வடமதுரை உதித்தான் – கண்ணன் பாட்டு

கண்ணன் பாட்டு

வடமதுரை உதித்தான் – கண்ணன் பாட்டு

கவிதை : இமயவரம்பன்
பாவகை : எழுசீர் ஆசிரிய விருத்தம்
1.
அன்பினால் நினைவார்க்(கு) அமுதினும் இனியான்
… அணிமயில் சிற(கு)ஒளிர் சிகையான்
மின்னுமா மணிபோல் திலகவாள் நுதலான்
… மிளிர்குழை திகழ்தரு செவியான்
இன்(பு)எலாம் நிறைக்கும் குழல்அமர் இதழான்
… என்(பு)எலாம் உருக்கிடும் இசையான்
மன்னுமா நிலத்தில் மங்கலம் பெருக
… மதுரையம் பதியுதித் தனனே.

பொருள்:

அன்பினால் நினைவார்க்கு = அன்பு கொண்டு தியானிப்பவர்களுக்கு
அமுதினும் இனியான் = அமுதத்தைக் காட்டிலும் இனியவன்;
அணிமயில் = அழகிய மயிலின்
சிறகு ஒளிர் = இறகு பளிச்சிடும்
சிகையான் = தலைமுடியை உடையவன்;
மின்னும் மா மணிபோல் திலகம் = மின்னுகின்ற மணியைப் போன்ற திலகம் அணிந்த
வாள் நுதலான் = ஒளிவீசும் நெற்றியை உடையவன்;
மிளிர் = பொன்னொளி பரப்பும்
குழை = காதணிகள்
திகழ்தரும் = திகழ்கின்ற
செவியான் = திருச்செவிகளை உடையவன்;
இன்பு எலாம் = இன்பங்களை எல்லாம்
நிறைக்கும் = எங்கும் நிறைந்திடச் செய்யும்
குழல் = புல்லாங்குழல்
அமர் = தங்குகின்ற
இதழான் = இதழ்களை உடையவன்;
என்பு எலாம் = (கேட்பவர்களின்) உடல் எலும்புகள் எல்லாம்
உருக்கிடும் = உருகி நெகிழும்படியாக
இசையான் = (அப்புல்லாங்குழலைக் கொண்டு) இசையை எழுப்புபவன்;
மன்னும் = (அத்தகைய பெருமை வாய்ந்த கண்ணன்) நிலைபெற்ற
மா நிலத்தில் = இந்தப் பெரிய உலகத்தில்
மங்கலம் பெருக = நலம் ஓங்கிட
மதுரை அம் பதி = வடமதுரை என்னும் அழகிய நகரில்
உதித்தனனே = தோன்றினான்.

English Translation

He who is sweeter than nectar for those who meditate on Him with love and devotion,
He whose crown is adorned with a beautiful peacock’s plume,
He whose forehead gleams with a bead-like tilak,
He whose ears shine with golden ear-rings,
He whose lips, on which a flute rests, fill happiness around,
He whose bone-melting music (springing from the flute) captivates the listener,
He was born in the beautiful city of Mathura,
To bestow abounding prosperity on the world.

Leave a Reply