கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்

நரை கூடிக் கிழப்பருவம் எய்தி — கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்

          – மகாகவி பாரதியார்

‘கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்’ – கண்மண் தெரியாமல் கயிற்றினை வீசிக் கணக்கற்ற உயிர்களின் கணக்கை முடிக்கும் காலன் கருணையற்றவன்; காலம் நேரம் பார்க்காதவன்; நல்லோர் தீயோர் என்று தெளியாதவன். அத்தகைய மிருககுணம் கொண்ட காலனுக்கு உணவாகப் பயனின்றி வாழ்ந்து மடிகின்ற பேதை மனிதர்களின் நிலையைக் கண்டு வருந்தும் பாரதியின் இந்த வார்த்தைகளை இப்பதிவில் ஆராய்ந்து பார்ப்போம்.

விளக்கவுரை:

உண்டிக்கும் உடைமைக்கும் ஆசைப்பட்டு உணர்விழந்து பகைவளர்த்து மனம்தாழ்ந்து மடிகின்ற கலக மானுடப் பூச்சிகளின் அவல நிலை கண்டு இரங்குகிறான் பாரதி.

ஆம், இவர்கள் விட்டில் பூச்சிகள் போலத் தீமையைத் தேடிச் சென்றுத் தாமாக மாட்டிக்கொண்டு மடியும் மூடர்கள் தாம்.இருப்பினும், இவர்கள் வாழ்க்கையின் இறுதியில் நரை கூடி, தடி ஊன்றி, தளர்வு அடைந்து அன்றோ இருக்கிறார்கள்! இந்நிலையில் இவர்கள் மனம் வாடி மெலிவுற்று இருக்கும்போது கொஞ்சமும் கருணை காட்டாமல் காலன் இவர்களது உயிரைக் கவர்கின்றானே! இது மிகவும் வேதனைக்குரியது தானே! இவர்கள் தாம் வாழும் காலத்தில் அன்பும் அறமும் வளர்த்திருந்தால் இந்தத் துயர நிலையைத் தவிர்த்துத் தன்னைப் போல் சாகா வரம் பெற்றிருக்கலாமே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து நினைத்து பாரதியின் மனத்தில் எழுந்த துயரத்தின் எதிரொலிப்பை ‘கொடுங்கூற்றுக்கு இரை எனப் பின் மாயும்’ என்னும் சொற்களில் உணர முடிகின்றது.

கூற்று என்றால் காலன் என்று பொருள். காலன் கண்பார்வை சரியில்லாதவன். தான் கவர நினைத்த உயிர்களை எல்லாம் நல்லவர் தீயவர் என்று பாராமல் காட்டுவெள்ளம் போல அடித்துச் செல்பவன். ‘நுண்மாண் நுழைபுலம்’ கொண்ட நூலறிவாளர் என்றோ, எழில்நலம் கொண்ட இனியவர் என்றோ பார்க்க மாட்டான்.

நேத்திரம் கெட்டவன் காலன் – தன்முன்
நேர்ந்த(து) அனைத்தும் துடைத்து முடிப்பான்.
நன்றென்றும் தீதென்றும் பாரான் – முன்பு
நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
சென்றிடும் காட்டுவெள்ளம் போல் – வையச்
சேர்க்கை அனைத்தையும் கொன்று நடப்பான்.

அறுசுவை உணவு உண்டு களித்து கண் அயர்ந்து படுத்திருக்கிறார்கள் என்றும் கூடக் கருதமாட்டான். அவ்வாறு கிடக்கப் படுத்தவர்கள் படுத்த படுக்கையாகவே போய் ஒழியுமாறு செய்பவன். இந்த உண்மையைக் கீழ்வரும் திருமந்திர மொழிகளால் அறியலாம்.

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் …
கிடக்கப் படுத்தார் கிடந்து ஒழிந்தாரே.

கூற்றுவனின் இந்தக் கருணையற்ற செயல்களால் வெகுண்ட பாரதி அவனைக் ‘கொடுங்கூற்று’ என்று தூற்றுகிறான்.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு.

  • திருக்குறள்

’நேற்று உயிர்வாழ்ந்தவன் இன்று இல்லை’ என்று வள்ளுவப் பெருந்தகை சொல்வதுபோல், மனிதர்கள் சற்றும் எதிர்ப்பாராத நேரத்தில் அவர்களது உயிரைக் கவர்வதால், இரையைத் தின்னும் மிருகத்துக்கும் சமமாகிறான் காலன்.

இத்தகைய காலனை வெற்றிகொள்ள நம் முன்னோர்கள் பலப்பல யுத்திகளைக் கையாண்டுள்ளனர். ‘தவத்தால் பெறுகின்ற ஞானமும் வலிமையும் கொண்டவர்களுக்குக் கொடிய காலனையும் வெற்றி கொள்ள முடியும்’ என்கிறார் வள்ளுவர்.

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.
(குதித்தல் = வெற்றிகொள்ளுதல், நோற்றல் = தவம், ஆற்றல் = ஞானமும் வலிமையும்)

வள்ளுவரைப் போலத் தவத்தின் பயனை நன்கறிந்த யோகியான திருமூலர், ‘மூச்சுக் காற்றை உள்ளிழுத்தும் வெளிவிட்டும் செய்யும் யோகப் பயிற்சியே காலனை உதைத்து விரட்ட வல்லது’ என்கிறார்.

