காப்பு
பாவான் மொழிஞானப் பாலுண்டு – நாவான்
மறித்தெஞ் செவியமுதாய் வார்த்தபிரான் தண்டை
வெறித்தண் கமலமே வீடு.
– நால்வர் நான்மணிமாலை
பொருள்: தாமரைப் பூக்களால் நிறைந்த தூய்மையான நீரை உடைய தடாகக் கரையில் உமையம்மையால் கொடுக்கப்பட்ட ஞானப்பாலை உண்டு, அமுதமாக தேவாரப்பாக்களை என் செவிகளுக்கு அளித்த பிரானாகிய திருஞானசம்பந்தரது தண்டை அணிந்த மணம் பொருந்திய தாமரை போன்ற திருவடியே அடியேனுக்கு வீடுபேற்றை அளிக்க வல்லது.
ஆளுடைய பிள்ளையென்றும், ஞானப்பாலுண்ட செல்வரென்றும் போற்றப்படும் திருஞானசம்பந்தப் பெருமான் பாடிய ‘கோளறு பதிகம்’, தமிழ் வேதமாகிய தேவாரத்தின் இரண்டாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது.
இப்பதிகத்தை அனுதினமும் பாடும் அடியவர்களுக்கு கோளும், நாளும், வினையும் வருத்தாமல் நன்மையே செய்யும் என்று பலன் கூறுவர்.
கோளறு பதிகம் – சிறு குறிப்பு | |
---|---|
இயற்றியவர் | திருஞானசம்பந்தர் |
திருமுறை | இரண்டாம் திருமுறை |
பண் | பியந்தைக் காந்தாரம் |
பா வகை | எண்சீர் சந்த விருத்தம் |
கோளறு பதிகம் – பொருளடக்கம்
முகவுரை
‘அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதும் இல்லை’ என்றார் அப்பர் பெருமான். உள்ளத்தில் இறைவன் வீற்றிருக்கும் போது அச்சத்திற்கு அங்கே இடமிருக்காது; துன்பம் விலகி நலம் பெருகும். அப்பரைப் போல் இந்த உண்மையைத் தம் மெய்யுணர்வாகக் கொண்டு தீமையை எதிர்த்து நின்ற சிவனருட் செல்வர்களுள் தலையாயவர் திருஞானசம்பந்தர். கோளும் நாளும் தனக்கு சாதகமாக இல்லையென்றாலும், ஆளும் அரசனும் தடுத்து நின்றாலும், இறைவனின் தாளும் நீறும் துணை என்று கொண்டு துணிவுடன் நின்று வாதில் வென்ற செந்நாப் புலவர் இவர். சம்பந்தர் பாடிய கோளறு பதிகம், கற்பவர் நெஞ்சில் கவலை ஒழித்துக் களிப்பளித்துத் தெளிவேற்றும்; நாள்தோறும் படிப்பவர்களைப் பஞ்ச பூதங்களும் அஞ்சி வணங்கிடும். ‘கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்த சொல் மாலை’ என்று போற்றப்படும் இந்தக் கோளறு பதிகத்துக்குப் பொருளும் விளக்கமும் அளிக்கும் திருவருட்பேற்றை எனக்கு அருளிய சிவபெருமானின் திருக்கழலே பற்றாகக் கொணடு இந்தப் பதிவினைத் தொடங்குகிறேன்.
பெயர் காரணம்
‘கோள்’ என்ற தமிழ்ச் சொல்லுக்கு ‘கொள்ளுதல்’ என்று பொருள். நம் மனம், சொல், செயல் என்று அனைத்தையும் ஆட்கொண்டு நம் வாழ்வின் மீது ஆதிக்கம் செலுத்தும் சக்தி படைத்ததால் நவகிரகங்களைக் ‘கோள்கள்’ என்று அழைக்கிறோம். ‘அறு’ என்றால் ‘விலக்கு அல்லது நீக்கு’ என்று பொருள். ‘பதிகம்’ என்பது பத்துப் பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பு. எனவே, கிரகங்களின் ஆதிக்கத்தை விலக்கி நம் வாழ்வில் நலங்கொடுக்கும் இந்தப் பத்துப் பாடல்கள் கொண்ட தொகுப்பு ‘கோளறு பதிகம்’ என்று பெயர் பெற்றது.
வரலாறு
பாண்டிய நாட்டரசன் நெடுமாறப் பாண்டியன் சமண சமயத்தைச் சார்ந்து இருந்தமையை மங்கையர்க்கரசியார் வாயிலாக அறிந்து கொண்ட சம்பந்தர் மதுரைக்குப் புறப்பட்டார். நாளும் கோளும் நலமாக இல்லை என்று அறிந்தும் சிறிதும் மனம் தளராமல், உமையொரு பாகன் உள்ளத்தில் இருக்கும்போது கிரகங்கள் ‘நல்லதே செய்யும், நல்லதே செய்யும்’ என்று பத்துப் பாடல்களைப் பாடிவிட்டு மதுரை மாநகரை அடைந்தார். பாண்டிய மன்னனின் வெப்பு நோய் அகற்றி சிவபக்தனாக மனமாற்றம் அடையச்செய்தார். அதனால் வெகுண்ட சமணர்களை அனல் வாதத்தாலும் புனல் வாதத்தாலும் வென்றார்.
பலன்கள்
கோளறு பதிகத்தில் எல்லாப் பாடல்களிலும் முதல் இரண்டு அடிகளில் இறைவனின் திருவுருவத்தை வர்ணிக்கிறார் சம்பந்தர். அப்படிப்பட்ட திருவுருவை என் உள்ளத்திலே நான் வாங்கிக் கொண்டதால் என்னைக் கோள்கள் அணுகினாலும் நல்லதையே செய்யும் என்கிறார். அதனால் கோளறு பதிகத்தை வெறுமனே படிப்பதைக் காட்டிலும் இறைவனின் திருவுருவை மனதில் வாங்கிக்கொண்டு பாராயணம் செய்தால் பலன் நிச்சயம்.
பொதுவாக சம்பந்தர் பாடிய ஒவ்வொரு பதிகத்திலும் ‘திருக்கடைக்காப்பு’ என்று கூறப்படும் கடைசி பாட்டில் தான் அந்தந்த பதிகத்தின் பலனைக் கூறுவது வழக்கம். ஆனால், கோளறு பதிகத்தில் ஒவ்வொரு பாட்டிலும் பலன் கூறப்பட்டிருப்பது இந்தப் பதிகத்துக்கே உரிய தனிச்சிறப்பு.
திருஞானசம்பந்தரின் அமுத வாக்குப்படி, கோளறு பதிகம் என்னும் இந்த அருள்தரும் உயர்பதிகத்தை அனுதினமும் ஓதும் பக்தர்களுக்கு நாள்கள், கோள்கள், தீயவர், இடி, மின்னல், பூதம், கடல், எமன், எமதூதர்கள், சிங்கம், புலி, யானை, பன்றி, பாம்பு, கரடி, அக்கினி, வினை, திருமால், பிரமன், தேவர்கள், சிறு தெய்வங்கள், மறை, காலம், மலை, வெப்பு, குளிர், வாதம், பித்தம் இவையெல்லாம் நல்லதையே செய்யும்.
மேலும், இப்பதிகத்தை ஓதும் அன்பர்கள் விண்ணுலகில் வாழும் தேவர்களின் மேம்பட்ட நிலையை அடைவார்கள். சிவகதி, சிவசாரூபம், முக்தி இவை யாவும் கிடைக்கப் பெறுவர்.
கோளறு பதிகத்தைப் பாடி அன்போடு வழிபடும் அடியார்களுக்கு இறைவன் நிழல் போல் துணை இருப்பான், அருநெறி காட்டுவான், பக்தியைத் தருவான், அவர்களை உயர்நிலைக்குக் கொண்டு வருவான், மங்கை ஒருபாகமாகத் தோன்றி வந்து அருள்புரிவான். எங்கேனும் யாதாகிப் பிறந்தாலும் தன் அடியவர்களுக்கு முக்கண் பெருமான் அருள்புரிவான்.
Kolaru Pathigam lyrics with meaning in Tamil and English : கோள்களை வென்று வாழ்வினைச் செழிக்க வைக்கும் கோளறு பதிகத்தின் பொருளும் விளக்கமும்
பாடல் விளக்கம்
1. வேயுறு தோளிபங்கன்
மூங்கில் போன்ற தோளையுடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவன்
வேயுறு தோளிபங்கன் பாடல் வரிகள்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல ணிந்தென்
உளமேபு குந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியார வர்க்கு மிகவே.
பாடல் பொருள்
தோளி = தோளையுடைய உமையம்மையை
பங்கன் = ஒரு பாகமாகக் கொண்டவனும்
விடம் உண்ட = ஆலகால விடத்தை உண்ட
கண்டன் = கழுத்தை உடையவனும் ஆகிய சிவபெருமான்
மிக நல்ல வீணை தடவி = மகிழ்ச்சியுற்ற நிலையில் மங்கல வீணையை மீட்டிக்கொண்டு
மாசறு = குற்றமற்ற
திங்கள் கங்கை முடிமேல் அணிந்து = குளிர் நிலவையும் கங்கையையும் முடிமேல் சூடிக்கொண்டு
என் உளமே புகுந்த அதனால் = என் உள்ளத்தில் புகுந்து குடிகொண்டிருந்த காரணத்தால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புகன் வியாழம் வெள்ளி சனி = ஞாயிறு முதலான ஏழு நாட்களும்
பாம்பு இரண்டும் உடனே = இராகு கேது என்று சொல்லப்படும் இரண்டு பாம்புகளும், இவை உள்ளடங்கிய ஒன்பது கோள்களும்
அடியார் அவர்க்கு மிகவே = சிவனடியார்களுக்கு மிகவும்
ஆசறு = குற்றமற்ற
நல்ல நல்ல = நலத்தைக் கொடுக்கும்! நன்மையே செய்யும்!
