கம்பர் வரலாறும் கவிச்சிறப்பும்

எத்திக்கும் போற்றும் இராமன் திருக்கதையைத்
தித்திக்கும் செந்தமிழில் செய்தளித்து – நித்தமும்
அம்புவியில் மக்கள் அமுதம் அருந்தவைத்த
கம்பன் கவியே கவி.
– கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

தமிழ் இலக்கியக் காலச்சுவடுகளில் கம்பர் வரலாறு ஒரு தங்கத் தடமாக ஒளிர்ந்து தமிழ் கூறும் நல்லுலகில் ஒரு காவியப் புதுமை தோன்றக் காரணமாக இருக்கிறது. கம்பராமாயணம் என்னும் கவி அமுதத்தை நமக்கு அளித்த வள்ளலாகிய கம்பரது வாழ்க்கை மற்றும் கவிச்சிறப்பைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

கம்பர் – சிறு குறிப்பு
பிறந்த ஊர்திருவழுந்தூர்
காலம்கி.பி. 11-ஆம் நூற்றாண்டு
இயற்றிய நூல்கள்கம்பராமாயணம், சடகோபர் அந்தாதி, சரசுவதி அந்தாதி முதலியன
சமகாலப் புலவர்கள்ஒட்டக்கூத்தர், புகழேந்தி, ஒளவையார்

கம்பர் வரலாறு

இந்திய நாட்டின் மிகச்சிறந்த புலவர்கள் பலர் தங்கள் உண்மையான பெயர் இன்னதென்று தெரிவிக்கும் குறிப்பேதும் தங்கள் நூல்களில் இடவில்லை. ஒரு ஞானி எவ்வாறு தன் தனிமனித வாழ்க்கையை உலகத்தின் இருப்புடன் ஒன்றாக்குவதை விரும்புவாரோ, அதே போன்று இந்தியக் கவிஞர்களும் தம் தனித்துவத்தைத் துறந்து இலக்கியப் பெருவெளியில் தம்மை ஓர் அங்கமாகவே பாவித்து வருகின்றனர். இந்தக் கூற்று, சங்ககாலம் முதற்கொண்டு தற்காலம் வரை வாழ்ந்த தமிழ்ப் புலவர்களைப் பொருத்தமட்டும் பலமடங்கு உண்மை. தமிழ்க் கவிஞர்களின் பெயர்கள் பெரும்பாலும் அவர்கள் பிறந்த ஊர்களின் பெயரையோ குடும்பப் பெயர்களையோ குணநலன்களையோ சார்ந்திருக்கும். நூறில் ஒரு புலவர் கூடத் தம் இயற்பெயர் கொண்டு அறியப்படுவதில்லை.

நம் கட்டுரை நாயகரான கம்பரும் இதற்கு விதிவிலக்கல்ல. கம்பர் தாம் வாழும் காலத்திலேயே கம்பன் அல்லது கம்பநாடன் என்று அழைக்கப்பட்டார். அவர் புகழ்பாடும் பாடல்களும் அவரைக் கம்பநாடன், கம்பநாடுடைய வள்ளல், கம்பநாட்டாழ்வான் என்றே குறிப்பிடுகின்றன.

கம்பர் பிறந்த குறுநாடு தஞ்சை மாவட்டத்திலுள்ள கம்பநாடு என்று ஆரய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அவர் பிறந்த ஊர் திருவழுந்தூர் என்பதை அவர் பாடிய சடகோபர் அந்தாதியில் வரும் : ‘மன்றே புகழும் திருவழுந்தூர் வள்ளல்’ என்னும் பாடல் வரியால் அறிந்துகொள்ளலாம். மேலும், கம்பர் திருவழுந்தூரில் பலகாலம் வாழ்ந்தார் என்பதை, ‘சீரணி சோழ நாட்டுத் திருவழுந்தூரில் வாழ்வோன்’ என்று வரும் இரமாயணத் தனியன் மூலம் அறியப்படுகிறது.

கம்பரின் பெற்றோர்கள் யார்?

