ஜேகே குறள் – ஜே கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பொன்மொழிகள் குறள் வடிவில்

1.
பிறர்தரத் தான்கொண்ட பேரறிவின் தன்னுள் 
உறக்கண்ட உண்மை உயர்வு.

கருத்து:

பிறர் போதிக்கத் தான் கேட்டறிந்து கொண்ட ஞானத்தை விடத் தானே தனக்கு ஒளியாக இருந்து தனக்குள் கண்டுணர்ந்த உண்மை உயர்வானது. 
2.
நினைவரிய மெய்ம்மை எனுமோர் நிலத்தை 
இனிதடையப் பாதையொன் றில்.

கருத்து:

நினைப்பதற்கு அரியதான உண்மை என்னும் நிலத்தை அடைவதற்கான பாதை என்று ஒன்றும் இல்லை. 
3.
நானற்று நோக்க நனிவிளங்கும் எங்கெங்கும் 
ஆனந்தம் அன்போ டழகு.

கருத்து:

“நான்” என்னும் எண்ணத்தை அகற்றி நோக்கும்போது தான், “ஆனந்தம்” “அன்பு” “அழகு” என்று பலவாறாக அழைக்கப்படும் செம்பொருள் எங்கெங்கும் நம் சிந்தைக்கு வெளிப்படும். 
4.
தனிமனிதன் இவ்வுலக மாவான் தரைமேல் 
அனைவருணர் வொன்றாத லான்.

கருத்து:

இந்த உலகத்தவர் அனைவரும் ஒரே விதமான உள்ளுணர்வை உடையவர்கள் ஆதலால், தனிமனிதன் ஒவ்வொருவனும் இவ்வுலகம் ஆகிறான். 
5
தனியொருவன் மாறத் தரணி முழுதும் 
மனவெளியில் மாற்றம் உறும். 

கருத்து:

தனியொருவன் தன்னை மாற்றிக்கொள்ளும்போது அவன் உலகம் முழுமைக்குமான உள்ளுணர்வில் மாற்றத்தை உண்டாக்குகிறான். 
6.
உயர்வென் றறநூல் பயில்வார் உறவென் 
றியற்கை யுடனிணங்கா தார்.

கருத்து:

இயற்கையுடன் ஒன்றி உறவாடத் தெரியாதவர்களே நீதிநெறிகளைப் புகட்டும் அறநூல்களை உயர்வாக மதித்துப் போற்றிக் கற்பார்கள்.
7.
அறிந்ததி னின்று விடுபட்டால் ஆங்கே 
செறிந்தெழும் ஞானத்தின் தீ.

கருத்து:

தான் இதுவரையில் அறிந்துகொண்ட எல்லாவற்றையும் விட்டு விடுதலையாகி நின்றால் அப்பொழுது செறிந்து எழுந்த ஞானத்தின் தீ கொழுந்து விட்டுப் பிரகாசிக்கும். 
8.
கருதா திருள்சேர் திரையகலக் காணில் 
இருவ ரிடைமலரும் அன்பு.

கருத்து:

இன்னார் இனியார் என்று மதிப்பீடு செய்து கருதிப் பாராமல், ஒருவரின் உண்மையான தன்மையைக் காண்பதற்குத் தடையாக நின்று மறைக்கின்ற நினைவென்னும் இருள் திரையை விலக்கிப் பார்க்கும்போதுதான் இரண்டுபேர் இடையே அன்பானது மலரும். 
9.
தன்முனைப் பற்றுத் தனித்திருக்க வாய்க்குமே 
இன்பமெனும் ஏரார் பொருள்.

கருத்து:

எந்தவித முயற்சியோ எதிர்பார்ப்போ இல்லாமல் தனித்திருக்க வல்லவர்களே இன்பம் என்று சொல்லப்படுகின்ற அணிமிகுந்த ஒன்று கிடைக்கப் பெறுவர். 
10.
எண்ணம் உணர்வென் றிவைகடந்து சீருற்ற 
தெண்ணெஞ்சில் சேரும் அழகு.

(தெண்ணெஞ்சில் = தெளிந்த நெஞ்சில்)

கருத்து:

எல்லா எண்ணங்களையும் உணர்வுகளையும் கடந்து நின்று ஓர் ஒழுங்குடன் திகழும் தெளிந்த நெஞ்சத்தில் அழகு விளங்கும். . 

Leave a Reply