வேயுறு தோளிபங்கன் பாடல் விளக்கம்
வேயுறு தோளி பங்கன்
உமையம்மையாரிடம் ஞானப்பாலுண்டு மெய்யறிவு வாய்க்கப்பட்ட திருஞானசம்பந்தர் இறைவனை உமையொருபாகராகவே பார்த்தார். சிவமும் சக்தியும் சேர்ந்த நிர்மல சொரூபமாகவே ஈசனை வணங்கிய சம்பந்தர், கோளறு பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் ஆரம்பத்திலும் உமையுடன் இறைவன் திகழும் திருக்கோலத்தைப் போற்றித் துதிக்கிறார்.
‘வேய்’ என்றால் மூங்கில் என்று பொருள். மங்கையர் தோளுக்கு உவமையாக மூங்கிலைச் சொல்வது சங்க இலக்கிய மரபு. ‘வேல் உண் கண் வேய்த்தோள் அவட்கு’ என்ற திருக்குறளும் இங்கு நோக்கற்குரியது.. மேலும் மூங்கில் என்பது மங்கலப் பொருளாகவும் போற்றப்படுவதால், ‘கோளறு பதிகம்’ என்னும் இந்த நலம் தரும் பதிகத்தை ‘வேய்’ என்னும் மங்கலச் சொல்லோடு தொடங்குகிறார் சம்பந்தர்.
சம்பந்தர் இரண்டாம் திருமுறையில் மற்றுமோர் இடத்திலும் வேயுறு தோளி பங்கனைப் போற்றிப் பாடியுள்ளார். பதிகம் பாடி அருளிய தலம் : திருவெண்காடு. அந்தப் பாடல் (நன்மக்கட்பேறு அருளும் பதிகம்) பின்வருமாறு :
பிள்ளையினோடு உள்ளநினைவு
ஆயினவே வரம்பெறுவர்
ஐயுறவேண் டா,ஒன்றும்
வேயனதோள் உமைபங்கன்
வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர்தம்மைத்
தோயாவாம் தீவினையே.
இப்பாட்டின் பொருள் : மூங்கிலைப் போன்ற மென்மையும் பசுமை நிறமும் உள்ள தோளைப்பெற்ற உமாதேவியைத் தன் பங்கிலே வைத்தருளும் இறைவனுக்குரிய திருத்தலமாகிய திருவெண்காட்டில் உள்ள முக்குள நீரில் தோய்ந்து நீராடும் பக்தர்களைத் தீவினைகள் அணுக மாட்டா; பேய்களும் அடைய மாட்டா; முன்பே அடைந்திருந்தாலும் அப்பேய்களின் பிடியிலிருந்து மீள்வர். நன்மக்கள்பேறு வேண்டுமென்றால் அதனையும் பெற்று, அதனோடு மனத்தில் வேறு எவற்றையெல்லாம் நினைத்தார்களோ அவற்றையும் பெறுவார்கள். இவற்றை அடைவதுபற்றிச் சிறிதளவும் சந்தேகிக்க வேண்டாம்.
விடம் உண்ட கண்டன்
சிவபெருமான் பாற்கடலில் எழுந்த ஆலகால விஷத்தைத் தன் கண்டத்தில் அடக்கி, தேவர்களைக் காத்து அமுதமும் அளித்தான். அவ்வாறு தன்னிடம் அபயம் புகுந்த தேவர்களைக் காத்தவன், திருவடிகளைச் சிக்கெனப் பிடித்துப் பக்தியில் திளைக்கும் அடியவர்களுக்குக் கோள்களால் வரும் தீமையையெல்லாம் தடுத்துத் தனக்குள் அடக்கி, அவர்களுக்குச் சிவபதம் என்னும் அமுதத்தையும் அளிப்பான். இவ்வுண்மையைப் பறைசாற்றுவதுபோல், ‘விடம் உண்ட கண்டன்’ என்று மூன்றே சொற்களில் குறிப்பிட்டு அடியவர் மனதினில் அமுதினைப் பொழிகிறார் சம்பந்தர்.
மிக நல்ல வீணை தடவி
உள்ளத்தில் இறைவன் வீற்றிருப்பதால் விளையும் தெய்வ அனுபவ நிலையை வீணையின் மங்கல ஓசையினால் உண்டாகும் பேரின்ப நிலையோடு இங்கு ஒப்பிடுகிறார் சம்பந்தப் பெருமான். மிக நல்ல வீணையைத் தடவிய ஓசை எவ்வாறு உள்ளத்தில் களிப்பேற்றி எல்லாக் கவலைகளையும் மறக்கும்படியாகச் செய்கிறதோ, அவ்வாறு இறைவன் உள்ளத்தில் புகுந்த அந்தக் கணமே எல்லா வினைகளையும் அறுத்து நாள்களாலும் கோள்களாலும் உண்டாகும் தீமைகளைத் தடுத்து நம்மைப் பேரின்ப நிலையில் ஆழ்த்துகிறான் என்பதை மிக அழகாக இங்கு மொழிகிறார் சம்பந்தர்.
ஈசனின் திருவடி நிழலானது மாசற்ற வீணையின் ஒலியைப் போன்றது என்று மனமுருகப் பாடிய அப்பர் சுவாமிகளின் பாடல் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.
– அப்பர்
உளமே புகுந்த அதனால்
‘தேவர்பிரான் மறிப்பு அறியாது வந்து உள்ளம் புகுந்தான்’ என்பார் திருமூலர். மறிப்பு என்றால் தடை என்று பொருள். அதாவது, இறைவன் எந்த விதத் தடையும் இன்றி மனத்திற்குள் புகுந்தான் என்கிறார். இறைவன் நம் மனத்தை ஆட்கொண்டு எழுந்தருளுவதற்கு எவையெல்லாம் தடைகளாக இருக்கும் என்று பார்த்தால் முதலில் ‘நான்’ என்னும் அகங்காரம் பெருந்தடை எனலாம். மேலும், திருவருளில் நாட்டமின்மை, திரு ஐந்தெழுத்தை ஓதாமை, அன்பற்ற தன்மை இவையாவும் இறைவன் அருள் நம்மேல் படுவதற்குத் தடைகளாக இருக்கின்றன. ஆனால், நாதன் நாமம் நமச்சிவாயத்தை நாளும் நவிலும் நற்சிந்தையரான ஞானசம்பந்தரின் பால்மனம் மாறாத நெஞ்சில் தடைகள் ஒன்றும் இல்லை. இறைவனை வரவேற்பதற்காக அவரது மனக்கதவு எப்போதும் திறந்தே இருக்கும். கடவுளை வழிபடும் நேரம் என்று தனியாக ஒதுக்காமல், எப்போதும் சிவத்தியானத்தில் மூழ்கி இருப்பார் சம்பந்தர். அதனால், இறைவனால் வெகு சுலபமாக அவரது உள்ளத்தில் நுழைந்து அருள்பாலிக்க முடிந்தது. தம் மனத்தை இவ்வாறு கவர்ந்து ஆட்கொண்ட இறைவனைப் பார்த்து ‘என் உள்ளம் கவர் கள்வர்’ என்று தாம் முதல்முதலில் பாடிய பாட்டிலேயே அவர் உள்ளம் உருகி உரைத்ததையும் இங்கு நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
மாசறு பதிகம்
மேலும், வேயுறு தோளிபங்கன் என்னும் இந்தப் பாடலில், ‘குற்றமற்ற’ என்னும் பொருள்படும் சொற்கள் இரண்டு பயின்று வந்துள்ளன. கங்கை நீரின் குற்றமற்ற தெளிந்த நீரின் பெருமையைச் சொல்லும்போது ‘மாசறு’ என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார் சம்பந்தர். மற்றொரு இடத்தில் நவக்கிரகங்களால் குற்றம் குறைகள் ஏற்படாது என்பதைச் சொல்லுவதற்கு ‘ஆசறு’ என்னும் வார்த்தையைக் கையாண்டுள்ளார். அருமையான தமிழ்ச்சொற்களான ‘மாசு’ மற்றும் ‘ஆசு’ இரண்டும் ‘குற்றம்’ என்னும் பொருளைத் தருவன.
‘மாசறு’ மற்றும் ‘ஆசறு’ என்னும் இவ்விரண்டு சொற்களையும் கொண்டு, ‘குற்றமற்ற தெளிந்த நீரை உடைய கங்கையைத் தலைமேல் அணிந்த இறைவன், நம் வாழ்வில் கிரகங்களினால் குறைகள் ஏற்படாமல் குற்றங்களைத் தடுத்துக் காப்பான்’ என்று உள்ளத்தில் பெருநம்பிக்கை ஊட்டுகிறார் சம்பந்தப் பெருமான்.
மாசறு காட்சி யவர்க்கு.
என்பது வள்ளுவரின் வாய்மொழி. இக்குறளுக்கு எடுத்துக்காட்டாக, ஞானசம்பந்தரும் தெளிந்த – மருள் நீங்கிய – புலன் மயக்கம் அற்ற சிந்தையராய் வாழ்ந்தார்; குற்றமற்ற (மாசறு) மெய்யறிவு வாய்க்கப்பெற்றார்; அதனால், மெய்யுணர்வைத் தடுக்கும் திரையாகிய இருள் விலக ஒளிவடிவமாய்த் திகழும் தோடுடைய செவியனின் தரிசனம் கிடைக்கப்பெற்றார்; என்றும் குறையாத மனமகிழ்வுடன் வாழ்ந்தார். தாம் பெற்ற சிவம் என்னும் இன்பத்தை உலகத்தோரும் பெற்று உய்யுமாறு கோளறு பதிகத்தை அருளியது சம்பந்தரின் மாசற்ற அன்பு உள்ளத்தைக் காட்டுகிறது.
நல்ல நல்ல
‘வேயுறு தோளிபங்கன்’ என்னும் இந்தப் பாடலில் ‘நல்ல’ என்னும் மங்கலச் சொல் ஐந்து முறை வந்துள்ளது. இந்தப் பாடலைத் தினமும் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கப் பாடுபவர்களுக்கு, தீமைகள் விலகி என்றும் நன்மையே விளையும் என்பதை உணர்த்தும் வகையில் ‘நல்ல’ என்னும் இந்த மங்கலச் சொல் அமைந்துள்ளமை காண்க.
