கலீல் ஜிப்ரான் கவிதைகள்

Khalil Gibran Kavithaigal

கலீல் ஜிப்ரான் கவிதைகள்

Khalil Gibran Kavithaigal

கலீல் ஜிப்ரான் – லெபனான் தந்த கலைச்செல்வம்;
பாஸ்டன் நகர் வாழ்ந்த பெருங்கவிஞர்;
எழுத்திற் சிறந்த காவியங்களோடு சிந்தை தூண்டும் ஓவியங்களும் படைத்தவர்;
இணையற்ற ஆன்மீக மேதை.

கலீல் ஜிப்ரான் படைத்த ‘தீர்க்கதரிசி’ (The Prophet) என்னும் புகழ் வாய்ந்த நன்னூலிருந்து என்னை மிகவும் கவர்ந்த கவிதைகள் சிலவற்றை அருந்தமிழில் மொழியாக்கம் செய்துள்ளேன்.

Khalil Gibran Kavithaigal – A Tamil Translation

கலீல் ஜிப்ரான் – அன்பைப் பற்றி | Khalil Gibran – On Love

அன்பின் குரல் உன்னை அழைக்கும்போது
அதைப் பின்தொடர்ந்து செல்!
அன்பு உன்னை வழிநடத்தும் பாதைகள்
கரடு முரடாகவும் நடப்பதற்குக் கடினமாகவும் இருந்தாலும்,
அன்பின் மெல்லிறகுகளுக்குள் மறைத்துவைக்கப் பட்டிருக்கும் வாள் உன்னைத் துளைத்தாலும்,
அன்பின் சிறகுகளுக்குள் நீ அடைக்கலம் புகுவாய்!

காதல் பேசும் மொழியைக் கேட்டதும்
கடும்புயலால் தாக்கப்பட்ட பூஞ்சோலையைப்போல்
உன் கனவுகள் அத்தனையும் பொடிப்பொடி ஆகலாம்.
எனினும், காதல் உன்னுடன் பேசும்போது அதனிடம் நம்பிக்கை வை.

காதல் உன்னை நேசிக்கும் அதே கணத்தில்
அது உன்னைச் சித்திரவதை செய்யக்கூடும்;
உன் வளர்ச்சிக்கு வித்திடும் அதே தருணத்தில்
காதல் உன்னைக் கட்டுக்குள் வைக்கும்.

காதலானது உன்னை உச்சி முகர்ந்து ,
கதிரொளியில் அசைந்தாடும் உனது மெல்லிய கிளைகளை வருடுகின்ற அதே வேளையில், உன் அடி வரைச் சென்று பூமியைப் பற்றியிருக்கும் உனது வேர்களை அசைத்தாட்டிப் பிய்த்தெறியப் பார்க்கும்.

காதல் உன்னைச் சோளக் கதிர்க்கட்டுகளைப் போல தன்னுள் சேகரிக்கும்;
வெற்றுடல் தெரிய அடித்துத் துவைக்கும்;
உமிகளிலிருந்து உன்னைப் பிரித்தெடுக்கும்;
வெளுக்கும்வரை அரைத்தெடுக்கும்;
பணியும்வரை பிசைந்தெடுக்கும்;
அதன்பின்னர், இறைவனின் புனித விருந்துக்கு உணவாகுமாறு உன்னை மாசற்ற தீயில் கொண்டு தள்ளி விடும்.

இவையெல்லாவற்றையும் அன்பானது ஏன் உனக்கு செய்கிறது தெரியுமா?
நீ உன் இதயத்தின் இரகசியங்களை அறிந்துகொள்வதற்காகவே!
இதுவரைத் தனித்திருக்கும் நீ, அந்த அறிவின் துணையுடன் வாழ்வினுடைய பேரிதயத்தின் ஒரு பகுதியாக மாறுவதற்காகவே!

ஆனால், உன்னுடைய அச்சத்தின் விளைவாக,
அன்பினுடைய சாந்தத்தையும் களிப்பையும் மட்டும் நீ விரும்பினால்,
உன்னுடைய வெறுமையின் வெளிப்பாட்டைத் திரையிட்டு மறைத்துக்கொண்டு அன்பின் கதிரடிக்கும் தளத்திலிருந்து நீ வெளியேறலாம்.

அவ்வாறு வெளியேறி, பருவமாற்றமற்று ஒரே விதமாக இயங்கும் இந்த உலகத்தில் மீண்டும் புகுந்தால்,
களிப்புடன் நீ வாழலாம்;
ஆனால் முழுக்களிப்புடன் அல்ல;
துக்கப்பட்டு அழலாம், ஆனால் உன் எல்லாத் துக்கங்களும் வெளிப்படுமாறு அல்ல.

காதல் தன்னை மட்டுமே கொடுக்கும்;
தன்னிடமிருந்தே எடுத்துக் கொள்ளும்.
காதல் ஒருபோதும் உரிமை கொண்டாடாது;
யாருக்கும் கட்டுப்படாது.
காதல் முழுமையானது;
குறையற்றது.

நீ அன்பு வைக்கும்போது, ‘இறைவன் என் உள்ளத்தில் உள்ளான்’ என்று சொல்லக்கூடாது.
‘நான் இறைவனின் இதயத்தில் இருக்கிறேன்’ என்று எண்ணவேண்டும்.