கம்பர் அரச குடும்பத்தில் பிறந்தவர் என்றும், அவரால் அரசுக்குத் தீமை ஏற்படும் என்று சோதிடர்களால் கணிக்கப் பட்டதால், அவர் பிறந்தவுடன் அவரைக் காட்டில் விட்டுவிடும்படி அரசர் கட்டளையிட்டதாகவும், அவரைத் திருவழுந்தூரில் வாழ்ந்த ஒச்சர் ஒருவர் அக்காட்டில் கண்டெடுத்து வளர்த்ததாகவும் கூறுவர். வேறு சிலர், அவ்வொச்சருக்கு மகனாகப் பிறந்தவர் கம்பர் என்றும் சொல்வர். இவர் வேளாள மரபில் தோன்றியவர் என்றும், தந்தையின் மறைவுக்குப் பின், அவரது தாயார் திருவெண்ணெய் நல்லூர் சென்றடைந்து சடையப்ப வள்ளலின் அரண்மனையில் பணிப்பெண்ணாக வேலைக்குச் சேர்ந்ததாகவும், கம்பரின் கவித்திறமையைச் சிறு வயதிலிருந்தே போற்றி வளர்த்த சடையப்பர், பணிப்பெண்ணின் புதல்வராயினும் கம்பரைத் தமக்குச் சரிசமமாகவே பாவித்துப் புரந்தார் என்றும் வேறு சிலர் கூறுவர்.

காளிங்கராயன் குதிரையும் கம்பர் தம் பெயர் பெற்ற கதையும்

கம்பர் பள்ளியில் படித்து வந்த போது, அவரது ஆசிரியர் தமக்கு வைரபுரம் என்னும் கிரம்மத்தில் உள்ள கம்பங்கொல்லை தினைக்கொல்லைகளைக் காப்பதற்காகத் தம்மிடம் படிக்கும் மாணவர்களைத் தினம் ஒவ்வொருவராக அனுப்பி வந்தார். அப்போது ஒருநாள் கம்பரை அனுப்பினார். கம்பரும் அன்று காலை முழுவதும் காவல் காத்ததனால் வந்த களைப்பின் மிகுதியால் மதிய நேரம் அங்குள்ள காளிகோயிலில் படுத்து இளைப்பாறினார். தூங்கும்போது கொல்லையில் ஒரு குதிரை வந்து மேய்வதாகக் கனாக்கண்டு எழுந்துபார்க்க, கனவில் கண்ட படியே பயிரை ஒரு குதிரை மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டார். அந்த ஊரை ஆளும் தலைவனாகிய காளிங்கராயன் என்பவனுக்குச் சொந்தமானது அந்தக் குதிரை. கம்பர் அதனைத் துரத்தியும் அது அந்த இடத்தை விட்டுப் போகாமல் பயிரை மேய்ந்துகொண்டிருந்தது. இதைக் கண்டு அஞ்சி நடுங்கிய சிறுவனான கம்பர் காளி கோயிலெதிரே நின்று புலம்பினார். அதுகண்டு காளிதேவியானவள் கருணை கூர்ந்து அவர் முன் தோன்றி : ‘குழந்தாய்! அழாதே; உன் நாவை நீட்டு’ என்றாள். இவர் அவ்வாறே தம் நாக்கை நீடா, தேவி அதில் ஒரு மந்திரத்தை எழுதி அருள்பாலித்தாள். பின்னர், இவர் கொல்லையில் போய்ப் பார்க்கும்போது, குதிரை அங்கேயே மேய்ந்துகொண்டிருந்தது. அப்போது, காளிகாதேவியின் அருளால் சரசுவதி கடாக்‌ஷம் பெற்ற இவரது வாக்கிலிருந்து, சினத்தின் மிகுதியால் ஒரு பாடல் தோன்றியது. அந்தப் பாடல் ஒரு வெண்பாவாக உருவெடுத்தது:

வாய்த்த வயிரபுர மாகாளி அம்மே கேள்!
காய்த்த தினைப்புனத்துக் காலை வைத்துச் – சாய்த்து
கதிரை மாளத் தின்ற காளிங்க ராயன்
குதிரை மாளக்கொண்டு போ!