‘இந்த உலகத்தில் நலமுடன் வாழலாம். குறைவற்ற நற்கதி பெறலாம். இத்தகைய பேற்றினை அருளுவதற்காகவே பெண்களில் நல்லாளாகிய உமையம்மையுடன் திருக்கழுமலம் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்து அருள்கின்றான்.’. இந்தப் பொருள்பட அமைந்த ‘மண்ணில் நல்லவண்ணம்’ என்னும் பாட்டிலும் ‘நல்ல’ என்னும் மங்கலச் சொல்லை ஒவ்வொரு அடியிலும் கையாண்டிருக்கிறார் நம் ஆளுடையபிள்ளையார்.
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.
– சம்பந்தர்
Verse 1 : Veyuru Tholipangan – Meaning
Whose neck contains the poison which He drank (from the Sea),
Playing a harp of exquisite beauty,
His head adorned with the flawless moon
And the clear waters of the Ganges,
He entered my heart.
(With Him dwelling in the heart,)
All the nine planets that influence the mind:
The Sun, the Moon, Mercury, Venus, Mars, Jupiter, Saturn
And the two snakes : Rahu and Ketu,
Would always shower benign grace to His devotees
And endow them with bounteous blessings.
Explanation
Thus begins Kolaru Pathigam, composed in Tamil by Thirugnana Sambandar more than thirteen centuries ago.
Pathigam means a poem of ten verses (pathu means 10 in Tamil). Kolaru Pathigam, however has eleven verses. The last verse is called ‘Thirukadai Kappu’.
The eleven verses of Kolaru Pathigam, the religious work given by Sanbandha, show how sensitively the Saint has structured his work, how it depicts the Lord enshrining Himself onto the devotee’s heart, and how each verse begins by describing the Divine beauty of the Lord’s form, followed by a description of evil powers that haunt the devotees, and finally an assurance of deliverance from the evil.
In the first verse of the Pathigam, Lord Shiva is addressed by two names. The first of these names is mentioned by the phrase ‘Veyuru Tholi Pangan’, which literally means ‘He who shares his form with Her of bamboo-like shoulders’. This phrase refers to Shiva who, as ArdhaNareeswara, shares His Divine form with Goddess Uma. Without explicitly mentioning the name of the Lord and the Goddess, the Poet-Saint has invoked God by praising one of His Divine attribute forms: ArdhaNareeswara. This name ‘Sharer of His form with Shakti’ was invoked to assure the devotees that He, who balances the masculine and feminine forces of the world to ensure Harmony, will have ultimate control over the destiny of the human beings. Hence His Bhaktas do not need to fear the effect of the planets on their well-being.
The other name of the Lord is mentioned by the phrase ‘Vidam Unda Kandan’, which means ‘He whose neck held the poison consumed (from the Ocean)’. This refers to the legend when the Halahala poison rose from the churning of the ocean of milk. Lord Shiva, as Shankara, the Graceful One, in an act to save the Devas, drank the poison. But when the poison reached His throat, Goddess Shakti squeezed His neck to prevent it from spreading to the rest of His body, thereby turning His neck blue. Because of this incident, Lord Shiva is called ‘Nila Kandan’ (The Blue-Necked One). He is also referred by Saint Sambandar in this verse as ‘Vidam Unda Kandan’ – He whose Neck has the remnants of the poison he drank from then ocean. By mentioning this name, the Saint reminds the devotees that, as He saved the Devas from the evil effects of the churning of the ocean, the Lord will dissolve the problems arising as a result of their deeds, thereby helping them reap only the positive fruits of their actions.
The poet then describes the Lord as one who plays the Veena of exquisite beauty. Lord Siva, apart from letting Himself bound by the melodious music arising from the Hymns of His Devotees, is Himself delighted in playing musical instruments, particularly the Veena which He holds in His hand. In this verse, the poet mentions that the Lord, in His blissful state, pleased with the prayers of the devotees, plays the beautiful Veena as He enters the heart of the faithful.
Having focussed on the Divine form of the Lord shared by Goddess Shakti and the Poison-Held neck that saved the world and also the musical notes emanating from the Divine Veena, the Saint proceeds to contemplate on the Divine Crown crested upon which lies the fault-less Crescent and the flowing waters of the Ganges.
We should, now, observe a pattern in the depiction of the Lord’s form that occurs throughout the Pathigam in all the verses that follow (except the 11th verse). The first line of each verse dwells on the Divine form of the Lord, seated on the Bull with Goddess Uma as His consort, and proceeds to describe His body as a whole, including His neck and eyes, the garlands and cloth and also alluding to some of His Divine actions. The first line also refers to the Lord as ArdhaNareeswara in three of the verses including this first verse (Veyuru Tholi Pangan). While the first line is all about the general form of the Lord along with the Divine actions, the second line begins by specifically describing the beauty and sanctity of the Divine Crown. This pattern of describing the Lord’s Murti is found across all the verses of this Pathigam.
Having described the crown, the second line concludes with the phrase ‘Ulame Puguntha Athanaal’ meaning ‘When the Lord (with such a glorious form) enters my heart’. Now, this is where the Saint emphasizes His strong faith in the Lord whose glorious presence in the heart will remove all evil. Also, since the Lord, while entering the devotee’s heart, plays the Veena, He is in a blissful state that will be protecting from any evil forces that may try to infiltrate the heart.
The third line of each verse goes into detail about describing the evil forces and obstacles that will try to impact the well-being of the devotees. Following this pattern, in this first verse also, the poet describes the evil effects of the Celestial forces. The forces which he is referring here are the effects of the Nine planets starting with Sun and Moon and including the two snakes (nodes) namely Rahu and Ketu.
The last line is the assurance line; it reminds the devotees of the Lord’s presence in the heart and assures them that, because of His grace, the evil forces and obstacles (mentioned in the third line of the verse) always turn benign and bring nothing but prosperity into their lives.
2.என்பொடு கொம்பொடாமை
எலும்பு, பன்றிக் கொம்பு, ஆமை ஓடு இவை மூன்றையும் அணிகலன்களாகக் கொண்டவன்
என்பொடு கொம்பொடாமை பாடல் வரிகள்
எருதேறி ஏழை யுடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொ டேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
பாடல் பொருள்
கொம்பொடு = கொம்போடு = கொம்பும்
ஆமை இவை = ஆமையும் ஆகிய இன்மூன்றையும்
மார்பு + இலங்க = திருமார்பில் அணிகலன்களாக விளங்க
எருது ஏறி = ரிஷப வாகனத்தில் ஏறி
பொன் பொதி = பொன்போன்று மிளிரும்
மத்த மாலை = ஊமத்தை மாலையும்
புனல் சூடி = கங்கை நீரையும் சூடி
ஏழை உடனே = மெல்லியலாளாகிய உமையாள் சகிதமாக
வந்து என் உளமே புகுந்த அதனால் = என் உள்ளத்தில் எழுந்தருளிய காரணத்தால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் = அசுவினி முதலாக உள்ள நாள்களில் ஆகாதனவாகிய ஒன்பது, பத்து, பதினாறு, பதினெட்டு, ஆறு ஆகிய எண்ணிக்கையில் வரும் நாள்கள்
உடனாய நாள்கள் அவைதாம் = உள்ளிட்ட நட்சத்திரங்களும்
அன்பொடு = அன்போடு
அடியார் அவர்க்கு மிகவே = சிவனடியார்களுக்கு மிகவும்
நல்ல நல்ல அவை நல்ல நல்ல = நலத்தையே கொடுக்கும்! எந்த நாளும் நன்மையே செய்யும்!
பாடல் விளக்கம்
முரண்பாடுகள் நிறைந்தது உலகம். இந்த உலகத்தைத் தோற்றுவித்து, இயக்கி, நன்மை பெருக்கி தீமைகளை அழிக்கும் இறைவனும் இருமைகள் நிறைந்த முரண்பாடுகள் கொண்டு விளங்குகிறான். கடுமை-மென்மை, காத்தல்-அழித்தல், ஆண்-பெண், சாந்தம்-சீற்றம், மயக்கம்-தெளிவு போன்ற ஒன்றுக்கொன்று முரண்பாடுடைய குணங்கள் உடையவன். இந்த உண்மையைக் கோளறு பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் மூலமும் நமக்குத் தெளிவிக்கிறார் சம்பந்தர்.
எலும்பு, பன்றிக் கொம்பு, ஆமை ஓடு போன்ற அச்சம் தரக்கூடிய பொருள்களை மார்பில் அணிந்தவன் சிவபெருமான். அதே சமயம், இந்தக் கடுமையான பொருள்களின் தன்மையோடு சற்றும் ஒவ்வாத மெல்லியலாளாகிய உமையம்மையைப் பிரியாமல் இடப வாகனத்தில் வீற்றிருக்கிறான்.
இக்கருத்தினை மேலும் வலியுறுத்தும் வகையில், மூன்றாம் திருமுறையில், திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தைப் போற்றிப் பாடும்போது, எலும்பும், கொம்பும், ஆமையோடும் உமையாளை வெருவச் செய்வன என்றும், உமையம்மைக்கு மகிழ்வூட்டும் வண்ணம் கொக்கரை என்னும் வாத்தியம் இசைத்துப் பாடவல்லவன் இறைவன் என்றும் குறிப்பிடுகிறார் சம்பந்தர்.
மிக்கரை தாழவேங்கை உரி ஆர்த்து உமையாள் வெருவ
அக்கு அரவு ஆமை ஏனமருப்போடு அவை பூண்டு அழகார்
கொக்கரையோடு பாடலுடையான் குடமூக்கு இடமா
எக்கரையாரும் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே.
அக்கு = எலும்பு, அரவு = பாம்பு, ஆமை = ஆமை ஓடு, ஏனம் = பன்றி, மருப்பு = கொம்பு, கொக்கரை – நாதஸ்வரம் போன்ற இசைக்கருவி
‘என்பொடு கொம்பொடாமை’ என்னும் இந்தப் பாட்டில், இறைவன் திருவுருவில் விளங்கும் மற்றுமொரு முரண்பாட்டையும் நமக்குத் தெரிவிக்கிறார் சம்பந்தர். சிவபெருமான் தன் சிரசில் மனத்தை மயக்க வைக்கும் ஊமத்தை மாலை அணிந்திருப்பவன். கூடவே, தெளிந்த நீரை உடைய கங்கையையும் சடைமேல் தரிப்பவன். இவ்வாறு, மயக்கத்தையும் தெளிவையும் உண்டாக்குபவன் இறைவன் என்னும் தத்துவத்தை இங்கு விளக்குகிறார் சம்பந்தர். ‘மயக்கமாய்த் தெளிவும் ஆகி’ என்ற அப்பர் வாக்கும் இங்குக் கருதத் தக்கது.