காதலை வழிநடத்தலாம் என்று நீ நினைக்கக்கூடாது.
ஏனென்றால், உனக்கு காதல் செய்யத் தகுதியிருந்தால், அன்பே உன்னை வழிநடத்திச் செல்லும்.

தன்னை நிறைவேற்றிக் கொள்வதைத் தவிரக் காதலுக்கு வேறெந்த விருப்பமும் கிடையாது.
காதல் செய்வாய் என்றால், உன் ஆசைகள் இவையாகவே இருக்கட்டும்:

உருகி நெளிந்தோடும் நீரோடையைப்போல் இரவின் காரிருளில் மெல்லிசையோடு பாடிக் கொண்டு செல்ல ஆசைப்படு;
அளவிடமுடியாத மென்மையினால் உண்டாகும் வலியை அறிந்துகொள்ள ஆசைப்படு;
காதலைப் பற்றிய உன்னுடைய புரிதலால் காயப்பட்டு மனம் வாட ஆசைப்படு;
முழுவிருப்போடும் மனக்களிப்போடும் இதயத்தில் இரத்தம் சிந்த ஆசைப்படு;
சிறகுகள் முளைத்த இதயத்துடன் விடியலில் துயிலெழுந்து, காதலில் வாழ்ந்திட இன்னமொரு நாள் அமைந்தமைக்கு நன்றி சொல்ல ஆசைப்படு;
நாளின் நடுப்பகலில் ஓய்வெடுத்து அன்பின் பரவசத்தில் மனம்லயித்திட ஆசைப்படு;
நெஞ்சில் நன்றி மிகுந்திட, மாலையில் இல்லம் திரும்ப ஆசைப்படு;
அன்பர் நலம் வேண்டிடும் இதயத்துடனும்,
அன்பர் அருமையைப் பாடும் பாடல் ஓசை தவழும் இதழ்களுடனும்
கண்ணுறங்கிட ஆசைப்படு!

கலீல் ஜிப்ரான் – குழந்தைகளைப் பற்றி | Khalil Gibran – On Children

உங்கள் குழந்தைகள் உங்களுடையவர்கள் அல்லர்.
வாழ்க்கையின் உயிர்சக்தி தன்மேல் உள்ள வேட்கையினால்
தோற்றுவித்த மக்கள் அவர்கள்.

உங்களை ஊடகமாகக் கொண்டு அவர்கள் தோன்றினார்களேயன்றி
உங்களிடமிருந்து அவர்கள் தோன்றவில்லை.
குழந்தைகள் உங்களுடன் வசித்துவந்தாலும்,
உங்களைச் சேர்ந்தவர்கள் அல்லர்.

உங்கள் அன்பினை அவர்களுக்கு அள்ளிக் கொடுங்கள்,
ஆனால் உங்கள் சிந்தனைகளை அவர்கள்மீது திணிக்காதீர்கள்.
ஏனெனில், அவர்களுக்கென்று தனியாக எண்ணங்கள் உண்டு.

அவர்கள் உடலுக்கு நீங்கள் உறைவிடம் கொடுக்கலாம்;
அவர்களது ஆன்மாக்களுக்கல்ல.
ஏனென்றால், அவர்களது ஆன்மாக்கள் நாளை என்னும் மாளிகையில் வசிக்கின்றன. அத்தகைய மாளிகையில் நீங்கள் யாரும் கனவிலும் கூட நுழைய முடியாது.

நீங்கள் அவர்களைப் போல இருக்க பிரயத்தனம் செய்யலாம்;
ஆனால், உங்களைப்போல அவர்களை மாற்ற முயலாதீர்கள்.
ஏனென்றால்,முன்னோக்கிச் செல்வதே வாழ்க்கையின் தன்மை;
பின்னடைந்துக் கெடுவதல்ல.

குழந்தைகள என்னும் உயிர்மிக்க அம்புகளைச் செலுத்தப் பயன்படும் வில்லாக நீங்கள் இருக்கவேண்டும்.
(கடவுளெனும்) வில்லாளி, ஆதியும் அந்தமும் இல்லாத காலத்திடலில்
கண்ணுக்குப் புலப்படாத இலக்கினை நோக்கி
அம்புகளை வேகமாகச் செலுத்த
வில்லாகிய உங்களைத் தன் வலிமையெலாம் சேர்த்து வளைத்திடுவான்.
அவன் வளைக்கும் வளைப்புக்கு மகிழ்வோடு இணங்குங்கள்.
ஏனெனில், தன்னால் செலுத்தப்படும் அம்புகளின் மீது பேரன்பு கொள்ளும் இறைவன், அவனது ஆற்றலுக்கு இணங்கி நின்று உதவும் விற்களாகிய உங்கள் மீதும் அன்புடையவனாகவே இருப்பான்.

Notes on ‘Khalil Gibran Kavithaigal – A Tamil Translation’:

These selections from the Khalil Gibran poems are some of the heart melting poetry that radically change our process of thinking.

This Post Has 2 Comments

  1. ஜெயமுருகன் தங்கவேல்

    அருமையான கவிதை

    1. இமயவரம்பன்

      மிக்க நன்றி!

Leave a Reply