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே.

இவ்வாறு, வள்ளுவரும் திருமூலரும் குதித்தும் உதைத்தும் விரட்டிய காலனை வெட்டித் தள்ளாமல் விடமாட்டேன் என்று முழங்குவார் அருணகிரிநாதர். ‘அடக்கமுடியாத எருமைக்கடாவின் மீது ஏறி வரும் காலனே! உன்னை வெட்டித் தள்ளித் தோல்வியுறச் செய்யாமல் நான் விடமாட்டேன்; வேற்படையை ஏந்திய முருகனின் சந்நிதியில் நான் நிற்கிறேன்; வேலவனின் அருள் சக்தியாகிய வாளும் என் கையில் இருக்கின்றது. அதனால் உன்னுடைய படைகளை எல்லாம் திரட்டிக்கொண்டு என்னுடன் சண்டைக்கு வா; நான் உன்னை ஒருகை பார்க்கிறேன்’ என்று தெய்வ பக்தியையே படையாகக் கொண்டு காலனுடன் போர் தொடுக்கிறார் அருணகிரியார்.

பட்டிக் கடாவில் வரும் அந்தகா உனைப் பார் அறிய
வெட்டிப் புறம்கண்டு அலாது விடேன் வெய்ய சூரனைப்போய்
முட்டிப் பொருத செவ் வேல் பெருமாள் திருமுன்பு நின்றேன்
கட்டிப் புறப்படடா, சத்திவாள் என்றன் கையதுவே.

அருணகிரிநாதரின் அருள்மொழிகளைக் கற்றுணர்ந்த தெய்வக் கவியாகிய பாரதியும், காலனுக்குச் சவால் விடுகிறான். வேலாயுதப் படையை நெஞ்சில் பதித்து, தன் காலால் காலனை மிதித்து அழிக்கத் துணிந்து நிற்கின்றான்.

காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன்
காலருகே வாடா!சற்றே உனை மிதிக்கிறேன்
வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன்

’கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்’ என்னும் சொற்றொடரில், ‘பின்’ என்பதற்கான பொருளைச் சற்று ஆராய்ந்து பார்ப்போம். ‘பின்’ என்றால் ‘எதற்குப் பின்?’ என்னும் கேள்வி எழுகிறது. வள்ளுவரைப் போல் தவம் இயற்றாமலும், திருமூலரைப் போல் மூச்சைச் சீராக்காமலும், அருணகிரியாரைப் போல் சக்திவாள் ஏந்தாமலும், பாரதியைப் போல் வேலாயுதத்தை வணங்காமலும் ஆடும்வரை ஆடிவிட்டுக் கடைசியில் மாண்டு போகின்றவர்கள் மூடர்கள். அதனால், ‘இயன்றமட்டும் பொருள்சேர்த்து இருக்குமட்டும் இடர்செய்து நரைத்த தலையர்களாக ஞானம் குன்றி வாழ்ந்து சாகும் வேளை வந்தபின்’ என்பதே ‘பின்’ என்னும் ஒற்றை வார்த்தைக்குப் பொருத்தமான பொருள்.

‘பின் மாயும்’வரைப் பலியாடுகள் போல் காத்திருக்காமல், ‘இன்றே அறம் செய்க’ என்று நாலடியார் சொல்லும் ஞானமொழியையும் இங்கே கருத்தில் கொள்ளலாம். “இப்போதுதான் ஒருவன் இங்கே நின்றான் இருந்தான் படுத்தான். அடுத்த நொடியே தன் உறவினர்கள் அலறி அழும் படி இறந்துவிட்டான்” என்னும் எச்சரிக்கையுடன் “இப்போதே நல்ல செயல்களைச் செய்யவேண்டும்” என்ற அறிவுரையும் கலந்து கொடுக்கும் நான்கு அடிகள் இதோ:

புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றுஎண்ணி
இன்னினியே செய்க அறவினை ; – இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
சென்றான் எனப்படுத லால்.

இனியவை நாற்பதும் ‘கூற்றம் வரவு உண்மை, (இதை) சிந்தித்து வாழ்வு இனிதே’ என்று சொல்லிக் காலன் வருவது நிச்சயம் என்றும், அதனால் நன்முறையில் சிந்தித்து வாழ்ந்தால் வாழ்க்கை இனிமையாகும் என்றும் நமக்கு அறிவுறுத்துகிறது.

தருமம் தழைக்க அயராது உழைத்து, கவலைகளை அகற்றி, சினம் வென்று, பொய் விலக்கி, அச்சமும் மோகமும் அழித்து நெறியுடன் வாழ்ந்தால் மரணத்தையும் வெல்ல முடியும் என்னும் பாரதியின் அறிவுரையும் நம்மைச் சிந்திக்கச் செய்து மனத்துக்கு உறுதி அளிக்கின்றது.

கவலையினைச்‌ சினத்தைப் பொய்யை
அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்‌
அப்போது சாவுமங்கே அழிந்து போகும்‌.

Leave a Reply