எலும்பு, கொம்பு, ஆமை ஓடு போன்றவை சிவபெருமானின் சீற்றத்தின் விளைவைக் குறிப்பவை. ஊமத்தை, கங்கை போன்றவையோ சிவபெருமானின் தணிந்த தன்மையைக் குறிப்பவை. தீயவர்களிடம் சினமும், தஞ்சம் அடைந்தவர்களுக்கு அருளும், பக்தர்களிடம் அன்பும் காட்டவல்லவன் சிவபெருமான். எனவே, நம் வாழ்வில் முரண்பாடுகள் யாவும் நீக்கி நாளும் கோளும் வாட்டாமல் நம்மையும் அளித்துக் காப்பான். இது நிச்சயம், என்று ஆணையிட்டுச் சொல்கிறார் சம்பந்தர்.
Verse 2 : Enbodu Kombodaamai – Meaning
And His head adorned with the golden Unmatha garland and the waters (of the Ganges),
He entered my heart, seated upon the Bull along with Uma Devi.
With Him dwelling in the heart,
The days 9th, 10th, 16th, 18th and 6th,
Which are generally considered inauspicious (for travel),
Will be beneficent and graceful to His devotees,
And bring them bounteous blessings
And remove all the obstacles on their path to prosperity.
3. உருவளர் பவள மேனி
பாடல் வரிகள்
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல ணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய தூர்தி செயமாது பூமி
திசைதெய்வ மான பலவும்
அருநெறி நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
பதம் பிரித்தல்
முருகலர் = முருகு + அலர்
மேலணிந்தென்= மேல் + அணிந்து + என்
பாடல் பொருள்
பவளமேனி = பவளம் போன்ற திருமேனியில்
ஒளி நீறணிந்து = ஒளி பொருந்திய திருவெண்ணீறை அணிந்து
முருகலர் = மணம் பொருந்திய
கொன்றை திங்கள் = கொன்றை மலர், வெண்ணிலவு ஆகியவற்றை
முடிமேலணிந்து = செஞ்சடை மேல் அணிந்துகொண்டு
உமையோடும் வெள்ளை விடைமேல் = (சிவபிரான்) உமையம்மையோடு வெள்ளை ஏற்றின் மீது ஏறி வந்து
உளமே புகுந்த அதனால் = என் உள்ளம் புகுந்த காரணத்தால்
திருமகள் = இலக்குமி
கலையதூர்தி = துர்க்கை
செயமாது = ஜெயமகள்
பூமி = நிலமகள்
திசைதெய்வமான பலவும் = மற்றும் பல திசைத்தெய்வங்களும்
அருநெறி நல்ல நல்ல = அரிய செல்வங்களையே நல்லனவாகத் தரும்.
அடியார் அவர்க்கு மிகவே = சிவனடியார்களுக்கு மிகவும்
அவை நல்ல நல்ல = நலத்தையே கொடுக்கும்!
பாடல் விளக்கம்
‘வேயுறு தோளிபங்கன்’, ‘என்பொடு கொம்பொடாமை’ என்னும் முதலிரண்டு பாடல்களில் கோளும் நாளும் செய்யும் தீமையிலிருந்து தடுத்து ஆட்கொள்பவனாக இறைவனின் தன்மையைப் போற்றிப் பாடிய சம்பந்தர், ‘உருவளர் பவளமேனி’ என்னும் இந்த மூன்றாவது பாடலில் அழகு, ஒளி, தூய்மை, மணம் முதலிய உயர்ந்த தன்மைகள் கொண்ட இறைவன், செல்வம், தைரியம், வெற்றி முதலிய வரங்களை வழங்கும் பிற தெய்வங்களின் அருளையும் நமக்குக் கிடைக்கச் செய்வான் என்று தெரிவிக்கின்றார்.
பவளம் போன்ற மேனியானது அழகையும், திருநீறானது ஒளியையும், எருதின் வெண்மை தூய்மையையும், கொன்றை மலர் நறுமணத்தையும் உணர்த்திக் காட்டுவன. இறைவனின் உருவழகைப் பாடும்போது சுந்தரமூர்த்தி நாயனாரும் ‘பொன்னார் மேனியனே! புலித் தோலை அரைக்கு அசைத்து, மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே!’ என்று சிவபெருமானின் மேனி பொன்னொளி படர்ந்தது என்று போற்றுவது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.
இறைவனின் அருளானது கொன்றை மலரின் வாசனை போல நம் உள்ளத்தில் பேரானந்த வெள்ளத்தைத் தோற்றுவித்து வாழ்வை வளப்படுத்தும் என்ற கருத்தைத் தெரிவிப்பதற்காகவே இந்தப் பாடல் உட்பட இப்பதிகத்தில் ஐந்து பாடல்களில் கொன்றை மலரின் சிறப்பைக் குறிப்பிடுகின்றார் சம்பந்தர். இறைவனையும் கொன்றையையும் எப்போதும் இணைத்துப் பாடியதாலோ என்னவோ, சம்பந்தரைப் போற்றிப் பாடும்போது சுந்தரமூர்த்தி நாயனாரும் தாம் இயற்றிய திருத்தொண்டத் தொகையில் இவ்வாறு மொழிகின்றார்:
வம்பறா வரிவண்டு மணநாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
(பொருள் : நறுமணத்தை நாடிச்செல்லும் வரிகளையுடைய வண்டுகள் வாசனையினால் களிப்புற்று ஆடும் தேன்சொட்டும் மலராகிய கொன்றையினைத் தன் திருமுடியில் அணிந்த சிவபெருமானின் திருவடியைத் தவிர வேறொன்றையும் போற்றாத எம் தலைவனாகிய திருஞானசம்பந்தனின் அடியவர்களுக்கெல்லாம் நான் அடியவன்)
Verse 3 : Uruvalar Pavalameni – Meaning
And His head adorned with the fragrant Konrai flower garland and the crescent,
Lord Siva entered my heart seated on the White Bull accompanied by Uma Devi.
With the Lord in the heart, His devotees are always blessed with well-being by Goddesses DhanaLaskhmi (Goddess of wealth), Durga, JayaLakshmi (Goddess of Victory), Bhoomi Devi (the Goddess of earth) and all other Goddesses from every direction. They all bestow only happiness to devotees of Siva. (And drive away sorrow and misery).
4.மதிநுதல் மங்கையோடு
பாடல் வரிகள்
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேல ணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுண நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
பதம் பிரித்தல்
மேலணிந்தென்= மேல் + அணிந்து + என்
பாடல் பொருள்
மங்கை யோடு = உமையம்மையோடு
வடபாலிருந்து = (வடம் = ஆலமரம்) ஆல மரத்தின் கீழ் இருந்து
மறையோதும் எங்கள் பரமன் = வேதங்களை அருளிய எங்கள் இறைவன்
நதியொடுகொன்றை மாலை = கங்கை நீர், கொன்றை மாலை ஆகியவற்றை
முடிமேலணிந்து = செஞ்சடை மேல் அணிந்துகொண்டு
உளமே புகுந்த அதனால் = என் உள்ளம் புகுந்த காரணத்தால்
கொதியுறு = சினம் மிக்க
காலன் அங்கி நமனோடு தூதர் = காலன், அக்கினி, யம தூதர்கள்
கொடுநோய்களான பலவும் = கொடிய நோய்கள் முதலிய அனைத்தும்
அதிகுணம் = மிக்க குணமுடையனவாக
நல்ல நல்ல = நல்லனவே செய்யும்
அடியார் அவர்க்கு மிகவே = சிவனடியார்களுக்கு மிகவும்
அவை நல்ல நல்ல = நலத்தையே கொடுக்கும்!
பாடல் விளக்கம்
மதிநுதல் மங்கை
மங்கையரின் நெற்றிக்குப் பிறைச்சந்திரனுக்கு ஒப்பிடுவது மரபு. அருணகிரியாரும் ‘மதிவாள் நுதல் வள்ளி’ என்று வள்ளியின் நெற்றியைக் குறிப்பிடுகிறார். அதாவது, பிறைச்சந்திரனைப் போன்று சற்றே வளைந்த வாளை ஒத்த நெற்றி என்கிறார்.
வடபால் இருந்து மறை ஓதிய பரமன்
சிவபெருமானின் திருவடிகளை நாடித் தவம் செய்து, ஐம்புலன்களையும் வென்று, ‘உண்மைப் பொருளைத் தந்தருள்’ என்று சனகர் முதலான ஞானியர் நால்வர் வேண்டிப் பணிந்தனர். இறைவன் அவர்கள்முன் தட்சிணாமூர்த்தியாகத் தோன்றி, தழைத்து விரிந்த அழகிய கல்லால விருக்ஷத்தின் கீழ் அமர்ந்து, வேதப் பொருள்களையும், அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றின் நெறிகளையும் போதித்தார். இந்த அருள் உபதேச நிகழ்வையே சம்பந்தர் இங்கு ‘வடபால் (ஆலமரத்தின் கீழ்) இருந்து மறை ஓதிய பரமன்’ என்ற சொற்களினால் குறிப்பிடுகிறார். அவ்வாறு, அன்று அச்சான்றோர்களுக்கு அறத்தை உபதேசித்தவன், நமக்கும் நல்ல வழி காட்டுவான் என்று தெரிவிப்பதற்காகவே இவ்வாறு மொழிந்திருக்கிறார் நம் சம்பந்தப் பெருமான்.