அவ்வாறு இவர் பாடியவுடன் அக்குதிரை கீழே விழுந்து இறந்தது. அந்தச் செய்தியை அறிந்த அவரது ஆசிரியர் ஓடி வந்து பார்த்தார்; ஊர்த் தலைவரின் கோபத்திற்கு ஆளாவோமே என்று கலங்கினார். ஆசிரியரின் கலக்கத்தைப் பார்த்த கம்பரும் தாம் சினந்து பாடியமைக்கு வருந்தினார். அதனால், தாம் முன்பு பாடிய வெண்பாவின் நான்காம் அடியை “குதிரை மீளக் கொண்டு வா!” என்று மாற்றிப் பாடினார். இறந்த போன குதிரையும் உயிர்பெற்று மீண்டெழுந்தது. காளிங்கராயன் இதனைக் கேள்வியுற்று, கம்பரைச் சோழ மன்னாகிய குலோத்துங்கன் முன் நிறுத்தினார். கம்பும் கையுமாய் நின்ற சிறுவனைப் பார்த்த அரசன், ‘இந்தக் கம்பனா அந்தச் செயலைச் செய்தான்?’ என்றான். இந்தக் காரணத்தாலும், கம்பங்கொல்லையைக் காத்ததனாலும், இவருக்குக் கம்பர் என்று பெயர் உண்டாயிற்று.

கம்பர் வாழ்ந்த காலம்

சோழ சாம்ராஜ்யத்தின் அரசவைப் புலவரான ஒட்டக்கூத்தரும், நளவெண்பா தந்த புகழேந்தியும் கம்பரின் சமகாலத்தவர்கள் என்று கூறுவர்.

ஒட்டக்கூத்தருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கம்பர் சோழனின் அரசவையை விட்டுச் செல்லும் போது ‘துங்கா’ என்று அரசனை விளித்துப் பாடுகிறார்:

அடைந்தாரைக் காக்கும் அகளங்கா துங்கா
நடந்தாயே நாலா றடி.

கம்பர்

மேலும் குலோத்துங்கச் சோழனே தான் எழுதிய கவிதையில் தன்னை ஒட்டக்கூத்தரின் சிஷ்யன் என்று குறிப்பிட்டுக்கொள்வது இக்கருத்துக்கு மேலும் வலுசேர்க்கிறது:

பாடும் புலவர் புகழொட்டக் கூத்தன் பதாம்புயத்தைச்
சூடும் குலோத்துங்கச் சோழன் என்றே எனைச் சொல்லுவரே

குலோத்துங்கச் சோழன்

புகழேந்தியாரும் அரசனைப் பாடும் போது, ‘துங்கா’ என்ற சொல் கொண்டு விளிக்கிறார்:

பழியும் புகழும் எவர்க்கும் உண்டாமிந்தப் பாரில் உனக்கு
அழியும் சிலையும் கயலு மென்றால் அகளங்கா துங்கா

புகழேந்திப் புலவர்

மேற்கூறிய இலக்கியச் சான்றுகள் மூலம் கம்பர் குலோத்துங்கச் சோழனின் காலத்தில் வாழ்ந்தார் என்பது தெரிகின்றது. முதலாம் இராஜேந்திரச் சோழன் கம்பரிடமும் ஒட்டக்கூத்தரிடமும் இராமாயாணத்தை எழுதுமாறு பணித்தான் என்றும், ஆனால் கம்பரது காவியம் இராஜேந்திரனின் புதல்வன் முதலாம் குலோத்துங்கச் சோழனின் காலத்தில்தான் அரங்கேறியது என்றும் கூறுவர்.

