக் கலகத்தை உண்டாக்கும் வேலையற்ற வீணர்களைக் கண்டிக்கும் கனல் தெறிக்கும் வார்த்தைகள்; நெஞ்சில் உரமும் இல்லாமல், நேர்மைத் திறமும் இல்லாமல், வஞ்சனை சொல்லி மதிமயக்குபவர்களைப் பார்த்துக் கொதித்தெழும் நெருப்பின் பிழம்பு; ‘சொல்வேறு செயல்வேறு’ என்று இருக்கும் போலி மனிதர்களின் பொய்யான போக்கைப் படம்பிடித்துக் காட்டும் சொற்சித்திரம்.
பொய்ம்மையைச் சாடிப் புயலென வீசும் இந்த வார்த்தைகள் புகட்டும் பாடத்தை நாம் ஆராய்ந்து கற்றுணர்வோம்! வாருங்கள்!
விளக்கவுரை
‘உற்றவர் நாட்டவர் ஊரார் – இவர்க்கு
பாரதி
உண்மைகள் கூறி இனியன செய்தல்
நல் தவம் ஆவது கண்டோம்‘
ஊருக்கும் உலகுக்கும் உண்மைகள் கூறுவதையே தவமாகக் கொண்டு வாழ்ந்தவன் பாரதி. அத்தகைய மெய்த்தவத்திற்கு மாறாகப் பொய்ம்மையே பேசி அறிவைக் கெடுப்பவர்களைக் கண்டு அவன் பொருமிய பாடல்கள் பலப்பல.
‘வேத உபநிடத மெய்ந்நூல்கள் எல்லாம் போய்
பேதைக் கதைகள் பிதற்றுவர் இந்நாட்டினிலே!’
என்று நம் பாரத நாட்டு மக்கள் பழம்பெருமையெல்லாம் மறந்து, ஞானநூல்களைப் பேணாமல், பேதைக் கதைகள் பேசிப் பிழைபட வாழ்வதை நினைத்து மனம் வாடினான்.
‘தெய்வம் பலப்பலச் சொல்லிப் பகைத் தீயை வளர்க்கும்‘ மூடர்கள் சொல்லும் கட்டுக் கதைகளைத் தவிர்த்து, ‘ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்‘ என்று சாற்றும் வேதங்களை மட்டுமே ஆதாரமாகக் கொள்ளுமாறு புவிமக்களுக்கு அறிவுறுத்தினான்.
‘உண்மைகள் வேதங்கள் என்போம்
பிறிது உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்.’
என்று சொல்லி வேதங்களையும் பொய்ந்நூல்களையும் வேறுபடுத்திக் காட்டி விளக்கினான்.
பொய்ந்நூல்கள் சொல்லும் பொருளற்ற வார்த்தைகளை மெய்யென நம்பி, தம் கொள்கைகளில் தெரியும் சின்னஞ்சிறிய வேற்றுமைகளைப் பெரிதுபடுத்திப் பிரிவினை வளர்ப்பவர்களைக் கண்டு நெஞ்சு குமுறினான். குடும்பத்தில் ஒற்றுமையைப் பேணி அன்பினை வளர்க்கவேண்டிய தந்தையும் மகனுமே பாம்பின் தலைகளைக் குறித்த மாறுபட்ட கொள்கைகளால் மனம்பிரிந்து மோதும் நிலை கண்டு எள்ளி நகைத்தான்.
ஐந்துதலைப் பாம்பு என்பான்-அப்பன்
ஆறுதலை என்று மகன் சொல்லிவிட்டால்
நெஞ்சு பிரிந்திடுவார்-பின்பு
நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்.
‘செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாம் என்றே எண்ணி‘ இருப்பவர்களைப் ‘பித்த மனிதர்கள்’ என்றும் அவர்கள் சொல்லும் சாத்திரம் ‘பேய் உரையே‘ என்றும் சொல்லிச் சங்கை முழக்கினான்.
‘வெந்ததைத் தின்று விதிவந்தால் சாவோம்‘ என்று இருக்கும் மானிடர்களுக்கு பாரதி சொல்லும் இவ்வுண்மைகள் புதிர்களாகவே தோன்றியன. அறிவில் தெளிவேற்றும் அவன் வார்த்தைகள் சொல்லும் வாழ்நெறியை உணர மறுத்த அவர்கள், கண்கெட்ட குருடரைப்போலப் பிறர் காட்டிய பொய்ம்மை வழியில் சென்று மாட்டிக்கொண்டு தவித்தனர்.
பொய்த்த இந்திர சாலம் – நிகர்
பூசையும் கிரியையும் புலைநடையும்
கைத்திடு பொய்ம்மொழியும் – கொண்டு
கண்மயக்கால் பிழைப்போர் பலராம்.
‘பொய்ம்மொழியும் கண்மயக்கும்’ கொண்டு பிழைப்பு நடத்தும் கயவர்களின் வஞ்சனைப் பேச்சில் மதிமயங்குவோர் பலர் இருக்கிறார்களே என்ற பாரதியின் உள்ளக் குமுறல், உலக நலத்தின் மீது அவனுக்கிருந்த அக்கறையை வெளிப்படுத்துகிறது.