கொதியுறு காலன்
சிவபிரானது அட்ட (எட்டு) வீரச்செயல்களில் ஒன்றான காலனை உதைத்து மார்க்கண்டேயர்க்கு அருளிய திருச்செயலை இங்கு ‘கொதியுறு காலன்’ என்னும் வார்த்தைகள் மூலம் நமக்கு நினைவுபடுத்துகிறார் சம்பந்தர். மார்க்கண்டேயர் சிவபூஜை செய்யும்போது மிகுந்த சினத்துடன் (கொதியுறு) காலன் அவர் உயிரைப் பறிக்க வந்தான். சிவபிரான் அவர் பூஜைக்கு இரங்கி, ‘என் அடியான் உயிரைக் கவராதே’ என்று காலன் மார்பில் காலால் உதைத்தார். காலன் உருண்டு வீழ்ந்து அலறினான். இந்த வீரத் திருச்செயலைப் போற்றும் சம்பந்தர், இதன்மூலம் ‘காலனால் சிவனடியார்க்கு ஓர் இன்னலும் நேராது; காலன் நமக்கு நல்லதே புரிவான்’ என்று உணர்த்துகிறார்.
Verse 4 : Mathinuthal Mangai – Meaning
And His head adorned with the Ganges and Konrai garland,
Lord Siva, who preached the Vedas under the Neem tree,
Entered my heart accompanied by Uma Devi.
With the Lord protecting our heart, there is no fear from Yama (the God of Death), Agni (the God of Fire)
And also from the messengers of Death who bring forth horrible diseases.
Only happiness and wellness will prevail for the devotees of Lord Siva.
5.நஞ்சணி கண்டன் எந்தை
பாடல் வரிகள்
விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல ணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுண ரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூத மவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
பாடல் பொருள்
எந்தை = என் தந்தையுமாக நின்று என்னைக் காப்பவனும்
மடவாள் தனோடும் விடை ஏறும் = உமையாளுடன் இடப வாகனத்தில் ஏறிவருபவனும்
நங்கள் பரமன் = நம் தலைவனுமாகவும் விளங்கும் சிவபெருமான்
துஞ்சிருள்வன்னி கொன்றை = இருள்போல் கருத்தடர்ந்த வன்னி இலையையும் கொன்றை மாலையையும் முடிமேலணிந்து = செஞ்சடை மேல் அணிந்துகொண்டு
உளமே புகுந்த அதனால் = என் உள்ளம் புகுந்த காரணத்தால்
வெஞ்சின = கொடிய சினம் மிகுந்த
அவுணரோடு= அரக்கர்களும்
உரும் இடியும் மின்னும் = முழங்குகின்ற இடியும் மின்னலும்
மிகையான பூதம் அவையும் = செருக்குடைய பஞ்சபூதங்கள் முதலானவையெல்லாம்
அஞ்சிடும் = (நம்மைக் கண்டு) பயந்து
நல்ல நல்ல = நல்லனவே செய்யும்
அடியார் அவர்க்கு மிகவே = சிவனடியார்களுக்கு மிகவும்
அவை நல்ல நல்ல = நலத்தையே கொடுக்கும்!
பாடல் விளக்கம்
எந்தை
சம்பந்தரைப் போலவே இறைவனைத் தமது தந்தையாகப் பாவித்து வணங்கிய வள்ளலாரும் ‘ தந்தை தன்மையே தனையன்தன் தன்மை; அப்பன் தன்மை என் தன்மை என்று அறிமின்’ என்று பாடியுள்ளது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
வெஞ்சின அவுணர்
அந்தகாசுரன், இடும்பன், இரணியாக்கன், சலந்தரன் முதலிய அரக்கர்களை அழித்த வீரத் திருச்செயல்களைப் போற்றும் சம்பந்தர், அத்தகைய கொடிய அரக்கர்களை அழித்துத் தீமையைத் தடுத்த சிவனார் நமக்கு நேர இருக்கும் தீமைகளிலிருந்தும் தடுத்துக் காப்பார் என்று இங்கு அறுதியிட்டுச் சொல்கிறார்.
Verse 5 : Nanjani Kandan – Meaning
Who provides fatherly protection to the devoted hearts,
His red matted hair adorned with the dark leaves of the Vanni tree, and also the beautiful flowers of the Konrai Tree,
Entered my heart seated on the Bull along with Goddess Uma.
With the Lord on my side, I have no reason to fear the evil doings of ferocious demons,
Thunder and lightning and the five elements of nature,
For these evil things themselves will be afraid to come near the devotees of Lord Siva.
They all leave the devotees unaffected, thereby bringing happiness and well-being.
6.வாள்வரி அதளதாடை
பாடல் வரிகள்
மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவை யோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
பாடல் பொருள்
அதள் அது ஆடை = புலித்தோள் ஆடையும்
வரி கோவணத்தர் = வரிந்து கட்டிய கோவண உடையும் அணியும் சிவபெருமான்
நாண்மலர்வன்னி கொன்றைநதி சூடி = அன்றலர்ந்த மலர்கள்,வன்னி, கொன்றை, கங்கை நதி ஆகியவற்றைத் தன் முடிமேல் சூடிக் கொண்டு
மடவாள் தனோடும் உடனாய் = உமையாளோடு வந்து
உளமே புகுந்த அதனால் = என் உள்ளம் புகுந்த காரணத்தால்
கோளரி = வலிய சிங்கம்
உழுவை= புலி
கொலை யானை = கொலைசெய்யும் யானை
கேழல் = பன்றி
கொடு நாகமோடு கரடிஆளரி = கொடிய பாம்பு கரடி ஆகியன
நல்ல நல்ல = நல்லனவே செய்யும்
அடியார் அவர்க்கு மிகவே = சிவனடியார்களுக்கு மிகவும்
அவை நல்ல நல்ல = நலத்தையே கொடுக்கும்!
பாடல் விளக்கம்
வாள்வரி அதளது ஆடை
அப்படிப் பாய்ந்து வந்த புலியை வென்று கொன்ற வலிமை வாய்ந்த சிவபெருமான், நம் வாழ்வில் புலியைப் போன்ற கடுந்துயர் வந்து நம்மை அச்சுறுத்தினாலும் அந்தத் துயரைத் தடுத்து நம்மை ஆட்கொள்வார் என்று இந்தப் பாடலின்மூலம் தெளிவிக்கிறார் நம் ஆளுடைய பிள்ளை.
இதே பாட்டின் இறுதியில், யானை, பன்றி, நாகம், கரடி, சிங்கம் போன்ற எந்தவித விலங்குகளினாலும் நமக்கு இடர் ஏற்படாது என்றும் கூறுவதைக் காணலாம்.
Verse 6 : Vaalvari – Meaning
And His body covered with the robes of the ascetic,
His matted hair adorned with the fresh Vanni leaves and Konrai flowers,
The Lord entered my heart along with Goddess Uma.
With the Lord’s protection, His devotees need not fear the dangerous animals like pouncing lions,
Tigers, raging elephants, and wild boars, poisonous snakes, bears.
7. செப்பிள முலைநன் மங்கை
பாடல் வரிகள்
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல ணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
பாடல் பொருள்
ஒரு பாகமாக = ஒரு பாகத்தில் விளங்க
விடை ஏறு செல்வன் = இடப வாகத்தில் ஏறி வரும் செல்வனாகிய சிவபெருமான்
அடைவார் ஒப்பு இளமதியும் அப்பும் = தன்னை அடைந்த இளமதியையும் கங்கை நீரையும்
முடிமேலணிந்து = செஞ்சடை மேல் அணிந்துகொண்டு
உளமே புகுந்த அதனால் = என் உள்ளம் புகுந்த காரணத்தால்
வெப்பொடு குளிரும் வாதம் = வெம்மை கொடுக்கும் காய்ச்சல், குளிர் சுரம்
மிகையான பித்தும் = மிகுந்த பித்தம்
வினையான வந்து நலியாஅப்படி = அவற்றால் வரும் தீவினைகள் முதலியன நம்மை வருத்தாவண்ணம்
நல்ல நல்ல = நல்லனவே செய்யும்
அடியார் அவர்க்கு மிகவே = சிவனடியார்களுக்கு மிகவும்
அவை நல்ல நல்ல = நலத்தையே கொடுக்கும்!
பாடல் விளக்கம்
அடைவார் ஒப்பு இளமதியும் அப்பும்
தம்மிடம் அடைக்கலமாகப் புகுந்த சந்திரனுக்கும் (இளமதி) கங்கைக்கும் (அப்பு = தண்ணீர் = கங்கை) தன் சடைமுடியில் இடமளித்து அருளிய திருச்செயலை நினைவூட்டும் வகையில் இந்த வரி அமைந்துள்ளது .
முன்பு ஒருநாள், பிரஜாபதிகளில் ஒருவனான தக்சன், சந்திரன்மேல் சினம் கொண்டு ஒவ்வொரு நாளும் சந்திரனின் ஒரு அழகு குறைந்து தேய்ந்து அவன் மறைந்து போகுமாறு சாபம் விடுத்தார். பதினான்கு அழகு குறைந்த நிலையில் சந்திரன் தன்னைக் காக்கவேண்டி சிவபெருமானை நோக்கித் தவமிருந்தான். தக்சனின் சாபத்திலிருந்து சந்திரனைக் காப்பாற்ற சிவபிரான் சந்திரனைத் தன் தலையில் சூடிக்கொண்டார். தன்னை நாடி வந்தவர்கள் பிணிகள் தரும் துன்பத்தால் தேய்ந்து நோகாமல் சிவனார் காப்பார் என்று இந்தக் குறிப்பின் மூலம் சம்பந்தர் இங்கே தெரிவிக்கின்றார்.
சந்திரனைக் காக்கத் தன் சடையில் அவனுக்கு அடைக்கலம் கொடுத்த சிவபெருமான், பூலோகத்தை நோக்கிப் பாய்ந்து வந்த கங்கைக்கும் தன் சடையில் இடம் கொடுத்து கங்கையின் வேகத்தைத் தடுத்து பூலோகத்தைக் காத்தார். கங்கையின் வேகத்தைத் தடுத்து பூமி பொறுக்கும் அளவுக்கு நீரை அளித்த சிவபெருமான், எப்போதும் அலைபாயும் நம்முடைய மனத்தின் வேகத்தைத் தடுத்து, உள்ளத்தை நன்னெறியில் செலுத்தி, பொறுமையும் நற்சிந்தனைகளையும் வளர்த்து அருள்புரிந்து நம்மை ஆட்கொள்வார் என்று தெளிவாகப் புரியவைக்கிறார் திருஞானசம்பந்தர். ‘வேகம் தடுத்து ஆண்ட வேந்தன் அடி போற்றி’ என்று மாணிக்கவாசகர் மொழிந்ததையும் இங்கு ஒப்பு நோக்கலாம்.