கம்பரும் ஒட்டக்கூத்தரும்

சோழ மாமன்னன் இரண்டாம் குலோத்துங்கனைச் சிறுவயதுமுதல் எடுத்து வளர்த்த பெருமையும், அவனுக்கு ஆசானாக நின்று எழுத்து அறிவித்துக் கல்வி புகட்டிய சிறப்பும் உடையவர் ஒட்டக்கூத்தர். அதுமட்டுமல்லாமல், குலோத்துங்கனையும் அவனது தந்தை விக்கிரம சோழன் மற்றும் மகன் இரண்டாம் இராஜராஜ சோழன் ஆகியவர்களையும் புகழ்ந்து ‘மூவர் உலா’ என்னும் அருமையான நூலை எழுதிய பெருமையும் ஒட்டக்கூத்தரைச் சாரும்.

அந்தப் பெருமையினால் உண்டான ஞானச்செருக்கின் காரணமாக ஒட்டக்கூத்தருக்குத் தம்மை விடக் கவித்திறன் கொண்டவர்களைக் கண்டால் மனம் பொறுப்பதில்லை. அதனால், தம்மிற் சிறந்த கம்பரையும் புகழேந்தியையும் அவர் அடியோடு வெறுத்தார். ஒட்டக்கூத்தர் தமது உள்மனதில் அந்த இரும்பெரும் புலவர்களை மெச்சினாலும், அவர்கள் இருவரையும் நேரில் காணும்போதெல்லாம் தமது காழ்ப்புணர்ச்சியைக் காட்டி வந்தார்.

கம்பர் காலமான போது, ஒட்டக்கூத்தர் மகிழ்ச்சியும் வருத்தமும் ஒரே பாட்டில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பாடல் கீழ்வருமாறு:

இன்றைக்கோ கம்பன் இறந்தநாள், இப்புவியில்
இன்றைக்கோ என்கவிதை ஏற்கும்நாள் – இன்றை
பூமடந்தை வாழப் பொறைமடந்தை வீற்றிருக்க
நாமடந்தை நாண்இழந்த நாள்!

நாமடந்தையின் நாயகனாகக் கம்பனைப் பாவித்த ஒட்டக்கூத்தரின் பெருந்தன்மை போற்றற்குரியது.

This Post Has 2 Comments

  1. டாக்டர் ஸ்ரீ. கோ. மன்னர் மன்னன்.

    கம்பரின் இந்த வரலாறு எனக்குப் புதியது . சிறுவனாய் கம்பர் பாடிய வெண்பா மனத்தைக் கொள்ளை கொள்கிறது . மன்னரை ” அகளங்க துங்கா ” என்றழைத்ததற்கும் , நாலாறடி – 10ஆ இல்லை 24 ஆ – என்றதற்கும் பொருள் தெரியவில்லை .

    1. இமயவரம்பன்

      எனது வலைத்தளத்திற்கு வருகை தந்து கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி!

      ‘அகளங்கா’ என்பதை ‘அ’ +’களங்கா’ என்று பிரித்தால், களங்கமற்றவன் என்று பொருள்படும் என்று ‘தனிப்பாடல் திரட்டு‘ என்னும் நூல் தெரிவிக்கிறது.
      ‘துங்கா’ என்று அழைத்தது ‘குலோத்துங்கா’ என்பதன் சுருக்கமே என்று ‘சித்தாந்த தீபிகா’ என்னும் இதழ் மொழிகிறது.
      ‘நாலாறடி’ என்பதை ’24 அடி’ என்று பொருள் கொள்ளலாம். சோழ நாட்டின் பரப்பளவு 24 காத தூரம். அடுத்து வரும் பாட்டில் ‘காதம் இருபத்து நான்கு ஒழியக் காசினியை ஓதக் கடல்கொண்டு ஒளித்ததோ?’ என்று கம்பர் வினவுவதால் இங்கு ‘அடி’ என்னும் சொல் ‘காத தூரம்’ என்று குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.
      ‘நடந்தாயே’ என்பதை ‘ஆண்டாயே’ என்று கொண்டால் ‘நீ அரசாள்வது 24 காத தூரம்வரை பரந்த சோழ நாட்டை மட்டும் தானே?’ என்று பொருள் அமைவதைக் காணலாம்.

Leave a Reply