பாரதியைப்போலவே நம் முன்னோர்களும் வெற்றுச் செருக்கும் வீண்பேச்சும் வெளிப்பகட்டும் நிறைந்த மனித வாழ்க்கையைச் சாடினர். இருப்பதையும் இல்லாததையும் சேர்த்து அள்ளிவிட்டுப் பேசுவதையும் வேகமாகச் செல்லக்கூடிய வாகனங்களில் ஊர்ந்து செல்வதையும் செல்வமாக அவர்கள் கருதவில்லை. தன்னைச் சேர்ந்தவர்கள் படுகின்ற துன்பத்தைக் கண்டு அதைத் துடைக்கும் உயர்ந்த பண்பையே செல்வம் என்றனர். மிளைகிழான் நல்வேட்டனார் என்னும் புலவர் நற்றிணை என்னும் சங்கத் தமிழ் நூலில் சொல்லும் இக்கருத்து உண்மையான செல்வம் எது என்பதை நமக்கு உணர்த்துகின்றது.
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
மிளைகிழான் நல்வேட்டனார்
செல்வம் அன்று;தன் செய்வினைப் பயனே!
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கட் செல்வம் செல்வம் என்பதுவே.
தற்பெருமையே பேசி நீட்டி முழக்கிப் பொய்யுரைக்கும் வாய்ச்சொல் வீரர்களின் பகட்டான பேச்சையே ‘நெடிய மொழிதல்’ என்று சொல்கிறார் நல்வேட்டனார். அவ்வாறு ஒன்றும் இல்லாத விஷயத்தை மிகைப்படுத்திப் பேசுபவர்கள் தங்கள் செல்வச் செழிப்பைக் காட்டி மயக்கவும் தயங்கமாட்டார்கள். அவர்கள் காட்டும் அந்த மிடுக்குத் தோரணையை ‘கடிய ஊர்தல்’ (விரைவான வாகனங்களில் செல்லுதல்) என்றும் சொல்கிறார். இவர் குறிப்பிடும் ‘நெடிய மொழிதலையும் கடிய ஊர்தலையும்’ பாரதி குறிப்பிட்ட பொய்ம்மொழியோடும் கண்மயக்கோடும் ஒப்பு நோக்கிக் கருதலாம்.
மிளைகிழான் நல்வேட்டனார் காட்டும் வாழ்நெறியைக் கடைபிடித்து ஒழுகும் தமிழ் மரபில் வந்த செம்மலாகிய பாரதியும் பொய்ம்மையே பேசிப் பொழுதினைச் சுருக்குபவர்களை வெறுத்தொதிக்கினான். வாழ்வுக்குச் சற்றும் உதவாத பேச்சுகளையும், மூட நம்பிக்கைகளையும், பிரிவினைவாதக் கொள்கைகளையும், பொய்ச் சாத்திரங்களையும் ‘சின்னஞ்சிறு கதைகள்’ என்றும் ‘பேதைக் கதைகள்’ என்றும் ‘பேய் உரைகள்’ என்றும் சொல்லிக் கண்டித்தான்.
இவ்வாறு சின்னஞ்சிறு கதைகள் பேசி வாழ்வோரைச் சாடும் பாரதி, நம்முடைய பேச்சுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் நயம்பட வரையறுத்துக் காட்டினான்.
‘பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பார் அளித்ததும் தர்மம் வளர்த்ததும்
பேரருள் சுடர்வாள் கொண்டு அசோகனார்
பிழைபடாது புவித்தலம் காத்ததும்
வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்’
சோழ பாண்டியர்களையும் அசோகரையும் வீரசிவாஜியையும் போற்றுகின்ற பெருமைவாய்ந்த கதைகளைப் பேசவேண்டும் என்றான். அதே சமயம், ‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகளை மட்டும்’ பேசிக்கொண்டு இருக்காமல், பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களையும் தமிழில் மொழிபெயர்த்துப் பேசவேண்டும். வாழ்வுக்குப் பயன்தரும் கல்வியைப் போதிக்கவேண்டும்.
எந்த ஒரு கருத்தையும் பழமை வாய்ந்த நூல்களில் சொல்லப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காகக் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொண்டுவிடக் கூடாது. அதே சமயம், புதுமையான நூல்கள் சொல்லும் கருத்துகளையும் ஒதுக்கக்கூடாது. இன்றைய நூல்களிலும் அரும்பொருள் காணலாம். பாரதி சொல்லும் இதே கருத்தை உமாபதி சிவாசாரியாரின் அருள்வாக்கிலும் காண முடிகிறது.
‘தொன்மையவாம் எனும்எவையும் நன்றாகா இன்று
உமாபதி சிவாசாரியார்
தோன்றியநூல் எனும்எவையும் தீதாகா’
வாழ்வைச் செம்மைப்படுத்தி வீடுபேற்றைப் பெறுவதற்குண்டான வழியைத் தேடாமல், வெறும் ‘டுக்ருண்கரணே’ என்று இலக்கண விதிகளை மனப்பாடம் செய்து வாழ்நாளை வீண் நாளாக்கும் மூடர்களைக் கண்ட ஆதிசங்கரர் அவர்களுக்கு நன்னெறி போதிப்பதற்காக இயற்றிய நூலே ‘பஜ கோவிந்தம்’ என்பர். அதேபோல், வாழ்வுக்கு எந்தச் சிறப்பையும் சேர்க்காத பழங்கதைகளைப் பேசிப் பிதற்றும் மனிதர்களைப் பார்த்து அவர்கள் திருந்தவேண்டும் என்று கடிந்து கூறி அறிவுறுத்தும் நோக்குடன் ‘தேடிச் சோறு நிதம் தின்று’ என்னும் பாரதியின் பாடல் தோன்றியது எனலாம்.