Verse 7 : Seppila – Meaning
And wearing the Moon and the Ganges on his crown,
The Lord entered my heart seated on the Bull.
With the Lord residing in my heart, there is no danger of being affected by the evil effects of
Fever, chills and stomach ailments.
These diseases have no impact on the devotees whose hearts are always singing the praise of the Lord.
8. வேள்பட விழி செய்து
பாடல் வரிகள்
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன்த னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
பாடல் பொருள்
பட = அழியும்படியாக
அன்று விழி செய்து = அன்று நெற்றிக்கண்ணைத் திறந்த சிவபெருமான்
விடை மேல் இருந்து = இடப வாகனத்தில் ஏறிக் கொண்டு
மடவாள் தனோடும் உடனாய் = உமையாளோடு வந்து
வாள்மதிவன்னி கொன்றைமலர் சூடி = ஒளி பொருந்திய பிறைச்சந்திரன் வன்னி, கொன்றை மலர் ஆகியவற்றைத் தன் முடிமேல் சூடிக் கொண்டு
உளமே புகுந்த அதனால் = என் உள்ளம் புகுந்த காரணத்தால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும் = ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கையின் அரசன் இராவணன் போன்றோரின் அகந்தையினால் விளையக்கூடிய
இடரான வந்து நலியா = இடர்கள் வந்து நம்மைத் துன்புறுத்த மாட்டா.
ஆழ்கடல் = ஆழமான கடலும்
நல்ல நல்ல = நல்லனவே செய்யும்
அடியார் அவர்க்கு மிகவே = சிவனடியார்களுக்கு மிகவும்
அவை நல்ல நல்ல = நலத்தையே கொடுக்கும்!
பாடல் விளக்கம்
வேள் பட விழி செய்தவன்
இலங்கை அரையனின் அகந்தை அழித்து அருளியவன்
திருஞானசம்பந்தரின் எல்லாப் பதிகங்களிலும் எட்டாவது திருப்பாட்டு இராவணனைப் பற்றியும், ஒன்பதாவது திருப்பாட்டு பிரமன், மால் பற்றியும், பத்தாவது பாட்டு சமண, புத்தர் பற்றியும் வருவது வழக்கம். அந்த வழக்கத்தை ஒட்டியே, கோளறு பதிகத்திலும் இந்த எட்டாவது பாடல் இராவணனின் அகந்தையை அழித்து அவனுக்கு அருள்புரிந்த விதத்தைப் போற்றுகின்றது. தென்னிலங்கை வேந்தனாகிய இராவணன், முன்பு தன் அறியாமையினால் கயிலை மலையினை எடுக்க முயன்றான்.அப்போது அம்மலையின்கீழ் அகப்பட்டுத் தலைகளும், தோள்களும் நசுங்கி அல்லலுற்றான். தன் தவறை உணர்ந்து அதனைப் பொறுத்தருளும்படி இறைவனை வேண்டி இசைச் பாடல்களால் துதித்தான். அவனது இசைப்பாடலைக் கேட்டு நெகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு அருள்புரிந்த விதத்தை அறிவுறுத்துவது இந்த எட்டாம் திருப்பாட்டாகும்.
இதிலிருந்து நாம் உணரக்கூடிய உண்மை என்னவென்றால், இராவணன் போன்ற அகந்தைமிக்கவர்களினால் நேரக் கூடிய இடர்களையெல்லாம் இறைவன் தடுத்து நீக்குவான்; மேலும், இராவணன் போல் தவறை உணர்ந்து பக்தியினால் பாடித் துதிப்போரை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் தாயுள்ளம் படைத்தவன் இறைவன். இந்த உண்மையை உணர்ந்தவர்களுக்கு எந்தத் துயரமும் அணுகாது என்று புரியவைக்கிறார் சம்பந்தர்.
Verse 8 : Velpada Vizhiseithu – Meaning
To punish Manmadha (the god of Love),
Entered my heart wearing the shining moon and Vanni leaves and Konrai flowers on His hair
And seated on the Bull along with Uma Devi.
With the Lord in the heart, His devotees will not be affected by any person who is as arrogant and egoistic
As Ravana, the king of Lanka surrounded by the seven oceans.
The devotees will have no obstacles in their path.
9. பலபல வேடமாகும்
பாடல் வரிகள்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெ ருக்கு முடிமேல ணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
பாடல் பொருள்
நாரி பாகன் = உமையொரு பாகனும்
பசு ஏறும் எங்கள் பரமன் = இடபத்தின் மேல் ஏறி வருபவனுமாகிய சிவபெருமான்
சலமகளோடு எருக்கு = கங்கை, எருக்கமலர் ஆகியவற்றை
முடிமேலணிந்து = செஞ்சடை மேல் அணிந்துகொண்டு
உளமே புகுந்த அதனால் = என் உள்ளம் புகுந்த காரணத்தால்
மலர்மிசையோனும் மாலும் = தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும்
மறையோடு தேவர் வருகாலம் = வேதங்கள், தேவர்கள், எதிர்காலம்
அலைகடல் மேரு = அலைபொங்கும் கடல், மேரு மலை ஆகியவையும்
நல்ல நல்ல = நல்லனவே செய்யும்
அடியார் அவர்க்கு மிகவே = சிவனடியார்களுக்கு மிகவும்
அவை நல்ல நல்ல = நலத்தையே கொடுக்கும்!
பாடல் விளக்கம்
மலர்மிசையோனும் மாலும் அடிமுடி தேடியும் காணமுடியாதவன்
முன்னொரு சமயம், படைத்தல் கடவுளாகிய நான்முகனும், காத்தல் கடவுளாகிய திருமாலும், தாம் தாம் பெரியவர் எனத் தமக்குள் போட்டியிட்டுக் கொண்டனர். அப்போது, பிரமன் அன்னமாகவும், திருமால் வராகமாகவும் உருக்கொண்டு சிவபெருமானது முடியும் அடியும் தேட முயன்று பெரிதும் அல்லல் பட்டும் காணமுடியாது சோர்ந்தனர். பின் அவர்கள் இருவரும் சிவபெருமானின் அருளால் திரு ஐந்தெழுத்தை ஓதி உணர்ந்த செய்தியைச் சொல்லும் இந்த ஒன்பதாம் பாட்டு.
இவ்வாறு அகங்காரம் நீங்கித் தெளிந்த பிரமனும் திருமாலும் சிவனடியார்களுக்கு நலத்தையே அருளுவர் என்று தெரிவிக்கிறார் சம்பந்தப் பெருமான்.
Verse 9 : PalaPala Vedamaagum – Meaning
Wearing the Ganges and Erukkam flower on His matted hair,
Entered my heart seated on the Bull.
With the Lord’s presence in the heart, the devotee will always be blessed
By Lord Brahma (seated on Lotus) and Lord Vishnu.
Also the Vedas, the Devas will be beneficial to the devotees.
They have nothing to fear about oceans with raging waves and mountains as big as the Meru.
Even future will be bright and prosperous.
The devotees will only experience bliss and happiness.
10.கொத்தலர் குழலியோடு
பாடல் வரிகள்
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியு(ம்) நாகம் முடிமேல ணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொ டமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே!
பாடல் பொருள்
விசயற்கு நல்கு = விஜயனாகிய அருச்சுனனுக்கு அருள் செய்த
குணமாய = தன்மை கொண்டவனான
வேட விகிர்தன் = வேட வடிவம் கொண்ட சிவபெருமான்
மத்தமும் மதியும் நாகம் = ஊமத்தை மலர், பிறைநிலவு, பாம்பு ஆகியவற்றை
முடிமேலணிந்து = செஞ்சடை மேல் அணிந்துகொண்டு
உளமே புகுந்த அதனால் = என் உள்ளம் புகுந்த காரணத்தால்
புத்தரோடு அமணை = பெளத்தர்களையும் சமணர்களையும்
அண்ணல் திருநீறு செம்மை = சிவபெருமானின் பெருமை பொருந்திய திருநீறு
திடமே = நிச்சயமாக
வாதில் அழிவிக்கும் = வாதில் தோற்கடிக்கும்
அத்தகு = அத்தகைய (சக்திவாய்ந்த திருநீற்றால்)
நல்ல நல்ல = நல்லனவே நடக்கும்
அடியார் அவர்க்கு மிகவே = சிவனடியார்களுக்கு மிகவும்
அவை நல்ல நல்ல = நலத்தையே கொடுக்கும்!
பாடல் விளக்கம்
விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அருச்சுனன் (விசயன்) ஒருசமயம் சிவபெருமானைத் தியானித்துக் காட்டில் கடுந்தவம் புரிந்து கொண்டிருந்தான். அச்சமயம், சிவபிரான் அவனுடைய தவநிலையைச் சோதிக்கும் பொருட்டு, வேடனாகத் திருவுருவம் கொண்டு, கையில் வில்லுடனும், வேட்டை நாய்கள் சூழ அக்காட்டிற்குச் சென்றார். உமாதேவியையும் (கொத்தலர் குழலி) வேட்டுவச்சியாக உடனழைத்துச் சென்றார். அருந்தவத்தில் இருந்த அருச்சுனனுடன் ஒரு பன்றியின் காரணமாகப் பெரும்போர் செய்து, விசயனின் வில் ஒடிந்து வீழவும், அவன் உடலில் அம்பு தைக்கவும், அவனை வென்று அவன் தவவலிமையைச் சோதித்தார். பின்னர், அவனது தவத்துக்கு இரங்கி அவனுக்குப் பாசுபதம் என்னும் அஸ்திரத்தைத் தந்தருளினார்.
இந்தத் திருச்செயலின் பெருமையை அறிவிப்பதன் மூலம், ‘தனது திருவிளையாடல்களால் களிக்கும் இறைவன் நமக்குச் சோதனைகள் பல கொடுத்தாலும், இறுதியில் பெருவரங்கள் அருளிக் காப்பான்; அருச்சுனனுக்குப் பாசுபதம் கொடுத்து அவனைப் பாரதப் போரில் வெற்றியடைய உதவியது போல, புத்த சமணர்களிடம் நடக்க இருக்கும் வாதப்போர்களிலும் பக்கபலமாக நின்று வெற்றி பெறத் துணைநிற்பான்’ என்று உணர்த்துகிறார் சம்பந்தர்.
புத்தரோடு சமணர்களை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருஞானசம்பந்தரின் எல்லாப் பதிகங்களிலும் 8-வது திருப்பாட்டு இராவணனைப் பற்றியும், ஒன்பதாவது திருப்பாட்டு பிரமன், மால் பற்றியும் பத்தாவது பாட்டு சமண, புத்தர் பற்றியும் வருவது வழக்கம் என்று முன்னர் கண்டோம். அந்த மரபைப் பின்பற்றியே, கோளறு பதிகத்தின் இந்தப் பத்தாவது திருப்பாட்டிலும் சமணர்கள் மற்றும் பெளத்தர்களை வாதத்தில் வெல்ல ஆலவாய்க் கடவுளின் திருநீறு துணைநிற்கும் என்று அருள்கின்றார் சம்பந்தர்.
Verse 10 : Kothalar Kuzhali – Meaning
The Lord once showered His blessings on Arjuna, the warrior of Victory.
Wearing the unmatta flowers and snake as garlands and having the crescent on His hair,
He entered my heart seated on the Bull accompanied by Goddess Uma who has beautiful hair adorned with flowers.
With the Lord by my side, I am sure that I will win the debates (at Madurai) with Buddhists and the Jains
By the Divine powers of the Sacred Ash of the Lord.
Such is the greatness of the Sacred Ash
Which will always bring victory to the devotees.
11.தேனமர் பொழில்
பாடல் வரிகள்
வளர்செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதி யாய பிரமாபு ரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.
பாடல் பொருள்
ஆலை விளை செந்நெல் = கரும்பும், விளைகின்ற செந்நெல்லும் நிறைந்துள்ளதும்
வளர் செம்பொன் எங்கும் திகழ = மிகுதியான செம்பொற் குவியல் எங்கும் நிறைந்திருப்பதும்
நான்முகன் ஆதி யாய = பிரமன் சிவபெருமானை வழிபட்ட திருத்தலமுமான
பிரமாபுரத்து = பிரமாபுரத்தில் தோன்றிய
மறை ஞான ஞான முனிவன் = வேதஞானம் மிகுந்த ஞான சம்பந்தன்
தானுறு கோளும் நாளும் = வினைப்பயனால் தாமே வந்துறும் நவக்கிரகங்கள், நாள் நட்சத்திரம் போன்றவையும்
அடியாரை வந்து = சிவனடியார்களை வந்து
நலியாத வண்ணம் = வருத்தாதவாறு
உரைசெய் = பாடிய
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் = சொல்மாலையாகிய இந்தப் பதிகத்தை ஓதும் அடியவர்கள்
வானில் அரசாள்வர் = வானுலகில் அரசு புரிவர்.
ஆணை நமதே = இது நமது ஆணை!
பாடல் விளக்கம்
சம்பந்தர் பாடிய ஒவ்வொரு பதிகத்திலும் இறுதிச்செய்யுள் ‘திருக்கடைக்காப்பு’ எனப்படும். இந்த இறுதிப் பாட்டில் தான் தம்மைப் பற்றியும், பதிகத்தின் சிறப்பைப் பற்றியும், அப்பதிகத்தை ஓதுபவர்கள் அடையும் பலன்கள் பற்றியும் அவர் குறிப்பிடுவது வழக்கம். கோளறு பதிகத்தின் திருக்கடைக்காப்புச் செய்யுளில் முதலில் தாம் பிறந்த பதியான பிரமாபுரத்தின் நிலவளத்தையும் செல்வச்செழிப்பையும் பெரிதும் போற்றுகின்றார்.
பிரமாபுரம் அல்லது பிரமனூர் என்பது சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களுள் ஒன்று. பிரமாபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், சிரபுரம், புறவம், சண்பைநகர், சீகாழி, கொச்சைவயம், பூந்தாராய், கழுமலம் ஆகிய பெயர்களை உடையதாகச் சீர்காழி விளங்குகின்றது என்பதை சம்பந்தர் பாடிய இந்தத் ‘திருசக்கரமாற்று’ பாடல் மூலம் நாம் அறியலாம் :
வளங்கவருந் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம்வண் புறவ மண்மேல்
களங்கமிலூர் சண்பைகமழ் காழிவயங் கொச்சைகழு மலமென் றின்ன
இளங்குமரன் றன்னைப்பெற் றிமையவர்தம் பகையெறிவித் திறைவ னூரே
Verse 11 : Thenamar Pozhil – Meaning
And fertile fields of sugarcane and rice,
And ever increasing quantities of gold dazzling everywhere,
Shines Brahmapuram, the Divine Shrine where Brahma once worshipped Lord Shiva.
I, Saint Gnana Sambanda of great wisdom, born in this great city of Brahmapuram,
Sang these ten hymns to protect the devotees of Lord Shiva
From the harmful effects of the Navagrahas, inauspicous days
And other things that impact the well-being of the devotees.
There is no doubt that the devotees who sing the hymns contained in this compilation of verses
Will rule the Heaven when they are united with the Lord.
திருஞான சம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகம் முற்றும்
இசை வளம்
இசை என்னும் சொல்லுக்கு ‘இசைவிப்பது, வயப்படுவது, ஆட்கொள்வது’ என்பன பொருளாகும். எல்லாம் கடந்து எங்குமாய் எல்லாமாய் நீக்கமற நிறைந்து விளங்கும் இறைவனை சம்பந்தர் இசை வடிவமாகக் கண்டார். சிவபெருமான் திருவருளால் இவருக்குத் தாளமும் பக்கவாத்தியமும் அமைந்து தெய்வத் தமிழிசை ஊர்தோறும் இல்லம்தோறும் வீதியெல்லாம் முழங்கும்படிச் செய்தார்.
இசைவேந்தராகிய ஞான சம்பந்தப் பெருமான் கோளறு பதிகத்தைப் பாடத் தேர்ந்தெடுத்த பண் ‘பியந்தைக் காந்தாரம்’ எனப்படும்.
குறிப்பு: பியந்தை என்று சொல்லப்படுவதும் பியந்தைக் காந்தாரமும் ஒன்றென்றே கருதப்படுகிறது. அதேபோல், காந்தாரமென்பதும் பியந்தைக் காந்தாரமென்பதும் ஒன்றே என்றும் கருதுவர்.
பஞ்சமரபு என்னும் நூல் காலையில் பாடத் தகுந்த எட்டு மங்கலப் பண்களில் ஒன்றாக காந்தாரப் பண்ணைக் குறிப்பிடுகின்றது:
திக்கார் புறநீர்மை செந்துருத்தி – தொக்கவியட்
செங்கயற்கட் பூங்கொடியே சீகாமரம் சிகண்டி
மங்கலப்பண் ணாமென்னும் எட்டு.
– பஞ்சமரபு
இதனால் எங்கெங்கே மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் காந்தாரப் பன்ணில் பாடினால் மங்கலம் பெருகி ஓங்கும் என்று கருதப்படுகிறது. இந்தப் பியந்தைக் காந்தாரமே இறைவனின் இசைவடிவம் என்பதால் தான் மதுரையில் நேரக் கூடிய தீங்குகளிலிருந்து தம்மை இறைவன் காத்தருள வேண்டி கோளறு பதிகத்தைப் பாடிய போது சம்பந்தர் பியந்தைக் காந்தாரப் பண்ணிலேயே அதைப் பாடினார்.
இந்தப் பண்ணின் இலக்கணத்தைக் கீழ்வரும் நூற்பா தெளிவாக விளக்குகிறது:
தரவு கொண்டும் தண்பூ நறும்பூ
ஏய்ந்த தாக வாய்ந்த இயற்கை
தருநற் காவும் தாரும் தோன்றலாற்
பூயேந் துள்ள பியந்தை என்றிக்
காந்தா ரப்பெயர் காட்டப் பெற்றது.
பொருள் : சீர்கள் கோவை கொள்ளுமாறு அவற்றைக் கோத்தும், யாப்பாகிய சீரால் யாப்புறுத்தியும், ஆசிரியத் தரவு கொள்ளுமாறு அமைத்தும், தண்பூச்சீரும், நறும்பூச்சீரும் இயையும் வண்ணம் அமைந்த இயல்பில் காவும், தாரும் தோன்றும் படி பூயேய்ந்துள்ள பியந்தை என்று காந்தாரப் பண்ணானது காட்டப் பெற்றது.
பா வளம்
‘புகலியில் வித்தகர் போல அமிர்த கவித் தொடை பாட அடிமை தனக்கு அருள்வாயே’ – என்று சம்பந்தரைப் போல் பாடும் திறமையைத் தமக்கு அருளுமாறு இறைவனை வேண்டுவார் அருணகிரிநாதர். அதுமட்டுமல்லாமல், ‘முப்பால் செப்பிய கவிதையின் மிக்காரத்தினை எழுதி வனத்தே ஏற்றிய பெருமானே’ என்று முருகக் கடவுளின் அவதாரமாகக் கருதப்படும் சம்பந்தரின் கவிதையைத் திருக்குறளை விட மேலானதாகப் போற்றுகின்றார் அருணகிரியார்.
இத்தகைய தமிழ்ப்புலமை வாய்ந்த சம்பந்தப் பெருமான், கோளறு பதிகத்தை ‘எண்சீர் சந்த விருத்தம்‘ என்னும் ஓசை இன்பம் வழங்கும் சந்தமிகு பாட்டாகவே இயற்றியுள்ளார்.
விருத்தப்பாவியல் என்னும் இலக்கண நூலின்படி, இவ்விருத்தத்தின் ஒவ்வொரு அடியும் முதலில் விளச்சீரில் தொடங்கி, இரண்டு குறிலீற்றுத் தேமா, குறிலீற்றுப் புளிமாங்காய், குறிலீற்றுத் தேமா, குறிலீற்றுப் புளிமாங்காய், குறிலீற்றுத் தேமா, புளிமா என்று வரும்.
மிகநல்ல வீணை தடவி
கூவிளம் தேமா தேமா புளிமாங்காய் தேமா
புளிமாங்காய் தேமா புளிமா
மேற்கூறியவாறு வாய்பாடு கொண்டால் இந்த விருத்தத்தின் அமைப்பை எளிதில் புரிந்து கொண்டு அதன் ஓசை யின்பத்தில் களித்திடலாம்.
இப்பதிகத்தில் உள்ள பாடல்களின் ஒவ்வோர் அடியும் கீழ்வரும் தாளத்தில் ஒலிப்பதைக் காணலாம்.
தனதான தான தனனா
குறிப்பு: இந்த வகையான எண்சீர் சந்த விருத்தத்தில் பியந்தைக் காந்தாரப் பண்ணில் சம்பந்தரின் சமகாலத்தவர்களான திருநாவுக்கரசரும் திருமங்கை ஆழ்வாரும் பாடியுள்ளனர்.
அப்பர் பிரான் பாடிய பதிகம் ‘சிவன் எனும் ஓசை’ என்னும் அருள்மிகுந்த திருப்பாடலை முதற்பாடலாகக் கொண்டு பாடியது:
அவனுமொர் ஐயம் உண்ணி அதளாடை ஆவது அதன்மேலொர் ஆடல் அரவம்
கவணளவு உள்ள உண்கு கரிகாடு கோயில் கலனாவ தோடு கருதில்
அவனது பெற்றி கண்டும் அவன்நீர்மை கண்டும் அகம்நேர்வர் தேவர் அவரே.
– அப்பர் பெருமான்
(பொருள் : உலகில் ‘சிவன்’ என்னும் ஓசையைவிட செம்மையும் சிறப்பும் வாய்ந்த ஒலி உண்டோ? சிவபெருமான் யாசித்து உண்பவன்; அதுவும் கவண் அளவு சிறிதே உண்பவன்; அவன் உண்ணப் பயன்படுத்தும் பாத்திரம் மண்டை ஓடே; (புலியின்) தோலையே ஆடையாகக் கொண்டவன்; அத்தோலின் மீது படமெடுத்து ஆடும் பாம்பை இறுகக் கட்டியவன். சுடுகாடே அவன் இருப்பிடம்; சிவனுடைய திருவேடத்தின் எளிமை கண்டும், அவனுடைய அருள் தன்மைகளின் பெருமை கண்டும் வியந்து நெகிழ்ந்த வானவர்கள் தம் மனத்தில் சிவனையே பற்றாகக் கொள்வர்.)
கேள்விகள்
கீழ்வரும் வினாக்களின் மூலம் உங்கள் கோளறு பதிக அறிவைச் சோதிக்கலாமா?
புத்தகம்
‘கோளறு பதிகம் – விளக்கவுரை’ என்னும் இந்தப் பதிவு மேலும் பயனுள்ள கருத்துகளுடன் இப்போது புத்தகமாக (ebook) வெளிவந்துள்ளது! இந்நூலை வாங்கிப் படித்துக் கருத்தளித்து என் எழுத்துப் பணிக்கு மேலும் ஆதரவளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.
இந்தப் புத்தகத்தில் இடம்பெறும் சில சுவையான கருத்துகளைக் கீழே உள்ள குறுந்தலைப்புகளில் காணலாம் :
- திருநாவுகரசருக்கும் சம்பந்தருக்கும் இடையே எழுந்த உரையாடல் மற்றும் கோளறு பதிகம் பிறந்த கதை
- இறைவனின் திருவடிகளில் சமர்ப்பிப்பதற்கு ஏற்ற மலர் எது?
- சங்கரன் என்ற திருநாமத்திற்கும் கோளறு பதிகத்துக்கும் உள்ள சம்பந்தம்
- நவக்கிரகங்களின் சரித்திரங்கள்
- திருநீற்றின் பெருமை
- ‘முருகு’ என்னும் சொல்லின் மகிமை
- சிவபெருமானின் எட்டு வீரத் திருச்செயல்களும் அவற்றைக் கோளறு பதிகப் பாடல்கள் போற்றுகின்ற சிறப்பும்
- சம்பந்தரை முருகக் கடவுளின் அவதாரமாகப் பார்த்த அருணகிரியார்
- ஞானப்பால் உண்ட குழந்தையும் திருஞானசம்பந்தர் என்னும் பெயர் அமைந்த கதையும்
- ‘அழகு’ என்னும் சொல்லுக்குத் தமிழில் உள்ள 29 பெயர்கள்
- மறைஞான ஞான முனிவர் என்று சம்பந்தர் போற்றப்படக் காரணம்
- ‘ஆணை’ என்னும் சொல்லின் சிறப்பு
Very nice explanation
மிக்க நன்றி!
அன்புடன்,
இமயவரம்பன்
சுஜாதா
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஆசிரியரே இறை ஆற்றலுக்கு நன்றிகள்🙏
Please translate everything in English. Thanks
Thank you for your visit and suggestion! I have now included the english translation of all the verses of Kolaru Pathigam. Soon, I will be including my commentary and explanation in English too.
கோளறு பதிகம் என்ற பொக்கிஷத்தை முதன் முதலில் தின மலர் பத்திரிகையிலே பத்மாவசன் அவர்களின் படத்தையும் விளக்கத்தையும் பார்த்து ஆக மகிழ்ந்தேன். ஆயினும், ஒவ்வொரு சொல்லின் பொருள் விளங்காது திகைத்து நிற்க்கும்போது உங்களுடைய இந்த பதிவைப் பார்த்தேன். ஆஹா…என்ன அற்புதம்….நீவிர் வாழ்க. சிரம் தாழ்த்தி கரம் கூப்பி நன்றியை தெரிவிக்கின்றேன்.
தங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்களுக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி! எல்லாப் பெருமைகளும் அற்புத ஞான முனிவராகிய சம்பந்தப் பெருமானையே சேரும்.
Ayya itha thogupu kal puthaga vadivil kidaikuma
தாங்கள் இந்தப் பதிவின்மேல் கொண்ட ஆர்வத்திற்கு மிக்க நன்றி!
வெகு விரைவில் இந்தப் பதிவை புத்தக வடிவில் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபடுவேன்.
‘கோளறு பதிகம் – விளக்கவுரை’ என்னும் இந்தப் பதிவு மேலும் பயனுள்ள கருத்துகளுடன் இப்போது புத்தகமாக (ebook) வெளிவந்துள்ளது! இந்நூலை வாங்கிப் படித்துக் கருத்தளித்து என் எழுத்துப் பணிக்கு மேலும் ஆதரவளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.
புத்தகத்தைக் காண இங்கு செல்லவும் : https://linktr.ee/imayavaramban
I fully agree with Dr Senthilnathan!
Great word by word Explanation 🙏🙏🙏
Thank You…Sir🙏🙏🙏
Thank you very much for your appreciation of my explanation 🙏
பதிக பாடல் முழுவதிலும் தெளிவான விளக்கம் , அற்புதம் ஐயா.
தங்களின் சிவ தொண்டு மேலும் சிறக்க பெருமானை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்
திருச்சிற்றம்பலம்🙏🙏
great job amazing lyrics enjoyed singing with tears in eyes
Very happy to know that you enjoyed singing the lyrics of Kolaru pathigam composed by Thirugnana Sambandar. Thank you!
The sambandars poetry is beautifully explained by quoting Other saints wording. It is very explanatory. The comparison is wonderfully handled and rendered. It is very useful to know the contents of the poems
SAWATEACHER GURU
படிக்க படிக்க படித்துக் கொண்டே இருக்க தோன்றுகிறது.
தாங்கள் தொடர்ந்து மேலும் பல விளக்கவுரை வழங்க இறைவனிடம் விண்ணப்பம் வைக்க இருக்கின்றேன்.
தங்களின் ஒவ்வொரு படைப்புகளும், தங்களுக்கு புண்ணியமும் வாசிப்பவர்களுக்கு சிந்தனைக்கான விருந்ததாகவும் அமையும் அருமையான விளக்கவுரை
நன்றி
S.T.ராஜ்மோகன்
9080267345
களிப்படைய வைக்கும் தங்கள் பொன்னான கருத்துக்குப் பணிவுடன் தலைவணங்குகிறேன்.
என்பொருட்டு தாங்கள் இறைவனிடம் வேண்டிக் கொள்வது அறிந்து நெகிழ்ந்து எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி
இமயவரம்பன்
Terrific efforts. Really good. Many thanks.
Thank you!
🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி ஐயா. மிக நல்ல விளக்கம், மிக நுணுக்கமான விரிவரங்களுக்கு செல்ல முயற்சித்தீர்கள். ஒரு நல்ல படைப்பு, குறிப்பாக படிப்பவர்களுக்கும் பொது மக்களுக்கும். மீண்டும் ஒரு முறை நன்றி. 👍👍👍👍👍…… 🙏🙏🙏🙏🙏🙏
தங்களின் மிகச் சிறப்பான கோளறு பதிகத்திற்கான விளக்கத்தைப் பாடித்து இன்புற்றேன். இவ்வருமையான விளக்கவுரை தந்த உங்களுக்கு என் நன்றி. வாழ்க உங்கள் திருத்தொண்டு.
தங்களின் மிகச் சிறப்பான கோளறு பதிகத்திற்கான விளக்கத்தைப் பாடித்து இன்புற்றேன். இவ்வருமையான விளக்கவுரை தந்த உங்களுக்கு என் நன்றி. வாழ்க உங்கள் திருத்தொண்டு.
தங்களின் மிகச் சிறப்பான கோளறு பதிகத்திற்கான விளக்கத்தைப் பாடித்து இன்புற்றேன். இவ்வருமையான விளக்கவுரை தந்த உங்களுக்கு என் நன்றி. வாழ்க உங்கள் திருத்தொண்டு.
தங்கள் அன்பு வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி!
பதிக பாடல் முழுவதிலும் தெளிவான விளக்கம் , அற்புதம் ஐயா.
தங்களின் சிவ தொண்டு மேலும் சிறக்க பெருமானை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்
திருச்சிற்றம்பலம்🙏🙏
மிக்க நன்றி!